குழை வண்டிலில் வந்தவர் யார்..?

“தம்பி ஒரு கொமிக் சொல்லுறன். எலக்ஷென் நடந்ததெல்லே, முல்லைத்தீவுப் பக்கமா வெத்திலையில வோட்டுக்கேட்ட அரசாங்கக்கட்சி ஆளொருவர், எலக்ஷனுக்கு ரண்டு மூண்டு நாளுக்கு முதல், வீட்டு வசதிகள் சரியாக் கிடைக்காத கொஞ்ச சனத்துக்கு கூரைத் தகரங்களை அன்பளிப்பாக் கொடுத்து, வீட்டுக்குப் போடுங்கோ என்று சொன்னவராம். சனமும், நீங்கள் தெய்வமய்யா என்று கும்பிட்டு வாங்கிக்கொண்டு போச்சினமாம். ஆனால் எலக்ஷனில ஆள் தோத்திட்டார். கூரைத்தகடு வாங்கின ஆக்களின்ரை வோட்டு விழுந்ததே சந்தேகமாம். ஆள் கொஞ்சம் கோபத்தோட போய், நீங்களெல்லாம் என்ன மனிசர். பல்லை இளிச்சு வாங்கிக்கொண்டுபோயிற்று கழுத்தை அறுத்திட்டியளே என்று திட்டினாராம். சனம் ஒண்டும் விளங்காமல், ஐயா நீங்கதானே வீட்டுக்குப் போடச்சொன்னியள் என்று இழுத்திச்சினமாம்…”

இந்தக்கதையை எனக்குச் சொன்னவர் எனது பெரியப்பா. இன்னும் இரண்டு வருடத்தில் எழுபது வயதாகிறது. தச்சுவேலை செய்கிறார். கோப்பிச வேலைகளில் (கூரை வேலைகள்) ஸ்பெஷலிஸ்ற். மேற் சொன்ன கதை நிச்சயமாக ஒரு புனைவுதான். நிச்சயமாக பெரியப்பாவே புனைந்திருப்பார். எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு பேர்தான் புனைவாளர்கள். அந்நேரத்தில் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்தவரும் அவரே. (சென்ற வருடம் அ.இரவி அண்ணா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் அப்பாவிடம் – சயந்தன் எழுதுறதுகளை வாசித்திருக்கிறியளா என்று கேட்டார். அப்பா தலையைச் சொறிந்து கொண்டே, என்னமோ எழுதுறான்தான். சந்தோசம்தான். ஆனால் வாசிக்கிறதில்லை என்றார். திடீரென்று இரவியண்ணை நீங்களும் ஒரு மனிசரோ என்று பொரிந்துதள்ளத்தொடங்க அப்பா திகைத்துப் போய்விட்டார். அப்படி அப்பா டோஸ் வாங்கிக்கொண்டிருந்தபோது பக்கத்தில் நின்ற வெர்ஜினியாவை காணவேயில்லை. அடுத்தது தனக்குத்தான் என்றோ என்னவோ ஓடி ஓளிந்துவிட்டார். மறுநாள் காலை இரவியண்ணை போனபிறகு, அப்பா சொன்னார். “இப்பிடி ஆக்களைக்கூட்டிக்கொண்டு வந்து பேச்சு வாங்கித்தராதை… ”)

பெரியப்பாவைப்போல நிறையக்கதைகளைப் புனையும், மனிதர்களை கிராமங்கள் தமக்குள் வைத்திருக்கின்றன. அவற்றை புளுகுகள் என்று கடந்துபோய்விட முடியுமென்று தோன்றவில்லை. எதிர்காலத்தினுடைய நாட்டார் கிராமியக் கதைகள் இவைகளாகத்தான் இருக்குமோ என யோசிக்கின்றேன். எப்படியாவது இவை தமக்குரிய இடத்தை எடுத்துக்கொள்ளும்.

