நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?

திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான் நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் குறிப்பாக பெண்ணைப் பாடச்சொல்லிக் கேட்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடக்குமா என்ற சந்தேகத்திலேயே இது வெறும் கதையாயிருக்கும் என நினைத்ததுண்டு. ஆனால் பெண் பார்க்கச் செல்லும் பழக்கம் அங்கு பெரும்பாலும் நடைமுறையில் உண்டென்பதை சில நண்பர்கள் மூலமாகவும், தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்தும் பின்னாளில் அறிந்து கொண்டேன். ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை. நிறையப் பண்பாட்டுத் தொடர்புடைய தமிழகத்திடமிருந்து இந்த வழக்கம், நமக்கும் முன்பு நடைமுறையிலிருந்து பின்னர் அருகியற்றதா, அல்லது இந்த நடைமுறை அறவே இல்லையா என்பதை பழம்பெரும் பதிவர்களான மலைநாடன், சின்னக்குட்டி, கானா பிரபா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும். ஈழத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின்னர் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு செல்வதுண்டே தவிர பெண் வீட்டுக்குப் போய் அங்கு வைத்து பிடித்தால் நிச்சயம் செய்யலாம் என்ற நடைமுறையில்லை. நிறுவன ரீதியான திருமண முகவர்கள், மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் எனப் பரவலாக அங்கும் நடைமுறை வந்துவிட்டாலும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற சாத்தியமான இடங்களுக்கு தமது உற்றார், உறவினர், அன்புச் சித்தப்பா, ஆசை மாமா என ஒட்டுமொத்தமாய்ச் சென்று, பொண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று எவரும் ஈழத்தில் கேட்காமல் விட்டதேன் என யோசிக்கிறேன்.பெரும்பாலும் மூன்றாவது நபர் ஒருவர் இருதரப்புக்கும் இடையில் உறவினைப் பேணுவார். நிறுவன முகவர்கள் தவிர, இடை உறவினைப் பேணும் இவர்களைத் தரகர் என முடியுமா தெரியவில்லை. கிராமப் புறங்களில் நாலு பேருக்கு நல்லது செய்யலாம் என நினைக்கும் யாராவது ஒருவர் தான் இந்தப் பணியில் ஈடுபடுவார். பெட்டையின்ர படம் ஒண்டு … [Read more...]

வாழ்வினூடு பயணிக்கும் புதுவையின் கவிதைகள்

கவிஞர் புதுவை இரத்தினதுரைஈழ விடுதலைப் போருடன் பயணிக்கும் இலக்கியத்தில், அறியப்பட்ட பாடலாசிரியர். இரவும் ஒரு நாள் விடியும் அதனால், என்பது போன்ற, தமிழகத் திரைப்பாடல்கள் போர்க் கீதங்களாக ஒலித்த நாட்களில், ஈழ எழுச்சி கீதங்களை தமக்கான தனித்துவங்களோடு ஆக்கத் தொடங்கி இன்று வரை (இன்றைய பாடல்கள் எழுச்சிப் பாடல்கள் என்ற நிலையிலிருந்து ரசனைக்குரிய ஜனரஞ்சகப் பாடல்கள் என்னும் தளம் நோக்கிச் செல்வதாகவே தனிப்பட உணர்கிறேன். இதற்கு பாடல் ஆக்கம் பெரும்பாலும் இளையவர்களான போராளிகளின் கைகளில் இருப்பதுவும் ஒரு காரணம். அது தவிர திரைப்படங்கள் ஆகட்டும் அல்லது பாடல்கள் ஆகட்டும் நாம் எமக்கான உதாரணங்களாக இந்திய சினிமா மற்றும் இசையினையே முன்னெடுத்துப் பார்ப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ) ஈழப் போராட்டப் பாடற்களத்தில் புதுவை இரத்தினதுரைக்கு பெருமளவு பங்கிருக்கிறது.பாடற்களம் தவிரவும் கவிதைப் பரப்பிலும் இவர் அறியப் படுகிறார். புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பே இவரது கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. ஆரம்பத்தில் தீவிர இடதுசாரியாக இருந்திருக்கின்றார் என அவரது முன்னைய கவிதைகள் சொல்கின்றன. பிற்காலங்களில் கூட தனது சில பல கவிதைகளில் என் ஜேவிபி தோழனே என விளித்திருக்கிறார். தனது மே தின கூட்டங்கள் குறித்து நினைத்திருக்கின்றார்.ஆயினும் எது கவிதை என்ற சுழலில் அவரும் சிக்காமல் இல்லை. விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வியாசன் என்னும் புனைபெயரில் எழுதிய கவிதைகளை, அவர் தற்போதைய எண்ணக் கருக்களுக்கேற்ப அவை கவிதைகளா என தனக்குத் தெரியாதெனவும், ஆனால் அவற்றை உரைச் சித்திரங்கள் எனத் தன்னால் கூற முடியும் எனவும் சொல்கிறார்.உலைக் களத்தில் வெளியாகும் புதுவையின் உரைச்சித்திரங்கள் நிறைந்த வீச்சைக் கொண்டவை. சம காலத்தின் மீதான அவரது பார்வையைச் சொன்னவை. அவரது கோபங்களைக் கூறியவை. (புலம் பெயர் தமிழர்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய இரண்டு வரிகள் அண்மைக் காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமாதானத்திற்கான காலத்தில் அவர் புலம்பெயர் நாடுகளுக்கு வந்திருந்த போது அவரை விமர்சிக்க அது பெருமளவு பயன்பட்டது.)94 இல் ஆட்சிக் கட்டிலேறிய சந்திரிகா அரசுடனான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலத்தில் அவர் உலைக்களத்தில் எழுதுகிறார்.மேடைக்குப் புதிய நடிகை வந்தாள்நல்ல நடிப்புடன் நாடகமாடினாள்கதையற்ற கலைப்படைப்பு … [Read more...]

