சமகால இலக்கியக் குறிப்புகள்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்ற ஜெயமோகனது கூற்று எனக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை. ஒருவேளை, அவர் அது இனப்படுகொலையே என்றிருப்பாரானால் மாத்திரமே, “இல்லையே.. இவர் இதைச் சொல்வது தப்பாச்சே.. ஏதேனும் hidden agenda இருக்குமோ ” என்று யோசித்திருப்பேன். மற்றும்படி இலங்கையில் இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று கோத்தபாய ராஜபக்ச சொன்னபோது எப்படிக் கடந்துபோனேனோ அப்படித்தான் கடந்துபோனேன். தவிரவும், ஈழத்தமிழர்களுக்கான ஒரு தீர்வு தமிழகத்தில் இருந்து ஒரு போதும் வராது என்று தீர்க்கமாக நம்புகிறவனாகவும் நானிருப்பதால், ஜெயமோகனது இக்கூற்றுக்கு ஐந்து சதப் பெறுமதியைக் கூட அளிக்க முடியவில்லை. நாளைக்கே இதைச் சீமான் சொன்னாலும் இதே நிலையிலேயே தொடர்வேன். ஏனெனில் இதுவும் அதுவும் ஈழத்தமிழர்களுடைய அரசியல் பயணத்தில் ஒரு சிறு சலசலப்பைக் கூட ஏற்படுத்தப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். நிற்க, ஜெயமோகனது இந்த இனப்படுகொலை தொடர்பான கூற்று, மற்றும் இந்திய இராணுவத்தினர் ஈழத்தில் மனிதாபிமானத்தோடுதான் நடந்துகொண்டார்கள், மற்றதெல்லாம் புலிகளின் பிரச்சார நுட்பம் என ஒரு ஜெனரல் சொன்னார் என்ற முன்னைய கருத்து, ஆயுத விடுதலைப் போருக்கு எதிரான அவரது கருத்து நிலை என அனைத்துமே மையம் கொண்ட மனநிலையானது ஓர் இந்தியப் பெரும் தேசிய மனநிலையாகும். இந்தியா என்கின்ற ஒற்றை அரசின் (state) ஒருமைப்பாட்டையும், உறுதித்தன்மையையும் கட்டுக்குலையாமல் பேணுவதற்கு, இந்திய ஒருமைப்பாட்டை நேசிக்கும் மனங்களைத் தொடர்ந்தும் அதே மாயையில் வைத்திருப்பதற்கு, ஈழம் பற்றி, காஷ்மீர் பற்றியெல்லாம் இப்படியான கருத்துக்களை உருவாக்குவதும், பரப்புவதும் அவர்களுக்கு நிபந்தனையாகிறது. அதைத்தான் அவர்கள் காலங்காலமாகச் செய்து வருகிறார்கள். அது ஜெயமோகன் மட்டுமல்ல, இலக்கியம், எழுத்தென்ற இந்தப் பரப்பிலேயே வேறும் பலரும் இருக்கிறார்கள் என்பது எந்தளவிற்கு உண்மையோ, அவர்களோடு நம்மிற் பலர் வலு கூலாகக் குலாவுகிறார்கள் என்பதும் உண்மை. 0 0 0 தீபன் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ஒரு கேள்விக்கு, இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என ஷோபா சக்தி அளித்த பதில், சுவிற்சர்லாந்துப் பத்திரிகையொன்றில் கவனப்படுத்தப்பட்டு வெளியாகியிருந்தது. அதைப்பற்றி அக்காலத்தில் இளவேனிலோடு உரையாடியிருக்கிறேன். ஒரு சர்வதேச மேடையை அழுத்தமான ஒரு பதிலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் என்று … [Read more...]

