ஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி

மனிதன் விலங்குதான். தீ மூட்டியதிலிருந்து, சிந்தித்துச் சிந்தித்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக எண்ணி எண்ணித் துணிந்து, இணையத்தால் உலகளந்த பின்னும் அவன் விலங்குதான். அவனுக் கான வசதிகள் மேம்பட்டன, அவ்வளவுதான். அறிவு என்பதோ, பருப்பொருட்களைப் பகுத்து அறிந்து, ஆக்கிப் பயன் கொண்டது மட்டும்தான். அவன் தன்னை அறிவதில்லை. தற்காத்து, தற்பேணி, தற்காமுற்று தான் தனது என அலைக்கழிகிறான். அவன்தான் குடும்பம், குழு, கூட்டம், சாதி, இனம், அரசு, நாடு என்று அலை விரியும் வட்டங்களில் கூடிக் களித்தும் முரண்பட்டும் போரிட்டும் அழிகிறான்; தொடர்கிறான். எங்கும் வனநீதி ஒன்றுதான். அவன் வளர்த்த மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆன்மிகம், ஞானம் எதுவும் குருதி கொட்டும்போது துணை நிற்பதில்லை. ஆள்கிற நீதிநெறிகளும், நிலைபெற்ற விழுமியங்களும், மானுடப் பேரறமும் அவனைக் காப்பதில்லை. வாழ நேர்கிற நிலப் பரப்பின், கற்பிதங் களின் சூழ்நிலைக் கைதி அவன். அவனே தெளிந்து தேர்ந்தாலும், பாதை அடைபடும் வேலிகளால். முரண் பகை வன்மம் வெறி போர் அழிவு. பின்னும் பேரியற்கை தன்போக்கில் இயல்கிறது. மனிதன் சிறுத்துப் போகிறான் மற்றொரு விலங்காக.

oozhi_copyமனிதகுலம் பேரளவில் மாண்டது இயற்கைப் பேரிடர்களால் அல்ல; போர்களால் தான். பெரும் புயலில் சிக்கிச் சிதைவுறும் பயிர்களாய்ப் பொதுமக்கள். காப்பாற்றுமாறு கெஞ்சிக் கதறி முறையிட்ட அவர்களது கடவுளே கைவிடும் கணத்தில் அவர்களுக்கு முன், போருக்கான காரணிகள் எதுவாயினும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. போரில் அடிபட்டு மரணிக்கும் குழந்தையை மடியில் கிடத்திக் கதறும் அன்னைக்கு லட்சியம், புரட்சி, விடுதலை என்ற வெற்றுச்சொற்கள் எதுவும் காதில் ஏறாது. அந்தத் தாய்களால் ஆனதுதான் சமூகம். அவள் ஆற்றாது அழுத கண்ணீர் அரசியல் பிழைத்தார்க்குக் கூற்றாகுமா?

மஞ்சூரியாவில் ஜப்பான் நிகழ்த்திய கொடுமைகளுக்குத் தண்டனை விதித்த வெள்ளைக்கார நீதிதேவன், தான் அணுகுண்டு வீசியதை மறந்து போவான். மஞ்சூரிய ஹான்கள் அதே கொடுமையைத் திபெத்தியர்களுக்கு இழைப்பார்கள். ஐரோப்பிய ‘அறிவாளிக் குழு’க்களின் திபெத்திற்கான விடுதலை முழக்கம், அரசியல் திசைமாறி வீசும்போது, அக்காற்றில் கரைந்து காணாமல் போகும். ஜப்பானியர் ஆக்கிரமித்து லட்சக்கணக்கில் கொன்று குவித்தால், சீனர்கள் தங்களுக்குள்ளே கோடிக்கணக்கில் களை யெடுப்பார்கள். அதற்கும் தத்துவப் பெயர் – ‘கலாச்சாரப் புரட்சி’. புரட்சிப் பயிரின் அறுவடை முடிந்தபின்னர்தான் களை எடுத்த கணக்கு வழக்கையே உலகம் அறியும்.