அலை மீதேறிக் கரை தேடி 1

1997 மே 13 மதியம்மன்னாரின் இலுப்பைக் கடவைக் கடற்கரையோரமாக நடக்கிறேன். போட்டிருந்த செருப்பு புதைய, கால்களைத் தொடும் மணல் சுடுகிறது. அலைகளின் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது கடல். இன்று இரவு இந்தக் கடலின் அந்தக் கரை நோக்கிச் செல்லும் ஏதாவது ஒரு படகில் நான் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நாளைய இந்த நேரத்தில் ஏதாவது ஒரு அகதிகள் முகாமில் என் பெயரைப் பதிவெடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.அல்லது ?நாச்சிக்குடா கடலில் இருந்து தமிழகம் புறப்பட்ட ஒரு றோலர் படகு கரைக்கு வெகு சமீபமாகக் கவிழ்ந்ததில் 150 பேர் செத்துப் போய் சில காலங்கள் தான் ஆகியிருந்தது.ம்.. ஒரு மூன்று மாத காலம் ஆகியிருக்கும்.முல்லைத் தீவின் தேவிபுரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயையும் இரு பிள்ளைகளையும் வெறும் உடலமாக கொண்டு வந்து இறக்கினார்கள். செத்துக் கிடந்த மூத்தவன் வீதிகளில் கண்டால் சிரிப்பான். பேசிப் பழக்கமில்லை. ஆனால் அவர்கள் மூன்று பிள்ளைகள் என்று தெரியும்.அன்றைய இரவே இன்னொரு பிள்ளையையும் பிணமாக கொண்டு வந்து இறக்கினார்கள்.அந்தக் குடும்பத்தில் அந்தப் பொழுதில் அவர்களுக்காக அழுவதற்காக யாருமிருக்கவில்லை.இதோ என்னையும் இந்தக் கடலுக்கு துரத்தி விட்டிருக்கிறது காலம். முல்லைத் தீவில் புறப்பட்டு வன்னியை குறுக்காக கடந்து முழங்காவிலுக்கு வந்த இரண்டு வாரங்களில் இலுப்பைக் கடவைக்கு இரண்டு மூன்று தடவை வந்து விட்டேன். அத்தனை தடவையும் புறப்படும் படகுகளில், ஏதாவதொரு காரணத்தினால் எனது பயணம் தள்ளித் தள்ளிப் போனது.95 ஒக்ரோபர் யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கித் தொடங்கிய ஓட்டம் கொடிகாமம், எழுதுமட்டுவாள், முல்லைத்தீவு, முழங்காவில் என நீண்டு இன்று இலுப்பைக் கடவையில் வந்து நிற்கிறது, அடுத்த சுற்றுக்கு தயாராக.இலுப்பைக் கடவையென்ற அந்த நிலத்தில் என்னால் இலகுவாக கரைய முடியவில்லை. எழுதுமட்டுவாள் ஆகட்டும், முல்லைத்தீவு ஆகட்டும் இயல்பாக, இலகுவாக அந்தச் சூழ்நிலைக்குள் என்னைக் கரைத்துக் கொள்ள முடிந்தது. இலுப்பைக் கடவையிடம் நான் தோற்றுத்தான் போனேன்.கரையில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மருத்துவ முகாம் நடாத்திக் கொண்டிருந்தனர். வேறு மருத்துவ வசதிகள் அங்கு கிடையாது. ஏதாவது பாரதூரமான நோய்கள் எனில் அவர்களூடாக மன்னார் மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும்.எனக்குள் நிறைய எண்ண அலைகள்கிளாலிப் பயணம் … [Read more...]

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995

1995 , ஒக்ரோபர்,30மிகச்சரியாக இன்றைக்கு பத்து வருடங்களின் முன்..அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு … [Read more...]