Skip to content

  • Home
  • நேர்காணல்
  • சிறுகதை
  • ஆதிரை
  • ஆறாவடு
  • காணொளிகள்
  • அஷேரா

அஷேரா! சிதறிய எறும்புகளின் கதை – ஜேகே

July 3, 2021 by சயந்தன்

எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலில் எழுதப்பட்டிருக்கும் இரவு பற்றிய குறிப்புகள் இவை.

“இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையைப் போன்றது. அதன் அதன் தீரா வாசனை எங்கேனும் பரவி இருக்கிறது”

‘அஷேரா’ நாவலை வாசித்த கணங்களின்போது அதுவும் இரவைப்போலவே ஒரு இரகசிய நதியாக நம்மைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பதை உணரக்கூடியதாக இருக்கும். சுவிற்சலாந்தின் பனிக்குளிருக்கு உறைந்து, வசந்தங்களில் குளிர்ந்து, கோடையில் தணிந்து, கொழும்பின் அழுக்கான புறநகர்ப்பகுதிகளில் புழுங்கிக் கசிந்து, ஈழத்தின் வடக்கு கிழக்கிலும் தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலும் பாய்ந்தோடும்போது உலர்ந்தும் பெண்களின் மடியில் மிதந்தும் அவர்களற்ற உலர் நிலங்களில் கற்பனைப் பயிர் செய்தும் இந்த நாவல் எனும் பெரு நதி ஓடிக்கொண்டேயிருந்தது. சமயத்தில் அது கால்கள் அற்ற கள்ளப்பூனை போலவும் அரைந்துகொண்டு திரிந்தது. வாசித்து முடித்து நாட்கள் பல சென்றபின்னரும் அதன் தீராவாசனை எங்கெனும் பரவிக்கொண்டேயிருந்தது.


அதனாலேயே அஷேரா என்பது ஒரு இரவு. அதன் மொழியில் சொல்லப்போனால் வெளிச்சத்தின் அடியாள். நதிகள் எல்லாமே கடலின் அடியாட்கள் என்பதுபோல.
பெரும் போர் ஒன்றின் சிதறிய எறும்புகள்தான் அஷேராவின் பாத்திரங்கள். அது ஆப்கானிய போரில் சிதறியதாக இருக்கலாம். ஈழத்தின் எச்சங்களாக இருக்கலாம். ஆபிரிக்க நிலத்து எறும்புகளாக அமையலாம். வரலாற்றின் மீதங்களாகவும் இருக்கலாம். தம் கூட்டங்களினின்றும் சிதறுண்டு எஞ்சிய எறும்புகளின் அலைதலை அஷேராவில் உணரக்கூடியதாக இருக்கும். முதலில் தனித்து அலைந்து, பின்னர் தன்னையொத்த சக எறும்புகளை இனங்கண்டு அவற்றுடன் சேர்ந்து அலைந்து, முன்னே போன எறும்புகளைத் தொலைத்ததன் வினையாக ஏன் எதற்கு இயங்கினோம் என்பதையே அறியாமல் திக்கற்று திசையெங்கும் திரியும் ஒரு எறும்பின் மனநிலை எப்படி இருக்கும்? அவையே அஷேராவின் மனிதர்கள்.