பயன் கருதி மனிதன் வகுத்ததுதான் பயிர், களை என்ற பாகுபாடு. வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
அறிக! பூமிக்குக் களை என்று எதுவும் இல்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தியானித்த ஞான மரபு, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுக ஆற்றுப்படுத்திய பண்பாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கருதிய இனம் ஈராயிரம் ஆண்டுகளாக என்னவாயிற்று? நிலத்தையும் பொழுதை யும் வாழ்க்கையையும் இணைத்தே இலக்கணம் வகுத்த ஒரே இனம், உலகக் கவிதைகளில் உன்னதத்தை எட்டிய ஒரே மொழி காலம் எனும் பெருவெள்ளத்தில் என்னவாயிற்று? அகமுரண் > மோதல்கள். புறப்பகை > போர்கள். அரசு > யுத்தங்கள். பேரரசு > பெருமதங்கள். பக்தி > மயக்குறு மாக்கள். மாற்றார் வல்லமை > வேற்றின ஆதிக்கம். அடிமை வாழ்வு > ஏக இந்தியா. சக்கரவர்த்தி வம்சம் > குறுநில மன்னர்கள். கொள்ளைக் கூட்டம் > ஓட்டுக்குக் கையூட்டு.
எஞ்சியது எவையெவை?

தாய்ச்சமூக விழுமியங்களும் வளமார்ந்த மொழியும்.

இன்று? அறிந்த தமிழர் வரலாற்றில் இத்தகைய இனப் பேரழிவு எப்போதும் நிகழ்ந்ததில்லை. இலங்கையில் இனத்தின், மதத்தின், மொழியின் பேரால் தொன்றுதொட்டுத் தொடரும் பகைமையால் உருவான போரில் தமிழர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
சிறுபான்மைத் தேசிய இனத்தின் வாழ்வுரிமைக் கோரிக்கை கள் பல்லாண்டுகளாக அறவழியில் தொடர்ந்தன. பேரின ஆட்சி யாளர்களின் அடக்குமுறையால் அவை மறுக்கப்பட்ட பின்னர்தான் ஆயுதப் புரட்சி எழுந்தது. தனி நாட்டுக்கான வேட்கையும். ஒரு நாட்டின் அரசு புரட்சியாளர்களை அடக்க முயலும் சாக்கில் தன்னாட்டு மக்களையே திட்டமிட்டுக் கொன்று குவிக்கையில், புரட்சி எழுந்ததற்கான நியாயத்தை – ஈழத்தை – மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாக ஆயிற்று.

தமிழின வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் போர்க் களம் புக நேர்ந்த வேட்கையும் வீரமும் பின்னர் என்னவாயின?

முப்பதாண்டுகளாகக் களத்தில் உறுதியாகத் தாக்குப்பிடித்து நின்றதே வெற்றிதான். இறுதிக்கணம்வரை நெஞ்சுரத்தோடு போராடி வீழ்ந்ததும் ஒரு இதிகாசம்தான். வாழ்க்கையும் வரலாறும் எந்தப் புள்ளியிலும் முடிவதில்லை; அது தொடர்கதைதான்.

ஆயினும், சில அடிப்படைக் கேள்விகள் எஞ்சுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் போரைத் தேர்ந்த புரட்சியாளர்கள் முன்னுணர்ந்தே தம் முடிவைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், முதியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது ஏன்?

அந்த மரண ஓலம் உலகின் காதுகளுக்கு எட்டியும் அது கண்டுகொள்ளவில்லை; கண்ணை மூடிக்கொண்டது. இந்தியத் தமிழர்களுக்கு அதன் பேரவலம் உறைக்கவில்லை. தன்னலம் அன்றி வேறு எதையும் கருதாத அரசியல்வாதிகளை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுப்பவர்கள் அவர்கள்; வேறு வழியும் அறியாதவர்கள்.

