கயல்விழி – தமிழரசி – சந்திரிகா

1995ம் வருடம், யூன், 5ம் நாள் சூரிச் த்ரிம்லி ஆஸ்பத்திரியில் ஒரு முன்னிரவில், திரு திருமதி நவரட்ணம் அவர்களின் மூத்த புதல்வியாக திருநிறைச் செல்வி (அப்படித்தான் அவளது பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழில் உள்ளது) தமிழரசி பிறந்தாள். அவளை, வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த இந்தக் கோடை காலத்தில் , சூரிச் நகரின் சனநெரிசல் மிக்க இடத்திலமைந்த ஒரு மெக்சிகன் உணவகத்தில் நான் சந்தித்தபோது இந்தக் கதை ஆரம்பிக்கின்றது. அப்போது காதுகளுக்குப் பழக்கமான ஒரு துள்ளிசை, பழக்கமற்ற ஒரு மொழியில் என்னைச் சூழ்ந்திருந்தது. தமிழரசி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த, பளிச் என்ற க்ளாஸை மேசையில் வைத்தாள். அப்போது எஞ்சிய தண்ணீரின் ஊடாக அவளது மார்பின் ஒரு பகுதி அகன்று, தோற்ற மயக்கம் காட்டியது. அப்போது "அண்ணா, இது டன்னா பஓலாவின் இசை, (youtube இல் Danna Paola என்று தேடவும்) கேட்டிருக்கிறீர்களா.." என்று கேட்டாள் தமிழரசி. நான் சட்டென்று தலையைத் திருப்பி வாசலை நோக்கினேன். இரண்டு பேர் கைகளைக் கோர்த்தபடி வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அவர்களை முந்திக்கொண்டு நான் ஓடிவிடவேண்டும்போல ஓர் அந்தரத்தை உணர்ந்தேன். அதை மறைத்தபடி  திரும்பிச் சிரித்தேன். "அண்மைக்காலங்களில் விரும்பிப் பார்ப்பது கீதியா வர்மனின் இசையைத்தான். உங்களுக்கு அவரைத் தெரியுமா” (Youtube இல் Geethiyaa Varman எனத் தேடவும்) தமிழரசி மௌனமாயிருந்தாள். “அவரும் உங்களைப் போலத்தான். ஈழத்தின் இரண்டாம் தலைமுறைப் பெண். இப்பொழுது கனடாவில் இருக்கிறார்.” என்றேன் நான்.  தமிழரசி சலனமில்லாமல் மெனு அட்டையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு தலையை நிமிர்த்தி “சொல்லுங்கள், நான் என்ன சொல்ல வேண்டும்..” என்றாள். சட்டென்று எப்படி ஆரம்பிப்பதென்று எனக்கு உடனடியாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு கேள்விகளாகக் கேட்டு குறித்துக்கொள்ளலாமா, அல்லது ஓர் உரையாடலைத் தொடங்கி ஒலிப்பதிவு செய்துகொள்ளலாமா என்று சிந்திக்கலானேன். மேசையில் விரிந்துகிடந்த டயறியில் குறித்துக்கொண்டுவந்த கேள்விகளில், மூன்றாவதை தமிழரசி அறிய முதல் அழித்துவிட மனம் அப்போது அவாப்பட்டது. 3. திருமணத்திற்கு முன்னான பாலுறவு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். 0             0             0 ஆதிரை (Tamil classic) வெளியான பிறகு எனது அடுத்த நாவலை புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினரைப் பற்றி எழுதவுள்ளேன் … [Read more...]

