ஆறாவடு – ரவீந்திரன்.ப சுவிஸ்

//கடைசித் தொங்கலில் நின்ற சிவராசன் அவரது நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் வருவதைப் போன்ற பச்சை உடையும் சட்டித் தொப்பியும் அணிந்த ஒரிஜினல் ஆமிக்காரன் ஒருவனை மிகக் கிட்டத்தில் பார்த்தார்//

//எனக்கும் இயக்கத்தில் கோபம் கோபமாய் வந்தது. பிறகு நான்தானே இயக்கம் என்ற நினைப்பும் வந்தது. பிறகு சனங்களில் கோபம் வந்தது//

//பின்னால் நின்ற சனங்களுக்கு இந்திய இராணுவமா பிரபாகரனா என்பதெல்லாம் கேட்கவில்லை. அவர்கள் தம் பாட்டுக்கு ஓர் ஒழுங்கில் வாழ்க என்றும் ஒழிக என்றும் கத்திக்கொண்டு வந்தார்கள். இதனால் சிலவேளைகளில் பிரபாகரன் வாழவும் இந்தியா ஒழியவும் வேண்டியேற்பட்டது.//

//படிப்பதற்காய் போர் செய்வோம் என்று பிரச்சாரங்களில் சொன்னார்கள். முடிவில் பத்துப் பன்னிரண்டு பேரென்று ஒரேயடியாக கிளம்பி இயக்கத்துக்குப் போனார்கள். வீட்டுக்குப் போய் பள்ளிக்கூட யூனிபோர்மை கழட்டிவைத்துவிட்டு இயக்கத்துக்குப் போகும்படி பள்ளி அதிபர்கள் அழாக் குறையாக ப்ரேயர்களில் அறிவித்தார்கள்.//

//உங்களுக்கு ஆயிரம் வேலையள் இருக்கும். ஆமியைச் சுடுறது மட்டுமல்லாமல் சும்மா நிண்டவன் வந்தவன் போனவனை எல்லாம் சுடவேண்டியிருக்கும்…//

//எளிய பறைச் சாதி நீ. என்னைத் தள்ளிவிடுறியோ அகதி நாயே… இனிச் சரிவராது. ஈனப் பிறப்புகளுக்கு ஒண்டு சொல்லிறன்… இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ளை எல்லா எளிய நாய்களும் வெளியாலை போயிடணும். ஒண்டும் இங்கை தங்கேலாது…// கோயிற்காரன்.

ஆறாவடு நாவலில் நான் அலைக்கழிக்கபட்ட இடங்கள் இப்படிப் பல. புதியதோர் உலகம், கொரில்லா… என ஈழப் போராட்ட இயக்கங்களுக்குள் பயணிக்க வைக்கும் நாவல்கள் வரிசையில் இப்போ சயந்தனின் ஆறாவடு வந்திருக்கிறது. பேசப்படவேண்டிய நாவலாக இதுவும் தன் இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது. கதைசொல்லி தன்னை ஒரு சுயவிசாரணை செய்யும் புள்ளிகளை ஆங்காங்கே வரைந்து செல்கிறார். எந்தத் துதிபாடலுமின்றி, ஆர்ப்பாட்டமுமின்றி வார்த்தைகள் வந்து விழுகின்றன. முரண்களை அருகருகே வைத்து வாசகனிடம் ஒப்படைத்துவிட்டுப் போகும் போக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

யாழ் மேலாதிக்கத்தின் சாதிய வெறி உறுமும் இடங்களையும், பெண்கள் மீதான ஆண்வக்கிர வீணிகள் ஒழுகும் இடங்களையும் நாவல் காட்டிச் செல்கிறது. “முன்னாள் செருப்புக் கள்ளனும் இந்நாள் தேசத்துரோகியும்” என்ற வார்த்தைகளுக்கிடையில் இயக்கத் தண்டனைகள், இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட இயக்கங்களின் நிர்ப்பந்தங்கள், பழிவாங்கல், தற்காப்பு… என்றெல்லாம் வெளிகளை காட்டிச் செல்வதன்மூலம், “துரோகி” போன்ற ஒற்றைச் சொல்லாடலை தகர்த்துச் செல்கிறது நாவல்.

இந்திய இராணுவ காலம், ரணில் உடனான சமாதான காலம் என்பவற்றினூடாக வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். மொழி பெயர்ப்பாளராக இருந்த நேரு மாஸ்டர் மூலம் இயக்கம் மீதான விமர்சனங்கள் முளைத்த இடங்கள் எளிய பதில்களால் எதிர்கொள்ளப்படுவதை நயமாகச் சொல்கிறார் கதைசொல்லி. மேலிடத்திலிருந்து ஊற்றப்படும் நியாயப்படுத்தல்களை கைமண்டையில் ஏந்தி தாகமும் தீர்த்து, சிந்தவும் விடும் பதில்கள் அவை.

“பெட்டைச் சேட்டை” விடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறையின் சுவாரசியத்தின் பின்னால் உள்ள கொடுமை, தனது பிள்ளையின் பிறந்தநாளன்று பிள்ளையை முதுகில் சவாரி ஏற்றி விளையாடிக்கொண்டிருந்தவனை கொன்ற “துரோகி ஒழிப்பு” கொடுமை, இந்திய இராணுவத்தோடு சேர்ந்தபின் அல்லது சேர்க்கப்பட்டபின் அந்த இயக்ககரார்களின் அட்டகாசம், பின் இந்திய இராணுவத்தால் கைவிடப்பட்ட அவர்களின்மீது பாய்ந்த “துரோகி ஒழிப்பு”… என்றெல்லாம் நாவல் அழைத்துச் செல்கிறது.

சிங்கள தமிழ் அகதிகளாக இத்தாலிய கடற்பயணத்தின் போதான மனிதாபிமான உறவுமுறைகள் கவனமாக சொல்லப்பட்டிருக்கின்றன. கடற் பயணத்தை அதன் ஈரத்தோடும் இருட்குவியலோடும் அலைக்கழிப்போடும் அந்தப் படகு மனிதர்களின் மனவெளிகளாக வரைந்து செல்கிறது.

இயக்கத்துக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்கள் அல்லது அதன் நேரடிப் பாதிப்புக்கு உட்பட்ட பெற்றோர்களின் துயரங்களை நாவலில் காணவில்லை. புலிகளால் துயருற்ற முஸ்லிம்களின் குரலையும் காணவில்லை. நாவலில் எல்லாவற்றையும் உள்ளடக்குதல் சாத்தியமா என்ற கேள்வி முக்கியமானது என்றபோதும், போராட்ட யுத்த அரசியல் பரப்புக்குள் கதைசொல்லி நிற்கும்போது மேற்கூறிய விடுபடல்கள் புறக்கணிக்க முடியாதது.

கதைசொல்லி தன்னை மிதப்பாகக் காட்டும் எந்த உத்தியையும் பாவிக்கவில்லை. மாறாக தன்னையும் சம்பவங்களையும் வாசகனின் விசாரணைக்கு திறந்துவிடுகிறார். முரண்களை அருகருகே வைத்துச் செல்வதன்மூலம் வாசகனிடம் பிரதியை விட்டுச் செல்கிறார். இலக்கிய உலகில் இதுவரை அறியப்படாமல் இருந்த சயந்தனின் முதல் நாவல் அவரை நல்லதோர் படைப்பாளியாக அடையாளம் காட்டியுள்ளது