ஊரில் இன்னொரு சுவாரசியமான மனிதர் இருக்கிறார். சீனியர் என்று பெயர். ஒருமுறை நாங்கள் சிறுவர்கள் வைரவர் கோயிலில் இருந்து ஏவிய.. (இந்த வார்த்தை கொஞ்சம் அதிகப்படியானதோ…) ஈர்க்குவாணம் அவரது வீட்டில் விழுந்து மனைவியையோ மகளையோ அச்சப்படுத்தியது என்று விரைந்துவந்து எங்கள் ஆறுபேரையும் கைதுசெய்து சந்தியில் நிறுத்தியிருந்தார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அம்மாவோ அப்பாவோ வந்தே பிள்ளைகளை அழைத்துச்செல்லவேண்டுமென்பது அவரது ஆணை. ஆனாலும் அச்செய்தியை அந்த வீடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டுமல்லவா. என்னைத்தான் அனுப்பினார். பிறகு என்ன நடந்திருக்குமென்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சீனியர் அவ்வளவு மோசமில்லை. சங்காபிஷேகத்து முதல்நாள் இரவு கோயிலில்தான் படுத்திருப்போம். சிறு பையன்களைக் கட்டிமேய்க்கிறது அவர்தான். வண்டிவண்டியாகக் கதை சொல்லுவார். அப்படியொருமுறை சொன்ன கதைதான் இது.

“இந்தியன் ஆமிக்காலமடா, மயிர். இந்தியன் ஆமியெண்டா எனக்கென்ன. நான் விடிய நாலு மணிக்கு எழும்பி றோட்டு முழுக்கத்திரிஞ்சு பூ பிடுங்கிக்கொண்டு வருவன். அப்பிடியொருநாள் பூப்பிடிங்கிக்கொண்டு வாறன், ஒரு குழை வண்டில் புல் லோட்டோட வருகுது. (விவசாய நிலத்தில் பசளைக்கு பாவிக்க இலைகுழைகளை ஏற்றிய மாட்டு வண்டில்கள் அதிகாலையிலேயே புறப்பட்டுவிடும்). மாடு ரண்டும் குதிரைமாதிரி. ஆளைப்பாத்தால் அந்த மீசையை எங்கயோ கண்டமாதிரிக் கிடக்கு. தலைப்பா கட்டியிருந்ததால டக்கெண்டு பிடிபடல்லை. பக்கத்தில வந்து சரக் என்று பிரேக் அடிச்சார். (இதனால் அன்றுமுதல் மாட்டுவண்டிலுக்கு பிரேக் அடித்த சீனியர் என்றும் அவர் அறியப்படலானார்). கையைக்காட்டி சீனியர் எப்பிடிச் சுகங்கள். மன்னிக்கோணும். கதைக்க நேரமில்லை. நிறைய அலுவல், பிறகொருநாளைக்குச் சந்திக்கிறன் என்றுபோட்டு கிர் கிர் என்றார். மாடு ரண்டும் புழுதியைக்கிளப்பிக்கொண்டு பறந்திச்சு. எனக்கு அப்பதான் டக்கெண்டு விளங்கிச்சு. அது ஆரு தெரியுமோ…. சீனியர் இந்த இடத்தில் நிறுத்தி எங்களையெல்லாம் பார்ப்பார்.

“டேய் அது தம்பி பிரபாகரன்டா. குழை வண்டில் முழுக்க ஆயுதங்களைத்தான் அடைஞ்சு கொண்டுபோயிருக்க வேணும். அந்த அவசரத்திலயும் அவன் சீனியரை மறக்கலையடா…”

இதே சீனியர்தான் இன்னொருமுறை தாங்கள் கேதீஸ்வரத்திலிருந்து வந்தபோது ரக்ரர் காத்துப்போய்விட்டதென்றும் ஒருவகைக் காட்டுப்புல்லை ரயருக்குள் அடைந்து நிரப்பிவிட்டு ஓடி வந்தார்களென்றும் சொன்னார். அது பரவாயில்லை. வீட்டுக்குள் வந்து பார்த்தபோது, ரயருக்குள் புல்லு கோதுமை மாப்போல அரைபட்டுக்கிடந்ததாம். அதைத் தவிடு கரைப்பதுபோல தண்ணீரில் கரைத்து மாட்டுக்கு வைத்தபோது அது 2 லீற்றர் பால் அதிகம் கறந்தது என்று சொன்னதுதான் ஹைலைற்.

சீனியரைப் போன்றவர்கள், எதற்காக இக்கதைகளைப் புனைந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சிறுசிறு கதைகளால்தான் நாட்கள் சுவாரசியமாக புதுப்புதிதாக நகர்ந்தன. அந்நாட்கள் இந்நாளைப்போல் ஒரேமாதிரி இருக்கவில்லை.