அருள்குமரன். அதீத மன உளைச்சலால் (Post Traumatic Stress Disorder) பாதிக்கப்பட்டவன். குடும்பத்தில் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகளிலிருந்தும் பதின்மத்துப் பாலியல் குழப்பங்களிலிருந்தும் தப்புவதற்காகப் போராட்டக்குழுவொன்றில் போய் இணைகிறான். பின்னர் தமிழ்நாட்டினூடாக கொழும்புக்கு இயக்க நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்படுகிறான். அங்கு பிறிதொரு பேரதிர்ச்சி அவனை அப்படியே அடித்துப்போட்டுவிடுகிறது. அதன் கிழிசல்களோடே அருள்குமரன் நாவல் முழுதுமே அலைகிறான். அவன் காணும் மனிதர்களையும் அந்தக் கண்களோடே அணுகுகிறான். சிலரோடு அம்மாவின் அன்புகொண்டு பழகுகிறான். பலரை அம்மா ஏற்படுத்திய அதிர்வுகளைக் கொண்டு எடைபோடுகிறான். அருள்குமரனூடாக நகரும் கதையில் வருகின்ற மனிதர்கள் எல்லோரிடத்திலும் அவனுடைய இருத்தலியல் சிக்கல்களும் தொற்றிவிடுவதும் அப்படியான மனிதர்களோடு மாத்திரமே அவன் பழக்கங்களை ஏற்படுத்துவதும் வெறும் தற்செயல்கள் அல்ல.


அற்புதம். ஈழப்போர் கடித்துத் துப்பிவிட்ட இன்னொரு எச்சம். தமிழீழம் காணப் புறப்பட்ட எண்பதுகளின் போராளிக்குழுக்களுக்கிடையே மிதிபடும் ஒரு நேர்ந்துவிட்ட எறும்பு இவன். யார் எதிரி, யார் நண்பர் என்றே தெரியாத குழப்பங்கள் நிறைந்த காலம் அது. எதற்காகப் போராடுகிறோம், யாரை எதிர்த்துப் போராடுகிறோம், யாரால் கொல்லப்படுவோம் என்று எதுவும் எவருக்குமே புரிவதில்லை. கொலையைச் செய்பவருக்கும் ஏன் அதனைச் செய்கிறோம் என்று தெரிவதில்லை. போராடப்போன அற்புதம் தமிழ்நாட்டிற்கும் போய், அங்கே போராளிக்குழுக்களால் தேடப்பட்டு, ஒரு கொலை முயற்சியில் நூலிழையில் தப்பித்து, மீண்டும் ஈழத்துக்குத் திரும்பி, முள்ளிக்குளத்திலிருக்கும் புளொட் முகாமில் தஞ்சமடைகிறான். அங்கே டம்பிங் கண்ணனை மீண்டும் காண்கிறான். டம்பிங் கண்ணன் வேறு யாருமல்லன். அவன்தான் அற்புதத்தையும் சப்பறத்தையும் பட்டுக்கோட்டை பண்ணையார் வீட்டில் சுட்டுக்கொல்ல முயன்றவன். இத்தனை காலத்துக்குப் பின்னர் அற்புதத்தைக் காண்கையில் அவனால் சந்தோசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டம்பிங் கண்ணன் அற்புதத்தை ஆரத்தழுவி வரவேற்றபடியே சொல்லுவான்.


“மச்சான், சப்பறத்தையும் பண்ணையாரையும் சுட்டுத்தள்ளிவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோதுதான், உன்னைச் சுட மறந்துவிட்டேன் என்பது ஞாபகம் வந்தது”


இதனைத்தான் ‘காலம் ஒரு அம்மா அல்லவா?’ என்று அருள்குமரன் பின்னரொருமுறை அற்புதத்திடம் சொல்லுவான். அற்புதத்தைக் காணும்போதெல்லாம் அருள்குமரனுள் எழும் பாசமும் குற்ற உணர்ச்சியும் நமக்கும் ஏனோ மேலெழுகிறது. அற்புதங்களை ஒத்த மனிதர்களை நம் நிலமும், மனிதரும், காலமும் உயிரோடு குப்பைக்கிடங்கில் போட்டு மூடிவிட்டன என்றே தோன்றுகிறது. யாரோ ஒரு வயோதிப யூதத் தம்பதியின் கரிசனையால் அனெக்ஸ் என்ற பேரில் ஒரு கிடங்குக்குள் தன் எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்க அற்புதம் தயாராகிறார். எப்போதேனும் வழியில் எதிர்கொள்ளும் அருள்குமரன்களுக்கு தன் கதைகளைச் சொல்லி ஆசுவாசப்படுகிறார். நஜிபுல்லாவைப்போல, அருள்குமரனைப்போல அற்புதமும் ஒருநாள் அந்த அந்த ‘மோர்கார்த்தேன் சமர்’ நினைவாலயத்தில் ஏறத்தான் போகிறார். பலமுறை தடுக்கி விழுந்து மனம்மாறி இடைநடுவில் அவர் திரும்பி வருவார். ஒருநாள் முழுத்தைரியத்துடன் தனக்கான குறிப்புகளை எழுதிவைத்துவிட்டு உச்சியிலிருந்து குதிக்க முயற்சிக்கும்போது காவல்துறையால் தடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்படவுங்கூடும். ஏனெனில் அற்புதங்களுக்குத் தற்கொலை செய்யும் உரிமையைக்கூட இந்த உலகம் கொடுத்துவிடப்போவதில்லை.


