பெயரற்றது – சிறுகதை

இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. மூன்று நாட்களாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமென்றில்லை. ஒழுங்கான சாப்பாடு, குளிப்பு முழுக்கு, கக்கூசு என ஒன்றுமில்லை. ரவியண்ணனின் வீட்டின் முன் விறாந்தையில் பனங்கிழங்குகளை அடுக்கியமாதிரி படுத்திருந்த இருபது பேர்களில் கடந்த இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவனைக் கண்ணயரவே விடுவதில்லை என்று முடிவு பண்ணியிருக்கவேண்டும். “க்ர்.. புர்..” என்ற அவர்களின் குறட்டை ஒலிக்கு கவிழ்ந்து படுப்பதும், காதுகளைப்பொத்தியபடி படுப்பதுமென என்று இவனும் எல்லாத் தந்திரங்களையும் பாவித்துப்பார்த்தான். ம்கூம். நித்திரை வரவேயில்லை. போதாதற்கு தீபன் அவ்வப்போது தன் வலது காலைத்தூக்கி இவனின் தொடைக்கு மேலே போட்டு “அவ்..உவ்..” என்று புரியாத மொழியில் புசத்தியபடியிருந்தான். அப்படி அவன் காலைத் துாக்கிப் போடுகிற ஒவ்வொரு தடவையும் இவனுக்கு இடுப்பில் கிடக்கிற சாரம் கழன்று போய்விடுமோ என்று சீவன் போனது. “பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்குச் சீவன் போகிறது” என இதைத்தான் சொன்னார்களோ என்று நினைத்துக் கொண்டான். அடிக்கொரு தடவை இடுப்போடு சேர்த்து சாரத்தை இறுக்கி விட்டுக்கொண்டாலும், அது இளகியபடியிருப்பதாகவே உணர்விருந்தது. விறாந்தையோடு இணைந்து இரண்டு அறைகள் இருந்தன. உள்ளே பெண்களுக்கு ரவியண்ணன் இடமொதுக்கிக் கொடுத்திருந்தார். அவர்களில் கிருஷாந்தியையும் தமிழினியையும் இவனுக்கு ஏலவே தெரிந்திருந்தது. சரியான பயந்தாங்கொள்ளிகள். நேற்றும் பார்த்தான். இரவில் பாத்ரூம் போகும்போது துணைக்கு ஐந்தாறு பேரை அழைத்துச் சென்றார்கள். அத்தனை பேரும் ஒவ்வொருவரின் கையையும் பற்றிப் பிடித்தபடி விறாந்தையில் படுத்திருந்தோரின் கால்களுக்கிடையில் மெதுவாக நடந்து சென்றார்கள். அதனாலேயே ஒருபோதும் துாங்கக் கூடாதென்று இவன் நினைத்தான். சற்றே கண்ணயர்ந்தாலும், தீபனின் கால்பட்டு சாரம் இடுப்பினின்றும் நழுவி விட்டால் என்னாகும் என்ற நினைப்பு உதறலை உண்டுபண்ணியது. “பிறகு பப்ளிக் ஷோ தான். நாசமாப்போன நிலவு வேற, நேரே எறிக்குது.. நல்ல லைற்றிங்” இவனுக்கு சாரம் கட்டிப் பழக்கமிருக்கவில்லை. அதற்கெல்லாம் பதினெட்டு வயதாக வேண்டும் யாரும் சொல்லாமலேயே ஏனோ தனக்குள் தீர்மானித்திருந்தான். அரைக்காற்சட்டைதான் போடுவான். அல்லது ரன்னிங் … [Read more...]

