ஸ்பெயின் ஒரு பயணம்

சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா தே இவற்றோடு கொண்டுபோன புளிச்சாதம் என 17 மணித்தியாலங்கள் எடுத்தது. அன்றிரவு ரைட் சகோதரர்கள் கனவில் வந்து எங்கட மூஞ்சையப்பாத்தா என்ன வேலை வெட்டியில்லாத கேனைப்பயல்கள் என எழுதியிருக்கா என்றுவிட்டுப் போனார்கள். சுவிற்சர்லாந்தில் வதிகிற மற்றைய தேசியக்காரர் அண்டைநாடுகளுக்குச் செல்வதற்கான விசா அனுமதி முறை கடந்த டிசம்பரில் நீக்கப்பட்டது. எல்லைகளில் ஏனென்றும் கேட்கிறார்கள் இல்லை. பிரான்ஸ் – சுவிஸ் எல்லையில் ஒரு பேருக்காவது வரியல்கள் பொலிசார் நிற்கிறார்கள். பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைந்தோம் என்பதை நவி சொல்லித்தான் தெரிந்தோம். ஐரோப்பா ஒன்றாகிவிடும்போலத்தான் தெரிகிறது. பிரான்ஸ் ஆகட்டும் ஜெர்மன் ஆகட்டும் தமிழை வைத்தே வழிகேட்ட தமிழை வைத்தே சாப்பாட்டுக்கடை எங்கென்று விசாரிக்கிற எனக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. ஐரோப்பாவில் ஆங்கிலத்தை வைத்து நாக்கு கூட வழிக்கமுடியாதென்பதை இன்னுமொருக்கா ஸ்பெயின் தலையில் குட்டிச் சொன்னது. இவ்வாறான நாடுகளுக்கு போகமுதல் அடிப்படை வார்த்தைகளையாவது பயிற்சி எடுத்துச் செல்லுகிற சில புரொபசனல் டூரிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். எனக்கெல்லாம் அந்த நல்ல பழக்கமில்லை. மொழிகள் பிறக்க முந்தைய மனிதன் என்ன செய்தான்..? இருக்கவே இருக்கிறது Body Language. (நாங்கள் ஜெர்மனில் பேசினாலும் சரி ஆங்கிலத்தில் பேசினாலும் சரி அதையெல்லாம் மற்றக்காதால் விட்டுவிட்டு நம் சைகையை மட்டும் புரிந்துகொண்டு அவர்கள் ஸ்பானிஸ் மொழியிலேயே உடல் மொழியோடு பேசினார்கள். ஒரு கட்டத்தில் ஐயா வணக்கம்.. உப்பிடியே மேற்கால போய் கிழக்கால திரும்பினால் இந்த இடம் வருமோ என்று கேட்கத்தொடங்கி விட்டோம். அவர்களும் வழமைபோல உடல் அசைவை புரிந்து கொண்டு…. ) சின்ன வயசில் ஊரில் இருந்து யாழ்ப்பாணம் போவதென்றால் – நன்றாக வெளிக்கிடுத்தி விடுவார்கள். எங்கேயோ பரனுக்குள் கிடக்கும் சப்பாத்தெல்லாம் எடுத்து எண்ணை போட்டு பொலிஸ் செய்து அணிந்து போவோம். முதல் விமானப்பயணத்தின் போது கோட் சூட் போட்ட கொமடி இன்னும் மறக்கவில்லை. பிறகுதான் … [Read more...]