அஷேராவின் பெண்கள். அருள்குமரனின் அம்மா. அமலி. அபர்ணா. அவந்தி, ஆராதனா எனப் பலரும் இதில் உண்டு. அருள்குமரனுக்குப் பல வார்த்தைகளின் அர்த்தங்களைக் கொடுத்துச்சென்ற பெண்கள் இவர்கள். நிம்மதி என்ற வார்த்தையோடு எப்போதுமே சஞ்சலமும் கூடவே வந்து சேரும் என்று அவனுடைய அம்மா அவனுக்கு உணர்த்திப்போனார். ‘குரூரம்’ என்ற சொல் நிலையாக அவனுள் தேங்கிப்போனதும் அப்போதுதான். ‘நிச்சலனம்’ என்ற அற்புத சொல்லை ஆராதனா அவனுக்குச் சொல்லிக்கொடுத்தாள். ஆராதனா அவனது கனவு. அமலி அந்தக் கனவின் நிகழ் வடிகால். அபர்ணாவோடுதான் இவன் தன் அந்தரங்கங்கள் அத்தனையையும் அசைபோட்டான். அபர்ணா எப்படியாவது அவன் விழுந்து கிடந்த பாதாளப் புதைகுழியிலிருந்து வெளியே மீட்டுவிடுவாள் என்று அருள்குமரன் உள்ளூர நம்பியிருக்ககூடும். அகிலனின் ‘பாவை விளக்கு’ நாவலில் வருகின்ற தணிகாசலம் இங்கே ஞாபகத்துக்கு வந்துபோவதைத் தவிர்க்கமுடியவில்லை. ‘பாவை விளக்கு’ நாவலில் வரும் பெண்களின் இருத்தலியல் மறுவாசிப்பாகவே அஷேராவின் பெண்கள் வந்துபோகிறார்கள். ஆனால் இங்கே வெறுமனே பாவை விளக்குகளாக பெண்கள் இல்லாமல் அவர்களுக்கென்று எண்ணங்களும் நியாயங்களும் அவற்றுக்கான கற்பிதங்களும் முன்முடிவுகள் இன்றி வைக்கப்படுகின்றன. பெண்களைப்பற்றிய குறிப்புகளின்போது அருள்குமரன் சற்று விலகியே நிற்கிறான். அவர்களின் கதைகளை அவர்களே சொல்லிவிடட்டும் என்று அவன் நினைக்கிறான். ஆராதனா நீங்கலாக. ஏனெனில் அவள் வேறு யாருமல்லள். ஆராதனா அவன் மனதில் எழுப்பியிருந்த இலட்சியப் பெண். அவள் ஒரு பெருங்கனவு. அதனாலேயே அவள் வந்த தடம் தெரியாமலேயே அவன் வாழ்க்கையிலிருந்து மறைந்தும் போகிறாள். அவனும் அவள் என்னானாள் என்று அறிய முயற்சி செய்யவுமில்லை.
நாவலில் வருகின்ற அவந்தி எனும் புலிப்போராளியைப் பற்றிய குறிப்புகள் ஏற்படுத்தக்கூடிய சலனங்கள் ஏராளம். ஒரு பெரு நதியில் அடிபட்டுச் செல்லும் சருகுபோல அவந்தியின் வாழ்வு ஈழம் முழுதும் இழுபடுகிறது. ஒரு சிங்களத்தியாக இனங்கானப்பட்டு, பெண்புலிகள்மீதான ஈர்ப்பில் இயக்கத்தில் இணைந்து, கரும்புலியாகி, பின்னர் கொழும்பில் தற்கொலைக் குண்டுதாரியாக செயற்பட முனைந்து, ஈற்றில் பண்டார வன்னியனுக்குப் பதிலாக அவளுடைய அத்தம்மா சொன்னதைப்போலவே ஒரு நவீன பராக்கிரமபாகுவாக ஓட்டோக்காரனான பிரியந்த வந்து அவளை மீட்டுப்போகிறான். அதை அறியும்போது நமக்குள் ஒரு பெரு நிம்மதி வந்து சேர்கிறது. இந்த ஒரு உயிராவது இந்தச் சாக்கடையில் வீழ்ந்து உயிரை மாய்க்காது தப்பியதே என்று ஆறுதல் கொள்ளவைக்கிறது. அதே கணம் அவள் இன்னொரு அபர்ணாவாக எங்காவது ஒரு தென்னிலங்கைக் கிராமத்தில் வாழ்ந்து கழிக்கிறாளோ என்கின்ற அச்சமும் வரத் தவறவில்லை.
நிம்மதி என்ற வார்த்தையோடு சஞ்சலமும் எப்போதும் இணைந்திருக்கும் அல்லவா?
தமிழ்நாட்டிலிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்வானது ‘ஒரு மரத்தில் கட்டி வைத்த நாயைப் போன்ற வாழ்க்கை’ என்று நாவலில் ஒரு குறிப்பு இருக்கும். அஷேராவின் மனிதர்கள் எல்லோருமே போர் எனும் மரத்தில் கட்டி வைத்த நாய்களைப்போலவே இழுபடுகிறார்கள். அவரவர் கயிறுகளின் நீளங்கள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் அவர்கள் விரும்பினாலுமே போர் அவர்களை இலகுவில் விட்டுவிடுவதில்லை. குண்டுவெடிப்பைப் பற்றியே அதிகம் அறியாத அபர்ணாகூட அகதியாகத்தான் சுவிற்சலாந்துக்கு வருகிறாள். அருள்குமரன் காணும் மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் எங்கோ நிகழ்ந்த போர்களால் பாதிக்கப்பட்டவர்களே. இதனாலேயே அஷேராவும் ஈழத்தரப்பிலிருந்து வெளியாகும் இன்னொரு போரிலக்கியம் ஆகிறது. ‘இன்னொரு’ என்று சொன்னதுக்கும் காரணம் உண்டு. அஷேரா நாவலை போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து தோன்றிய, ஆனால் போரினின்று விலகிய, புலம்பெயர் மனிதர்களின் வாழ்வை, பெண்களின் வாழ்வை, மனப் பிறழ்வுகளைப் பிரதானமாகப் பேசுகின்ற ஒரு பிரதியாக முன்னிறுத்தும் பல விமர்சன முயற்சிகள் நிகழக்கூடும். ஆனால் அது ஒரு தவறான கற்பிதமாகவே தோன்றுகிறது. முதலில் இதுவும் போரைப்பற்றிப் பேசுகின்ற நாவல்தான். எண்பதுகளின் அற்புதம், அருள்குமரன், அவந்தி போன்றோரின் போராட்ட அனுபவங்களை விலத்திவிட்டுப் பார்த்தால் அஷேராவில் எஞ்சும் பக்கங்கள் சிலவே. அதேசமயம் சுவிற்சலாந்தில் நிகழும் அபர்ணா, அற்புதம் போன்றோரின் கதைகளும் ஈழத்தமிழ் இலக்கியத்துக்குப் புதியவை அல்ல. ஏலவே போராளிக்குழுக்களின் உள்பூசல்களையும் கொலைக் கலாச்சாரத்தையும் அதனின்று தப்பியவர்களின் மனப்பிறழ்வுகளையும் சோபா சக்தியின் ‘ம்’ நாவல் பேசியிருக்கிறது. அந்த நாவலில் வருகின்ற நேசகுமாரனை அஷேராவின் அற்புதத்தில் அதிகமாகவே நாம் காணமுடியும். சோபா சக்தியுடைய சமீபத்திய ‘இச்சா’ நாவலின் ஆலாவையும் அபர்ணாவிடம் கொஞ்சம் காணமுடிகிறது. ஆலாவைத் திருமணம் முடித்து ஐரோப்பாவுக்கு அழைத்து வருபவனுக்கும் அபர்ணாவின் கணவன் அரங்கனுக்குமிடையேகூட அதிகம் வேறுபாடுகள் இல்லை. போதாக்குறைக்கு சயந்தனுடைய ஆறாவடு நாவலின் எச்சங்களும் அஷேராவில் இருக்கிறது. அஷேராவின் அற்புத மொழியாளுகை வேண்டுமானால் அதன் மனிதர்களைப் பிறிதொரு பரிமாணத்துக்குக் கொண்டுசெல்லலாம். பெண்களுக்கான மனப்போராட்டங்களுக்கும் சிக்கல்களுக்குமான ஒரு வெளியை அஷேரா அனுமதிக்கிறது என்பது உண்மைதான். ஆயினும் அவை என்னவோ நாவலின் உப களங்கள் மாத்திரமே. ஆதார நூல் பேசுவது போரில் நசுங்கிச் சிதறுண்ட எறும்புகளின் கதைகளையே.


