குழை வண்டிலில் வந்தவர் யார்..?

“தம்பி ஒரு கொமிக் சொல்லுறன். எலக்ஷென் நடந்ததெல்லே, முல்லைத்தீவுப் பக்கமா வெத்திலையில வோட்டுக்கேட்ட அரசாங்கக்கட்சி ஆளொருவர், எலக்ஷனுக்கு ரண்டு மூண்டு நாளுக்கு முதல், வீட்டு வசதிகள் சரியாக் கிடைக்காத கொஞ்ச சனத்துக்கு கூரைத் தகரங்களை அன்பளிப்பாக் கொடுத்து, வீட்டுக்குப் போடுங்கோ என்று சொன்னவராம். சனமும், நீங்கள் தெய்வமய்யா என்று கும்பிட்டு வாங்கிக்கொண்டு போச்சினமாம். ஆனால் எலக்ஷனில ஆள் தோத்திட்டார். கூரைத்தகடு வாங்கின ஆக்களின்ரை வோட்டு விழுந்ததே சந்தேகமாம். ஆள் கொஞ்சம் கோபத்தோட போய், நீங்களெல்லாம் என்ன மனிசர். பல்லை இளிச்சு வாங்கிக்கொண்டுபோயிற்று கழுத்தை அறுத்திட்டியளே என்று திட்டினாராம். சனம் ஒண்டும் விளங்காமல், ஐயா நீங்கதானே வீட்டுக்குப் போடச்சொன்னியள் என்று இழுத்திச்சினமாம்...” இந்தக்கதையை எனக்குச் சொன்னவர் எனது பெரியப்பா. இன்னும் இரண்டு வருடத்தில் எழுபது வயதாகிறது. தச்சுவேலை செய்கிறார். கோப்பிச வேலைகளில் (கூரை வேலைகள்) ஸ்பெஷலிஸ்ற். மேற் சொன்ன கதை நிச்சயமாக ஒரு புனைவுதான். நிச்சயமாக பெரியப்பாவே புனைந்திருப்பார். எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு பேர்தான் புனைவாளர்கள். அந்நேரத்தில் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்தவரும் அவரே. (சென்ற வருடம் அ.இரவி அண்ணா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் அப்பாவிடம் – சயந்தன் எழுதுறதுகளை வாசித்திருக்கிறியளா என்று கேட்டார். அப்பா தலையைச் சொறிந்து கொண்டே, என்னமோ எழுதுறான்தான். சந்தோசம்தான். ஆனால் வாசிக்கிறதில்லை என்றார். திடீரென்று இரவியண்ணை நீங்களும் ஒரு மனிசரோ என்று பொரிந்துதள்ளத்தொடங்க அப்பா திகைத்துப் போய்விட்டார். அப்படி அப்பா டோஸ் வாங்கிக்கொண்டிருந்தபோது பக்கத்தில் நின்ற வெர்ஜினியாவை காணவேயில்லை. அடுத்தது தனக்குத்தான் என்றோ என்னவோ ஓடி ஓளிந்துவிட்டார். மறுநாள் காலை இரவியண்ணை போனபிறகு, அப்பா சொன்னார். “இப்பிடி ஆக்களைக்கூட்டிக்கொண்டு வந்து பேச்சு வாங்கித்தராதை... ”) பெரியப்பாவைப்போல நிறையக்கதைகளைப் புனையும், மனிதர்களை கிராமங்கள் தமக்குள் வைத்திருக்கின்றன. அவற்றை புளுகுகள் என்று கடந்துபோய்விட முடியுமென்று தோன்றவில்லை. எதிர்காலத்தினுடைய நாட்டார் கிராமியக் கதைகள் இவைகளாகத்தான் இருக்குமோ என யோசிக்கின்றேன். எப்படியாவது இவை தமக்குரிய இடத்தை எடுத்துக்கொள்ளும். ஊரில் இன்னொரு சுவாரசியமான மனிதர் இருக்கிறார். சீனியர் என்று பெயர். ஒருமுறை … [Read more...]

