ஓகே, ரெடி.. இப்பொழுது காலில் விழலாம்

பத்து வயதுச் சிறுவனுக்கு குட்டிப் பிரபாகரன் என்று பட்டம் சூட்டியிருக்கிறார்கள். நான் முல்லைத்தீவில் பிறந்தவன், அதனால் தாய் தந்தையர் கால்களைத் தவிர, மற்றவர் (இந்த வார்த்தைக்குப் பதில் ஒவ்வொருவரும் அந்நியர், எதிரிகள் என்ற வார்த்தைகளை தம்பாட்டிற்குச் சேர்த்திருக்கிறார்கள்.) கால்களில் விழமாட்டேன் என சிறுவன் பேட்டியளித்ததாக வேறு சொல்கிறார்கள். சிறுவன் கால்களில் விழப் "பஞ்சிப்படும்" வீடியோவை நான் பார்த்தேன். நமது செய்தியாளர்களும் அந்த வீடியோவையே தமது செய்தி மூலங்களாகக் கொண்டிருப்பர் என்றுதான் நினைக்கிறேன். அந்த ஒளிப்பதில், அமைச்சரிடம் "வணங்கி ஆசிபெறும்" படி இருவர் அவனை ஆயத்தப்படுத்துகின்றனர். அவன் நெளிந்து தயங்கி விலகிச் செல்கின்றான். அவ்வளவும்தான். அவன் ஒரு தமிழனாகவும் மேலதிகமாக முல்லைத்தீவில் பிறந்தவனாகவும் மிக முக்கியமாக வணங்க வேண்டிய நபர் சிங்களவராகவும் இருந்துவிட - மேசைச் செய்தியாளர்கள் திரைக்கதை கதை வசனம் என புனைந்து தள்ளி விட்டார்கள். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை காலில் விழுந்து வணங்குவது ஒரு பண்பாடாக அவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கவில்லை. தாய் தந்தையரைவணங்குவது கூட பரவலாக நம்மிடம் வழக்கத்தில் இல்லை. சிங்கள சமூகத்தில் "நல்லநாள் பெரியநாட்களில்" ஒரு இயல்பு வழமையாக பெரியோர்களின் கால்களில் விழுந்து வணங்கும் முறைமை உள்ளது. குறிப்பாக சிங்கள தமிழ் சித்திரைப்புத்தாண்டு தொடர்பாக, கல்விப்புத்தகப் பாடங்களில் அவ்வாறு தாய் தந்தையரை விழுந்து வணங்கும் படங்களை சிறுவயதுகளில் நான் பார்த்திருக்கின்றேன். அந்தச் சூழல்கள் என்னோடு ஒட்டாமல் தள்ளியே நின்றன. இன்னும் கோயில்களில் "சுற்றமும் முற்றமும் பார்த்துநிற்க" நெடுஞ்சாண் கிடையாக விழுவதில் சிறு வயதுகளில் வெட்கமாகவும் உணர்ந்திருக்கிறேன். அப்படியொரு முற்றிலும் புதிய முறைமையில், நாலுபேர் பார்த்துநிற்க விழுந்து வணங்குகின்ற வெட்கத்தில் சிறுவன் "பம்ம" அவனை வெற்றி வீரனாக பேஸ்புக்கிலும் இணையச் செய்தித்தளங்களிலும், விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர். நாங்கள் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்குகின்ற சந்தர்ப்பங்களை யோசித்துப் பார்க்கிறேன். சாமத்திய வீட்டிலும் திருமணச் சடங்கிலும் அப்படியொரு சம்பிரதாயம் இருக்கிறது. அது கூட வீடியோ எடுப்பவர் "ஓகே.. ரெடி .. இப்ப விழுங்கோ" என்ற பிறகுதான்.. 0 0 0 இதுவும் காலில் விழுகிற … [Read more...]