அதனாலேயே அஷேராவும் இன்னொரு ஈழத்துப் போரிலக்கியமாக ஆகிவிடுகிறது.
இங்குதான் இவ்வகைப் போரிலக்கியங்கள் பேசுகின்ற அரசியலையும் குறிப்பிடவேண்டியிருக்கிறது. ஈழப்போரிலக்கியம் என்றால் எப்படியிருக்கவேண்டும் என்கின்ற ஒருவித ஸ்டீரியோடைப் இங்கு விதைக்கப்பட்டுவிட்டது. அது பல புலம்பெயர் இலக்கியவாதிகளால் முன்மொழியப்பட்டு பற்பல காரணங்களால் தமிழ்நாட்டின் பல இலக்கியவாதிகளால் வழிமொழியப்பட்டும் விட்டது. அவையே இங்கே பலரால் பெரிதும் கவனிக்கப்படுகிறது. கவனிக்கப்படுவதால் அவையே தொடர்ந்து எழுதப்படவும் செய்கிறது. இது ஒரு சுழல். அவ்வகை எழுத்துகளில் எண்பதுகளில் முரண்பட்ட போராளிக்குழுக்களின் கதைகள் இருக்கவேண்டும். அதிலும் புலிகள் அல்லாத குழுக்களின் பார்வையில் கதைகள் நகரவேண்டும். சகோதரப் படுகொலைகளும் தமிழ்நாட்டில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றே ஆகவேண்டும். நடு நடுவே இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களையும் குறிப்பிடலாம். ஆரம்பத்தில் புலிகள் மீதான ஒரு கொண்டாட்ட மனநிலை தோற்றுவிக்கப்பட்டுப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கெதிரான ஒரு விமர்சனப்போக்கு முன்னிலைப்படுத்தப்படவேண்டும். முடிந்தால் புலிகளின் அநியாயங்களைப் பூதாகரப்படுத்தினால் நன்று. ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் புலிகள்மீதும் ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டம் மீதும் ஏதேனும் ஒரு மென்போக்கு இருந்தால் அது தவறு என்பதை நிறுவுதல்வேண்டும். புலிகள் செய்யாத வன்முறையா? என்ற எள்ளல் மொழியும் வேண்டும். நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொள்வது காலத்தின் கட்டாயம் என்று அதற்கு விளக்கம் கொடுத்துவிடலாம். நாம் நமக்கிடையே சண்டையிட்டு, சகோதரப்படுகொலைகள் செய்து, தவறான போரைத் தவறான மனிதர்கள்மீது ஏவியதாலேயே தோற்றோம் என்கின்ற ஒரு உய்த்தறிதல் முத்தாய்ப்பாய் அங்கே வைக்கப்படும். சோபா சக்தி தொடக்கிவைத்த ஆட்டம் இது. தமிழ்நாட்டின் தீவிர இலக்கியவாதிகள் மத்தியில் இந்தக் களம் நன்றாக விலைபோக ஆரம்பிக்கவே அடுக்கடுக்காக இப்படிப்பட்ட போரிலக்கியங்கள் வந்து குவியத்தொடங்கின. பொதுவாக அவை புலம்பெயர் தமிழர்களிடையே இருந்துதான் ஆரம்பத்தில் தோன்றியிருக்கவேண்டும். குரலற்றவர்களின் குரல்கள் என்று சொல்லிச் சொல்லி விளிம்புகளைப் பற்றியே பேசிப் பேசி அவற்றை அதிகார மையமாக்கி முன்னைய மையத்தை விளிம்பில் தள்ளிவிடும் அரசியல் இது. சயந்தனும்கூட விரும்பியோ விரும்பாமலோ இந்தக் குழியிலேயே இன்னமும் வீழுந்து கிடப்பதுபோலவே தோன்றுகிறது.


