நல்லவேளையாக அவர் கையில் ஆயுதங்கள் இல்லை

மாவீரர் தினம் முடிந்துவிட்டது. நானறிந்தவரை லண்டனிலும் கனடாவிலும் விசில் பறக்க நடந்ததாகக் கேள்வி. மற்றைய நாடுகளிலும் அவ்வாறே நடந்திருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரேனும் வந்து அனல்பறக்கப் பேச அதற்கு விசிலடித்து ஓய்வதோடு நமது தமிழ்த்தேசிய எழுச்சி முடிவுக்கு வருகிறதென நினைக்கிறேன். இம்முறை நெடுமாறன் (ஒஸ்ரேலிய மாவீரர் தினம்) திருமா (டென்மார்க் மாவீரர் தினம்) வைகோ (லண்டன் மாவீரர் தினம்) என யாருக்கும் அந்தந்த நாடுகளுக்குள் நுழைவனுமதி கொடுக்கவில்லையாம். நல்லது.

சுவிஸில் நிகழ்ந்த நிகழ்வில் தலைவர் பிரபாகரனது படத்தை மாவீரர் வரிசையில் செருக யாரோ முயற்சிப்பதாகவும் அதைத் தடுப்பதற்கெனவும் பலரும் பரபரப்பாக இருந்தார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவர் பிரபாவின் மாவீரர் தின உரையை இணைக்க முடியவில்லையென அறிவித்த போது அனைவரும் கை தட்டினார்கள். இவற்றுக்கு அப்பால் தங்கள் பிள்ளைகளின் சகோதரங்களின் படங்களின் முன்னால் கண்ணீரோடு கதறலோடும் அமர்ந்திருந்தனர் பெற்றோரும் மற்றவர்களும்..

சுவிஸ் மாவீரர் நாளில் அண்மைக்காலம் வரை களத்தில் போராளிகளாயிருந்த பலரைப் பார்க்கமுடிந்தது. பலரும் பல்வேறு வழிகளில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பலர் இன்னமும் சுவஸில் தஞ்சம் கோருவோருக்கு அளிக்கப்படும் முகாம்களிலேயே தங்கியிருக்கின்றனர். அவர்கள் போராளிகளாயிருந்தார்கள் என அறிந்தவர் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் சாதாரணமாய் வந்தார்கள் மண்டப வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்தார்கள். முடிந்த பிறகும் அவ்வாறே ஒரு எடுபிடியாய் நின்றார்கள். பிறகு போனார்கள்.

விடுதலைப்புலிகளின் மட்டு அம்பாறை அரசியல் பிரிவு தலைவர் தயாமோகன் அண்மையில் சுவிஸ் வந்து சேர்ந்திருக்கிறார். அவர் முன்னாளா அல்லது இந்நாளும் இருக்கிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அவருக்கு கூட அது தெரியுமா எனத் தெரியவில்லை. இதையெல்லாம் இப்போது யார் தீர்மானிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எனக்கென்னவோ வருடா வருடம் மாவீரர் உரை தயாரிப்பதைத் தவிர இப்போதைக்கு விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகத்திற்கு ?? செய்வதற்கு என்ன இருக்கிறது என யோசிக்கத் தோன்றுகிறது. என்னவோ செய்யட்டும்! இறுக்கமான கட்டுக்கோப்பில் திகழ்ந்த புலிகள் இயக்கத்திற்கு இந்தக் கதி நேர்ந்திருக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. தலைவர் பிரபாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடைசிக் காலங்களில் கலைத்திருந்தால் இப்படி அவரா இவரா எவரோ என்கிற குழப்பங்கள் ஏற்பட்டிருக்காதோ என எண்ணுகிறேன்.

0 0 0

புலம்பெயர்ந்த தேசங்களில் கொஞ்சம் வயசானவர்கள் தாங்கள் நாட்டுக்குப் போகப்போறம் நாட்டுக்குப் போகப்போறம் என கனகாலமாகவே சொல்லி வருகிறார்கள். போவதும் போகாது விடுவதும் அவர்களது விருப்பம். அவ்வாறு அடுத்த வருடம் போக இருப்பதாகச் சொன்ன ஒருவரின் உரையாடல் இது. “போகப்போறன். முதலொருக்க போய் நேச்சர்களைப் பாத்திட்டு வந்து பிறகு போகப்போறன். ”
“போய் என்ன செய்யப் போறியள்” – இது நான்
“வீடெல்லாம் ரிப்ரொப்பாகத் திருத்தியாச்சு.. போய் காலாட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். பின்னேரங்களில டேய்.. சின்னவா இங்கை வாடா இறக்கடா கள்ளை என்றால் சின்னவன் கள்ளு இறக்கித் தருவான். வேற என்ன வேணும்? ஒரே கொந்தாய்தான்”

மேற்சொன்ன அன்பரை விடுங்கள் ஐம்பதுகளைத்தாண்டியிருந்தார். மடிப்புக்களும் சுருக்கங்களும் இன்னும் போயிருக்காது. இவ இருபத்தாறு வயதுப் பெண் பிரான்சில் இருந்து வந்திருந்தா. சிறுவயதிலேயே புலம் பெயர்ந்தவ. ஒரு சந்திப்பில் மாற்றமுடியாத நமது பண்பாடான யாழ்ப்பாணத்தில எவ்விடம் என்ற கேள்வியோடு ஆரம்பித்து அவ நெருங்கிக் கொண்டிருந்தா. அவர் சொல்கிற நபர்களை நான் அறிந்திருந்தேன். மில்கார பாலுவைத் தெரியுமா என்று அவ கேட்டா. (தெரியாமல் இருக்குமா) அவையிட ஆட்கள்தான் நாங்கள்.. ஒரிஜினல் ……… என்ற அவவின் வார்த்தைகளை சத்தியமாக ஜீரணிக்க முடியவில்லை என நான் எழுதுவது ஏதோ அதிர்ச்சித் தொனிக்காக அல்ல. அது ஒருபோதும் எதிர்பாராதது. அவவுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்..? ஏன் டூப்ளிக்கேற்றும் உண்டோ என்று கேட்பதைத் தவிர..