நேர்காணல் – அம்ருதா மாத இதழ்

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் தொகுதி. இப்பொழுது வந்திருப்பது “ஆதிரை“. வந்த சில வாரங்களிலேயே அதிகமான உரையாடல்களை “ஆதிரை“ உண்டாக்கியுள்ளது. ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் என்ற தளத்தில் கட்டமைந்திருக்கும் ஆதிரை எழுப்புகின்ற கேள்விகள் பல கோணங்களில் ஆயிரமாயிரம். “யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன்“ என்று கூறும் சயந்தன் யாழ்ப்பாணம், சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்து போர்க்கால வாழ்வின் வழியே இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர். பின்னர், வன்னியிலிருந்து மீண்டு புலம்பெயர்ந்தவர். சயந்தனுடனான இந்த நேர்காணல் இணைய உரையாடலின் வழியாக நிகழ்த்தப்பட்டது. - கருணாகரன் ஆறாவடுவுக்குப் பிறகு ஆதிரை. எப்படி உணர்கிறீர்கள்? ஆறாவடு எழுதிமுடித்தபோதிருந்த நிறைவு இப்போது ஆதிரையிலும் இருக்கிறது. ஆனால் ஆறாவடு மீது இப்போது நிறைவில்லை. இதுவே ஆதிரைக்கும் நிகழக்கூடும். ஆதிரை கொண்டிருக்கும் கலையும் அரசியலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? மனதில் உருவாகிய வெளிப்பாடா? 2009இல் யுத்தம் முடிந்து 4 வருடங்களிற்குப் பின்னர் வன்னியில் என்னோடு கூடப்படித்த ஒருவனைச் சந்திக்கச் சென்றேன். படிக்கின்ற காலத்தில் அவனுடைய அம்மா அப்பம், போண்டா, சூசியம் முதலான உணவுப் பண்டகளைத் தயாரித்து பள்ளிக்குட வாசலில் வைத்து விற்பதற்காக எடுத்துவருவார். பாட இடைவேளைகளின் போது அம்மாவிற்கு உதவியாக அவன் நிற்பான். போர் அந்த நண்பனுடைய ஒரு காலைக் கவ்விக் கொண்டுபோயிருந்தது. இப்பொழுது அவன் ஒரு பலசரக்குக் கடை வைத்திருந்தான். வெறுமையாகக் கழிந்த நமக்கிடையிலான உரையாடலின் ஏதோ ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் எப்படி வதிவிட உரிமைகளைப் பெறமுடியும் என்பதைப் போன்ற அவனுடைய இயல்பான ஒரு கேள்விக்கு யுத்தத்தைக் காரணம்காட்டித்தான் என்று சட்டென்று சொல்லிவிட்ட அடுத்த நொடியிலேயே அவனுடைய கண்களை எதிர்கொள்ளும் தைரியத்தை நான் இழந்துவிட்டிருந்தேன். ஆதிரைக்கான முதற்புள்ளி அப்பொழுதே உருவாகியிருக்க … [Read more...]

பெயரற்றது – சிறுகதை

இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. மூன்று நாட்களாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமென்றில்லை. ஒழுங்கான சாப்பாடு, குளிப்பு முழுக்கு, கக்கூசு என ஒன்றுமில்லை. ரவியண்ணனின் வீட்டின் முன் விறாந்தையில் பனங்கிழங்குகளை அடுக்கியமாதிரி படுத்திருந்த இருபது பேர்களில் கடந்த இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவனைக் கண்ணயரவே விடுவதில்லை என்று முடிவு பண்ணியிருக்கவேண்டும். “க்ர்.. புர்..” என்ற அவர்களின் குறட்டை ஒலிக்கு கவிழ்ந்து படுப்பதும், காதுகளைப்பொத்தியபடி படுப்பதுமென என்று இவனும் எல்லாத் தந்திரங்களையும் பாவித்துப்பார்த்தான். ம்கூம். நித்திரை வரவேயில்லை. போதாதற்கு தீபன் அவ்வப்போது தன் வலது காலைத்தூக்கி இவனின் தொடைக்கு மேலே போட்டு “அவ்..உவ்..” என்று புரியாத மொழியில் புசத்தியபடியிருந்தான். அப்படி அவன் காலைத் துாக்கிப் போடுகிற ஒவ்வொரு தடவையும் இவனுக்கு இடுப்பில் கிடக்கிற சாரம் கழன்று போய்விடுமோ என்று சீவன் போனது. “பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்குச் சீவன் போகிறது” என இதைத்தான் சொன்னார்களோ என்று நினைத்துக் கொண்டான். அடிக்கொரு தடவை இடுப்போடு சேர்த்து சாரத்தை இறுக்கி விட்டுக்கொண்டாலும், அது இளகியபடியிருப்பதாகவே உணர்விருந்தது. விறாந்தையோடு இணைந்து இரண்டு அறைகள் இருந்தன. உள்ளே பெண்களுக்கு ரவியண்ணன் இடமொதுக்கிக் கொடுத்திருந்தார். அவர்களில் கிருஷாந்தியையும் தமிழினியையும் இவனுக்கு ஏலவே தெரிந்திருந்தது. சரியான பயந்தாங்கொள்ளிகள். நேற்றும் பார்த்தான். இரவில் பாத்ரூம் போகும்போது துணைக்கு ஐந்தாறு பேரை அழைத்துச் சென்றார்கள். அத்தனை பேரும் ஒவ்வொருவரின் கையையும் பற்றிப் பிடித்தபடி விறாந்தையில் படுத்திருந்தோரின் கால்களுக்கிடையில் மெதுவாக நடந்து சென்றார்கள். அதனாலேயே ஒருபோதும் துாங்கக் கூடாதென்று இவன் நினைத்தான். சற்றே கண்ணயர்ந்தாலும், தீபனின் கால்பட்டு சாரம் இடுப்பினின்றும் நழுவி விட்டால் என்னாகும் என்ற நினைப்பு உதறலை உண்டுபண்ணியது. “பிறகு பப்ளிக் ஷோ தான். நாசமாப்போன நிலவு வேற, நேரே எறிக்குது.. நல்ல லைற்றிங்” இவனுக்கு சாரம் கட்டிப் பழக்கமிருக்கவில்லை. அதற்கெல்லாம் பதினெட்டு வயதாக வேண்டும் யாரும் சொல்லாமலேயே ஏனோ தனக்குள் தீர்மானித்திருந்தான். அரைக்காற்சட்டைதான் போடுவான். அல்லது ரன்னிங் … [Read more...]