இவ்வகை இலக்கியப்பிரதிகள்மீதும் அவற்றைக் கேள்விகள் இன்றிக் கொண்டாடும் ஒரு தீவிர இலக்கிய வாசக வெளிமீதும் எதிர் விமர்சனம் வைத்தே ஆகவேண்டியிருக்கிறது. ஈழப்போராட்டத்திற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டு தம் சொந்த மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் ஏதிலிகளாக ஈழத்தமிழர்கள் அல்லற்படுவதற்கும் பிரதான மூல காரணம் சிங்களப் பேரினவாதமும் அதன் ஒடுக்குமுறையும்தான். அதனைப் பதிவு செய்யாமல் விடுவதன் நோக்கம்தான் என்ன? அப்படியொன்றும் தீவிர இலக்கிய வெளியில் அவை விரிவாகவும் பரவலாகவும் பதிவுசெய்யப்படவுமில்லை. ஆனால் சிங்களப் பெருந்தேசியவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழத்தமிழர் பயன்படுத்திய தமிழ்த் தேசியப் போராட்டத்தின் காரணங்கள் ஆராயப்படாமல், அவை மழுங்கடிக்கப்பட்டு ஏனைய எல்லாமே இங்கே பேசப்படுகின்றன. இப்போது வெளியாகும் போரிலக்கியங்களை மாத்திரம் ஈழ இலக்கியமாக வாசிக்கும் ஒரு வாசகருக்கு ஈழப் பிரச்சனையின் ஆதார காரணங்கள் தெரியப்போவதில்லை. ஒரு தேவையற்ற போராட்டம் தேவையற்ற முறையில் அதிகாரப் பாசிஸ புலிகளாலும் சகோதரப் படுகொலைகளாலும் தோற்றது என்ற எண்ணப்பாட்டை மாத்திரமே அந்த வாசகர் அடையக்கூடும். அஷேரா ஒரு படி அதிகம்போய் புலிகள் கொழும்பில் செய்த குண்டுவெடிப்பில் இறந்த பள்ளிச்சிறுவர்களைப் பற்றி விலாவாரியாக பேசுகிறது. நாவலின் எங்கோ ஒரு மூலையில் செஞ்சோலை சிறுவர் நிலையக் குண்டுத்தாகுதலும் ஓரிரு வரிகளில் கடந்துபோகிறது. இதுதான் இங்கே சிக்கல். போராட்டம் ஏன் தோற்றது என்றும் எண்பதுகளின் போராளிக்குழுக்களின் உட்பூசலைப் பேசுவதிலும் தவறில்லை. புலிகளின் அட்டூழியங்களும் யுத்தக்குற்றங்களும் பதிவு செய்யப்படவேண்டியதுதான். அவை ஏற்படுத்திய பேரதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் மன அழுத்தங்களை எழுதுவதும் முக்கியமானதுதான். ஆனால் அவை மட்டுமே முன்னிறுத்தப்படுவதன் ஆபத்து அதீதமானது. அதனிலும் மோசமானது எல்லாக்குற்றங்களுக்குமான ஒரு போலிச் சமநிலையை நடுவுநிலைமை என்ற போர்வையின்பேரில் ஏற்படுத்திச்செல்வது.


