comments 2

தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும்

சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றார்.

போலந்து சிறையில் அடைக்கப்பட்ட நண்பர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவினை இலக்கு வைத்து இலங்கையிலிருந்து புறப்பட்டபோது சுவிஸில் அவருக்கு விமான நிலைய மாறும் வழியினை ஏற்பாடு செய்திருந்தார்கள். சூரிச் விமான நிலையத்தில் இறங்கி அடுத்த விமானத்திற்கு காத்திருந்தபோது என்னவோ இசகு பிசகாகி பொலீஸாரிடம் சிக்கிக் கொண்டுவிட கனடா போகும் கனவை அப்போதைக்கு வெளியே நிறைந்திருந்த பனியில் புதைத்து விட்டு விமான நிலையத்தில் வைத்து சுவிஸில் தஞ்சம் கோரினார் நண்பர். அப்பொழுது அவருக்கு பத்தில வியாழன் நடந்து கொண்டிருந்ததாம். அது எப்பொழுதும் பதிய விட்டுக் கிளப்பும் என்பதால் – இப்பொழுது சுவிஸ் முகாமில் பதிய விட்டு பின்னர் கனடாவிற்கு கிளப்பும் என்று அவர் நம்பியிருந்தார்.

நண்பரது கனவுகள் முழுவதும் கனடாவினால் நிறைந்திருந்தது. எல்லாவற்றையும் கனடாவோடு ஒப்பிட்டே அவர் பேசினார். இங்கே குளிர், மைனஸ் பத்துக்களில் போனால், இதென்ன குளிர் அங்கே மைனஸ் நாற்பது வரை போகுமாம் என்பார். குளிர்காலப் பயணங்களில் காரில் தண்ணீர் போத்தலைத் திறந்து குடித்தால், இப்படியெல்லாம் கனடாவில் குடித்துவிட முடியாது. தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்கும் என்பார். ஒருநாள் – தெரியுமோ கனடாவில் வின்ரரில் வெளியில் ஒண்டுக்குப் போவதென்றால் முறித்து முறித்துத்தான் எறியவேண்டியிருக்கும் என்றார். கனடாக்காரர் யாராவதுதான் இதன் சாத்தியத்தை விளக்க வேண்டும்.

சுவிஸில் அவரது வழக்கு விசாரிக்கப்படாமலேயே காலம் இழுவுண்டது. சுவிஸில் விசா அற்றவர்கள் வேலையொன்றை நினைத்தும் பார்க்க முடியாது. தஞ்சக் கோரிக்கை முடிவிற்கு முன்னாலான தற்காலிக தங்குமிட அனுமதி வைத்திருப்பவர்கள் வேலை செய்வதற்கு வேலை வழங்குனரின் அனுமதி மட்டுமின்றி பொலிஸாரினதும் அனுமதி தேவைப்பட்டது. பொலிஸார் அவ்வாறான அனுமதியினை முன்னரைப் போல இப்பொழுது வழங்குவதில்லை. அவருக்கான தங்குமிட வசதி, மற்றும் மருத்துவக் காப்புறுதிகளை அரசு வழங்கியிருந்தது. அதைத் தவிர்த்து வாராவாரம் எழுபது பிராங்குகள் அவருக்கு கொடுக்கப்பட்டன. சுவிற்சர்லாந்தின் தனிநபர் வருமானத்தோடு ஒப்பிடுகையில் அது பத்து வீதத்திற்கும் மிகக் குறைவான தொகையாயிருந்தது.