எப்போதோ எழுதி வைத்திருந்த ஒரு சிறுகதைக்கு அதன் பிறகே நான் புடுங்கியிருக்கிறது என்று தலைப்பிட்டேன். புலம்பெயர்ந்த உலகச் சமூகங்களில் அரசியல் மற்றும் சமூகக் கருத்தியலில் ஒரு செத்த இனமாக நாங்கள் உருவாவதுபோலத் தெரிகிறது. நாங்கள் ஒட்டுண்ணிகள். அவ்வளவே..

0 0 0

vஅண்மைக்காலமாக எனது பதிவுகள் இரயாகரனின் தமிழரங்கத்தில் வெளியாகின்றன. ஒரு ஊடகத்திற்கு குத்தப்பட்ட முத்திரையைக் கொண்டே அதில் வெளியாகிற பதிவுகளின் நபர்களும் பார்க்கப்படுகிற சூழல் நிலவுகிறதெனினும் அதனை நான் அலட்டிக் கொள்ளவில்லை. பொது வெளியில் ஏதோ ஒரு வழியில் வெளிவந்துவிட்ட பிறகு அது எங்கிருந்தும் வரட்டும். அது பேசுகிற பொருளைப் படிப்பவர்கள் படிக்கட்டும். மற்றவர்கள் இவனொரு விலைபோனவன் என்று சொல்லட்டும். தமிழரங்கத்தில் வெளியாகிற பதிவுகள் தம்முடைய நியாயப்பாடுகள் அல்லது விருப்பங்களுக்கு ஏற்று “தமக்குச் சரிப்பட்டு” வரக்கூடிய உடன்பாடுகளுக்கு உட்படுகிறதாக அமையின் அவற்றை வெளியிடுகிறார்கள் என நினைக்கிறேன். உதாரணமாக இந்தப்பதிவின் முதல் இரண்டு பகுதிகளும் “அவர்களுக்குச் சரிப்பட்டு” வரக்கூடியதாக அமையலாம். அமையின் அவர்களாகவே எடுத்துப் போடுகிறார்கள். பெரும்பாலும் பதிவெழுதும் போதே “அவர்களுக்குச் சரிப்பட்டு வரும்..” “வராது” எனப் புரிந்து விடுகிறது. மற்றும்படி இதனை வெளியிடவும் என தமிழரங்கத்திற்கு அனுப்புவதோ “லிங்” கொண்டு சென்று குத்தும் விளம்பரப்படுத்தல்களையோ செய்வதில்லை.

இனியொரு தளத்தில் இரயா குறித்த அசோக் யோகன் எழுதிய பதிவொன்றினைப் படித்தேன். அதில் இரயாவின் விமர்சன மொழி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. என் சின்ன வயதுகளில் ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். தெளிவாகவே அவர் தனது வார்த்தைகளில் தன்னையொரு சாதிய மேலாளர் எனக் காட்டிக் கொள்வார். “நாய்ச்சாதி.. நலமெடுத்த நாயே.. நக்கிப்பிழைக்கிற எளிய வடுவா.. அவனோடை படுத்த முண்டம்.. மூதேவி ” இப்படியாகத்தான் அவரது வசவுகள் நீளும். பாடசாலைகளுக்குள்ளும் அவை நீண்டிருந்ததாகத்தான் படித்தவர்கள் சொன்னார்கள். அவ்வப்போது இரயா பயன்படுத்தும் வசவு மொழிகளும் வாத்தியார் மொழிகளோடு பெரிதும் வேறுபடுவன அல்ல. அவற்றைப் படிக்கும் போதெல்லாம் எனக்கெழுகிற உணர்வு என்னவெனில் “நல்ல வேளையாக இரயாகரனின் கையில் ஆயுதங்கள் இல்லை” என்பதுவே..

0 0 0

ஒன்றிரண்டு இணைப்புக்கள்
புலிகள் இயக்கத்தின் குழப்பநிலையும் உண்மை நிலைவரமும் – பூராயம்
ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்? -கீற்று

10 Comments

  1. வாசிச்சன்!! நல்லதை நியாயமா எழுதி இருக்கிறிங்க!! வாழ்த்துகள்!! (எனக்கு வயசு 25 ஆன் எனக்கு புரிவதுகூடவா இந்த கிழட்டு புத்திஜீவிகள்/அறிவாளிகள்/மாற்றுகருத்தாளர்கள்/ஜனநாயகவாதிகளுக்கு புரியவில்லை???)

  2. வாசிச்சன்!! நல்லதை நியாயமா எழுதி இருக்கிறிங்க!! வாழ்த்துகள்!! (எனக்கு வயசு 25 ஆன் எனக்கு புரிவதுகூடவா இந்த கிழட்டு புத்திஜீவிகள்/அறிவாளிகள்/மாற்றுகருத்தாளர்கள்/ஜனநாயகவாதிகளுக்கு புரியவில்லை???)

  3. இது தமிழரங்கத்தில் வந்ததா இல்லையா.. அதைச் சொல்லும் முதலில்..

  4. இது தமிழரங்கத்தில் வந்ததா இல்லையா.. அதைச் சொல்லும் முதலில்..

Comments are closed.