இலங்கை அரசு செய்த யுத்தங்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் பத்து வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துளி நீதிகூடக் கிடைக்காத சூழலில், தம் சொந்த மண்ணில் தாம் இழந்த சொந்தங்களை நினைவுகூருவதற்காக எழுப்பியிருந்த ஒரு சிறிய நினைவுத்தூபியைக்கூட நொறுக்கித்தள்ளும் ஒரு பிசாசு இராணுவ ஆட்சி தொடரும் தேசத்தில், தம் முன்னாலே பிடித்துச்செல்லப்பட்டச் சொந்தங்களைத் தேடித் தேடித் தொடர்ந்து போராடி அயர்ந்து போய்க்கிடக்கும் மனிதர் உள்ள தேசத்தில், தம் உறவுகளின் இறந்த உடல்களைப் புதைக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்ட நிலையிருக்கும் நாட்டில், தம் சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு ஆண்டுக்கணக்கில் தொடர் போராட்டம் செய்யும் மக்கள்கூட்டத்தின் மத்தியில், தம் தொன்மங்களில் சிங்களப் பௌத்த காவியை விரித்து இராணுவப் பிரசன்னத்தோடு தொல்பொருள் ஆதாரங்களை மாற்றும் ஒரு காலகட்டத்தில், தம் குடும்பங்களைப் பிரிந்து படகுகளில் தப்பியோடி அடைக்கலம் தேடிவந்த நாடுகளில் வாழ அனுமதியின்றி சிறைப்பட்டு, தம் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவதை செல்பேசித் திரைகளில் பார்த்து பெருமூச்சு விடுகின்ற தமிழ் அகதிகள் சூழ் இவ் உலகத்தில் ஈழப்போர் இலக்கியங்களாக நாம் திரும்பத் திரும்ப அந்த ஒரே சோற்றைப் பற்பல வடிவங்களில் கொடுத்து அடையப்போவதுதான் என்ன? மொழியின் அபரிமிதமான எல்லைகளையும் கற்பனைத் திறனால் புதிய எழுத்துவடிவங்களையும் தொடக்கூடிய சயந்தன் போன்ற எழுத்தாளர்கள் திரும்பத் திரும்ப எண்பதுகளின் பூசல்களையே சிருட்டித்துக்கொண்டிருப்பது அயர்ச்சியையே ஏற்படுகிறது.


