யானைக் கதை

இண்டைக்கு ஒரு யானைக் கதை சொல்லப்போறன்!

அப்ப நாங்கள் தேவிபுரத்திலை இருந்தனாங்கள். தேவிபுரம் வன்னியில புதுக்குடியிருப்புக்கும் உடையார் கட்டுக்கும் இடையிலை இருக்கு. உடையார் கட்டை நானும் நண்பர்களும் UK எண்டுதான் சொல்லுவம்.

ஒரு சித்திரை மாசம் நடுச்சாமம் தான் நாங்கள் தேவிபுரத்துக்கு வந்தம். அது ஒரு தென்னந்தோட்டம். அடுத்தடுத்து ஒவ்வொரு வித்தியாசமான பெயருகளிலை நிறைய தோட்டங்கள். ஆச்சி தோட்டம் G.S காணி வெள்ளைக் கேற் (Gate) சிவத்தக் கேற் பத்தேக்கர் காணி எண்டு உப்பிடி நிறைய வித்தியாசமான பெயர்கள்.

நாங்கள் வந்திறங்கின தோட்டம் ஆச்சி தோட்டம். அது என்ன காரணப்பெயரா என்று எனக்கு தெரியாது.

அதுக்குள்ளை ஒரு மண்ணாலான கட்டிடம் இருந்தது. தேங்காய் எண்ணைக்கு பாவிக்கிற கொப்பறாக்களை மூட்டை மூட்டையாக கட்டி அதுக்குள்ளை வைச்சிருந்தினம்.

எண்ணை வாசம் சும்மா அந்த மாதிரி கமகமக்கும்.

அதுக்குள்ளைதான் அண்டைக்கு இரவு படுத்தம்.

இரவு வந்தபடியால எனக்கு இடம் வலம் எதவும் தெரியேல்லை. நல்ல களைப்பு வேறை.. அப்பிடியே நல்ல நித்திரை…

விடிய நல்லா நேரஞ்செண்டுதான் எழும்பி பாத்தன்..

என்ரை கடவுளே.. ஏதோ நடுக் காட்டுக்குள்ளை கொண்டு வந்து விட்ட மாதிரி கிடந்தது.

பாக்கிற இடமெல்லாம் தென்னை மரங்கள்.. அதை தாண்டினா காடுகள்..

ஏதோ ஒரு வனாந்தரத்தில வந்து நின்ற மாதிரியான ஒரு வெறுமை..

என்ன செய்ய முடியும்.. வந்தாச்சு இனி வழியைப் பாக்க வேணும்.
நாங்களும் ஒரு வீடு கட்டுவதென்று முடிவாச்சு. அதுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த காணின்ரை பெயர் பத்து ஏக்கர் காணி.

அதுக்கு ஒரு காரணம் இருந்தது. வன்னியிலை சீமெந்து கட்டு கட்டப்பட்ட கிணறுகள் அரிது அல்லது கிடையாது. ஆனால் அந்த காணிக்குள்ளை இருந்த கிணறு அப்பிடி கட்டப்பட்டிருந்தது. அது மட்டுமில்லை.. அந்த சுற்று வட்டாரத்திலேயே நல்ல தண்ணி கிணறு இருந்த ஒரே காணியும் அதுதான்.

ஆனால் இன்னொரு பக்கத்தாலை அந்தக் காணியில வேறை சில விசயங்களும் இருந்தது.

அதன் ரண்டு பக்கங்கள் காட்டோடு இணைந்திருந்தன. இன்னொரு பக்கம் ஒரு ஒற்றை வீதியூடும் மற்றயது ஆச்சி தோட்டத்துடனும் இணைந்திருந்தது.

காட்டோடு இணைந்திருந்தமையால் யானைகளின் தொல்லை இருக்குமென்று சொன்னார்கள்..

அதுவும் அந்த தோட்டத்திலை இளம் தென்னைகள் தான் நாங்கள் இருக்கும் போது இருந்தன. அதனால யானைகள் கட்டாயம் வரும் எண்டும் சொல்லிச்சினம்.

இருந்தாலும் பறவாயில்லை எண்டு நாங்கள் தொடங்கிட்டம் வீடு கட்ட. காடுகளிற்குள் அனுமதியின்றி மரம் தறித்தல் சட்டவிரோதமாக புலிகள் அறிவிச்சிருந்தவை. அதனாலை அனுமதி பெற்று மரங்களை தறிச்சு களி மண்ணிலை கல் அரிஞ்சு ஒரு மாதிரி வீட்டை எழுப்பிட்டம்.

நானும் பள்ளிக்கூடம் ரியூசன் நண்பர்கள் எண்டு திரிய பழைய வெறுமையும் மறந்து போச்சு.

மிச்சம் வரும்!