பரதேசி நாய்

நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார் (Tamilien) ஜெர்மன் மொழியில் தமிலியன் என்றால் தமிழர்கள். தமிலிஸ் என்றால் தமிழ்.

சோமாலியாக்காரருக்கு சுவிற்சர்லாந்து பிடிக்கவேயில்லை என்றார். சுவிற்சர்லாந்து வெள்ளையின மக்கள் தங்களை மனிதர்களாகவே நினைப்பதில்லையென்றவர் ஒரு சிறு புன்னகை கூட தங்களை நோக்கி அவர்கள் தருவதில்லை என்றார். புறக்கணிப்பில் வலி அவரது பேச்சிலிருந்தது. இங்கே எதிர்ப்படும் மனிதருக்கு அது எவராயிருந்தாலும் வணக்கம் சொல்லும் ஒரு மரபிருக்கிறது. grüezi என்கிற அந்த வார்த்தையை நம்மாட்கள் க்றூட்சி என்றும் கிறைச்சி என்றும் விட்டால் இறைச்சி என்றும் பயன்படுத்துவோம். இங்கே கிராமங்கள் வெறிச்சோடிப்போயிருக்கும் எப்போதும். வீதியில் சக மனிதரை எப்போதாவதுதான் காணமுடியும். ஆகவே அப்போது வணக்கம் வைப்பது இவர்களுக்குக் கட்டுப்படியாகிறது. ஆனால் நமது நாட்டில் சூழலில்.. வீட்டிலிருந்து புறப்பட்டால் வணக்கம் சொல்லியே வாயுளைந்து விடும்.

சோமாலியர் சொன்னார் – ஆனால் தமிழர்கள் அப்பிடியல்ல. அவர்கள் சிரிக்கிறார்கள், நெருங்கிப் பேசுகிறார்கள். அவர்கள் அற்புதமானவர்கள்-

வெளியே ஸ்நோ கொட்டிக்கொண்டிருந்தது.

0 0 0

RACISMஇரண்டொரு வாரங்களுக்கு முன்பு, பஸ்ஸில் சீற் இருந்தபோதும் அடுத்த இறக்கங்களில் இறங்குவதற்காக வாயிலில் நின்றுகொண்டே பயணித்தேன். குளிரான நாள் அன்று. தலை காதுகளை இறுக்கி மூடி மப்ளர் அணிந்திருந்தேன். ஒரு நிறுத்தமொன்றில் இரண்டு மூன்று தமிழர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களில் ஒருவர் என்னை கண்ணுக்கு நேராகவே பார்த்தார். பார்த்தபடியே சொன்னார். “பரதேசி நாய் – சீற் இருக்கத்தக்கவா நிண்டு கொண்டு வருகுது”. நானும் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டேன். முன்னைப்பின்னை அவரோடு எங்காவது சண்டைபிடிச்சிருக்கிறனா என்றெல்லாம் யோசித்தேன். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து எனக்கொரு போன் வந்தது. வீட்டிலிருந்து பேசினார்கள். பேசிவிட்டு வைத்துவிட்டேன். இப்போதும் அந்தத் தமிழர் என்னை நேராகப் பார்த்தார். திரும்பவும் திட்டப்போகிறாரோ என்று யோசித்தேன். என்னைப் பார்ப்பதுவும் பிறகு விழிகளைத் தாழ்த்திக் கொள்வதுமாக அவர் கொஞ்சநோரம் விளையாட்டுக் காட்டினார். திடீரென்று ” அண்ணை என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றவர் மேலும் தொடர்ந்தார். “நான் நீங்கள் ஒரு கறுப்பர் என்று நினைச்சுத் திட்டிப்போட்டன்”

அவர் மேலும் ஒன்றிரண்டு தடவைகள் sorry சொல்லிக்கொண்டே வந்தார்.

எனக்கு சிரிப்பாக இருந்தது. நாங்கள் இனவெறிக்கு எதிராக போராடும் ஒரு இனம்