அஷேராவில் சொல்லாமல் விடப்பட்ட கதைகளே என்னை இன்னமும் நெருடிக்கொண்டிருக்கின்றன. அவந்தியும் பிரியந்தவும் எங்கோ ஒரு சிங்களக் கிராமத்தில் வாழக்கூடிய வாழ்க்கையில் ஒரு நாவல் விரியக்கண்டேன். அவந்தி அவ்வப்போது நிலாமதியோடு தான் பேசிய பராக்கிரமபாகு பற்றிய உரையாடல்களின் அபத்தங்களை எண்ணிப்பார்ப்பாள் அல்லவா? தன் கதைகளை அவள் குழந்தைகளுக்குச் சொல்வாளா? அல்லது அவளது இரகசியங்கள் அப்படியே புதைந்து போகுமா? அபர்ணாவும் அரங்கனும் என்னானார்கள்? அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து வாழ்வின் அன்றாடங்களுக்கு இசைவாக்கப்பட்டுவிடுவார்களா? அல்லது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒருநாள் மீண்டும் பெண்களுக்கான அவசர உதவி நிலையத்தில் அவள் போய் நிற்பாளா? இம்முறை அந்த நிலமும் மொழியும் ஏற்படுத்தியிருக்கும் பரிச்சயங்கள் அவளுக்குத் தனியாக வாழக்கூடிய தைரியத்தைக் கொடுத்திருக்கலாம் அல்லவா? அருள்குமரன் அவளுக்கு வெறும் ஞாபகமாக வந்துபோவானா? அற்புதத்தின் குறிப்புகளில் அவன் இருப்பானா? அமலி̀ அவனை மறந்திருப்பாள் அல்லவா? சரவணபவனுக்கு இறுதிக்காலத்தில்கூட அருள்குமரனின் அம்மாவின் நினைவுகள் வந்திருக்குமோ தெரியாது. அற்புதம் தற்கொலைக்கான கணங்களைத் தாண்டிவிடவேணுமே என்று உள்ளம் பதைபதைக்கிறது. அல்லது அவர் மரணமேனும் அதிக துன்பங்களின்றி நிகழட்டும்.