இந்தப் பேரழிவைத் தடுக்க முடியாததன் அடிப்படைக் காரணம் – தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி இயங்கும் அறிவுத்தளம் இத்தகைய சிக்கலான, பிரம்மாண்டமான பிரச்சினையிலிருந்து தற்காக்கும் திறன் உள்ளதல்ல. என்றுமே தமிழ் ஊடகங்கள் கழிவுநீர்த் தடத்தில் செல்பவை. அதன் வணிகநோக்கி லான கேளிக்கைகளையும் கல்விக்கூடத்தின் மனப்பாடப் பகுதியை யும் தவிர சராசரித் தமிழன் வேறு எதையும் அறிய வாய்ப்பில்லை. அவனுக்குரிய செய்தி, ஈடுபாடு, கனவு, இலக்கு, விவாதம், வெறி எல்லாம் மூன்றாம்தர சினிமாவோடுதான். அவனது படிப்பு ‘எழுத்து’ அறிந்ததுதான்; அதுவும் வேலைவாய்ப்புக்கானது மட்டும். ‘கல்வி’க்கான வாய்ப்பே இச்சூழலில் வழங்கப்படாதபோது, தமிழ் சினிமாவைத்தான் கசடோடு கற்றான். அரசியலும் ஊடகங்களும் அதை மட்டுமே கற்பித்தன. பக்தி மார்க்கத்தைவிடவும் சினிமா மயக்கம் கடும் வீரியம் மிக்கது. கற்பனையில் அல்ல, கண்ணனும் ராதையும் கண்முன்னே திரையில் ஆடிப்பாடுகின்றனர். அவனிடம் ஓட்டு வாங்கி அவனை ஆளவும் செய்கின்றனர். பாவம் அவன், தன்னைச் சுற்றியே என்ன நடக்கிறது என்று அறியாதவன். ஈழத்தில் என்ன பிரச்சினை என்று உண்மையிலேயே அவனுக்கு எதுவும் தெரியாது. தமிழ்ச் செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் யாருக்கும் தெரியாதுதான்.

இங்குதான் அடிப்படைச் சிக்கல் வெளித் தெரிகிறது. உலகத்திற்கு, தமிழக மக்களுக்கு தங்கள் போராட்டத்தை, அதன் தேவையை, கோரும் உரிமைகளை, நியாயத்தை உணர்த்தவேண்டிய ஈழ விடுதலை இயக்கங்கள், அறிவாளிகள் அதற்காக எதுவுமே செய்யவில்லை. இயலவில்லை. இன்றுவரை ஈழக் கோரிக்கை, போராட்டம் பற்றித் தெளிவாக விளக்கும் ஒரு நூல்கூட அவர் களால் வெளியிடப்படவில்லை. ‘பங்காளியப் பக்கத்து வீட்டுக் காரன் அடிக்கிறான்’ என்ற உணர்வு மட்டத்தில்தான் ஈழப் பிரச்சினை தமிழகத்தில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

இந்திய கம்யூனிச இயக்கங்கள் ‘இந்திய சமூகத்தை வரை யறுத்துப் புரிந்துகொள்ள முயலும்’ முன்னர் வரலாறு கடந்து போய்விட்டது மாதிரிதான் இதுவும்.

வெள்ளத்தனைய மலர்நீட்டம்.

இதுவும் கடந்து போகும். எதுவும். எனினும், அடிபட்ட, அவலமுற்ற, அழிக்கப்பட்ட நினைவும் உணர்வும் மரத்துப் போகுமோ, மங்கிப்போகுமோ?

பிள்ளையைப் புதைத்த இடுகாட்டில், கண்ணீர் உலராமல் நிற்பவர் ஈழத்தவர், திரும்பிச் செல்ல ஒரு வீடு இல்லை; வீடு திரும்ப மனம் இல்லாமல் தொலைந்துபோனவர் புலம்பெயர்ந்தோர்; யாரோ ஒட்டிய அஞ்சலி சுவரொட்டியைப் பார்த்துவிட்டு சினிமாவிற்குச் செல்பவர் தமிழ்நாட்டார்.

தன் பட்டறிவில் இருந்து பாடம் கற்காத எந்த மனிதனும், எந்த சமூகமும் முன்னகர்வதில்லை.

கொடும் போர்க்குற்றங்களுக்கான மெய்யான நேரடிச் சாட்சி இந்தப் படைப்பு. இனவெறியின் ஊழிக்கூத்து. இறுதி முற்றுகைக் கால களப்பலி நாட்களின் பேரவலச் சித்தரிப்பு. துன்பக் காட்டாற்று வெள்ளத்தின் சுழலில் இழுபட்ட தவிப்பு. எல்லாம் முடிந்தபின், சாம்பல் படுகை மீதிருந்து, 60 வயதைக் கடந்த ஒரு அம்மம்மாவின் உறைபனியான நெஞ்சில் கசியும் துன்ப நினைவுகள். ‘வாழ்ந்து’ பெற்ற அனுபவங்களின், பதைபதைக்கும் அன்றாடப் பதிவுகளின், நம்பிக்கையின் கடைசி மூச்சுத் தருணங்களின் பிணவாடை.