ஆயாச்சி அல்லது கச்சான்காரப் பூரணத்தின் பேரன்

ஆறாவடுவின் நான்காவது திருத்தமும் முடித்து, “இதுதான் எனது உச்சக் கொள்ளளவு. இதற்குமேலும் நீங்கள் எதிர்பார்க்கும் செழுமை என்னிடம் மருந்திற்கும் கிடையாது” என்று அனுப்பிவைத்தபோது தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொன்னார். “பரவாயில்லை. இது கெட்டிக்கார இளைஞன் ஒருவன் எழுதிய சுவாரசியமான பதிவுதான். ஒரு தொடக்கமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் கெட்டிக்காரத்தனம் மட்டுமே ஒரு நாவலை எழுதப் போதுமானதல்ல. அதற்கும் மேலாக ஒரு நிறைவான மனித மனம் தேவைப்படுகிறது. வாழ்வின் சகல பாடுகளையும் பட்டு ஓய்ந்த வயதொன்றின் மனநிலையோடு பதட்டமின்றி நிதானத்தோடு வாழ்க்கையின் ஒவ்வொரு தரிசனங்களையும் அவற்றின் உயிர்த்தன்மை கெடாதபடிக்கு அணுகி கதை தன்னைத்தானே நகர்த்திச் செல்வதைப்போல நீ ஒரு நாவலை எழுத வேண்டுமென்றார். “சரி” என்றேன். நேரிற் சந்தித்தபோது “இதைப்படி இதைப்படி” என்று அவர் தெரிவு செய்துதந்த புத்தகங்களில் அரைவாசி, இன்னமும் படிக்காமற் கிடக்கின்றன. பிரான்ஸிஸ் கிருபாவின் கன்னி நாவலை “எங்கே, இதை நீ டிகோட் செய் பார்க்கலாம்” என்று சொல்லி ஆண்டுகளாயிற்று. ஆனாலும், நேர்கோட்டு முறையில், இரண்டு தலைமுறையைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்வையும் அவர்களின் பாடுகளையும் ஒரு பெரிய நாவலில் சொல்லவேண்டுமென்ற கனவு எனக்கிருந்தது. 0 0 0 எனது அப்பம்மாவிற்கு எண்பது வயதுகளாகிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். இப்பொழுதும் கடலில் இறங்கினால் கூந்தலை அள்ளி முடிந்துவிட்டு “பிறநீத்தம்” அடிப்பதில் “விண்ணி”. எனது சிறிய வயதில், வெள்ளைச் சேலையை என் இடுப்பில் சுருக்கிட்டு மாரிகாலக் கிணற்றில் இறக்கி மேலே நின்று வட்டமாகச் சுற்றி வருவார். அவர் பிடியை இலேசாக்குவதும் நான் நீரில் மூழ்கி “குய்யோ முய்யோ” என்று கத்துவதும் அவர் சரக்கென்று சேலையை இழுத்து என்னை நீர்மட்டத்திற்கு கொண்டுவருவதும் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை நடக்கும். மேலே நின்று “காலை அடிச்சு நீந்து” என்று அவர் சொல்வது கிணற்றுச் சுவர்களில் எதிரொலித்து ஐந்தாறு தடவை காதுகளில் நுழையும். நீரில் உடலைச் சமநிலைப்படுத்தி, மூழ்காதிருக்க எட்டொன்பது வயதுகளிலேயே கற்றிருந்தேன். அப்பம்மா என்னை கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தினார். “தவக்களையள்தான் கிணத்துக்கை நீந்தும். மனிசன் கடல்லதான் நீந்துவான்” என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார். கடலின் மீதான நெருக்கத்தை எனக்கு அவர்தான் ஊட்டினார். … [Read more...]

மொட்டை மாடிக் கனவுகள்..