நண்பர் விட்ட இடத்திலிருந்து கனடாவினைத் துரத்திப் பிடிக்கத் தொடங்கினார். மள மளவென்று அதற்குரிய ஏற்பாடுகளைக் கவனித்தார். கனடாவிலிருந்தும் யாரோ கவனித்தார்கள். இங்கிருந்து போலந்து – பின்னர் அங்கு போடிங் “உடைத்துக்கொண்டு” கனடாவிற்கு விமானம் ஏறுவது என்பதே திட்டமாயிருந்தது. வெற்றிகரமாக சூரிச் விமானநிலையத்தை விட்டும் மேலே பறந்தார் நண்பர். இருபத்து மூன்று கிலோக்களையுடைய ஒரு பயணப்பொதியும் ஏழு கிலோ அளவில் இன்னொரு கைப் பொதியும் அவரிடமிருந்தன. அதைவிட ஆதவன் என்கிற தமன்னாவின் படம் போட்ட சுவிஸ் இதழ் ஒன்றும் அவர் வசம் இருந்தது. பயணத்தில் படிப்பதற்காக..

போலந்தில் போடிங் உடைப்பதற்கு முன்னதாகவே அவர் மூக்குடை பட வேண்டிய சிற்றுவேஷனுக்குள் நுழையவேண்டியதாய் ஆனது. சுவிஸ் பொலிஸாவது பரவாயில்லை ரகம் என்றார் நண்பர். போலந்து பொலிஸாரில் ஒருவன் அவரது செவிட்டைப் பொத்தி அறைந்த போது வெள்ளைக் காரங்கள் எல்லோரும் நல்லவர்கள் என்ற பிம்பமே விழுந்து உடைந்து சிதறியதாம். நண்பருக்கு அழுகை அழுகையாக வந்தது. அவர் எல்லாவற்றையும் ஒப்புவித்தார். அவரைத்துாக்கி போலந்தில் ஒரு சிறைக் கூடத்தில் மூன்று மாதங்களுக்குப் போட்டார்கள். அப்பொழுது ஏழரைச் சனியன் முற்கூறு வேறு அவருக்கு நடந்து கொண்டிருந்ததாம்.

நண்பருக்கு சிறை புதிது. அவரது தஞ்சக் கோரிக்கை கேஸில் ஐந்தாறு மாதங்கள் வெலிக்கடை மகசீன் சிறைக் ‘கதை‘கள் வந்தாலும் அனுபவத்தில் இதுவே முதற்தடவை. சிறையில் அவரது செல்லில் இன்னும் மூவர் தங்கியிருந்தார்கள். தனித் தனிப் படுக்கைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன. வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்த நண்பர் தன் மீது பெரும் போர்வையைப் போல படியும் மனச்சோர்வை அகற்ற ஒரு வழி கண்டுபிடித்தார். அவர் ஆதவன் இதழில் வெளியாகியிருந்த பிரபாகரனின் படத்தைக் கத்தரித்து தனது தலைமாட்டில் ஒட்டிக் கொண்டார். தலைவரைப் பார்க்கின்ற போதெல்லாம் தனக்கு உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வந்ததாகச் சொன்னார் நண்பர்.

இந்த இடத்தில் நான் இன்னுமொரு நண்பரைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. அட, அவரும் தற்பொழுது கனடாவில்தான் இருக்கிறார். அண்மையில் திருமணம் முடித்தவர் ஆதலால் பெயரைத் தவிர்த்துவிடுகிறேன். அவர் கொழும்பில் என்னோடு படித்த காலத்தில் ஒரு பெண்ணை விழுந்தெழும்பிக் காதலித்தார். ஒருபின்னேரப் பொழுதில் தன் காதலையெல்லாம் கடைந்து திரட்டி வாழ்த்து அட்டையில் எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்திருந்தார். அடுத்தநாள் காலை மற்றொரு பெண்ணொருத்தி வாழ்த்து அட்டையொன்றை அவரது கையில் திணித்தாள். “தங்கச்சி.. நான் உம்மோடு அப்படி நினைத்துப் பழகவில்லை” என்ற சொற்களை தயாராக வைத்துக் கொண்டு அட்டையைப் பிரித்துப் பார்த்தவருக்கு கரன்ட் கட்டாகி, உலகமே இருண்டு போனது. அது முன்னையநாள் அவர் தன் காதலிப்பெண்ணுக்கு கொடுத்த அதே அட்டை. அவள் அதை நிராகரித்து திருப்பி அனுப்பியிருந்தாள்.

