புரட்(டு)சீ

April-24-2008
From Web Archive

கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திரள்களை புகையாக்கித் திரட்டி, மூச்சுக் குழல்கள் ஊடாக வலிந்து திணித்தது போன்றதொரு நெஞ்செரிவை, ஆற்ற முடியாமல், பீரிட்டுக் கிளம்பும் அரோகரா ஒலிகளும், சிறு கோபுரங்களாய் விழி வீச்சின் எல்லைவரை குவிக்கப்பட்டு, கார்ப்பெட் தாரிட்ட வீதியில் பட்டுச் சிதறிப்போவதற்குரிய வீச்சில் எறிபடும் தேங்காய்களும் இடைஞ்சல் செய்தன.

வெட்கத்தின் தொடக்கப்புள்ளி, சிதறடிக்கப்பட்ட தேங்காய்ச் சில்லுகள், தனித்தொன்றாய்ப் போய்விட்ட என் உறவுகளை நினைவுறுத்திய அடுத்த கணத்தில் ஆரம்பித்தது. “இதெல்லாத்தையும் பார்க்கிற வெள்ளைக்காரன் எங்களைப் பற்றி என்ன நினைப்பான் ´´ ஆனால் இற்றை வரை விரவிக் கிடக்கும் வெட்கம் இக்கேள்வியின் மேற்பட்டதேயன்றி இக்கேள்வியல்ல. வெள்ளைக்காரத் துரை குறித்த உயர்ச்சி மதிப்பீடு என் மனதடியில் ஒளிந்து கொண்டிருந்தமை மீதான வெட்கம் அது. இன்னும் சில வெ – துரை குறித்த ஆண்டகை உருவகங்கள் எனக்குள் பதுங்கியிருக்குமோ என்ற அச்சம் வெட்கத்தை மேலும் அதிகமாக்கியது. வெள்ளைக் காரனின் மன நிலைச் சமன்பாட்டுத் தளத்தில் பொருத்தி அளவிடுவதற்கு அவனுக்கு கொம்பெதுவும் முளைத்துளதா? தேசங்களைக் களவாடச் சென்ற திருடர்கள் என்றும் தீவாந்திரத் தனிமைச் சிறைகளில் கைதிகளின் ஒவ்வொரு உயிர் அணுவையும் வலிப்படுத்திய காட்டுமிராண்டிகள் அவர்கள் என்றும் அறிந்தவற்றை நினைவிருத்திக் கொண்டேன். இருந்தும் மனதின் ஆழ் மடிப்புக்களில் மறைபட்டுக் கிடந்து எப்போதேனும் வெளி நீட்டி, வெட்கத்தை நுரைக்கச் செய்து என் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை அரிக்கத் தொடங்குகின்றன இதுபோல மேலும் சில நிகழ்வுகள்.

நான் அமைதியுற விரும்பினேன். எதனையும் வெளிச்சொல்லவில்லையென்பதே குறைந்த பட்ச ஆறுதலைத் தந்தது. வயதான வெள்ளைத் தம்பதியர் வீடியோவில் சுற்றிச் சுற்றி படமாக்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் இந்நிகழ்வை அனுபவிக்கிறார்கள் போல்ப்பட்டது. காவடியாட்டத்தை எடுக்கச் சொல்லி கணவனிடம் அந்தப் பெண் கை காட்டினாள். காவடியாட்டங்களை ஆவல் ததும்ப அருகில் சென்று பார்த்த பழைய காலங்கள் எனக்கும் உண்டு. இப்போதெல்லாம் என்னை நீங்கித் தூரம் சென்று விட்ட கடவுளர் அப்போது என் அருகிலிருந்தனர். காலையில் பூப்பறித்துச் சாத்தும் போதே “மாதகலில் இருந்து ஆமி மூவ் பண்ணினால் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில நிற்கலாம் பிள்ளையாரே ´´ என்ற முணுமுணுப்புக்களின் பின்னால் உப நோக்கம் ஒன்றிருந்தது. அது சுழிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து என் வீட்டுக்கு வரும் அவள். அது குறித்து பிள்ளையாருக்கு ஒரு போதும் அறியத்தந்ததில்லை. அவர் என்னைக் கவனமாக கிரகித்துக்கொள்வார் போலும். அதற்கடுத்த நாட்களில் “மேலாலும் கீழாழும்´´ என் வேண்டுகை பலிக்கத்தொடங்கிய பொழுதுகளிலும் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி பிள்ளையாரே´´ என அவரிடத்தில்த்தான் தஞ்சம் புகுவேன். வல்லூறுகளை ஞாபகப்படுத்தும் இயந்திரங்களின் எச்சங்களை தலைக்கு மேல் கண்டவுடன் முணுமுணுப்புக்களைக் கதறல்களாக்கியிருக்கிறேன். காற்றில் சடசடக்கும் விசிறிகளோடு வீட்டைச் சுற்றிச் சன்னங்களைத் தூவும் வானூர்திகள் என்னைத் தென்னை மரங்களுக்குப் பின்னேயிருந்தும், சுவர் மறைப்புக்களில் பதுங்கியிருந்தும் பிள்ளையாரை அழைக்கச் செய்திருக்கின்றன.பின்னேரங்களில் பொடியளின் வாகனங்கள் உறுமிச்சென்ற பிறகு பிள்ளையார் எனது ஓலங்களை ஏற்றுக்கொள்வதாக நம்பினேன். அப்போது அவர் என் அருகிலிருந்தார். பின் வந்த ஒரு போர் நாளில் சற்றேனும் எதிர்பார்க்காநிலையில் அவர் என்னை ஏமாற்றினார். சுழிபுரத்தில் இருந்து இடம் பெயர்ந்தவளோடு நானும் கூடப்பெயர்ந்த கணத்தில் பிள்ளையார் என்னை விட்டு கொஞ்சத் தூரம் போனதை நான் உணர்ந்தேன். என் பிரியத்துக்குரியவர்கள் சிதைந்த போதும் அவர்களின் தசைத் துணுக்குகளை கூட்டி அள்ளிச் சுடுவதற்கு கொடுத்த போதும் அவர் இன்னுமின்னும் தூரம் போனார். நாளை விழித்தெழும் உறுதி கிடைத்த ஓரிடத்திற்குப் பெயர்ந்த பிறகும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைப்பட்ட காலங்களிலும் அவர் ஒரு சிறு புள்ளியாய் எங்கோ தெரியும் ஒருவராய் ஆனார். நான் நன்றி மறந்தவனானேன்.

காவடிக்காரர் களைத்தோய்ந்திருந்தார். நான் வேறேதும் சுவாரசியங்களைத் தேடத் தொடங்கினேன். இங்கு வந்திருந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாமோ? அவளை மட்டும் அனுப்பியிருக்கலாமோ என்ற யோசனை முதற்தடவையாக எழுந்தது. இந்த இரண்டு வருடங்களில் அவளுக்கு இவையெதுவும் அலுத்து விடவில்லை. இடது கை நீட்டி பவ்வியமற்று திருநீறு பெறும் பொழுதுகளில் முறைக்கும் ஐயர்களின் பார்வைகள் அவளது ஆர்வக் கோளாறைச் சிதைத்துவிடவில்லை. அவளளவில் இது ஒரு இனிய பொழுது. அதை அனுபவிப்பது குறித்து மகிழ்வுறுகிறாள். மறுவளத்தில் அவளோடு சேர்ச் செல்லும் சமயங்களில் நான் மகிழ்வுறுகின்றேனா என்பதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அனைவரும் அப்பம் வாங்கும் போது நான் தனித்துவிடப்பட்டவனாய் உணர்ந்திருக்கிறேன். என்னைப்போலன்றி இன்னமும் யேசு அவளுக்கு இரக்கமாய் இருப்பதனால் இணைவுற்ற பின் மதங்களைக் கடத்தல் என்பது சாத்தியப்பட்டிருக்கவில்லை. ஒரு புரட்சியொன்றிற்கான வாய்ப்பினை நான் இழந்து விட்டேனா ?

ஆரம்பங்களில் சிலர் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். “சாதி சமயங்கள் எல்லாத்தையும் மீறிக் கலந்து கல்யாணம் செய்திருக்கிறீர். பெரிய புரட்சிக்காரன்தான் நீர் ´´ அவர்களுக்கு என் சிரிப்புக்களை பதிலாக்கியிருந்தேன். சிரிப்புக்களை ஆமோதிப்பிற்கும் மறுதலிப்பிற்கும் பயன்படுத்த என்னால் இயலும். ஆனால் போகிற போக்கில் பிடித்திருந்தவளோடு இணைந்து பயணிப்பதன் பின்னால் புரட்சியொன்று ஒளிந்திருக்கும் என நான் நம்பவில்லை. தவிரவும் எனதும் அவளதும் வீட்டாரின் ஒருசில விருப்புக்களும் நிகழ்ந்தேறின என்பது புரட்சியின் மிச்சசொச்ச எச்சங்களையும் புரட்டிப் புதைத்து விட்டதாய் உணர்ந்தேன். ஆனால் புரட்சிகளின் போது வீட்டாரின் தலையீடுகள் இருப்பதென்பது புரட்சிகளில் சகஜம் எனவும் அதனால் புரட்சிகளுக்கு பங்கமேதும் வந்துவிடாதென்றும் இணைய அரட்டையில் சொன்ன நண்பன் கூடவே ஒற்றைக் கண் மூடிச் சிரிக்கும் ஸ்மைலி ஒன்றினையும் அனுப்பியிருந்தான்.

ஆரம்பித்த இடத்திற்கு போய்விடலாம் என நினைத்தேன். கடவுளர் வீதியுலா வருவதற்கான நேரம் நெருங்கியிருந்தது. அதற்குள் சிக்காமல் சென்றுவிட வேண்டுமென்ற விருப்பை அவளுக்குச் சொல்லி விடலாம். என்னைக் கடந்த நடுத்தர வயது தாண்டிய பெண்ணொருத்தி அழுது கொண்டிருந்ததைக் கண்டேன். அவள் தன்னை வருத்தும் ஏதோ ஒன்றிற்காக கடவுளிடம் வேண்டியிருக்க வேண்டும். பொருளாதார விசயத்திலோ குடும்ப உறவுகள் தொடர்பாயோ அல்லது பெற்ற பிள்ளைகள் குறித்தோ அவளுக்குத் தீராத வலியிருக்கக் கூடும் என்பதாய் ஊகித்துக்கொள்ளல் எனக்குத் தேவையற்று இருந்தது. “இங்கே வெளிநாடுகளில் பெண் பிள்ளைகள் வளர்ந்து வெளிச்சென்று வரும் ஒவ்வொரு நிமிசமும் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது “ என்றவரை அண்மையில் சந்தித்தேன். குடும்பத்தின் கெளரவத்தோடு கட்டிப்பிணைக்கப்பட்டிருந்த கலாச்சாரம் குறித்த தகிப்புக்களை அவர் மட்டுமன்றி பலரும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். “வெளியே இயல்பாக இயைபாக்கமடையும் ஒரு கலாசாரமும் வீட்டில் உன் கலாசாரம் என திணிக்கப்படும் கலாசாரமும் பிள்ளையை இரட்டைத் தன்மையில் வாழ்வதற்கான ஊக்குவிப்பையும் அழுத்தத்தையும் கொடுக்கும் என நம்பினேன். ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்வதாகவில்லை. ´´உனக்கும் பெண்பிள்ளை பிறந்தால்தான் தெரியும் . ´´ என்றவரிடம் சொல்வதற்கு பதில்களேதும் என்னிடத்தில் இருக்கவில்லை. ஆனால் அவரிடம் கேட்காமல் விட்ட கேள்வி ஒன்று துருத்திக்கொண்டு நிற்கிறது. எப்போதாவது காண்கையில் பேருந்துகளிலும் பிற இடங்களிலும் தன் வெள்ளைத் தோழியருக்கு முத்தங்களைப் பரிசளித்துக்கொண்டிருக்கும் அவரது இளைய மகன், வெளிச்செல்லும் வேளைகளிலும் அவர் அடிமடியில் நெருப்பை கட்டிக்கொண்டு உள்ளாரா ?