சாம்பலைத் தின்னமுடியுமா நெருப்பால்?

கொலைக்களத்தில் இருந்து தப்பி ஓடும் பெரும் பதற்றச் சூழலில், இந்த அம்மம்மா தனது தளர்ந்த வயதையும் பொருட் படுத்தாது, பேரக்குழந்தைகளின் உயிர்காக்கும் முனைப்பில் கொள்ளும் பிரயாசையும், மனத்தவிப்பும், ஆன்மாவின் கொதிப்பும் அசாத்தியமானவை. பொதுவாகவே, பெண்கள் இல்லத்தை நெஞ்சில் சுமந்து திரிபவர்கள். இங்கோ நிலமற்ற இல்லம். கூடு சிதைந்த கோலம். குஞ்சுகளுக்கு இரை தேடித் தேடி ஊட்ட ஒண்ணாப் பரிதவிப்பு. தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஓரிடத்தில் நிற்கவியலாத அபாய ஓட்டம்.

தகிக்கும் பாலை மீது கால்மாற்றிக் கால்மாற்றி உறவுகளைச் சுமந்து அலைந்த வயோதிகப் பாதங்கள்…. உலகின் அதிநவீன ஆயுதங்களின் பங்கை விட, எட்டுத்திக்கும் துரோகத்தின் பங்கு, இந்த உயிர்வதைப் பேரழிவில் கூடுதலான அடியோட்டம். துன்மார்க்க நுண்தந்திர உணர்வுகளை சாவின் விளிம்பில்கூட கைவிடாத மனித அகம். ஆயினும், இறுதிக் கையறு நிலையிலும் கருணை கொண்ட சில மனிதர்கள் இனியும் வாழ்க்கைக்கான அர்த்தத்தைச் சுட்டிச் செல்கின்றனர். ஆயுதம் எதுவும் அகத்தாலும் செப்பனிடப்பட்டதாக இருத்தல் வேண்டும். உறுதியும் ஒழுங்கும் கொண்ட தலைமையும் இறுதி நாட்களில் தனது கடைமடை இயக்கக் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது இயல்புதான். ஆயினும் அது வரலாற்றுத் துயரமாயிற்று.
புதினம் என்று வகைப்பட்டாலும், இது ஒரு வாக்குமூலம் தான். எரித்த தீயைக் காட்டும் சாம்பல் இது; பிரிந்த உயிர் சிந்திய உறைந்த ரத்தம் இது; கதறியழுத கண்ணீரின் தடம் இது.

கருணை காக்குமோ உலகை இனியேனும்! வரலாறு வல்லமையின் பக்கம் சாய்ந்தாலும், மனித குலம் காலங்காலமாக வளர்த்துப் பேணிவரும் விழுமியங்கள் அறத்தைச் சார்ந்தே இயங்கியாக வேண்டும். நம்பிக்கைதான் பற்றுக்கோடு. நன்னம்பிக்கை.
– நா.விஸ்வநாதன்
ஆசிரியர், தமிழினி

4 Comments

  1. // தமிழின வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் போர்க் களம் புக நேர்ந்த வேட்கையும் வீரமும் பின்னர் என்னவாயின?

    முப்பதாண்டுகளாகக் களத்தில் உறுதியாகத் தாக்குப்பிடித்து நின்றதே வெற்றிதான். இறுதிக்கணம்வரை நெஞ்சுரத்தோடு போராடி வீழ்ந்ததும் ஒரு இதிகாசம்தான். வாழ்க்கையும் வரலாறும் எந்தப் புள்ளியிலும் முடிவதில்லை; அது தொடர்கதைதான்.

    ஆயினும், சில அடிப்படைக் கேள்விகள் எஞ்சுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் போரைத் தேர்ந்த புரட்சியாளர்கள் முன்னுணர்ந்தே தம் முடிவைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், முதியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது ஏன்?