பரதேசி நாய்

நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார் (Tamilien) ஜெர்மன் மொழியில் தமிலியன் என்றால் தமிழர்கள். தமிலிஸ் என்றால் தமிழ். சோமாலியாக்காரருக்கு சுவிற்சர்லாந்து பிடிக்கவேயில்லை என்றார். சுவிற்சர்லாந்து வெள்ளையின மக்கள் தங்களை மனிதர்களாகவே நினைப்பதில்லையென்றவர் ஒரு சிறு புன்னகை கூட தங்களை நோக்கி அவர்கள் தருவதில்லை என்றார். புறக்கணிப்பில் வலி அவரது பேச்சிலிருந்தது. இங்கே எதிர்ப்படும் மனிதருக்கு அது எவராயிருந்தாலும் வணக்கம் சொல்லும் ஒரு மரபிருக்கிறது. grüezi என்கிற அந்த வார்த்தையை நம்மாட்கள் க்றூட்சி என்றும் கிறைச்சி என்றும் விட்டால் இறைச்சி என்றும் பயன்படுத்துவோம். இங்கே கிராமங்கள் வெறிச்சோடிப்போயிருக்கும் எப்போதும். வீதியில் சக மனிதரை எப்போதாவதுதான் காணமுடியும். ஆகவே அப்போது வணக்கம் வைப்பது இவர்களுக்குக் கட்டுப்படியாகிறது. ஆனால் நமது நாட்டில் சூழலில்.. வீட்டிலிருந்து புறப்பட்டால் வணக்கம் சொல்லியே வாயுளைந்து விடும். சோமாலியர் சொன்னார் - ஆனால் தமிழர்கள் அப்பிடியல்ல. அவர்கள் சிரிக்கிறார்கள், நெருங்கிப் பேசுகிறார்கள். அவர்கள் அற்புதமானவர்கள்- வெளியே ஸ்நோ கொட்டிக்கொண்டிருந்தது. 0 0 0 இரண்டொரு வாரங்களுக்கு முன்பு, பஸ்ஸில் சீற் இருந்தபோதும் அடுத்த இறக்கங்களில் இறங்குவதற்காக வாயிலில் நின்றுகொண்டே பயணித்தேன். குளிரான நாள் அன்று. தலை காதுகளை இறுக்கி மூடி மப்ளர் அணிந்திருந்தேன். ஒரு நிறுத்தமொன்றில் இரண்டு மூன்று தமிழர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களில் ஒருவர் என்னை கண்ணுக்கு நேராகவே பார்த்தார். பார்த்தபடியே சொன்னார். "பரதேசி நாய் - சீற் இருக்கத்தக்கவா நிண்டு கொண்டு வருகுது". நானும் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டேன். முன்னைப்பின்னை அவரோடு எங்காவது சண்டைபிடிச்சிருக்கிறனா என்றெல்லாம் யோசித்தேன். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து எனக்கொரு போன் வந்தது. வீட்டிலிருந்து பேசினார்கள். பேசிவிட்டு வைத்துவிட்டேன். இப்போதும் அந்தத் தமிழர் என்னை நேராகப் பார்த்தார். திரும்பவும் … [Read more...]

அந்தக் கண்களும் சில காதல்களும்

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி முற்றத்தின் மத்தியில் பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம் எப்போதாவது எனைச் சந்தித்து சில மொழிகள் பேசும் இரு விழிகள் 0 0 0 சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல் பயணித்திருக்கும் நாயகியின் விழிகளும் அதன் மொழிகளும்தான். படம் நிகழ்வதென்னவோ எண்பதுகள் எனினும் அந்தக் கண்கள் மட்டும் என் கனவுகளில் தொன்னூறுகளை இழுத்து வந்து நிறைத்து விடுகின்றன. சட்டென விழிப்பு வருகையில் ஏமாற்றமுறுகின்றேன் நான். மீளவும் கனவுக்குள் நுழைதல் குறித்து அவாவுகிறது மனம். சட்டெனச் சந்தித்து விலகும் விழிகளின் மொழிகளில் ஒருபோதும் அச்சத்தையும் நாணத்தையும் மொழிபெயர்த்ததில்லை நான். ஆகக் குறைந்தது அவளது விழிகளில்.. முத்தங்களில் பரீச்சயம் அற்ற அந்தப் பதின்ம வயதுகளில் சட் சட் என உடலில் மின்சார அதிர்வுகளை நாட்தவறாது பார்வைகளால் மட்டுமே பரிசளித்துக் கொண்டிருந்தாள் அவள். எதிர்ப் பாலரிடம் தோன்றும் எந்த அதிர்வுகளும் உடல் இச்சையின் பிம்பங்கள் என்பதை அப்போதெல்லாம் நான் அறிந்து வைத்திருக்கவில்லை. "உனக்கு என்னை விடச்சிறந்த எவராவது கிடைக்கலாம். ஆனால் எனக்கு உன்னைத்தவிர இனியொருத்தி இல்லை" என ஒன்றிரண்டு வருடத்தில் நாலைந்து தடவைகளுக்கு மேல் சொல்கிற விளையாட்டின் முதல் படி அது. பார்த்தால் சொல்லுடா என்பேன் நான். பக்கத்திலிருந்தவன் ஒருபோதும் என்னை ஏமாற்றியது கிடையாது. பாக்கிறாளடா பாக்கிறாள் என்று அவன் காதுகளிடையே அலறும் பொழுதுகளில் சடாரெனத் திரும்பி அவள் விழிகளை களவு செய்து மொழி பெயர்க்க முயல்வதுண்டு. பென்சில் சீவும் சிறுவட்ட கட்டர் (cutter) ஒன்றின் பின்னிருக்கும் கண்ணாடியூடாக ஒருதடவை அவள் என்னை அவதானித்ததறிந்து மிதந்தேன். நிறையப் பேசியும் எழுதியும் புரிந்து கொள்ள முடியாத இந்நாட்களைப் போல் அல்லாது அவளது விழிகளில் இருந்து விளங்கிக் கொண்டது அதிகம். ஏன் தாமதம் என்றதிலிருந்து இனி எப்போ சந்திக்கலாம் என்பது வரை அவள் ஒரு வார்த்தையும் பேசியதில்லை. ஆனால் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றிற்கான பதில்கள் என் கண்களில் இருந்ததா என்பதை அவள்தான் சொல்ல வேண்டும். பின்னாளில் பேசத் தொடங்கிய பிறகும் அவளது வார்த்தைகளை விடவும் … [Read more...]