தேங்காய்கள் சிதறும் தீவிரம் அதிகரித்தது. பக்தர்கள் போட்டிக்கு உடைப்பதாய்ப் புரிந்து கொண்டேன். பட பட வெனச் சிதறி விழுந்த தேங்காய்ச் சொட்டுகள் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடந்தன. ஊர் பெயர்ந்து ஓடிய நாட்களில் அரியாலையில், எழுதுமட்டுவாளில் அரிசி மாவிற்குள் இளநீர் விட்டு தேங்காய்த் திருவலைத் தூவி பசியாறியிருக்கிறேன். இன்னமும் அங்கே பசியாற தேங்காய்கள் தேவைப்படுகின்றன. “என்னை வடிவா வீடியோ எடடா ´´ என்றவர் வியர்வையிலும் இளநீர்ச் சிதறலிலும் தோய்ந்திருந்தார். ஒவ்வொரு தேங்காயாய் அவர் உடைக்கும் வேகம் நீண்ட அனுபவம் உள்ளவர் எனச் சொல்லிற்று. “சுத்திச் சுத்தி எடடா ´´ எனச் சொல்லிச் சொல்லி அவர் இயங்கும் விதம் விநோதமாக இருந்தது. கமராவைத் தாங்கியிருந்த பதின்மகங்களை அடைந்தவன் அவரது மகனாயிருக்க வேண்டும். கட்டளைகளுக்கு ஏற்ப இயங்கி கொண்டிருந்தான். “ கடையையும் சேர்த்து எடு. எங்கடை கடைக்கு முன்னாலை நான் உடைக்கிறது கிளியரா வரோணும். பிறகு நீ வந்து உடை. நான் வீடியோ எடுக்கிறன் ´´ நான் நகரத் தொடங்கினேன். இந்த வீடியோவை இவர் பின் என்ன செய்வார் ? தன் கடை சார்பாக இத்தனை தேங்காய் உடைத்தேன் என வருகிறவர்களிடம் பெருமை பேசுவாரா? ஊருக்கு அனுப்புவாரா . தமது ஊரைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று சமயம் வளர்க்கிறார் என அங்கு புளகாங்கிதம் அடைவார்கள்.

நான் சினமுறத் தொடங்கினேன். குப்பை வண்டிகளில் சேர்த்துச் சேர்த்துக்கொண்டிருந்த போதும் மீள மீள நிறையும் தேங்காய்ச் சிதறல்கள் என் சினத்திற்குக் காரணமாயிருக்க வேண்டும். “யாராவது இதற்கெதிராய்ப் போராட முன்வரவேண்டும். போராடாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்ச விழிப்புணர்வையாவது கொண்டு வர ஏதாவது செய்ய வேண்டும். நடைமுறைத் தர்க்கங்களுடன் சொன்னால் பலராலும் புரிந்துகொள்ளப்படும் என நம்பினேன்.

கையில் இரண்டு மூன்று நோட்டிசுகளுடன் அவள் வந்தாள். இன்னொரு வீதியின் வளைவில் வைத்து இரண்டோ மூன்று பேர் கொடுத்ததாய்ச் சொன்னவற்றை வாங்கிப்படித்தபோது நிம்மதிப் பெருஉணர்வொன்று ஆட்கொண்டதை அறிந்தேன். இந்த மக்களுக்கு நிறையச் செய்திகளை நோட்டிஸ் சொல்லியது. இது ஒரு பொறி. அவர்களிடத்தில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். விழிப்புணர்வூட்டும் அவாகளது தன்முனைப்பான செயலுக்குப் பாராட்டுக்களைப் பகிர்ந்தேன். அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு நோட்டீசை எனக்குத் தருவது போல படமெடுக்க விரும்பினார்கள். போஸ் கொடுக்கும் மற்றைய வேளைகளில் படரும் புன்னகை வர மறுத்தது. ஆனாலும் நோட்டீசைப் பிடித்தபடி நின்றேன். எடுத்த படத்தைப் பார்த்தவர்களில் இருவரின் முகத்தில் திருப்தியின்மை தெரிந்தது. அவர்கள் மீளவும் முன்னரைப் போன்றதொரு படத்தை எடுக்க விரும்புவதாய்ச்சொன்னார்கள். புரட்சியின் பரவிற்கும் செய்திக்கும் இவை அவசியம் என மேலும் சொன்னார்கள். நான் நேரமில்லை எனச் சொல்லித் திரும்பி நடந்தேன். அது குறித்து அவர்கள் கவலையுற்றதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக திருப்தியுறும் வகையில் ஒரு படத்தை அவர்கள் எடுப்பார்கள் சுத்தி சுத்தி எடடா என்ற தேங்காய் உடைப்பவனைப் போலவே -

வெட்கம்

டந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது.

தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது.

கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள்.

‘நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்’ என அவன் நினைத்துக் கொண்டான்.

‘சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..’ சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து நிவாரணத்திற்காக காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்து போயின. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே வந்திருந்து காத்திருப்பார்கள்..

”எப்பவாவது இருந்திட்டுத் தான் தர்றாங்கள்.. அதையும் விட முடியுமே..” அம்மா சொல்வாள்.

உண்மைதான்.

நிவாரணத்தை வாங்கி சைக்கிளில் கட்டிப் புறப்பட எப்பிடியும் மதியம் நெருங்கும்.

இன்று கெனடிக்குத் தெரிந்த எவரையுமே வீதிகளில் காண முடியாதிருந்தது வியப்பாக இருந்தது.

‘ஏழு வருசத்துக்குள்ளை எங்கை போட்டாங்கள் எல்லாரும்.. அகிலனைப் போய் பாத்திட்டு போவமோ..’ போகிற வழியில் உள்ள ஒரு அகதி முகாமில்தான் அகிலன் குடும்பத்தோடு தங்கியிருந்தான். அவனுக்கு அப்பா இல்லை. ஷெல்லடியில் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் செத்துப் போனதாக ஒரு முறை சொல்லியிருக்கிறான். அம்மாவும் அக்காவும் மட்டும் தான்.

“கெனடி.. முகாமில இருந்து படிக்கிறது கொஞ்சம் கஷ்ரமாக் கிடக்கு.. இரவில உன்ரை வீட்டில இருந்து படிக்கட்டே..” தயங்கித் தயங்கி ஒரு நாள் அவன் கேட்டான்.

“அதுக்கென்னடா வாவன்…”

அகிலன் பதினொரு பன்னிரண்டு மணிவரை இருந்து படிப்பான். சில சமயம் இவனுக்கு நித்திரை தூங்கி வழியும். அவ்வாறான நேரங்களில் எரிச்சலும் வந்ததுண்டு.

‘அகிலன் இப்ப அங்கைதான் இருக்கிறானோ.. வேறை இடம் போனானோ..?’

வியர்வையோடு புழுதி படிந்து ஒரு வித அசூசையை கெனடி உணர்ந்தான். தலையெல்லாம் செம்மண்.. ‘முதலில போய் முழுக வேணும்.. பிறகு அகிலனிட்டை வரலாம்..’

அகதி முகாம் இப்போது இல்லை. அது இருந்த இடத்தில வேறு சில கடைகள் முளைத்திருந்தன. ‘ஒரு வேளை பிளேன் கிளேன் ஏதாவது அடிச்சு.. ச்சீ.. சண்டை நிண்டு போச்சு.. சனங்கள் சொந்த இடங்களுக்குப் போயிருக்குங்கள்.. அகிலன் எங்கை போயிருப்பான்..’

அடுத்த திருப்பத்தைக் கெனடி கடந்தான். இதே திருப்பத்தால் நேரே போய்த் திரும்பினால் மாலிக்கா வீடு வரும். ஏனோ தெரியவில்லை இன்று காலை புறப்பட்டதிலிருந்து அவளின் நினைவுகளே வருகின்றன.

‘அவள் இப்ப எப்பிடியிருப்பாள். என்னையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பாளா..’

கெனடிக்கு மாலிக்காவைச் சந்திக்க வேண்டும் போல இருந்தது.

க்கா அக்கா..” வாசலில் நின்று அழைத்தான் கெனடி. மண் விறாந்தையில் சிறுவயதுப் பொடியன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அக்காவின் மகனாயிருக்கக் கூடும். கெனடி அங்கு இருந்த போது அவன் பிறந்திருக்க வில்லை.

“அம்மா ஆரோ வந்திருக்கினம்…” அவன் உள்ளே போய் அக்காவை கூடவே அழைத்த வந்தான். அக்கா முன்பிருந்ததை விட சரியாக இளைத்துப் போயிருந்தாள்.

“கெனடியே.. வா வா என்ன திடீரென்று..” அக்காவின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.

கெனடி இங்கு இடம் பெயர்ந்து வந்திருந்த காலப்பகுதியில் தான் அக்காவின் குடும்பம் அவனுக்கு அறிமுகமானது. அவர்களும் இடம்பெயர்ந்து வந்து அடுத்த காணியில் குடியிருந்தார்கள். அக்காவின் கணவர் கண்ணன் மாமா சிரிக்க சிரிக்க பேசுவார். அவரோடை பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பெரும்பாலான நேரங்களில் கெனடி அங்கு தான் நிற்பான்.

“கொஞ்சம் பொறு பாய் எடுத்தாறன்..”

“இல்லையக்கா வேண்டாம்..” கெனடி சுவரில் சாய்ந்து நிலத்தில் அமர்ந்தான். அக்கா வீட்டு மண் சுவர்கள் மழை ஈரத்தில் சில இடங்களில் கரைந்திருந்தன. கூரை வேயப்பட்டு பல காலமாயிருக்கக் கூடும். கிடுகுகள் சிதிலமடைந்திருந்தன.

“இஞ்சை வாங்கோ பிள்ளைக்கு என்ன பேர்..” அவனையே பார்த்தபடி நின்றிருந்த அக்காவின் மகனைக் கூப்பிடவும் அவன் தாயின் பின்னால் ஓடிப்போய் மறைந்து கொண்டான்.

“நேற்றுப்போல கிடக்கு.. ஏழு வருசமாச்சு..” அக்கா எலுமிச்சம் பழநீர் கொண்டு வந்து கொடுத்தாள். நடந்து வந்த களைப்பிற்கும் வெயிலுக்கும் அது இதமாயிருந்தது.

“அக்கா மிஸ்டர் கண்ணா எங்கை?” கண்ணன் மாமாவை கெனடி அப்பிடித்தான் அழைப்பான். முன்பு அக்காவும் அப்பிடித்தான் அழைப்பாள். இப்போது எப்படியென்று தெரியவில்லை.

“வேலைக்கு போட்டார்.. பின்னேரம் வந்திடுவார். நீ குளிச்சிட்டு வாவன்.. சாப்பிடலாம்..”

“ஓம் அக்கா..” கெனடி துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு நடந்தான். கிணறு காட்டோடு அண்டிக்கிடந்த அடுத்த காணியில் இருந்தது. அந்தச் சுற்றாடலில் உள்ள ஒரேயொரு நல்ல தண்ணீர்க் கிணறும் அதுதான். அந்தக் காணிக்குள்த் தான் கெனடியின் வீடும் இருந்தது.

‘ஏன் அதுக்கை போய் வீட்டைக் கட்டுறியள்.. பக்கத்தில காடு.. யானையள் அடிக்கடி வரும்.. அதவும் இளந்தென்னையள் நிக்கிற காணி. கட்டாயம் யானை வரும்..’ அங்கு வீடு கட்ட கெனடியின் வீட்டில் தீர்மானித்த போது பலரும் பயமுறுத்தினார்கள்.

‘கொஞ்ச வருசத்துக்கு முதல் அந்தக் கிணத்துக்குள்ளை ஆரோ பெட்டை விழுந்து செத்ததாம்..’ என்று கூடச் சிலர் சொன்னார்கள். ஆனாலும் ‘நல்ல தண்ணீர்தான் ஒரு வீட்டுக்கு முக்கியம்’ என்று அம்மா சொல்லி முடிவெடுத்தாள்.