எங்கள் ஊரில் மொட்டைமாடியென்ற ஒன்று கிடையாது. பெரும்பாலும் ஓட்டுக் கூரைகள்தான். சில இடங்களில் சிமெந்து பிளேட் வைத்த கூரைகளும் உண்டு. ஆனால் அவற்றுக்கு மொட்டைமாடிக் குரிய வரைவிலக்கணங்களை யாரும் அப்ளை பண்ணுவதில்லை. எண்பதுகளின் இறுதியில் சியாமச்செட்டி ரக பொம்பர்களது குண்டுவீச்சுக்களுக்கும் உலங்கு வானுார்திகளின் துப்பாக்கிச் சூடுகளுக்கும் அந்தப் பிளேட்டுகளுக்கு கீழே பதுங்கிக் கொள்ள ஊரில் ஒரேயொரு வீடு இருந்தது. அப்படியான சமயங்களில் பொட்டுக்களுக்கால் புகுந்தும் ஊர்ந்தும் புரண்டும் அங்கே போவோம். ஊரே திரண்டு நிற்கும். அப்படியான களேபரங்களிலும் கொறிப்பதற்கு பகோடாவோ பருத்தித்துறை வடையோ யாரேனும் கொண்டு வந்திருப்பார்கள். பொம்பர் எங்கேயோ குண்டு வீசுகிற சமயங்களில் பதட்டமெதுவும் இருக்காது. ஒரு ஒன்று கூடல் மாதிரி பேசிப் பறைந்து விட்டுக் கலைவார்கள். இளந்தாரிப் பெடியள் ஒரு ரேடியோவைக் கையில் வைத்து அங்கையிங்கை திருப்பி வருகிற இரைச்சல் சவுண்டுகளையும் புரியாத மொழிகளையும் பைலட்காரர் கதைப்பதாகச் சொல்வார்கள். அது உண்மைதானா அல்லது இலங்கை வானொலியின் சிங்களச் சேவையில் போன ஏதும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிதானா என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. … [Read more...]

திருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா

யுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை. ஆனாலும் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்துக்குள் கிடந்த என்னை, பாடசாலைக்குக் காலை வருவதும் மதியம் திரும்புவதுமென வாழ்ந்த என்னை, எப்போதாவது யாரோடாவது ஐஸ்கிரீம் குடிக்கவும் உடுப்புக்கள் வாங்கவும் மட்டுமே நகரத்துக்கு வந்து போன என்னை, கிளாலி கடநீரேரிக்கு அப்பால் உலகொன்றிருப்பது குறித்து எந்த அக்கறையும் இன்றிக் கிடந்த என்னை என்னைப் போன்றோரை, யுத்தம் தூக்கி ஒவ்வொரு ஊராகத் துரத்தியதென்பது, துயரும் வலியும் நிறைந்ததெனினும் அதுவே மற்றுமொரு வகையில் புதிய அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய நினைவுகளை எனக்குள் தந்தது என்பதையும் குறித்தாக வேண்டும். இல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா? முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா..? இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா..? ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..? 1997 இல் மண்டபம் முகாமில் குறிப்பிடத் தக்க காலம் இருந்த பிறகு, திருச்சி சென்று குடியேற விண்ணப்பித்திருந்தோம். ஆனாலும் அதற்கான விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள். அந்தக் காலத்தில்த் தான் இந்தியன் தாத்தாவின் வருகையினால் எல்லோரும் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்தியிருந்தார்கள் இந்தியன் படத்தில். ஆமாங்க படத்தில்த் தான்.திருச்சிக்கு செல்வதற்கு முன் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களில் ஓரளவு வெளிநாட்டு உறவகளின் பணபலம் உள்ளவர்களாலேயே அவர்கள் விரும்புகின்ற சிலவற்றைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தவாறான எந்த உதவியுமற்று சின்னச் சின்னக் கூலி வேலைகள் செய்தும், … [Read more...]