சுதர்சினி (சிறுகதை) – தமிழினி

-மறைந்த தமிழினி அவர்கள்  2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை) மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம் விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ளே ஒருவரோடொருவர் முகத்தை முட்டிக்கொண்டு புளுங்கி அவியும் நெருக்கத்தில், அழுக்கு மனித மூச்சுக்களை மாறி மாறி சுவாசிப்பதைவிட இது எவ்வளவோ மேல். சிறைச் சாலையின் வெளிப்புறம் தார் ஊற்றப்பட்ட சிறிய உள்வீதி. சிறிய மலர்ச் செடிகள், கொடிகள், அவற்றை சுற்றி அழகுக்காக அடுக்கப்பட்ட கற்கள். மிகப்பழமையான பெரிய கட்டடங்களைக் கொண்ட இந்த சிறைச்சாலையின் அமுக்கமான சூழ்நிலையில், திரும்பும் திசைகளிலெல்லாம் ஏதேதோ இரகசியங்களும் புதிர்களும் நிறைந்திருப்பதுபோலவும், ஒரு பயங்கர சூனியக்காரியின் வெறி கொண்ட கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இனம் புரியாத கலக்கம் எப்பொழுதும் எனக்குள் படர்ந்து உறைந்திருந்தது. ஒருவிதமான பொறாமையோடும் குரூரத்தோடும் பசியோடும் ஒரு நிழலுருவம் போல அது அலைந்துகொண்டே திரிவது போன்ற பிரமை சதா என்னைப் பின்தொடர்ந்து வதைத்துக் கொண்டிருந்தது. எனக்கு ஆறுதல் தரும் தனிமையைக்கூட அதிக நேரம் அனுபவிக்க முடியாதபடி மனித முகங்களை மட்டுமல்ல வெறுமையைக்கூட விழி நிமிர்த்தி பார்க்க முடியாத இருண்மைக்குள் என் காலங்களை சிறை விழுங்கிக் கொண்டிருந்தது. அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண் டும் நின்றுகொண்டும், கைதிகளில் சிலர் ஏதாவது பேசிக்கொண்டும்  சிரித்துக்கொண்டும் யோசித்து அழுதுகொண்டும் இருக்கிறார்கள். எல்லாருக்கும் இரவுச்சோறு கொடுக்கும் வரிசை முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளே அடைக்கப்படுவதற்கான அழைப்பு இனி எக்கணத்திலும் வரலாம். அதை நினைத்தாலே மூச்சு இறுகுவது போல இருக்கிறது. கடவுளே இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கூப்பிட மாட்டார்களா என்ற வேண்டுதலோடு, … [Read more...]

ஒரு சொட்டுக் கண்ணீர்

02.12.2012 பனிகொட்டிய காலை தூரத்தில் எங்கேயோ ஆரம்பித்து  எதிர்த்திசையில் மெதுவாக நகர்ந்த இடிமுழக்கமும், இரைந்துகொண்டேயிருந்த மழைச்சத்தமும் உண்மையா அல்லது வெறுமனே பிரம்மையா என்று உள்ளுணர்வை ஆராய்ந்தபடி தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையில் கிறங்கிக் கிடந்தான் ரொக்கெற். பிரம்மைதான். இப்படியொரு சோனாவாரிப் பேய்மழை இங்கே பெய்யச் சாத்தியமில்லை. அவன் மழையின் ஓசையை திரும்பவும் நினைவுபடுத்தினான். நரம்புகளில் சில்லிட்டது. அறையின் ஹீற்றரைச் சற்று அதிகரித்துப் பஞ்சுப்பொதி போலான போர்வையால் மூடிக்கொண்டால் கதகதப்பாயிருக்கும். எழும்பிச்செல்லத்தான்அலுப்பாயிருந்தது. விழிப்பு வந்துவிட்டதால் இனி அலார்ம் கிணுகிணுக்கும். உடலை முறுக்கி வீசியதுபோல நேற்றிரவு கட்டிலில் விழுந்தபோது ஒருமணி. நேற்றென்றில்லை, அது தினப்படியான வழமைதான். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு முடியும் வேலையொன்றை இரண்டாவது வேலையாக ரொக்கெற் செய்தான். அது மரக்கறிகளை வெட்டிப் பொதிசெய்யும் தொழிச்சாலை. பகல் வேலைநேரம் முடிந்து தொழிலாளர்கள் திரும்பிய பிறகு அவனது வேலை ஆரம்பித்தது. தொழிற்சாலையின் இயந்திரங்களை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவன் கழுவுவான். உள் சக்கரப் பற்களில் படிந்திருக்கும் மரக்கறிச் சக்கைகளை வழித்தெடுத்து பளிச் என்று துடைப்பான். “இரவில் தண்ணியடிக்கின்ற வேலைதான்”என்று பகிடிக்கு சொன்னாலும் தடித்த தண்ணீர்க் குழாய்களை இழுத்துத்திரிவதும், உடலைக் குறுக்கி இயந்திரங்களுக்குள் நுழைவதும், நின்றுகொண்டே வேலை செய்வதும் ரொக்கெற்றை வருத்தியெடுத்தன. வேலையிடத்திலிருந்து இரண்டு நிமிட நடைதூரத்தில் பஸ் தரிப்பிடமிருந்தது. அன்றைய நாளின் கடைசி பஸ்ஸின் சாரதி தலையே போனாலும் கூட பிசகாமல் பன்னிரண்டு பத்திற்கு அதனைக் கடப்பான். ஏறிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்துவிடலாம். தவறவிட்ட நாட்களில் நடந்துதான் வரவேண்டும். அம்மாதிரியான நாட்களில் ஸ்நேயும் கொட்டினால், அதைவிடுத்தொரு அரியண்டமில்லை. மிருதுவான வெள்ளை நிறத்தேங்காய்த் துருவல்கள் காற்றில் கீழிறங்குவது போலான ஸ்நேயை அப்படியானதொரு இரவிற்தான் ரொக்கெற் முதன்முதலாக அனுபவித்தான். அதுவொரு நரக இரவு. மதியத்திலிருந்தே ஸ்நே கொட்டிக்கொண்டிருந்தது கண்ணாடிச் சாளரங்களின் வெளியே தெரிந்தது. வேலையை முடித்து வெளியேறியபோது பஸ் போயிருந்தது. நடைபாதை முழுதும் வெண்ணிறக் களியைக் குழைத்து … [Read more...]