பத்து ஏக்கர் பரப்புக் காணியில் தன்னந்தனியனாக அவர்களின் வீடு எழுந்தது. அந்தக் காலங்கள் பசுமையானவை. காட்டுக்குள் போய் மரந்தடிகள் வெட்டி வந்து கிடங்கு வெட்டி மண் எடுத்துக் குழைத்து சுவரெழுப்பி இரண்டு அறைகளும் ஒரு விறாந்தையுமென வரைபடம் வரைந்து … அப்போதெல்லாம் தான் ஒரு இன்ஜினியர் என்ற நினைப்பு கெனடிக்குள்ளிருந்தது.

சின்ன ஒழுங்கையைத் தாண்டி கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தான் கெனடி. இளந்தென்னைகள் இப்போது வளர்ந்து காய்த்திருந்தன. வீடிருந்த இடத்தில் மண்மேடு மட்டும் இருந்தது. அவர்கள் வெளியெறிய சில நாட்களிலேயே அது இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.

கெனடி மண்மேட்டில் போய் நின்று கொண்டான். இனம் புரியாத ஏக்கம் ஒன்று தொண்டையை அடைத்துக் கொண்டது.

“அண்ணா வாளியை விட்டுட்டு போட்டியள்.. அம்மா குடுத்துவிட சொன்னா..” அக்காவின் மகனிடமிருந்து வாளியை வாங்கிக் கொண்டு கிணற்றடிக்குப் பொனான். முன்பெல்லாம் இங்கு கூட்டம் அலைமோதும். நல்ல தண்ணீர் அள்ள வருபவர்கள், குளிக்க வருபவர்கள் என எப்போதுமே அது கலகலப்பாயிருக்கும். இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. கெனடி ஒரு வித வெறுமையை உணர்ந்து கொண்டான்.

தூரத்தே காணி எல்லையில் காடு தெரிந்தது. சரியான வெக்கைக் காடு. உள்ளே போய் வந்தால் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டும். மரந்தடி வெட்ட அதற்குள் போன சமயங்களிலெல்லாம் இலை குழைகளை வெட்டிப்போட்டு பாதையை அடையாளப் படுத்தித்தான் போக வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் திசை மாறிப் போய்விடக்கூடும்.

அந்தக் காட்டுக்குள்ளிருந்து தான் ஒரு முறை தனியன் யானையொன்று காணிக்குள் வந்து தென்னைகளைத் துவசம் செய்திருந்தது. கெனடிக்கு ஞாபகம் இருக்கிறது. நடு இரவில் அம்மா எழுப்பவும் எழும்பியவன் வீடு பரபரத்துக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு ‘முல்லைத்தீவிலை இருந்து ஆமி மூவ் பண்ணுறான் போல கிடக்கு.. இந்த இருட்டுக்குள்ளை எங்கை போறது..’ என்று தான் முதலில் நினைத்தான்.

“வந்திருக்கிறது தனியன் யானை.. கூட்டமா வந்தால் அதுகள் தன்பாட்டில போய்விடுங்கள். இது தனியனா வந்திருக்கு..”

“குசினிக்குள்ளை உப்பு மா ஏதாவது இருக்கோ.. அதுகளுக்குத்தான் யானையள் வரும்”

“சத்தம் வையுங்கொ அது போயிடும்.”

ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டார்கள். சத்தம் வைத்தும், வீட்டிற்கு வெளியே நெருப்பு மூட்டியும் அன்றைய இரவு கழிந்தது. அடுத்த நாள் காலை போய்ப்பாத்த போது பதின்மூன்று இளம் தென்னைகளை யானை துவசம் செய்திருந்தது. ஆங்காங்கே லத்திக்கும்பங்களும் கிடந்தன. அன்று முழுதும் கண்காட்சி பார்க்க வருவது போல சனம் வந்து பார்த்தது.

கெனடி தலையைத் துவட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான்.

“அம்மா கெனடி அண்ணா வந்திட்டார்.” என்றான் அக்காவின் மகன். இப்போது அவன் கெனடியோடு ஒட்டிக்கொண்டான். சாப்பிடும் போதும் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென எதுவும் வாங்கி வரேல்லை. வெளிய போய் ஏதாவது வாங்கி வந்து குடுப்பம் என கெனடி நினைத்துக் கொண்டான்.

“அக்கா இப்பவும் யானையள் வாறதோ?”

“அதுகள் தன்பாட்டில வருங்கள் போகுங்கள்..” சிரித்துக் கொண்டே இயல்பாக சொன்னாள் அக்கா. இதே அக்கா தான் முதல்த்தடவை யானை வந்த போது கத்திக் குளறினாள்.

மாலையில் கண்ணன் மாமா வரும் போதே இவனைக் கண்டு கொண்டார். “எட கெனடியோ காலமை காகம் கத்தேக்கையே அதின்ரை நிறத்தில ஆரோ வரப்போகினம் எண்டு நினைச்சன்.. நீ தானா.. “வார்த்தைக்கு வார்த்தை பகிடி தெறிக்க பேசுகிற அவரது பழக்கம் அப்பிடியே தானிருந்தது.

‘மனிசன் மாறேல்ல’

இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு முற்றத்தில் பாயை விரித்து அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். முழு நிலவுக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. அக்காவின் மகனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டான் கெனடி.

“தம்பி என்ன படிக்கிறியள்”

“நேசறி”

“படிச்சு என்னவா வர போறியள்”

“டொக்டரா வருவன்..”

“டொக்டரா வந்து எனக்கு ஊசி போடுவியளோ”

“இல்லை”

“அப்ப..?”

“பிளேன் அடிச்சும் ஷெல் அடிச்சும் காயம்பட்ட ஆக்களுக்கு மருந்து கட்டுவன்..”

கெனடிக்கு அவன் பதில் உறைத்தது. அணைத்துக்கொண்டே சொன்னான். “இனி பிளேனெல்லாம் அடிக்காது. ஆக்கள் ஒருத்தரும் காயப்பட மாட்டினம். தம்பி பயப்பிடத்தேவையில்லை.” கெனடியின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டே அவன் சொன்னான்.

“பிளேன் அடிச்சாலும் எனக்கு பயமில்லை.. நான் விழுந்து படுத்திடுவன்..” சின்னதான சிரிப்பொன்றை உதிர்க்கத்தான் கெனடியால் முடிந்தது. ஆனாலும் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு கேள்வி தொக்கி நின்று கொண்டேயிருந்தது.

“என்ன வந்தனி வீட்டிலேயே நிக்கிறாய்.. பழைய சினேகிதங்களை பாக்க போகேல்லையோ..” என்று அக்கா கேட்ட போது தான் அகிலனைப் பற்றி அவர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது. அகிலனை அவர்களுக்கும் தெரியும்.

“அக்கா அகிலனை உங்களுக்க தெரியும் தானே.. வரேக்கை பாத்தன் முகாமையே காணேல்லை. எங்கை இப்ப அவன் இருக்கிறான்..” அக்கா அமைதியானாள்.

“அவன் இப்ப இல்லை” கண்ணன் மாமாதான் சொன்னார். கெனடியால் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாமல் இருந்தது. அவர் தொடர்ந்தார்.

“வீரச்சா நாலு வருசத்தக்கு முதல்”

கெனடி அமைதியானான். அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஏழு வருசத்தில் இந்தச் செய்தி அவனுக்கு வந்திருக்கவேயில்லை.

அகிலன் மற்றெல்லோரையும் விட உயரத்தில் குள்ளமானவன். “ஆமி வந்தால் எங்களாலை துவக்கெடுத்து சுடவாவது முடியும். நீ பாவம் துவக்கு உனக்க மேலாலை நிக்கும். எப்பிடித் தூக்கிறது.” படிக்கிற காலத்தில் அவனை நண்பர்கள் இப்படி எல்லாம் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அகிலன் மெல்லியதாய்ச் சிரிப்பான். அப்போதே வயதுக்கு மீறிய பொறுப்புணர்வுகளைக் கொண்டிருந்த அகிலனின் பேச்சில் எப்போதுமே ஒரு வித முதிர்ச்சி தெரியும்.

“கிழடுகள் மாதிரி கதையாதையடா” என்று கெனடி கூட சொல்லியிருக்கிறான்.

அகிலனின் அம்மா இருக்குமிடத்தை அக்கா சொன்னாள். கட்டாயம் போகோணும்

இரவு படுக்க போகும் முன்பு கண்ணன் மாமா கேட்டார்

“ஏதேனும் அலுவலா வந்தனியோ..?”

“இல்லை சும்மா உங்களையும்..” என்பதோடு கெனடி நிறுத்திக் கொண்டான். கண்ணன் மாமாவிற்கோ அக்காவிற்கோ மாலிக்காவைத் தெரியாது. அவளைப் பற்றி யாரிடமாவது கேட்கலாம் என்றால் முடியாமலிருக்கிறது.

‘மாலிக்கா இப்ப எப்படியிருப்பாள்..’ கெனடிக்கு அவளைப் பார்க்க வேண்டுமென்ற வெறியோ தவிப்போ இல்லாவிடினும் அவன் ஆர்வமாயிருந்தான்.

மாலிக்கா பள்ளிக்கூட நாட்களில்தான் அறிமுகமானாள். அப்போது பள்ளிக்கூட கட்டடங்களில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருந்தார்கள். மரங்களுக்கு கீழே வாங்கு மேசைகளைப்போட்டுத் தான் வகுப்புக்கள் நடந்தன. சின்னப் பிள்ளைகள் நிலத்தில் சாக்குப் போட்டு அமர்ந்து படித்தார்கள்.

கெனடியின் வகுப்பில்த்தான் மாலிக்காவும் இணைந்திருந்தாள். கொடுக்கப்படும் கணக்ககளை உடனுக்குடன் செய்து அவள் ஆசிரியருக்கு காட்டும் போதெல்லாம் ஆச்சரியமாயிருந்தாலும் மாலிக்கா கதை கவிதை எல்லாம் எழுதுவாள் என்று தெரிந்த போது தான் அவள் மீதொரு ஈர்ப்பு விழுந்திருக்க வேண்டும்.

மாலிக்காவிற்கு சரியான வெட்கம். நிமிர்ந்து கூட பேசமாட்டாள். பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பதில் வரும். கெனடிக்கு நினைவிருக்கிறது. ஒரு நாள் தெருவில் அவள் எதிரில் வந்தாள்.

“மாலிக்கா நில்லும்” இவன் தடுத்து நிறுத்திய போது அவள் திகைத்திருக்க வேண்டும். தலை குனிந்து நின்று கொண்டாள்.

“நீங்கள் கதையெல்லாம் எழுதுவியளாம் உண்மையோ”

“ம்..”

“போட்டியளிலை எல்லாம் கலந்து கொள்ளுவியளோ” மாலிக்கா பேசாமல் நின்றாள்.

“போட்டியளில கலந்து கொண்டு இன்னொருவரின்ரை வரையறைக்குள்ளை எழுதாதேங்கோ.. சுயமா நீங்களா எழுதுங்கோ.. உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை எழுதுங்கோ.. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளுங்கோ..” என்று தொடங்கி நிறைய பேச வேண்டுமென கெனடி நினைத்திருந்தான். எதுவுமே முடியவில்லை. மாலிக்கா விலகிச் சென்றாள். அவனுக்கு ஏமாற்றமாயிருந்தது.

இப்போ நினைத்தாலும் சிரிப்பாயிருக்கிறது.

மாலிக்கா இப்பவும் அதே மாதிரித்தான் இருப்பாளோ.. வெட்கப்படுவாளோ.. நாளைக்கு அவளின்ரை வீட்டை போகலாம்.. ஆனால் அவளின் அப்பாவை நினைக்க பயமாயிருந்தது. மனிசன் என்ன சொல்லுதோ.. ‘இதிலையென்ன நான் அவளோடை படிச்சவன்.. சும்மா சந்திக்க போறன்..’