புத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்

05 ஜூன் 1991 கரியிருட்டு. தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை  வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டுநரம்பை நசித்துக்கொண்டிருந்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க, முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். குண்டும் குழியுமாய் சிதிலமான தரையில் கிளை பிரியும் தாரையென மூத்திரம் மற்றுமொரு பாதையில் என்னைத் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். விரல்களில் பிடுங்கிய நகக் காயங்களிலிருந்து நோவு கிளர்ந்தது. நீரில் மெதுவாக முங்குவதைப்போல வியர்வையும் மூத்திரமும் கலந்த நாற்றத்தில் புலன்கள் இயல்படையலாயின. இருளை அளைந்தேன். இடது கண் ஒரு கொப்புளம் போல வீங்கிக்கிடந்தது. விழிமடலைத் திறக்கும்போது  பிளேற்றால் தோலை வெட்டிப்பிளப்பதைப்போன்ற வலி. ஒன்றரைப் பார்வையில்  கம்பிகள் கீலங்கீலமாகப் புலப்பட்டன. புகையைப்போல குளிர் பரவிற்று. வெளிச்சத்தின் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. தோலுரிந்ததுபோல சுவர் பூச்சுகள் கழன்று தொங்கும் பழங்காலத்துக் கட்டடத்தில் தனியான பதினைந்து இரும்புக்கூடுகளில் ஒன்றிலிருந்தேன். உடனிருந்த இரண்டு தமிழர்களை ‘உண்மையிலேயே’ தெரியவில்லை. அவர்களோடு பேசியதுமில்லை. ஆனால் உபாலி என்னோடு பேசுவான். உயிர் பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்த வெறும் கூடாக என்னைக் கொண்டுவந்து கொட்டிய அந்த இரவு விடிந்தபோது, பக்கத்துக் கூண்டிலிருந்த உபாலி “மச்சான், நீ புலி தானே, அப்படியானால் உனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மறைக்காமல் சொல்லு.... சந்தையில் புதிதாக என்ன ஆயுதம் வந்திருக்கிறது....” என்று சிங்களத்தில் கேட்டான். நான் உடற்பாகங்களை அசைக்கையில் பிரியாதிருந்த வலியைச் சகித்துக்கொண்டு எழுந்து நின்றபோது, “உனக்குத் துப்பாக்கிகளைக் கையாளத் தெரியுமல்லவா.... நீ என்னோடு சேர்ந்து விடு” என்று கட்டளைத் தொனியில் சொன்னான். உபாலியின் அதிகாரத்திற்குப் பொலிஸார் பயந்து நடுங்கினார்கள். காலையில் கக்கூசிற்கும், முகம் அலம்பவும் கூண்டுகளைத் திறக்கச் சற்றுத் தாமதமானாலும் உபாலி கெட்ட தூஷண வார்த்தைகளால் அவர்களைத் திட்டுவான். பவ்வியமாகத் திறந்து விட இடுப்பில் வழியும் சாரத்தை, ஆடும் விதைகள் தெரிய உயர்த்தியபடி கக்கூஸிற்குள் நுழைகையிலும்  தூஷணத்தைப் பொழிவான். கூண்டுகளிலிருந்து … [Read more...]

மோட்டார் சைக்கிள் குரூப்

முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்திற்கு சற்றுத்தள்ளி, தெருவிலிருந்து அடர் காட்டுக்குள், சமாந்தரமான இரு கோடுகளாய் இறங்கும் சிவப்பு மண் தெரிகிற பாதையில் சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகரங்களில் கரும் புகை அப்பிப் படர்ந்திருந்த குசினியையும், கானகத்தின் இருள் மெதுவாய் கவிகிற இடத்தில் பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட் உண்டு) முகாமையும் தாண்டினால், திடீரென வழியின் அருகாக இணையும் ஒரு நீரோடை மீண்டும் விலகுகிற இடத்தில் கிடுகு ஓலையால் கூரை வேயப்பட்ட நான்கு கூடாரங்களில், சற்றே பெரிய கூடாரமொன்றிலிருந்து இவன் யோசித்துக் கொண்டிருந்தான். “ச்சே.. மெடிக்ஸ்ஸில் நின்ற என்னைத் தூக்கி சிவராசண்ணை அநியாயமா மெஸ்ஸில் போட்டுட்டாரே ” இப்பொழுதுதான் மெஸ்ஸில் வேலைகளை முடித்து வந்தான். சோற்றுப்பானையை கிணற்றடியில் உருட்டி உருட்டித் தேய்த்துக் கழுவியபோது கன்னத்திலும் மூக்கிலும் கைகளால் சொறிந்ததால் உண்டான கறுப்புக் கோடுகள் இவனை வேவுப்புலி ஆக்கியிருந்தன. முகம் அலம்பிவிட்டு வந்திருக்கலாம் எனத் தோன்றிய நினைப்பினை “ஆர் பாக்கப் போகினம்..” என்று அழித்தான். நேற்றிரவு களவாக ஓடிப்போன இருவரைத் தவிர்த்து இன்றைய காலை எண்ணிக்கையில் நூற்று நாற்பத்து இரண்டு பேர் முகாமில் இருந்தார்கள். நான்கு பேருக்குக் காய்ச்சல், சாப்பிடவில்லை. அவர்களை விட்டுப்பார்த்தால் நுாற்று முப்பத்து எட்டு சாப்பாடுகள். இந்த முகாமிற்கும் அருகில் பிள்ளைகளின் முகாமிற்கும் தினமும் குசினியிலிருந்து ஒரு மாட்டு வண்டியில் சப்ளை இருந்தது. காலையில் பாண்தான் நித்திய நிவேதனம். இண்டு மூன்று உரப் பைகளில் கொண்டுவருவார்கள். தொட்டுக்கொள்ள பருப்புக் கறி. மதியச்சாப்பாட்டுக்கு எப்படியும் மூன்று மணி தாண்டிவிடும். அடுப்பிலிருந்த பானையோடு அரிசிச் சோற்றினையும் பெரிய அண்டா ஒன்றில் கொதிக்கிற சோயாமீற் கறியும் வரும். பெடியங்களிடத்தில், சைவ இறைச்சியென்றே அது அழைக்கப்பட்டது. “சைவ இறைச்சியாடா..” என்று சலித்துக் கொள்வோரும் உண்டு. அவ்வப்போது மாட்டு இறைச்சியும் அமையும். குசினியிலிருந்து சாப்பாடு வருவதோடு மிகுதிப்பொறுப்புக்கள் மெஸ்ஸில் நிற்பவர்களிடம் கையளிக்கப்பட்டுவிடும். உணவினைப் பங்கிடுவது, விநியோகிப்பது, சுத்தம் செய்வது, சட்டிபானை கழுவி அடுக்குவதெல்லாம் … [Read more...]

