ஓகே, ரெடி.. இப்பொழுது காலில் விழலாம்

பத்து வயதுச் சிறுவனுக்கு குட்டிப் பிரபாகரன் என்று பட்டம் சூட்டியிருக்கிறார்கள். நான் முல்லைத்தீவில் பிறந்தவன், அதனால் தாய் தந்தையர் கால்களைத் தவிர, மற்றவர் (இந்த வார்த்தைக்குப் பதில் ஒவ்வொருவரும் அந்நியர், எதிரிகள் என்ற வார்த்தைகளை தம்பாட்டிற்குச் சேர்த்திருக்கிறார்கள்.) கால்களில் விழமாட்டேன் என சிறுவன் பேட்டியளித்ததாக வேறு சொல்கிறார்கள்.

சிறுவன் கால்களில் விழப் “பஞ்சிப்படும்” வீடியோவை நான் பார்த்தேன். நமது செய்தியாளர்களும் அந்த வீடியோவையே தமது செய்தி மூலங்களாகக் கொண்டிருப்பர் என்றுதான் நினைக்கிறேன். அந்த ஒளிப்பதில், அமைச்சரிடம் “வணங்கி ஆசிபெறும்” படி இருவர் அவனை ஆயத்தப்படுத்துகின்றனர். அவன் நெளிந்து தயங்கி விலகிச் செல்கின்றான். அவ்வளவும்தான். அவன் ஒரு தமிழனாகவும் மேலதிகமாக முல்லைத்தீவில் பிறந்தவனாகவும் மிக முக்கியமாக வணங்க வேண்டிய நபர் சிங்களவராகவும் இருந்துவிட – மேசைச் செய்தியாளர்கள் திரைக்கதை கதை வசனம் என புனைந்து தள்ளி விட்டார்கள்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை காலில் விழுந்து வணங்குவது ஒரு பண்பாடாக அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கவில்லை. தாய் தந்தையரைவணங்குவது கூட பரவலாக நம்மிடம் வழக்கத்தில் இல்லை. சிங்கள சமூகத்தில் “நல்லநாள் பெரியநாட்களில்” ஒரு இயல்பு வழமையாக பெரியோர்களின் கால்களில் விழுந்து வணங்கும் முறைமை உள்ளது. குறிப்பாக சிங்கள தமிழ் சித்திரைப்புத்தாண்டு தொடர்பாக, கல்விப்புத்தகப் பாடங்களில் அவ்வாறு தாய் தந்தையரை விழுந்து வணங்கும் படங்களை சிறுவயதுகளில் நான் பார்த்திருக்கின்றேன். அந்தச் சூழல்கள் என்னோடு ஒட்டாமல் தள்ளியே நின்றன. இன்னும் கோயில்களில் “சுற்றமும் முற்றமும் பார்த்துநிற்க” நெடுஞ்சாண் கிடையாக விழுவதில் சிறு வயதுகளில் வெட்கமாகவும் உணர்ந்திருக்கிறேன்.

அப்படியொரு முற்றிலும் புதிய முறைமையில், நாலுபேர் பார்த்துநிற்க விழுந்து வணங்குகின்ற வெட்கத்தில் சிறுவன் “பம்ம” அவனை வெற்றி வீரனாக பேஸ்புக்கிலும் இணையச் செய்தித்தளங்களிலும், விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர்.

நாங்கள் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்குகின்ற சந்தர்ப்பங்களை யோசித்துப் பார்க்கிறேன். சாமத்திய வீட்டிலும் திருமணச் சடங்கிலும் அப்படியொரு சம்பிரதாயம் இருக்கிறது. அது கூட வீடியோ எடுப்பவர் “ஓகே.. ரெடி .. இப்ப விழுங்கோ” என்ற பிறகுதான்..

0 0 0

இதுவும் காலில் விழுகிற சமாச்சாரம்தான். இங்கேயொரு கோயிலில் நடந்தது. பூசைகள் முடிந்து ஐயர் வீபூதி கொண்டுவருகிற நேரம், அன்றைக்குப் புதிதாகக் கோயிலுக்கு வந்திருந்த வடஇந்தியக் குடும்பமொன்று கணவன், மனைவி, இருபிள்ளைகள் என ஐயரின் காலடியில் “குடும்பத்தோடு விழுந்து கிடந்து” வணங்கினார்கள். ஐயரும் ஒருகணம் அந்தரித்துத்தான் போய்விட்டார். அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு என்ன செய்வது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. குனிந்து தொட்டுத் துாக்குவதா அல்லது தொட்டு ஆசீர்வதிப்பதா அல்லது இவர் “சிவனே” என்று நிற்க அவர்களாக எழும்புவார்களா என ஒரு “மண்ணும்” அவருக்குத் தோன்றவில்லையோ என நான் நினைத்தேன்.

பிறகு அவர்கள் எழுந்து கொஞ்சம் குனிந்து வாய்பொத்தி நிற்க அவர்களது நெற்றியில் ஐயர் விபூதியைப் பூசினார். அப்பொழுது அவர்களைப் பார்க்க ஜெயலலிதாவிற்கு முன்னால் நிற்பவர்களைப் போலிருந்தது.

இதற்கிடையில் அப்பால் நின்ற சில “தமிழ்த்தாய்” மார் ஐயர் வரும்போது விழுந்து வணங்குவதற்காக தமது பிள்ளைகளையும் “ரெடி”ப்படுத்தினார்கள். ஐயர் வந்து நின்றார். இரண்டு சிறுவர்களின் “கழுத்தைப் பிடித்து” ஒரு தாய் தள்ளினார். அவர்கள் திமிறிக்கொண்டு நின்றார்கள். பிறகு பிடியிலிருந்து நழுவி தாய்க்குப் பின்னால் ஒளிந்து கொண்டு நெளிந்தார்கள். அவ்வளவு நேரமும் “அவங்கள் விழுவாங்கள்” என்று மரம்போல் நின்ற ஐயருக்கு “இது வேலைக்காவாது” என்று விளங்கியிருக்க வேண்டும். நகர்ந்து போய்விட்டார்.

அந்தச் சிறுவர்களைச் சந்திக்க வேண்டும். சிலநேரங்களில் அவர்களும் ஏதாவது வீர நிலத்தின் விழுதுகளாக இருக்கலாம். ஒரு பேட்டி எடுக்க வேண்டும்.