நாளை அவள் வீட்டுக்கு போவதென கெனடி தீர்மானித்துக் கொண்டான்.

நிறைய கேள்விகளொடு உட்கார்ந்திருந்தான் கெனடி. ‘மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் வேறை எங்கை..’

அன்று காலையிலேயெ அவன் மாலிக்கா வீட்டுக்கு போயிருந்தான். சைக்கிளை நிறுத்தி விட்டு உள் நுழைந்தவனை வாசலிலேயே அவர் கண்டு கொண்டார் மாலிக்காவின் அப்பா

லேசான உதறல் எடுத்தாலும் கெனடி சுதாகரித்துக் கொண்டான்.

“ஆரப்பன் உள்ளை வாரும்”

“ஐயா மாலிக்கா நிக்கிறாவோ..”

அவர் அவனை யார் எவர் என்று கேட்கவேயில்லை.

“இல்லைத் தம்பி பின்னேரம் சிலநேரம் வருவா..” கெனடி தான் யாரென்பதை கூறிவிட்டு திரும்பியிருந்தான்.

மாலிக்கா வீட்டில் இல்லையென்றால் பின் எங்கே.. ஒரு வேளை கலியாணம் முடிச்சிருப்பாளோ.. பள்ளிக்கூட பக்கம் போனால் யாராவது சொல்லக் கூடும். அவனது ஆசிரியர்கள் அவனை ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியவில்லை.

வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு பெண்கள் இறங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி..

சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான்.

அது மாலிக்காதான். மற்றவள் யாரென்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. வியப்பு மேலிட எழுந்தான்.

“வணக்கம் கெனடி எப்பிடியிருக்கிறியள்” கேட்டுக்கொண்டே மாலிக்கா உள்ளே வந்தாள். அந்த உடையில் அவள் வெகு கம்பீரமாக தெரிந்தாள். கையில் ஏதோ பைலும் சில பேப்பர்களும் இருந்தன. அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

“எப்பிடி சுகமாயிருக்கிறியளோ..”

“ம்” கெனடியிடமிருந்து ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. குசினிக்குள்ளிருந்து அக்கா எட்டிப்பார்த்து யாரென்று கண்ணால் கேட்டாள்.

“என்னோடை படிச்சவை”

மாலிக்கா நிறைய பேசினாள். “என்ன ஆள் சரியா உடம்பு வைச்சிட்டியள்.. சொக்கையள் வைச்சு.. மட்டுப்பிடிக்க முடியேல்லை..” தன்னுடைய பெயர் என்று ஒரு புதுப்பெயர் சொன்னாள்.

ஏனோ தெரியவில்லை. அவளைக் கண்டது முதலே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. பெரும்பாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.

மாலிக்காவுடன் வந்தவள் அக்காவின் மகனுடன் ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தாள். அக்கா தேனீர் கொண்டு வந்து கொடுக்க வாங்கிக் கொண்டே மாலிக்கா சொன்னாள்.

“அக்கா கெனடி சரியா வெட்கப்படுறார் போலக் கிடக்கு.” கெனடிக்கு யாரோ தலையில் குட்டியதைப் போல இருந்தது. அக்கா சிரிச்சுக் கொண்டே உள்ளே போனாள்.

“சரி கெனடி காலமை வீட்டை போயிருந்தன். அப்பா தான் சொன்னவர். எனக்கு உங்கடை வீடும் சரியா தெரியாது. ஒரு மாதிரி கண்டு பிடிச்சு வந்திட்டம். வேறை என்ன நாங்கள் வரப்போறம். அக்கா போயிட்டு வாறம்.” மாலிக்கா அக்காவை கூப்பிட்டு சொன்னாள். வாசல் வரை கெனடி வந்தான். அக்காவும் கூட வந்தாள்.

மாலிக்கா மோட்டார் சைக்கிளை ஸ்ரார்ட் செய்தாள். “கெனடி நீங்களும் உங்கடை பிரண்ட் ஒராளும் எங்கடை ஒழுங்கைக்குள்ளை மோட்டச்சைக்கிளாலை விழுந்த ஞாபகம் இருக்கோ..”

ஒரு சமயம் மாலிக்கா வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரம் பார்த்து மோட்டார் சைக்கிளில் அவளை வேகமாக கடந்து சாகசம் செய்ய வேண்டுமென்ற நினைப்பில் சட்டெனத் திருப்ப அது நிலை தடுமாறி அவனையும் பின்னாலிருந்தவனையும் தூக்கி வீதியில் எறிந்தது. அப்போதும் மாலிக்கா குனிந்த தலை நிமிராமல் அமைதியாகத்தான் போனாள். பின்னாலிருந்தவனுக்கு முழங்கால் மூட்டு உடைந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் வீட்டிலிருக்க வேண்டியதாய் போனது.

“ம்..” கெனடி உண்மையிலேயே இப்பொழுது வெட்கப்பட்டான்..

அவர்கள் புறப்பட்டார்கள். ஒழுங்கையின் வளைவுகளில் லாவகமாக ஓடி வீதியில் அவர்கள் திரும்பினார்கள். கெனடி நெடுநேரமாய் அங்கேயே நின்றான்.

20.04.2003 தினக்குரல்

சூனிய வெளி

சாகீரை நித்திரையில் வைத்து அமத்திய போதே முதற்காரியமாக அவனது கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. இடுப்பில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பியை எப்படிக் கடிப்பதென்று தெரியவில்லை.எப்படியாவது செத்து விட வேண்டும்.

எங்கு பிசகியதெனத் தெரியவில்லை.… ஆனால் பெரும் பிசகல். குலேந்தியும் அருளும் என்னவானார்களோ தெரியவில்லை. அருள் அகன்றிருப்பான். அவன் சுழியன்! கடைசியாய் ரத்மலானையில் வாகனத்துக்குள் சக்கை அடைந்துகொண்டிருந்த போது அவன் அருகில் நின்றிருந்தான். “வாகனத்தின்ரை செஸி நம்பரை இடிச்சு அழிக்க வேணும். அலவாங்கொண்டு கிடைச்சால் நல்லது” அவன் அலவாங்கு அல்லது கோடாலியொன்றைத் தேடிக்கொண்டிருந்தான்.

சாகீர் அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. “ஆயிரம் கிலோ சக்கை.வெடிச்சால் வாகனம் புக்கைதான். செஸி நம்பர் சிக்குமெண்டு நினைக்கேல்லை. எண்டாலும் இடிச்சு ரண்டு மூண்டு நம்பரை அழிச்சு விடுவம்” என்றான் அவன். இரும்பில் உள்ப்புடைத்திருக்கும் இலக்கங்களை அழித்து விடுவது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமாயிருக்கவில்லை.

சாகீரின் கைகளைப் பின்புறமாகக் கட்டி கண்களை மறைத்து கிட்டத்தட்ட பிணம் போல இழுத்து வாகனத்தில் தூக்கியெறிந்த போது அவன் நிர்வாணப்படுத்தப் பட்டிருந்தான். இடுப்புக் கயிற்றை வெட்டியெறிந்த போது சதையில் கீறல் விழுந்திருந்தது. அவர்கள் பிளேடைப் பாவித்திருக்க வேண்டும். மெலிதாக இரத்தம் கசிவதை உணரக் கூடியதாயிருந்தது. தட தடவெனஆட்கள் வாகனங்களில் வந்து ஏறினார்கள். இன்னும் சில வாகனங்கள் சர் சர் என உயிர்பெறும்சத்தம் கேட்டது. நிறையப் பேர்தான் வந்திருக்கிறார்கள். முன்னிரவே வந்து சுற்றிவளைத்திருக்கக்கூடும். கிட்டத்தட்ட ஒரு ஒபரேசன் போலத்தான் முடித்திருக்கிறார்கள். போகும் வழியில் கொலை செய்து களனி ஆற்றில் தூக்கி வீசி விடுவார்களா? அவ்வாறேதும் நடந்தால் எவ்வளவு நல்லது?

சாகீரை சீற்றுக்களுக்கிடையில் குப்புறக் கிடத்தி அவன் கழுத்தில் முதுகில் குண்டியிலென துப்பாக்கிகளாலும் சப்பாத்துக் கால்களாலும் அழுத்தி வைத்துக்கொண்டார்கள். அவனுக்கு நேர் மேலே மூன்று பேர் இருக்கிறார்கள் என்பதனை கால்களை வைத்து அனுமானித்துக் கொண்டான்.வேறும் பலர் இருக்கக் கூடும். துப்பாக்கியின் சுடு முனையொன்று தோள்மூட்டை இறுக்கிக்கொண்டிருப்பது நொந்தது. இது வெடித்தாலே போதும். டேய்.. சுடன்ரா பேப் ..… ´

சந்திராவோடுபோயிருக்கலாம். சந்திராவிற்கு வாகனமோட்டுவதில் சிக்கல் இருந்தது. இங்கத்தய தெருக்களில் அவனால் பதட்டமின்றி ஓட்டவே முடியாது. இனிப் பழக்கியெடுப்பதற்கும் முடியாதிருந்தது. சந்திராவிற்குப் பதில் தான் போனால் என்ன என சாகீருக்குத் தோன்றியது. ஆனால் சந்திரா ஒரு போதும் உடன்பட மாட்டான். “மனிசராயப் பிறந்தவைக்கு ரோசம் இருக்க வேணும்” எனசொல்லிக் கொண்டு வந்தவன் இதுக்கு ஒத்துக் கொள்ள மாட்டான். “முன்னாலயும் வையுங்கோ -அங்கையிங்கை பிசகிப் போனாலும் நான் வெடிச்சிட வேணும். அப்பிடியே இல்லாமல் காத்தோட காத்தாப் போயிடோணும்.”
அடுத்த நாள் சந்திராவை அழைத்துக் கொண்டு குலேந்திதான் போனான்.கொஞ்சத் தூரத்தில் அவனை விட்டுத் திரும்பியவனை அருள் அழைத்து வந்தான். சந்திரா புறப்பட்டகொஞ்ச நேரத்தில் சத்தம் கேட்டது. ஆயிரம் கிலோ வெடிமருந்தின் அதிர்வை சாகீரும் உணர்ந்தான்.

(2)
“சொல்லு, ஜொயின்ட் கோப்ரேசன் அற்றாக்கிற்கு யார் றெக்கியெடுத்தது? யார் பிளான் பண்ணியது? யார் இடித்தது ?”
இந்தக் கேள்வியை அந்த உடல் பருத்தவன் சீக்ரெட்டை ஊதி ஊதி நான்காவது தடவை கேட்கிறான். சுவர் மூலைக்குள் தன்னை அடக்கிக் குந்தி முழங்கால்களை கைகளால் வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்த தினேசலிங்கத்தின் உதட்டிலிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.
“சொல்லு.. இந்த மிசன்ரை மாஸ்டர் மைன்ட் யார்?”
“தெரியேல்லை சேர்” தலைக்குள் மின்னல் துகள்களை விசிறுவது போல் விழுந்த குத்து பொய் மூக்கை உடைத்திருக்க வேண்டும். ரத்தம் வழிந்தது. தினேசலிங்கம் கேவிக் கேவி அழத்
தொடங்கினான். “சேர் உண்மையா எனக்கொண்டும் தெரியா சேர். ஊரில கோப்பிரேசன் எண்டு சங்கக் கடையைச் சொல்லுறவை. சிலர் தவறணையையும் சொல்லுறவை. ஆனா இங்கை கொழும்பில அது எது எண்டு எனக்குத் தெரியாது சேர். நான் வெளிநாடு போக வந்தனான் சேர்..”
உதையிறதுக்கும் குத்துவதற்குமென வசதியாக முன்னால் கதிரை போட்டிருந்தவனுக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. “என்ன நக்கலா ? வெளிநாடு போறதுக்கெண்ட பெயரில தான் நீங்க இங்கை இருக்கிறீங்கள். அதுதெரியும். உங்கடை நெற்வேக்கை முழுசா பிடிச்சிருக்கிறம். அதனால ஒண்டையும் மறைக்காமல் சொல்லு. நீயா சொன்னால் நல்லது.”