சின்ராசு மாமா

சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் முன் தள்ளியவாறு இருக்க மணிக்கொரு தடவை அவர் சிகரெட்டை ஊதித்தள்ளுகிறார் என்று அர்த்தம். அப்போது இடுங்கிய கண்களில் மகிழ்ச்சி மேவியிருக்க இரண்டொரு தடவை உடலைக் குலுக்கி மாமா சிரிப்பார். கூடவே கொஞ்சம் கள் வெறியும் சேர்ந்திருந்தால் “மருமோன்” என்று இரண்டொருநாள் மழிக்காத தாடி சேர்ந்திருக்கும் கன்னங்களால் என் கன்னத்தில் உரசி கைகளால் உச்சி வருடிக் கொடுப்பார். கடற்கரையெங்கும் நிறைந்து கிடக்கிற இராவணன் மீசையாட்டம் அவரது வெண்ணிறக் கம்பித் தாடி மயிர்கள் என்னைக் குத்தும். அப்போது கள்ளின் புளித்த வாசமும் சிகரெட்டா புகையிலயா பீடியா என உய்த்தறிய முடியா ஒரு புழுத்த நாற்றமும் அவரிடமிருந்து வீசிக்கொண்டிருக்கும். கடலுக்குப் போகாத நாட்களில் கரையில் நெஞ்சளவு தண்ணீரில் ஒட்டிக் கூடு கவிழ்த்து சமையலுக்கும் மீன்கள் கிடைக்காத நாட்களாயிருந்தாலும் சரி, இரவில் கரை மறையப் போய் வலை படுத்து நிலவு வெளிக்க முதல் இழுக்கிற வலையில் சீலாவும் ஒட்டியும் திரளியுமாய் வலையின் கண்களுக்குள் சிக்கிக் கிடக்க கரையைத் தொடுகிற படகில் இருந்து ஓர் இராஜகுமாரனாய் அவர் துள்ளிக் குதித்து நடக்கிற நாட்களாயிருந்தாலும் சரி சின்ராசு மாமா கள்ளில் இருந்து இன்னொரு உயர் வஸ்துவுக்கு மாறினார் இல்லை. வெயில் கொழுத்துகிற மத்தியான வேளைகளில் நேரே தவறணையிலிருந்து போத்தல் நிறைந்த கள்ளோடு வருவார். பனையோலையைக் கோலி, பிளா செய்து கள்ளை வார்த்து பதுங்கு குழிக்கு வெட்டி அடுக்கிய பிறகு எஞ்சியிருந்த பனங்குற்றியொன்றில் இரண்டு காற்பாதங்கள் மட்டுமே தொட்டிருக்க குந்திக் கொள்வார். கள்ளில் மிதக்கிற பனம் பாளைத் துருவல்களை கையினால் வழித்து ஒதுக்கியபடி பொச்சடித்துக் குடிக்கத் தொடங்கும் போது மறு கை, மாமி சுட்டு வைத்த சற்றே பெரிய மீனில் லாவகமாக முள்விலக்கி சதையை வழித்து அருகில் குவித்தபடியிருக்கும். அவ்வப்போது வாய்க்குள் அவற்றை அதக்கிக் கொள்வார். சின்ராசு மாமாவை அப்படிக் கோலத்தில் பார்க்கிற போது “இந்த மனுசன் … [Read more...]