அந்த ராக்கினி மாதா இவர்களுக்குத் தன் குருதியைக் கொடுத்து இரட்சிப்பாளாக. சர்ப்பங்கள் கேசத்தினின்றும் இறங்கிச்செல்லட்டும். அஷேராவின் மடிக்குருதி எல்லாம் பாலாகட்டும். அவள் முலைப்பாலூட்டும் அந்த முப்பத்தெட்டுக் குழந்தைகளும் அந்தப் பாலைக் குடித்துக் களித்த அயர்ச்சியில் நிம்மதியாகத் தூங்கட்டும்.


அவர்களது நிம்மதியிலாவது சஞ்சலம், குரூரம் என்ற வார்த்தைகள் அண்டாதிருக்கட்டும்.

Post navigation

Previous Post:

அஷேரா! சொல்லப்படாத கதை – வெ.நீலகண்டன்

Leave a Reply Cancel reply

Featured Books

ஆதிரை

ஆதிரை
Buy from Amazon Kindle

Recent Posts

  • அஷேரா! சிதறிய எறும்புகளின் கதை – ஜேகே
  • அஷேரா! சொல்லப்படாத கதை – வெ.நீலகண்டன்
  • அஷேரா! மனதின் தீராத இருட் கயத்தில் முட்டி பய முறுத்தும் சாவின் தொடுதல் – கோணங்கி
  • அஷேரா! காலங்கடந்தும் வாழவல்ல ஒரு படைப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன்
  • அஷேரா! ஆறாவடுவின் தொடர்ச்சி – மல்லியப்புசந்தி திலகர்
  • அஷேரா! உடல் உள ஏக்கங்களின் தேடல் – நிலாந்தி சசிகுமார்
  • அஷேரா! ஈழத்தின் இன்னொரு முகம் – திராவிடமணி
  • அஷேரா! நீரோட்ட ஆழம் – கஜுரி புவிராசா
  • அஷேரா! அற்புதம்மான் – நெற்கொழுதாசன்
  • அஷேரா! புனிதங்களை அசைக்கும் மொழிக்கற்கள் – சுரேகா பரமன்

Archives

Search

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 519 other subscribers

© 2022 | WordPress Theme by Superbthemes