சின்ராசு மாமா

சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் முன் தள்ளியவாறு இருக்க மணிக்கொரு தடவை அவர் சிகரெட்டை ஊதித்தள்ளுகிறார் என்று அர்த்தம். அப்போது இடுங்கிய கண்களில் மகிழ்ச்சி மேவியிருக்க இரண்டொரு தடவை உடலைக் குலுக்கி மாமா சிரிப்பார். கூடவே கொஞ்சம் கள் வெறியும் சேர்ந்திருந்தால் “மருமோன்” என்று இரண்டொருநாள் மழிக்காத தாடி சேர்ந்திருக்கும் கன்னங்களால் என் கன்னத்தில் உரசி கைகளால் உச்சி வருடிக் கொடுப்பார். கடற்கரையெங்கும் நிறைந்து கிடக்கிற இராவணன் மீசையாட்டம் அவரது வெண்ணிறக் கம்பித் தாடி மயிர்கள் என்னைக் குத்தும். அப்போது கள்ளின் புளித்த வாசமும் சிகரெட்டா புகையிலயா பீடியா என உய்த்தறிய முடியா ஒரு புழுத்த நாற்றமும் அவரிடமிருந்து வீசிக்கொண்டிருக்கும். கடலுக்குப் போகாத நாட்களில் கரையில் நெஞ்சளவு தண்ணீரில் ஒட்டிக் கூடு கவிழ்த்து சமையலுக்கும் மீன்கள் கிடைக்காத நாட்களாயிருந்தாலும் சரி, இரவில் கரை மறையப் போய் வலை படுத்து நிலவு வெளிக்க முதல் இழுக்கிற வலையில் சீலாவும் ஒட்டியும் திரளியுமாய் வலையின் கண்களுக்குள் சிக்கிக் கிடக்க கரையைத் தொடுகிற படகில் இருந்து ஓர் இராஜகுமாரனாய் அவர் துள்ளிக் குதித்து நடக்கிற நாட்களாயிருந்தாலும் சரி சின்ராசு மாமா கள்ளில் இருந்து இன்னொரு உயர் வஸ்துவுக்கு மாறினார் இல்லை. வெயில் கொழுத்துகிற மத்தியான வேளைகளில் நேரே தவறணையிலிருந்து போத்தல் நிறைந்த கள்ளோடு வருவார். பனையோலையைக் கோலி, பிளா செய்து கள்ளை வார்த்து பதுங்கு குழிக்கு வெட்டி அடுக்கிய பிறகு எஞ்சியிருந்த பனங்குற்றியொன்றில் இரண்டு காற்பாதங்கள் மட்டுமே தொட்டிருக்க குந்திக் கொள்வார். கள்ளில் மிதக்கிற பனம் பாளைத் துருவல்களை கையினால் வழித்து ஒதுக்கியபடி பொச்சடித்துக் குடிக்கத் தொடங்கும் போது மறு கை, மாமி சுட்டு வைத்த சற்றே பெரிய மீனில் லாவகமாக முள்விலக்கி சதையை வழித்து அருகில் குவித்தபடியிருக்கும். அவ்வப்போது வாய்க்குள் அவற்றை அதக்கிக் கொள்வார். சின்ராசு மாமாவை அப்படிக் கோலத்தில் பார்க்கிற போது “இந்த மனுசன் … [Read more...]