தினேசலிங்கத்துக்கு தண்ணி குடிக்க வேண்டும் போல இருந்தது. உலர்ந்து போன உதடுகளை இரத்தம் மட்டுமே ஈரப்படுத்திக் கொண்டிருந்தது. எச்சில் விழுங்கும் போது இரத்தமும் உட்சென்றது.எனக்கொரு சின்னக் காயம் என்றாலும் அம்மா எப்படித் துடித்துப் போவாள்..? இதெல்லாம் தெரிந்தால்… ? அம்மாவிற்கோ நாமலாவிற்கோ விசயம் தெரிய முதல் வெளியில் போய்விட வேண்டும் கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போனால் எப்பிடியும் விட்டு விடுவார்கள்.

“என்னடா ……..யாண்டி? பதில் சொல்ல மாட்டியா..? எழும்புடா எழும்பி நில்” அவன் பூட்ஸ் காலை முகத்துக்கு நேரே நீட்டினான். உதைக்கவில்லை. உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இன்னொருவன் முன் நிற்க வேண்டியிருந்ததை நினைத்து தினேசலிங்கம் குறுகிப் போனான். இன்னும் எத்தனை பேருக்கு என்னைத் தோலுரிக்க வேண்டும்

“ரஞ்சன் விஜயரட்ண கொலையில உனது பங்கு என்ன?அடுத்தது யார் லிஸ்ட்டில? வரதனைப் பற்றிச் சொல்லு.. இந்திராவைச் சந்தித்திருக்கிறியா? யாரெல்லாம் ஏஜென்ட்? யார் கோர்டினேட்டர்”
ரஞ்சன் விஜயரட்ண என்ற ஒருவர் அமைச்சராக இருந்தார் என்பதைத் தவிர வேறெதுவும் தினேசலிங்கத்திற்கு தெரிந்திருக்கவில்லை. அவர் செத்த போது அவன் கொழும்பிற்குக் கூட வந்திருக்கவில்லை. தினேசலிங்கம் பதிலேதும் இன்றி நின்றான். அது அவனை சினப்படுத்தியிருக்க வேண்டும்.

“ஒளிக்காமல்சொல்லு. உனக்குஎல்லாம் தெரியும்.”
“சேர்..எனக்குஉண்மையாவே.. ” தினேசலிங்கம் முடிக்கவில்லை. இடுப்பிற்கு கீழே சப்பாத்துக்கால் பதிந்தது. அம்மா… கைகளால் பொத்திக் கொண்டு தினேசலிங்கம் சுருண்டு விழுந்தான். “பறத் தெமிழு..” முதன் முறையாக அவன் சிங்களத்தில் வார்த்தைகளை உதிர்த்தான். அவை சிங்களத் தூசண சொற்களாயிருக்க வேண்டும். தினேசலிங்கம் மேலும் மிதிபட்டான். அவனை மிதித்தவர்களில் ஒருவன் அழகாகத் தமிழ் பேசினான்.

(3)
என் இனிய நாமலாவுக்கு நான் நலம் நீர் எப்பிடி? உம்மை பிரிஞ்சு வந்து ஒண்டரைக் கிழமையாயிட்டுது. என்ன தைரியத்திலோ மூண்டு வருசம் தானே எண்டு ஈசியா சொல்லிட்டு வந்திட்டன். ஆனா ஒரு நாள் கூட உம்மை பார்க்காமல் இருக்கிறது எவ்வளவு கொடுமை எண்டு இப்பதான் விளங்குது. ஏதோ உம்மடை நினைவுகளில தான் நாட்களை போக்காட்டுறேன். நாமலா கடவுளைப் பிரார்த்தியும் இந்த மூண்டு வருசமும் கெதியா ஓடிப் போயிடோணும். நேற்றுத்தான் பாஸ்போட் குடுத்திருக்கிறன். ஒரு கிழமையில விசா குத்தி வருமாம். முடிஞ்சவரைக்கும் உழைச்சுக்கொண்டு நான் திரும்பின உடனை கல்யாணம். அதுக்குப் பிறகு நான் போக மாட்டன். ஊரிலயே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திடுவன். நாமலா.. அம்மாவை அடிக்கடி போய் பாரும்.ஏதாவது உதவி தேவையெண்டா செய்து குடும். பாவம் அவ. இனி நாங்கள் தானே பார்க்கவேணும். நாமலா.. கடைசியா சீக்காய் வயல் பின் காணியில நீர் தந்ததை என்னால மறக்க முடியாது. அந்த முத்.……… ´இந்த இடத்தில் தினேசலிங்கத்தின் பிடரியில் அடிவிழுந்தது. பேனா பெரிய கோடொன்றை பேப்பரில் இழுத்தது. நான்கு பேர்தான் வந்திருந்தார்கள். தினேசலிங்கத்தின் பாஸ்போட் அவர்களில் ஒருவனின் கைகளில் இருந்தது. “இது நீதானே..” பாஸ்போட்டை அவன் விரித்துக் காட்டினான். ”ஓம்..” லொட்ஜில் மற்றவர்கள் கூடிவிட்டார்கள். தினேசலிங்கம் லொட்ஜ் முதலாளியைக் கண்களால் தேடினான். அவருக்கு சிங்களம் தெரியும்.
“வா எங்களோடை”
“சேர் நான் வெளிநாடு போக வந்திருக்கிறன். வந்து ஒரு கிழமைதான் ஆகுது”
“கதைக்காத.. வா..” ஒருவன் பின் கழுத்தில் கை வைத்து தள்ளினான். தினேசலிங்கத்துக்கு அழுகை வருமாப் போல இருந்தது. அடிப்பார்களோ..?

தன்னை யாரோ காட்டிக் கொடுத்துவிட்டதாய் தினேசலிங்கம் நம்பினான். யாராயிருக்கும்.. வந்ததில இருந்து வெளியாலும் திரியாமல் லொட்ஜில் தானே நிற்கிறேன். நாமலாக்கு கடிதம் குடுத்து அடி வாங்கின பொடியன் இங்கைதான் நிற்கிறதா சொன்னவள். ஒருவேளை அவன்தான் போட்டுக் குடுத்திட்டானோ
தினேசலிங்கத்துக்கு கொழும்பு பிரமிப்பாகத்தான் இருந்தது என்றாலும் வெளிய திரிய பயமாய் இருந்தது.

குண்டுகள் வேறு வெடித்துக் கொண்டிருந்தன எதற்கு வீண் சோலி? அபுதாபிக்கான மூன்று வருட வேலை ஒப்பந்த விசா கிடைக்க வேண்டியிருந்தது. அதுவரையும் பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். செலவுக்கென அம்மா கொஞ்சம் பணம் தந்திருந்தாள்.அது சாப்பாட்டுக்கும் வாடகைக்குமே சரியாயிருந்தது. ஜேர்மனியில் இருக்கிற சாந்தியன்ரியின் நம்பரை அம்மா தந்திருந்தா. சாந்தியன்ரி ஏதாவது உதவி செய்யலாம் என அவ நம்பியிருக்கக் கூடும்.

“ஹலோ நான் தினேசலிங்கம். சுபத்திரையிடை மகன். கொழும்பில இருந்து கதைக்கிறன். அம்மா உங்களோடை கதைக்க சொன்னவ. நான் தாற நம்பருக்கு ஒருக்கா எடுக்கிறியளோ..?” ஒரு நிமிசக் கோல் எடுத்து ஒருமுறை சொன்னான். ஒரு நிமிசத்துக்கு நூற்றியம்பது ரூபா.

“ஓ..ஆர்.. தினேசலிங்கமோ.. ஆ.. ஊரில இருந்தோ.. இவர் வேலைக்கு போட்டார். வந்தவுடனை எடுக்கசொல்லுறன்.” சாந்தியன்ரி நம்பர் வாங்காமலேயே போனை வைத்தது தினேசலிங்கத்துக்கு முகத்தில் அறைந்த மாதிரி இருந்தது. இனி அவக்கு எடுக்கிறேல்லை. அம்மாக்கு இதைப் பற்றி எழுதக் கூடாது. கவலைப் படுவா. அம்மா எவ்வளவு நல்லவ.. நான் நாமலாவை காதலிக்கிறன் எண்டு தெரிஞ்ச உடனை எப்பிடிப் பக்குவமா நடந்து கொண்டா. நாமலாவின் அப்பாவோடு அம்மா தான் பேசினா.அவயளுக்கும் விருப்பமாத்தான் இருந்தது. ஆனா கல்யாணத்துக்கு முதல் கொஞ்சம் காசு உழைக்கவேணும் எண்டு நான் தான் விரும்பினேன். நாமலாக்கு இதில துண்டற விருப்பம் இல்லை. ஆனா குடும்ப உறவுகளுக்கை பணமும் ஊடாடுகிறது என்பதை தெரிஞ்சு வைத்துக் கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவிருந்தது.

“நாளைக்கு காசு பணம் இல்லையெண்டால் பெஞ்சாதி பிள்ளையளோடை எரிஞ்சு விழுந்து வாழ்க்கை அந்த சந்தமில்லாமல்ப் போயிடும். உன்ர அப்பாவோடை நல்ல அனுபவம் எனக்கு. நீ கொஞ்சம் காசைச் சேர்த்து வைச்சுக் கொண்டு கல்யாணம் கட்டுறது தான் நல்லது.” அம்மாவிற்கும் அந்த நினைப்பிருந்தது.
தினேசலிங்கத்தின் கையில் நேற்றுக் காலைதான் பாஸ்போட் கிடைத்தது. கிடைத்த உடனேயே கொண்டு வரச் சொல்லிருந்தார்கள். மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதில் அவர்கள் பிரபலமானவர்கள். பிரான்ஸ் ஜேர்மனி நாடுகளுக்கும் அனுப்புகிறார்களாம். ஆனால் அதுக்கு லட்சங்கள் தேவைப்படும். பம்பலப்பிட்டியில் பஸ் எடுத்து வெள்ளவத்தைக்குப்போய் பாஸ்போட்டை கொடுத்து விட்டு மீண்டும் மருதானைக்கு வரும் போது மதியம் தாண்டிவிட்டது. இரண்டொரு நாட்களில் விசா குத்தித் தருவார்கள்.

அன்று இரவு இராணுவ கூட்டுப்படைத் தலைமையகத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய வாகனத்தின் செஸி நம்பரைப் பெற்றுக்கொண்ட இலங்கை குற்றப் புலனாய்வுப் படைப் பிரிவினர் வாகனம் பதிவு செய்யப் பட்டிருந்த முகவர் நிலையத்திற்குள் புகுந்தனர். அந்த முகவர் நிலையம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.

(4)
“நான்தான் தினேசலிங்கம் கதைக்கிறன். எனக்கு இப்ப சிறை வாழ்க்கை பழகிட்டுது. பின்னே… தொன்னூற்றொன்றிலிருந்து ரண்டாயிரத்து ஒன்று .. பத்து வருசம்.. பிறகொரு ஏழு வருசம்.. மொத்தம் பதினேழு வருசம் சிறைக்குள்ளை இருந்தால் பழகித்தானே போகும். இந்த பதினேழு வருசத்தில பூசா வெலிக்கடை களுத்துறை எண்டு நிறையச் சிறைகள் மாற்றி விட்டினம். ஆனால் சிறை எல்லா இடத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்கு. நான் ஒரு புலி எண்டதுக்கான வீடியோ ஆதாரம் சிக்கினதாலயும் (அவங்களே துவக்கைத் தந்து வைச்சிருக்கச் சொல்லி வீடியோ எடுத்தாங்கள்) வலி பொறுக்க முடியாமல் காட்டின பேப்பர் எல்லாத்திலயும் கையெழுத்துப் போட்டதாலயும் கோர்ட்டில எனக்கு தீர்ப்பு எழுதி களுத்துறையில கொண்டு போய் போட்டினம். ஐஞ்சாறு கேஸ் எனக்கு மேலை. அதுகள் என்னவென்றே இன்று வரைக்கும் சரியாத் தெரியாது.முதல் நாள் சிறையில கொண்டு போய் போட்ட உடனை எனக்கு உலகமே இருண்டு போனமாதிரி இருந்தது. எனக்கு சொர்க்கம் எப்பிடியெண்டு தெரியாது. ஆனால் நரகத்தை அனுபவிக்கத் தொடங்கினேன். என்னை மாதிரியே எவ்வளவு தமிழ்ப் பெடியங்கள். வேறை இடங்களில பெட்டையளும் இருக்கிறதாக் கேள்வி. கொஞ்சம் கொஞ்சமா சிறை பழகத் தொடங்கியது எனக்கு.