    அந்த மரண ஓலம் உலகின் காதுகளுக்கு எட்டியும் அது கண்டுகொள்ளவில்லை; கண்ணை மூடிக்கொண்டது. இந்தியத் தமிழர்களுக்கு அதன் பேரவலம் உறைக்கவில்லை. தன்னலம் அன்றி வேறு எதையும் கருதாத அரசியல்வாதிகளை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுப்பவர்கள் அவர்கள்; வேறு வழியும் அறியாதவர்கள்.//

    ==================================================================
    கொடடூரப் பாசிச வரலாற்றைத் தொடர்ந்தழித்து வருவதற்கெடுக்கும் இத்தகைய நவபாசிச முகிழ்பப்புக்கு கட்டியங் கூறுதல் மிகப் பெரிய தப்பாகும்!
    =====================================================================

    இந்தக் கேள்விகள் எவ்வளவு பெரிய அபத்தமானவையென்பது பலருக்குப் புரிந்திருக்கும்.! புலிகள் செய்வது விடுதலைப் போராட்டமல்ல.அது பெரும் அழிவு யுத்தம் -பாசிசத்தைத் தமிழ் பேசும் மக்கள்மீத மட்டுமல்ல முழுமொத்த இலங்கை மக்கள்மீதும் சிங்கள அரசு-இந்திய மற்றும் அந்நிய அரசுகள் ஏவியுள்ள பாசிசத்துக்கு நிகராகவே புலிகளும் ஏவியிருக்கினரென்றும் ,இதை எதிர்த்து மக்களது “சனநாயக” விழுமியத்தைக் காக்கவும் ; அதைப் பேணவும் -வளர்க்கவும் முனைந்த எழுத்துக்களை மட்டுமல்ல அத்தகைய நோக்குடையவர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளிய இந்தக் கூட்டம் இப்போது கேட்கும் இத்தகைய கேள்விகள் வரலாற்றில் நம்மை ஏமாளியாக்குவது.புலிகளது அழிவுயுத்தத்தாற் கொல்லப்பட்ட இலட்சக் கணக்கான மக்களையும் -பொருட் சேதத்தையும் தமழிர்கள் -மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களது உரிமையிழப்புக்குமான தமது கொடடூரப் பாசிச வரலாற்றைத் தொடர்ந்தழித்து வருவதற்கெடுக்கும் இத்தகைய நவபாசிச முகிழ்பப்புக்கு கட்டியங் கூறுதல் மிகப் பெரிய தப்பாகும்!

    முள்ளிவாய்க்கால்வரை ஒரு பெரும் தவறான யுத்தத்தையும் அது சார்ந்த பாசிசப் போக்கையும் கடைப்பிடித்த புலிகளைத் தொடர்ந்து ஆதரித்தவர்களும் -அடக்கி வாசித்தவர்களும் நாசியப் பாசிசத்தின் முன் தம்மைத் தாரவார்த்த கோடிக்கணக்கான யோமனியர்கள் போன்றவர்களே!புலியோடிணைந்து போரிட்டுக்கொண்டு ,இலங்கைப் பாசிச அரசோடு பிணைப்பைத் தொடர்ந்து பேணியவொரு ட்டம் இப்போது பெருவர்த்தகர்ளாக நமது மக்களை ஒட்டச் சுருண்டுமம்போது இப்படித் தவறாக வரலாறுரைப்பதென்பத தற்கொலைக்கொப்பானது!தொடர்ந்து, நம்மை ஏமாளியாக்கும் கயமைமிகு இந்த வெளியீடுகள் -பிரசுரங்கள் கொண்டிருக்கும் வரலாற்றுணர்வென்ன?;வரலாறைத் திரித்துப் பாசிசவொடுக்குமுறையை விடுதலையின் பேரால்-வீரத்தின் பேரால் அங்கீகரியென்பது சிறுமைத்தனம் மட்டும் அல்ல -பாசிக் குணாம்சம் நிறைந்ததுமாகும்!

    ப.வி.ஶ்ரீரங்கன்
    18.01.2014

  2. // தமிழின வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் போர்க் களம் புக நேர்ந்த வேட்கையும் வீரமும் பின்னர் என்னவாயின?

Comments are closed.