நண்பர் தளரவில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியே நகரும் போது சிம்மி நகரமாட்டாளா என்றார் அவர். சிம்மி என்பது அவளுக்கு அவர் வைத்த செல்லப்பெயர். இப்படியிருக்க நண்பர் கனடாவிற்கு கிளம்பிவிட்டார். அங்கிருந்தும் அம்மிக்கு அடிக்கலாம் என்று அவர் ஐடியாப் பண்ணியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் நான் அவரிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவரது சிம்மியிடம் அவருக்காக நான் பேச வேண்டுமாம். (நண்பரது நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்) அடிப்படையில் அப்படியெல்லாம் பேசுகிற நபராக நான் இல்லை என்பதை அவருக்கு சொல்லியபடியிருந்தேன். எனக்குப் பயமாக இருக்கிறதென்றும் சிம்மி முன்னால் நின்றால் முழங்கால்கள் சிரட்டைகள் ஒன்றோடு ஒன்று தட்டி உதறல் எடுக்கிறது என்றும் நான் அவருக்கு எடுத்து விளக்கினேன்.

அப்பொழுதுதான் அவர் அந்த உளவியல் பாடத்தை எனக்கு நடாத்தினார். அவர் சொன்னார். “மனதைத் தளரவிடாதே.. அப்படி அவளுக்கு முன்னால் நின்று கதைக்கிற சமயங்களில் உனக்கு நடுக்கமாகவும் பயமாகவும் இருந்தால், மனதுக்குள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று சொல்லிப்பார். புதிய உற்சாகமும் துணிவும் பிறக்கும். பிறகு அவளோடு தயக்கமின்றி எனக்காகப் பேசமுடியும்.”

எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இந்த ரெக்னிக் என்னை ஐஞ்சும் கெட்டு அறிவும் கெடப்பண்ணியிருந்தது. “எடே.. இதைக் கேட்டால் அந்த மனுசன் இன்றைக்கே ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போடும்” என்றேன்.

“தலைவரைப் பற்றி அப்படிக் கதைக்காதே என்று நண்பர் என்னைக் கண்டித்தார். ஏனெனில் அவர் அப்பொழுது ஒரு செயற்பாட்டாளராக பரிணமித்திருந்தார்.

கனடா நண்பர் கைக்கொண்டதைப் போன்றதான ஒரு உளவியல் உத்தியைத்தான் போலந்துச் சிறை நண்பரும் முயற்சித்திருக்க வேண்டும். அப்படி மன உற்சாகத்தை பீறிட்டு வரவழைத்துக் கொண்ட நண்பர் பொழுதைப் போக்க ஆதவன் இதழே கதியென்றிருந்தார். தொன்னுாற்றெட்டுப் பக்கங்களின் சமாச்சாரங்களையும் ஒப்புவிக்கிற நிலைக்கு அவர் வந்திருந்தார். இப்படி அவர் இதழைப் பிரித்து வைத்துப் படிக்கிற நேரங்களில் அட்டையில் சிரித்தபடியிருந்த தமன்னாவை விழுங்கி விடுவதைப் போல அறையிலிருந்த ஆபிரிக்க நாடொன்றைச் சேர்ந்தவன் பார்த்தபடியிருந்திருக்கிறான்.

அப்படியொருநாள் அவன் ரொய்லெட் போனபோது, ஆதவனை இதழை அவன் வாங்கிப் போனானாம். போனவனை நீண்ட நேரமாகக் காணவில்லை. இது தின வழமையாகத் தொடங்கியது. முதலில் நண்பருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அப்படியொருநாள் பிடிபட்டபோது அவன் இதழின் அட்டையைத் தண்ணீரால் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். நண்பர் முகத்தைச் சுழித்து நுனி விரலால் காதுகளில் பிடித்து முயலைத் துாக்குவது போல அதை வாங்கிக் காய வைத்திருக்கிறார். காய்ந்த பிறகு தமன்னா இப்பொழுது கொஞ்சம் மொட மொடப்பாய் முறுகியிருந்தா.