மாசத்தில ஐஞ்சாறு என வரும் நாமலாவின் கடிதங்கள் தான் ஒரே ஆறுதல். நாமலா எனக்காக எத்தனை வருசமெண்டாலும் காத்திருப்பதாய் எழுதினாள். அப்பிடி அவள் எழுதினால் எனக்கும் சந்தோசமாய்த்தான் இருக்கும். அவ்வப் போது செஞ்சிலுவைக் காரர் வந்து எங்கையெல்லாம் அடி விழுந்தது எண்டு எழுதிப்போவினம். செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குண்டு மனிசி முதல்முதலா என்னைச் சந்தித்து விபரம் எழுதேக்கை “உமக்கு கொட்டையில அடிச்சவையா” என்று தமிழில கேட்க எனக்கு மானம் போனமாதிரிப் போச்சுது. இதையெல்லாம் எழுதிக் கொண்டு போய் என்ன செய்யினம் எண்டு தெரியாது. தமிழ் அமைச்சர்களும் வாறவை. வந்தென்ன.. ?

ஒருதடவை இந்தியாவில இருந்து கார்த்தியோ கார்த்திகேயனோ என்றொராள் வந்திருந்தார். மரியாதை தெரியாத மனுசன். பொட்டம்மானைக் கடைசியா எப்ப சந்தித்தாய்” என்று அவர் கேட்டார். கடவுளே.. ராஜீவ் கொலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சிவராசன் தாணு சுபா இவர்களெல்லாம் யார்..?

தொன்னூற்றைந்து ஒக்டோபருக்குப் பிறகு நாமலாவின் எந்தக் கடிதமும் வரவில்லை. யாழ்ப்பாணச் சனங்களெல்லாம் இடம் பெயர்ந்து போய் விட்டார்களாம். யாழ்ப்பாணத்தை ஆமி பிடித்ததை இங்கே சிங்கள கைதிகள் பெரிசாக் கொண்டாடினார்கள். நாமலா எங்கை போனாள் எண்டு தெரியேல்லை. எனக்கு நித்திரையே வாறதில்லை. அவளது பழைய கடிதங்கள் தான் துணையாக இருந்தன. அம்மாவின் கடிதமொண்டு கனகாலத்துக்குப் பிறகு வந்தது. நாமலா மல்லாவிக்கு போயிட்டாளாம். ஏன் நாமலா நீ கடிதம்போடவில்லை..?

தொன்னூற்றெட்டில் நாமலா கொழும்பு வந்திருந்தாள். அது கூட பிறகுதான் அம்மா எழுதிய கடிதத்தில் தெரிந்தது. அவளுக்கு பிரான்சில் ஒருபொடியனைப் பார்த்து கல்யாணம் பேசியிருந்தார்கள். கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாட்களில் அவளும் பிரான்ஸ் போய்விட்டாள். பாவம்.. அவளும் என்ன செய்வாள்..
எனக்குப் பெரிதாய் அழவேண்டும் போல இருந்தது. இனி அவளிடமிருந்து கடிதமேதும் வராது. உங்களுக்காய் காலமெல்லாம் காத்திருப்பேன் என அவள் சொல்லப் போவதில்லை. இரவு முழுதும் அழுது தீர்த்தேன். யார் யாரோ மீதெல்லாம் கோபம் வந்தது. அந்தக் கோபத்தில்தான் அடுத்த நாள் அந்த அமைச்சர் மீது நான் கை வைத்தேன். நானொரு காட்டுமிராண்டியாய் இருந்திருக்க வேண்டும். இல்லாட்டி அப்பிடிப் போட்டு அடிச்சிருக்கேலாது. “ஏன்ரா ஏமாத்திறாய்.. செத்துப் போடா.. உன்னாலை தான்ரா எல்லாம்.. ” அவரோடு வந்திருந்த அன்ரி “தம்பியவை என்ன இது” என்று என் கையைப் பிடித்து தடுத்தா. நான் அவவையும் பிடித்து தள்ளி விட்டேன். அவ சுவர் ஓரத்தில போய் விழுந்தா. இதற்கிடையில் யாரோ அமைச்சரின் கண்ணை மடித்துக் கூராக்கிய சாப்பாட்டுக் கோப்பையால் குத்தி விட்டார்கள். அவர் சரிந்து விழுந்தார். செத்துப்போனார் என்று தான் நினைத்தேன்.

அடுத்த நாட்களில் எல்லாம் போட்டுத் துவைத்தெடுத்தார்கள். முதன் முறையா என்னை அடித்து கொல்லட்டும் என்று நினைத்தேன். அம்மாதான் பாவம்.

சமாதானம் வருகுது. எங்களையெல்லாம் விடபோறாங்கள் என மற்றவர்கள் பேசித்திரிந்தார்கள். அது உண்மை போலத்தான் இருந்தது. பத்திரிகைகளில் ஆமியும் புலிகளும் கைகோர்த்து நிற்கும் படங்கள் வெளியாகின. அன்ரன் பாலசிங்கம் லண்டனில இருந்து இரணைமடுவில போய் இறங்கினாராம். பிரபாகரனின் பத்திரிகையாளர் சந்திப்பை ரூபவாகினியில போட்டு காட்டினார்கள். இப்ப புலிகளைப் பயங்கரவாதிகள் என்று ரூபவாகினி சொல்லுவதில்லை.

பேச்சுவார்த்தை தொடங்கப் போகிறதாம். கைதிகள் விவகாரமும் பேசப்படும் என்றார்கள். இப்பவெல்லாம் சிறைக்கு தமிழர்கள் யாரும் வருவதில்லை. வெளியேறுவது குறித்த மகிழ்ச்சி நாமலாவின் நினைவில் சட்டென்று ஒடிகிறது. நாமலா நீ கொஞ்சம் காத்திருந்திருக்கலாமே..

அம்மாவும் கொழும்பு வந்திருந்தாள். அவளைப் பார்க்கவும் முடிந்தது. ஓவெனப் பெருங் குரலெடுத்து அழுதவளை ஆறுதல்ப் படுத்த முடியவில்லை. கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரவலாக செய்திகள் வந்தது. எல்லா தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவினமோ என்றுதான் தெரியவில்லை.
சந்திரிகா வரையும் இந்த விசயம் இழுபட்டது. கடைசியில் தங்களிட்டை இருக்கிற ஆமிக்காரரை தாங்கள் விடுதலை செய்வதென்றும் பதிலுக்கு அரசாங்கத்திட்டை இருக்கிற தங்கடை ஆட்களை விடவேணும் என்றும் புலிகள் சொன்னார்கள். யாரையெல்லாம் விடுவிப்பது என்ற பெயர் விபரங்கள் சந்திரிகாவின் இறுதி முடிவுக்குப் போனது. சந்திரிகா அதில சைன் வைச்சா..

வவுனியாவில் கைதிகள் பரிமாற்றம் நடந்தது. அந்தச் செய்தியை நான் பத்திரிகையில் படித்தேன். படமும் போட்டிருந்தார்கள். புலிகள் தரப்பில் விடுதலையானவர்களில் கெனடியையும் சாகீரையும் எனக்குத் தெரியும். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வெலிக்கடையில் என்று நினைக்கிறேன் சாகீரைச் சந்தித்திருக்கிறேன். சாகீர் நல்ல பொடியன். மற்றவர்களுக்காக முன்நிற்பான். சிங்களக் கைதிகளுடன் சண்டை நடக்கும் போது அவனை முன் வரிசையில் பார்க்கலாம். பத்திரிகையில் சாகீர் தனது அம்மாவைக் கட்டியணைத்த படி நின்றான்.

(5)
என்னை இப்ப பூசாவுக்கு மாத்தியிருக்கு. திரும்பவும் தமிழ் பெடியங்களை பிடிச்சு வரத் தொடங்கிட்டாங்கள். அண்டைக்கு ஒரேயடியா நானூறு பேரைக் கூட்டியந்தாங்கள். இங்கை இரவில
ஆட்கள் அலறுற சத்தம் கேட்கிறது வழமையாப் போச்சு. சிலரை கொலை செய்து இரவோடிரவா குப்பை வண்டியில ஏத்திப் போறதா கதைக்கிறாங்கள்.
அமைச்சர்கள் வழமை போலவே வருகினம். நாமலாவுக்கு பிரான்சில இரண்டாவது குழந்தை பிறந்திருக்குதாம். பெடியன் நல்லா வைச்சுப் பாக்கிறானாம். ஆ.. சொல்ல மறந்து போனன். சாகீர் இயக்கத்தை விட்டு விலகி இப்ப சுவிஸ் போயிட்டானாம். செஞ்சிலுவைச் சங்கம் தானாம் அனுப்பி வைத்தது. அம்மாதான் இதையெல்லாம் எழுதினாள். அவள் திரும்பவும் ஊருக்குப் போயிட்டாள். கொழும்பில இருக்கிறதென்றால் இலேசுப்பட்ட காரியமே..? இன்னுமொரு உண்ணாவிரதம் இருப்பம் எண்டு பெடியள் பேசிக்கொள்ளுறாங்கள்.

கெதியில வீட்டை வருவன் எண்டு அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுத வேணும். அவள் உயிரோடு இருக்கும் வரைக்குமாவது இப்படி எழுதிக் கொண்டிருக்க வேணும்.

மோட்டார் சைக்கிள் குரூப்

முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்தில் காட்டுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதையில் முதலில் கிச்சின் பிறகு பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட்) காம்ப் என்று கடந்து தொங்கலில் மூன்று நான்கு, சீற்றுகளால் கூரைவேயப்பட்ட கூடாரங்கள் ஒன்றிலிருந்து இவன் யோசித்துக் கொண்டிருந்தான். “ச்சே.. மெடிக்ஸ்ஸில் நின்ற என்னைத் தூக்கி சிவராசண்ணை மெஸ்ஸில் போட்டுட்டாரே..” இப்பொழுதுதான் மெஸ்ஸில் வேலைகளை முடித்து வந்தான். நேற்றிரவு ஓடிப்போன இருவரைத் தவிர்த்து இன்றைய காலைக் கணக்குக்கு நூற்று நாற்பத்து இரண்டு பேர் முகாமில் இருந்தார்கள். தனிய இவன்தான் மெஸ்ஸில் நிற்கவேண்டியதாய்ப்போனது. சிவராசண்ணை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஆக்களுக்கும் சமமான அளவில சாப்பாடு போகோணும் சரியோ.. உன்ர சினேகிதர் என்றோ பிடிக்காத ஆக்கள் என்றோ பாக்கப்படாது. கேள்விப்பட்டனோ.. ” என்று அவர் முடித்திருந்தார். இவன் அதில் சரியாக இருந்தான். ஒரு மட்டுமட்டான கணக்குப்படி ஒராளுக்கு ஏழு சோயாமீற் துண்டுகள் என்று இவன் பிளான் செய்து கொண்டான்.