நல்லவேளையாக அவர் கையில் ஆயுதங்கள் இல்லை

மாவீரர் தினம் முடிந்துவிட்டது. நானறிந்தவரை லண்டனிலும் கனடாவிலும் விசில் பறக்க நடந்ததாகக் கேள்வி. மற்றைய நாடுகளிலும் அவ்வாறே நடந்திருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரேனும் வந்து அனல்பறக்கப் பேச அதற்கு விசிலடித்து ஓய்வதோடு நமது தமிழ்த்தேசிய எழுச்சி முடிவுக்கு வருகிறதென நினைக்கிறேன். இம்முறை நெடுமாறன் (ஒஸ்ரேலிய மாவீரர் தினம்) திருமா (டென்மார்க் மாவீரர் தினம்) வைகோ (லண்டன் மாவீரர் தினம்) என யாருக்கும் அந்தந்த நாடுகளுக்குள் நுழைவனுமதி கொடுக்கவில்லையாம். நல்லது. சுவிஸில் நிகழ்ந்த நிகழ்வில் தலைவர் பிரபாகரனது படத்தை மாவீரர் வரிசையில் செருக யாரோ முயற்சிப்பதாகவும் அதைத் தடுப்பதற்கெனவும் பலரும் பரபரப்பாக இருந்தார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவர் பிரபாவின் மாவீரர் தின உரையை இணைக்க முடியவில்லையென அறிவித்த போது அனைவரும் கை தட்டினார்கள். இவற்றுக்கு அப்பால் தங்கள் பிள்ளைகளின் சகோதரங்களின் படங்களின் முன்னால் கண்ணீரோடு கதறலோடும் அமர்ந்திருந்தனர் பெற்றோரும் மற்றவர்களும்.. சுவிஸ் மாவீரர் நாளில் அண்மைக்காலம் வரை களத்தில் போராளிகளாயிருந்த பலரைப் பார்க்கமுடிந்தது. பலரும் பல்வேறு வழிகளில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பலர் இன்னமும் சுவஸில் தஞ்சம் கோருவோருக்கு அளிக்கப்படும் முகாம்களிலேயே தங்கியிருக்கின்றனர். அவர்கள் போராளிகளாயிருந்தார்கள் என அறிந்தவர் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் சாதாரணமாய் வந்தார்கள் மண்டப வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்தார்கள். முடிந்த பிறகும் அவ்வாறே ஒரு எடுபிடியாய் நின்றார்கள். பிறகு போனார்கள். விடுதலைப்புலிகளின் மட்டு அம்பாறை அரசியல் பிரிவு தலைவர் தயாமோகன் அண்மையில் சுவிஸ் வந்து சேர்ந்திருக்கிறார். அவர் முன்னாளா அல்லது இந்நாளும் இருக்கிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அவருக்கு கூட அது தெரியுமா எனத் தெரியவில்லை. இதையெல்லாம் இப்போது யார் தீர்மானிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எனக்கென்னவோ வருடா வருடம் மாவீரர் உரை தயாரிப்பதைத் தவிர இப்போதைக்கு விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகத்திற்கு ?? செய்வதற்கு என்ன இருக்கிறது என யோசிக்கத் தோன்றுகிறது. என்னவோ செய்யட்டும்! இறுக்கமான கட்டுக்கோப்பில் திகழ்ந்த புலிகள் இயக்கத்திற்கு இந்தக் கதி நேர்ந்திருக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. தலைவர் பிரபாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடைசிக் காலங்களில் கலைத்திருந்தால் … [Read more...]