அடுத்தநாளும் அவன் தமன்னாவைக் கேட்டிருக்கிறான். நண்பர் தரமுடியாது என்றார். இன்னும் இரண்டொருதடவை அவன் கேட்டபொழுது இவர் ஒரேயடியாகத் தரமுடியாது என்று கையை விரித்தபோது அவன் கையை நீட்டியிருக்கிறான். அருந்தப்பில் மூக்குத் தப்ப தாடையில் அவனது உருண்ட கை மொளிகள் பதிந்தன. அழுது கொண்டே தமன்னாவைத் தாரை வார்த்தார் நண்பர். இம்முறை அவன் சரிவரக் கழுவிச் சுத்தம் செய்திருக்கவில்லை. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று அவன் நினைத்திருக்கக் கூடும். தமன்னாவும் இனித் தாங்க முடியாதென்றோ என்னவோ உதட்டோரமாகக் கிழிந்து போயிருந்தா. நண்பருக்கும் தாங்க முடியாது போய்விட்டது. இதழில் இருந்து அப்படியே தமன்னாவைக் கிழித்தெடுத்து இந்தா பிடி என் அன்புப் பரிசு என்று கொடுத்து விட்டாராம். அவன் அதில் நெகிழ்ந்து மேலும் இதுமாதிரியான புத்தகங்கள் உள்ளனவா என்று கேட்டானாம்.

என்ன மனிசரப்பா என்று இந்தக் கதையை முடித்தார் நண்பர்.

அவனுக்குத் தமன்னாவைப் பார்க்கின்ற போது ஏதேனும் பீறிட்டுக் கிளம்பக் கூடாதா என்று நான் கேட்டேன்.

அதுக்கில்லையடாப்பா.. அவன் அப்பிடி அசிங்கப் படுத்திட்டுக் கொண்டு வந்து தந்த தமன்னாவை நான் இரவில தடவிக் கொண்டு படுத்ததை நினைக்கத்தான் வாந்தி வாந்தியா வருகுது என்று நண்பர் சொன்னதுதான் இந்தப் பதிவின் ஹைலைட்..

நண்பர் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் கனடாவுக்குப் பாய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். அடுத்த முறை அவர் புறப்படும்போது ஸ்ரேயா, ஸ்ருதி, திரிஷா, அசின் படங்கள் போட்ட ஆதவன் இதழ்களையும் கொடுத்து விடலாம் என்றிருக்கிறேன்.

0 0 0

ஆதவன் இதழில் நடிகைகளின் படத்தை வெளியிட்டபோது சில நண்பர்கள், ஏனிப்பிடி இதனால் யாருக்கு என்ன பிரியோசனம் என்று கேட்டிருந்தார்கள். அப்பொழுது என்னிடம் பதில்கள் இருக்க வில்லை. இனிக் கேட்கட்டும்….

சம்பந்தப்பட்ட அந்த ஆதவன் இதழ் இதுதான்

2 Comments

  1. ila

    மாப்பி!
    ஒத்த படம், இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்? கனடாவுல எல்லாருக்கும் வேலை கிடைக்குமா? இல்லே உங்க மக்கள் அதிகம் இருக்காங்க அப்படிங்கிற பாசமா?

  2. நெடுதுயிலோன்

    “ஆறாவடு” எழுதிய சயந்தனிடமிருந்தா இப்படி ஒரு புனைவு?
    தங்களிடம் எனக்கு மிகுந்த மதிப்புண்டு….வேண்டாம் இனிமேல் இப்படியெல்லாம் வேண்டவே வேண்டாம்

Leave a Reply