இவனுக்கு இது தேவையில்லாத வேலை. நேற்றுவரை இவனொரு டொக்டர். டொக்டர் என்றுதான் சின்னப் பெடியள் சொல்லுவாங்கள். சிவராசண்ணை இவனை மெடிக்ஸ்ஸில நிற்கச் சொன்னபோது தனக்கு ஸ்டெதஸ்கோப், ரெம்பரேச்சர் பாக்கிற மானி, பிரசர் பாக்கிற மெசின் எல்லாம் தருவினமோ என்று இவன் நினைத்தான். ஆனால் கொஞ்சக் குளோரோபோம் குளிசைகளும், சொறி சிரங்கு வட்டக்கடிக்குப் பூசுகிற களிம்பும், எச் ரூ ஓ ரு என்றொரு தண்ணிமருந்தும் கொஞ்சம் பன்டேஜ்களும் மட்டும்தான் கொடுத்தார்கள். எச் ரூ ஓ ரூவை காயத்தின்மேல் தடவினால் நுரைத்துக் கொண்டு வரும். “அழுக்கெல்லாம் கரையுது. இனி மாறும்” என்று சொல்ல இவன் பழகிக் கொண்டான். கொஞ்சம் சின்ன வயசுக்காரர் வந்தால் “ம்.. வாயைத்திறவும், ஆ காட்டும், மூச்சை இழுத்துவிடும்.. சரி.. இதை மூன்றுதரம் மறக்காமல் போடும் என்று பனடோல்களைக் கொடுப்பான். இவன் காட்டுகிற பில்டப்புகளால்த்தான் அவர்கள் இவனை ஒரு டொக்டர் என்றுகொண்டு திரிந்தார்கள். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்திருக்கும் நேற்றிவன் தனக்கு அரசியல் துறையில் சேர ஆசையிருக்கிறது என்று சொல்லாமல் இருந்திருந்தால்,

சும்மா நாலைந்து பேர் பேசிக்கொண்டிருந்தபோது பேச்சினிடையேதான் சொன்னான். “அரசியல் துறையில சேரத்தான் எனக்கு விருப்பம்” என்று. தனியே ஒருவனோடு பேச வேண்டியிருந்தாலும் துணைக்கு இன்னும் இரண்டு பேரைக் கூப்பிட்டுப் பக்கத்தில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. தனிய ரண்டு பேர் நிறைய நேரம் கதைக்கக் கூடாதென்று தென்னவன் சொல்லியிருக்கிறார். அப்பிடிக் கூடிக் கூடிக் கதைத்தவர்கள் அடுத்தடுத்த நாட்ளில் ஓடிப்போன சம்பவங்கள் இவனுக்கும் தெரியும். பெரும்பாலும் இவனை டொக்டர் என்று சொல்கின்ற சின்னப் பெடியங்களைத்தான் கூப்பிட்டுப் பக்கத்தில் வைத்திருக்கின்றவன் அன்று மாறிக் கூப்பிட்டுவிட்டான். காலமை துவக்குகளோடு (பொல்லுகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட்) பயிற்சியை முடித்துவிட்டு இவன்தான் பேப்பர் வாசித்தான். ஓயாத அலைகள் ஒன்றில் கைப்பற்றப்பட்ட ஆட்லறி எத்தனை மில்லிமீற்றரிலானது என்ற கேள்வியையும் இவனே கேட்டான். அது அங்கத்தைய வழக்கம். பெடியங்கள் செய்தியை உன்னிப்பாக கேட்கிறார்களா இல்லையா என்று அறிகிற சிவராசண்ணையின் ட்ரிக். மோட்டச் சைக்கிள் குரூப்போடு சேர்த்து ஏழு குரூப் அங்கு நின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு லைன். மோட்டச்சைக்கிள் குரூப்பில் ஒருவனை “நீ இண்டைக்குப் போகலாம்” என்று சிவராசண்ணை சொன்னார். அவனுக்கு வாயெல்லாம் பல்லாய்ப்போனது. மோட்டச் சைக்கிள் குரூப்பில் இன்னும் பதினேழோ பதினெட்டோ பேர்கள் இருந்தார்கள். கிழமையில் இரண்டு பேராவது மோட்டச்சைக்கிள் குரூப்பில் சேர்ந்து கொண்டேயிருந்தார்கள். இரவில் ஓட வெளிக்கிட்டு இசகுபிசகாகப் பிடிபட்டவர்களும் மோட்டச் சைக்கிள் குரூப்பிலேயே விடப்பட்டார்கள். அந்தக் குரூப்பிற்கு ஒரு லீடரும் இருந்தான்.

ஒவ்வொரு குரூப்புக்கும் சிவராசண்ணை வேலை கொடுத்தார். மற்றக் குரூப்புக்களை விட மோட்டச்சைக்கிள் குரூப்பிற்கு கொடுக்கிற வேலை கஸ்டமாயிருக்கும். ஒரு மீற்றிங்கில் சிவராசண்ணை அவர்களுக்கு இப்பிடிச் சொன்னார். “நீங்கள் வீட்டை போகப்போறம் எண்டு விரும்பினால் நாங்கள் உங்களைப் பிடிச்சு வைச்சிருக்கப் போறதில்லை. ஆனால் நீங்கள் வந்தநாளில இருந்து நாங்கள் உங்களுக்குச் செலவழிச்சிருக்கிறம். அதற்குரியதை உழைப்பாத் திருப்பித் தந்திட்டு நீங்கள் போங்கோ”. இவனது குரூப் இன்று காட்டுக்குள் மரந்தடிகளை வெட்டவேண்டியிருந்தது. இவனுக்கு அது கஸ்ரமாயிருந்தது. உங்களுக்கு சூரை முள்ளைத் தெரியுமா? அது இவனைக் கிழிகிழியென்று கிழித்தது. இவனிடம் மருந்து கட்ட வருபவர்களுக்கும் பெரும்பாலும் சூரைமுட்காயம்தான்.

காலைப் பயிற்சியும் மீற்றிங்கும் முடிந்து போகும்போது சிவராசண்ணை இவனையும் இன்னொருவனையும் கூட்டிக்கொண்டு போனார். இவனே சிவராசண்ணையைத் தாங்கிச் சென்றான். அவரால் இன்னொருவருடைய தயவில்லாமல் நடக்கமுடியாது. மட்டக்களப்பில் எங்கேயோ ஒரு சண்டையில் கால்களை அவர் இழந்திருந்தார். உடம்பில் வேறும் காயங்களை இவன் கண்டிருக்கிறான். இருபத்தாறோ இருபத்தேழோ வயசு அவருக்கு இருக்கலாம். குளித்து முடித்து நெற்றியில் அள்ளிப்பூசிய வீபூதியுடன் அவரை ஒரு இயக்கக்காரர் என மட்டுக்கட்டுவது சரியான கஸ்டம். “இல்லாத கடவுளின்ரை வீபூதியை என்னத்துக்கு பூசுறியள்” என்று தென்னவன் அவரோடு விவாதப்பட்டிருக்கின்றான். தென்னவன் முகாமில் இரண்டாவது பொறுப்பில் இருந்தான். சிவராசண்ணை பதிலுக்கு விவாதிப்பதில்லை. “இருக்கோ இல்லையோ, ஒரு நம்பிக்கை” என்பதோடு அவர் முடித்துக் கொள்வார்.

இவனையும் மற்றவனையும் சிவராசண்ணை இருக்கச் சொன்னார். “என்னடா, தமிழ்செல்வன் அண்ணைக்கு பதிலா உன்னை அரசியல் துறைக்குப் போடோணும் எண்டனியாம், அவ்வளவு பெரிய ஆளோ நீ ” என்று இவனைப்பார்த்துக் கேட்டார். இவன் பதைபதைத்துப் போனான். “அம்மாணை நான் அப்பிடிச் சொல்லேல்லையண்ணை” என்று அழுமாப்போல பதில் சொன்னான். “நாங்களென்ன வேலைக்கே ஆட்களையெடுக்கிறம், இன்னஇன்ன பதவிகளுக்கு ஆள்த்தேவையென்று” இதைச் சொல்லும் போது அவருக்கும் சிரிப்படக்க முடியவில்லை. இவன் அமைதியாய் நின்றான். “இண்டையில இருந்து மெடிக்ஸ விட்டுட்டு சொல்லுறவரைக்கும் மெஸ்ஸில நில். அதுதான் பணிஸ்ட்மென்ட், போ..” இவன் சுரத்தில்லாமல் வெளியேறினான். மற்றவன் பாவம், அவன் தனக்குப் புலனாய்வுத் துறையில சேரவிருப்பம் என்றவன். “என்னடா, நீ அம்மானுக்குப் பதிலா உன்னை ஐ க்கு பொறுப்பா போடோணும் எண்டனியாம்” என்று அவனை சிவராசண்ணை விசாரித்துக் கொண்டிருந்தார். தகடு குடுத்த அந்தக் கறுப்பாடு யாராக இருக்கும் என்று இவன் யோசிக்கத் தொடங்கினான்.

இயக்கத்துக்குச் சேர்ந்த கொஞ்சநாளிலேயே நிகழ்ச்சியொன்றில் பேசுமாறு சிவராசண்ணை இவனை விட்டார். ஒவ்வொரு ஞாயிறும் அப்படியொரு நிகழ்ச்சி நடக்கும். வில்லுப்பாட்டுகள், கவிதைகள், பாடல்கள் என எல்லோரும் ஏதாவதொன்றில் இருக்கவேண்டுமென்று அவர் வற்புறுத்துவார். “நாங்கள் சண்டைபிடிக்கத்தான் வந்தனாங்கள். உதுகளுக்கில்லை” என்று சிலர் வாக்குவாதப்படுவார்கள். “சரி, ஏன் சண்டைபிடிக்க வேணும் எண்டதை ஏறிச்சொல்லு” என்று சிவராசண்ணை சொல்லுவார். இவனுக்கொருநாள் சமகால அரசியலைப் பற்றிப் பேசு என்று அவர் சொன்னபோதுதான் அரசியற் கனவு வந்திருக்க வேண்டும். மேடையில் மைக் எதுவும் இருக்காது. இவன் குரலைச் செருமிக் கொண்டு ஆரம்பித்தான். விசயத்தைச் சொல்லமுதலே “நீங்கள் இந்த விடயத்தைத் தெளிவாப் புரிஞ்சு கொள்ள வேணும், ” என்றான். எந்த விடயம் என்பதில் இவனுக்கே குழப்பமிருந்தது. “யாழ்ப்பாணத்தைப் புலிகள்… ” என்று ஆரம்பித்தவன் நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்கினான். “யாழ்ப்பாணத்தை நாங்கள் விட்டுட்டு வந்ததை எல்லாரும் தோல்வியெண்டுகினம். ஓம். அது ஒரு ராணுவப்பின்னடைவுதான். ஆனால் உங்களுக்குத் தெரியும். யாழ்ப்பாண மக்கள் ஒட்டுமொத்தமா இடம்பெயர்ந்த உடனை ஐநா செயலாளர் பூத்ரஸ் பூத்ரஸ் காலி கவலை தெரிவிச்சிருக்கிறார். தனது கரிசனையைச் சொல்லியிருக்கிறார். இதொரு அரசியல் வெற்றி. எங்கடை மக்கள் தங்கடை பிரச்சனையை இன்று உலகப்பிரச்சனையாக்கியிருக்கினம். நீங்கள் இந்த விடயத்தை தெளிவாப் புரிஞ்சு கொள்ள வேணும்” என்று சொல்லி நிறுத்தினான். சிவராசண்ணை தொடர்ந்து பேசு என்பதுபோல சாடை காட்டினார். “எங்களுக்காக தமிழகத்திலே அன்பர் ஒருவர் தீக்குளித்து தன்னைக் கொடுத்துள்ளார். அவருக்கு எமது வீரவணக்கங்கள்” அது அப்துல் ரவூஃப் என்பது இவனுக்குத் தெரியும். சொல்லவா விடவா என்று கொஞ்சம் குழம்பி அன்பர் என்றே முடித்துக் கொண்டான். அன்றைக்குப் பிறகு இவன் தொடர்ச்சியாப் பேசினான். வகுப்பெடுக்க வருகிற பொறுப்பாளர்களிடம் கேள்விகள் கேட்டான். அப்படியொருநாள் “எங்களிடம் பிளேன் இருக்கா” என்று இவன் கேட்ட கேள்விக்கு “ஓம்.. பலாலியில நிற்பதெல்லாம் எங்கடைதான்” என்று பொறுப்பாளர் சொன்னார். “ரஜீவ் காந்தியை கொலைசெய்தது நாங்களோ” என்றொருநாள் கேட்டான். “நாங்கள் இல்லை. ஆனா அவர் கொல்லப்பட வேண்டிய ஆள் இல்லையென்று நினைக்கிறீரோ” என்று பதில் வந்தது. இப்பிடி மற்றப் பெடியங்களும் நிறையக் கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று சிவராசண்ணை சொன்னார். ஆனால் எப்ப ரெயினிங் அனுப்புவியள் என்ற கேள்விகளும் எப்ப சண்டைக்கு அனுப்புவியள் என்ற கேள்விகளும்தான் நிறைய வந்தன. ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாகவே ஆட்கள் ரெயினிங்குக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவன் அனுப்பப்படவே இல்லை.