சுதர்சினி (சிறுகதை) – தமிழினி

-மறைந்த தமிழினி அவர்கள்  2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை) மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம் விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ளே ஒருவரோடொருவர் முகத்தை முட்டிக்கொண்டு புளுங்கி அவியும் நெருக்கத்தில், அழுக்கு மனித மூச்சுக்களை மாறி மாறி சுவாசிப்பதைவிட இது எவ்வளவோ மேல். சிறைச் சாலையின் வெளிப்புறம் தார் ஊற்றப்பட்ட சிறிய உள்வீதி. சிறிய மலர்ச் செடிகள், கொடிகள், அவற்றை சுற்றி அழகுக்காக அடுக்கப்பட்ட கற்கள். மிகப்பழமையான பெரிய கட்டடங்களைக் கொண்ட இந்த சிறைச்சாலையின் அமுக்கமான சூழ்நிலையில், திரும்பும் திசைகளிலெல்லாம் ஏதேதோ இரகசியங்களும் புதிர்களும் நிறைந்திருப்பதுபோலவும், ஒரு பயங்கர சூனியக்காரியின் வெறி கொண்ட கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இனம் புரியாத கலக்கம் எப்பொழுதும் எனக்குள் படர்ந்து உறைந்திருந்தது. ஒருவிதமான பொறாமையோடும் குரூரத்தோடும் பசியோடும் ஒரு நிழலுருவம் போல அது அலைந்துகொண்டே திரிவது போன்ற பிரமை சதா என்னைப் பின்தொடர்ந்து வதைத்துக் கொண்டிருந்தது. எனக்கு ஆறுதல் தரும் தனிமையைக்கூட அதிக நேரம் அனுபவிக்க முடியாதபடி மனித முகங்களை மட்டுமல்ல வெறுமையைக்கூட விழி நிமிர்த்தி பார்க்க முடியாத இருண்மைக்குள் என் காலங்களை சிறை விழுங்கிக் கொண்டிருந்தது. அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண் டும் நின்றுகொண்டும், கைதிகளில் சிலர் ஏதாவது பேசிக்கொண்டும்  சிரித்துக்கொண்டும் யோசித்து அழுதுகொண்டும் இருக்கிறார்கள். எல்லாருக்கும் இரவுச்சோறு கொடுக்கும் வரிசை முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளே அடைக்கப்படுவதற்கான அழைப்பு இனி எக்கணத்திலும் வரலாம். அதை நினைத்தாலே மூச்சு இறுகுவது போல இருக்கிறது. கடவுளே இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கூப்பிட மாட்டார்களா என்ற வேண்டுதலோடு, … [Read more...]