மெஸ் நினைத்தது போல கஸ்ரமாக இருக்கவில்லை. ஒருநாளைக்கு மூன்றுதரம் கிச்சினுக்குப் போய் சாப்பாடு எடுத்து வரவேண்டும். அதற்கு கூட இருவர் வருவார்கள். நடந்துபோய் மாட்டுவண்டிலில் எடுத்துவந்த பிறகு திரும்பவும் வண்டிலைக் கொண்டுபோய் விடவேண்டும். கிச்சினில் மோட்டச்சைக்கிள் குரூப்பிலிருந்தவர்களே வேலை செய்தார்கள். “தங்களை எப்ப விடுறதென்று சிவராசண்ணை உன்னட்டை ஏதாவது சொன்னவரா” என்று இவனிடம் கேட்டார்கள். அவர்களில் ஒருவன் எப்ப பார்த்தாலும் மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை. நாங்க மட்டும் உலகத்தில் வீடு திரும்ப முடியல்லை” என்று பாடிக் கொண்டிருப்பான்.

கிச்சினுக்குப் போகும் வழியில் பிள்ளைகளின் முகாம் வாசலில் இருவர் அல்லது மூவர் சென்ரிக்கு இருப்பார்கள். உள்ளே காய் கூய் என்று சத்தமும் கேட்கும். இதனாலேயே இவனோடு கிச்சினுக்கு வரப் பிரியப்படுகிறவர்களும் உண்டு. போன கிறிஸ்மஸ்க்கு பிள்ளைகள் இவனது முகாமுக்கு வந்திருந்தார்கள். அன்று பெரிய பெரிய பெட்டிகளில் கேக், மைலோ மில்க், கன்டோஸ் எல்லாம் வந்தன. இவன் கிறிஸ்மஸ் தாத்தா வேசம் போட்டிருந்தான். அவளும் வந்திருக்கலாம் என்று இவனுக்கு டக் என்று தோன்றியது. தான் சேர்ந்த படியால அவளும் சேருவாள் என்றே இவன் நம்பினான், கிட்டத்தட்ட புருசன் செத்தால் தீக்குளிக்கிற பெஞ்சாதி மாதிரி. கிறிஸ்மஸ் தாத்தாவின் முகமூடி வசதியாகிப் போனது. ஆனால் அவள் இல்லை. இயக்கத்தில் சேரும்போதே அவளைப்பற்றிக் கேட்டார்கள். றோணியோவில் அச்சிட்ட தாளில் கடைசிக் கேள்வியாக அது இருந்தது. காதல் உண்டா ஆம் எனில் விபரம் – ஓம் என்று குடுக்கலாமோ என்று யோசித்தவன் பிறகு நிறுத்திக் கொண்டான். அந்தக் காதலை நிறுத்திக் கொள்வதா தொடர்வதா என்பதில் இவன் குழப்பமாயிருந்தான். இயக்கத்துக்கு சேர்ந்த முதல்நாட்களில் இரவுகளில் சட்டென்று விழிப்பு வரும். கூடவே தான் வீட்டில் இல்லையென்ற நினைப்பும் அவளது நினைவும் ஏமாற்றத்தைக் கூட்டிவரும். அவளுக்குச் சொல்லாமல் ஏன் நான் இயக்கத்துக்கு வந்தேன் என்று இரண்டொரு தடவைகள் எழும்பிய கேள்விகள் பிறகொரு நாள் ஏன் இயக்கத்திற்கு வந்தேன் என்பதில் வந்து நின்றது. நல்லவேளையாக அந்தக் கேள்வி போர்மில் இல்லை.

அதிகாலையிலிருந்து தலைக்கு மேல் கிபிர்கள் பறக்கத் தொடங்கியிருந்தன. சில்வர் சாப்பாட்டுப் பிளேட்டுகள் எதுவும் வெளியில் இருக்கக்கூடாதென்று தென்னவன் சொன்னான். இவன் கால்களுக்கடியில் அகப்பட்ட ஒன்றிரண்டு கன்டோஸ் ஈயப் பேப்பர்களையும் அப்புறப்படுத்தினான். கிளிநொச்சிப் பக்கமாகத்தான் சண்டை நடந்ததாகச் சொன்னார்கள். கிளிநொச்சிக்கு ஆமி வந்து ஆறேழு மாதம்தான் ஆகிறது. ஆனையிறவிலும் பெடியள் இறங்கிநிற்பதாக புலிகளின் குரல் சொன்னது. இந்தச் சண்டைக்கு நாங்கள் ஆகாய கடல் வெளிச்சமர் இரண்டு அல்லது ஓயாத அலைகள் இரண்டு என்று பெயர் வைக்கலாம் என்று யாருக்காவது சொல்லலாமா என இவன் யோசித்துவிட்டு பிறகு அடக்கிக் கொண்டான். எதுக்குச் சோலி.. “சப்ளைக்குப் போக வேண்டிவரலாம். றெடியா இருங்கோ” என்றார் சிவராசண்ணை. சொல்லி முடிக்க முதலே “ஏ… ” என்ற உற்சாகக் கூச்சல்கள் கிளம்பின. இவனுக்குத்தான் நெஞ்சிடியாயப் போனது. செல்லும் துவக்குச் சன்னங்களும் பறக்கிற ஒரு இடத்திற்கு கிட்டவாய் நிற்பதை யோசித்தாலே வயிற்றைக் கலக்கியது. கிபிர் வேறை.. சத்ஜெய என்று சமருக்குப் பெயரிட்டு உத்வேகம் கொண்டு வந்தாயா? புலிகள் நித்திரையா கொள்வார்..? என்று யோசித்துக் கொண்டிருந்த கவிதை வரிகளும் மறந்து போயின. கிளிநொச்சி பரந்தனை உடைத்துக்கொண்டு போக முடியவில்லையென்றும் ஆனையிறவில் இறங்கியவர்கள் ஆட்லறிகளை அழித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திவந்தபோதுதான் இவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. முகாமில் பெடியள் உற்சாகமிழந்து திரிந்தார்கள். இவனை விட இரண்டு மூன்று வயது சின்னப் பெடியனொருவன் “அடுத்த அடி ஆனையிறவுக்கு விழேக்கை அங்கை நான் நிப்பன்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான்.

இரண்டொரு நாளுக்குப் பிறகான ஒருநாட்காலை மோட்டச்சைக்கிள் குரூப்பிலிருந்து ஏழுபேரை சிவராசண்ணை வீட்டை போகச் சொன்னார். “முடிவா உறுதியா முடிவடுத்துட்டு வரவேணும். இல்லாட்டித் தேவையில்லை. மற்றாட்களுக்கும் சொல்லுறன். ரெயினிங் போனபிறகு நீங்க விரும்பினாலும் வேறை காரணங்களால விடமுடியாது. எங்கெங்கை நாங்கள் ரெயினிங் எடுக்கிறம் என்ற விசயம் புலிகள் இல்லாத ஆட்களுக்குத் தெரியத்தேவையில்லை.” என்றும் சொன்னார். அன்றைக்கு இரவே இவன் தானும் மோட்டச் சைக்கிள் குரூப்பில் சேரலாம் என திடீரென்று யோசித்தான். கிட்டத்தட்ட நாலு அல்லது ஐந்து மாதமாவது மோட்டச்சைக்கிள் குரூப்பில் இருக்கவேண்டியிருக்கும் என்ற நினைப்பும் விசராக்கியது. ஓடிப்போனால் என்ன..?

இவன் ஓடிப்போவது பிள்ளைகளின் முகாமில் சென்ரிக்கிருப்பவர்களின் கையில் இருக்கிறது. அவர்கள் கண்ணயரும் நேரம் எதுவெனத் தெரியவில்லை. எல்லாத்திற்கும் முதல் ஏன் விலத்தி வந்தேன் என்பதற்கு எதையாவது ஊரில் சொல்லவேண்டும். ரெயினிங் கஸ்ரமென்று சொல்லலாம். ஆனால் சூரை முட்காயங்களைத் தவிர உடம்பில் ஒரு சிராய்ப்புத் தன்னும் இல்லை. ஆகக்குறைந்தது அடிப்படை ரெயினிங் முடித்தவர்களுக்காவது முழங்கைகள் கண்டிப்போய் இருக்கும். இவனுக்கு அதுவும் இல்லை. அடுத்தநாள் பகல் முழுக்க இவன் விலகுவதற்கு என்ன காரணம் இருக்கமுடியும் என்று மண்டையைப் போட்டுக் குழப்பினான். அன்றைக்கு நடுச்சாமம், நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் ஒற்றையடிப்பாதைக்கு இறங்கி அசுமாத்தமின்றிக்கிடந்த பிள்ளைகளின் முகாமைக் கடந்து கிச்சினைத் தாண்டி வீதியில் ஏறி மாங்குளத்தை நோக்கி நடக்கத்தொடங்கிய போது இவனது மண்டைக்குள் “அந்தமாதிரியான” ஒரு காரணம் இருந்தது.

“கட்டாயப்படுத்திக் கூட்டிக்கொண்டு போட்டார்கள்”

0 0 0

இந்தக்கதை பதினைந்தோ பதினாறோ வருடத்தை லீனியராகக் கடந்து வந்துவிடுகிறது. ஐரோப்பாவோ கனடாவோ ஆசிரியனால் மட்டுக்கட்ட முடியாத ஏதோ ஒரு இடத்தில் புறநகரில், வீட்டில் தொலைபேசி மணியடித்தது. நேரத்தைப் பார்த்தான். இந்தியாவிலிருந்து பேட்டி கேட்டிருந்தார்கள். அவர்கள்தான். “வணக்கம்” என்றான். முதலே சொல்லியிருந்த கேள்விகள். முதலே பிளான் பண்ணியிருந்த பதில்கள் – ஒரேயொரு கேள்விமட்டும் புதுசாயிருந்தது. “நீங்கள் முன்னாள் விடுதலைப் போராளியல்லவா”
“ஆம், ”
“அந்த அமைப்பிலிருந்து என்ன காரணங்களுக்காக விலகினீர்கள் என்று சொல்லமுடியுமா”
“ஆம், ” இனி இவன் சொன்ன காரணங்கள் வருமாறு..
1. முதலில அந்த அமைப்பில ஜனநாயகத் தன்மை இல்லை.
2. ஏக பிரதிநிதித்துவம் என்பது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.
3. மாற்றுக் கருத்துக்களுக்கு அவர்கள் மதிப்பு அளிக்கவில்லை.
4. வலது சாரி அரசியலை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?
5. மக்களை மையப்படுத்திய சரியான அரசியல் செல்நெறி அங்கு இருக்கவேயில்லை.
6…
7…
8…
9…
10. இந்தக்காரணங்கள் ஒன்று சேர்ந்து இந்த இயக்கத்தைத் தோற்கடிக்கும் என்பதை நான் அப்போதே உணர்ந்து கொண்டிருந்தேன்

பதினைந்து வருசத்தில் இயக்கத்தை விட்டு விலகியதற்கான பத்துக்காரணங்களைக் கண்டு பிடிக்க முடிந்த இவனுக்கு தான் ஏன் இயக்கத்துக்குப் போனேன் என்பதைக் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.