94 – 95 காலம். தோதான வயதிலிருந்தேன். முயல் வேட்டைக்கெனக் கிளம்புவோம். கையில் பொல்லுகள் சகிதம், இரண்டு மூன்று நாய்களோடு பத்துப் பதினைந்து பேரெனக் கிளம்பினால், கைப்புள்ள கிளம்பிட்டான், எத்தனை உசிர் போகப்போகுதோ என்ற கணக்காக ஊர் எங்களைப் பார்க்கும். பற்றைப் புதர்களுக்கு பொல்லால் எறிவதென்றும் முயல்கள் பாய்ந்து ஓடினால், நாய்கள் அவற்றைத் துரத்திப்பிடிக்கும் என்பதுதான் திட்டம். ஆனால் நான் அறிந்து முயல் ஒரு பொழுதும்அகப்பட்டதில்லை. வயலோரமாக ஏதாவது கோழியைத்தான் அமுக்குவார்கள் அண்ணமார். அங்கேயே கோழியை உரித்து வயலுக்குள்ளேயே மூன்று கல் அடுக்கி, அடுப்புச் மூட்டி சமைப்போம். ஆனந்தியப்பு கடையில் யாராவதுபோய் ஐந்து றாத்தல் பாண் வாங்கி உரப் பையில் சுற்றி வருவார்கள்.

நல்ல நினைவிருக்கிறது. அப்படியொருநாள் சாப்பிட்டு முடிய, உரித்த கோழியின் சிறகுகள் மற்றும் கழிவுகளை ஒரு ஷொப்பிங் பையில் கட்டி, அதனைச் சீமெந்துப்பையில் வைத்து மடித்து – அந்தவழியால் பாருக்குக் கீழால் கால் விட்டுச் சைக்கிள் ஓடிய சிறுவன் ஒருவனை மறித்தோம். “டேய் தம்பி, கரணைச்சந்தியில் சைக்கிள் கடை வைச்சிருக்கிற ஆனந்தன் அண்ணன், ஒரு சாமான் கேட்டவர். நேராப்போக நேரமில்லை. இதையொருக்காக் குடுத்துவிடுறியே..” என்று பார்சலை ஒப்படைந்தோம். சரியென்று வாங்கிக்கொண்டு போனான். நாங்கள் பேணிகளை அடுக்கிப் புளிச்சல் விளையாடத்தொடங்கினோம்.

சற்று நேரத்தில் சிறுவன் இன்னொரு பொதியோடு திரும்பி வந்தான். “அண்ணை, குடுத்திட்டன். மறக்காமல் குடுத்துவிட்டதுக்கு நன்றியாம். போனமுறை நீங்கள் வந்தபோது தர மறந்திட்டாராம். இதை உங்களிட்டை குடுக்கச்சொன்னவர்” என்று பொதியைத் தந்தான். வாங்கித் திறந்து பார்த்தோம். நாலைந்து பழைய ரியூப் ஒட்டுகிற நெளிஞ்சுபோன சொலுஷன் ரின், கொஞ்சம் போல்ஸ், ஒட்டுப்போட இடமேயில்லாமல் ஒட்டியிருந்த ரியூப், ஒரு பெடல், என்று அவருக்கே உரித்தான சில பொருட்கள். பெரிய கிலிசைகேடாய்ப் போய்விட்டது.

மிகுந்த கற்பனை வளம் உள்ள மனிதரைத் தவிர்த்து வேறுயாரால் இப்படிச் செய்யமுடியும்.?

எனது ஒன்றிரண்டு சிறுகதைகளில் ஐயாத்துரை மாஸ்ரர் என்று ஒருவர் இருந்திருப்பார். அதுவொரு நிஜமான பாத்திரம்தான். அவரிடம் நான் நாடகங்கள் பழகியிருக்கிறேன். எப்பொழுதும் பெண்வேஷம்தான் கிடைக்கும். வேஷங்களுக்கான பொருட்களை ஒரு மாதத்திற்கு முன்னர்தான் எல்லோரும் தயார் செய்வார்கள். என்னிடம் மட்டும் நீண்ட கூந்தல் மயிரும், இரண்டு பாதிச் சிரட்டைகளும் நிரந்தரமாயிருந்தன. அதைப்பற்றி இங்கே எழுதியிருக்கிறேன். அப்படியொரு சிவராத்திரிநாள், கிளம்பிப்போய்க்கொண்டிருக்கிறோம். திடீரென்று வானத்தில் நான்கு வெளிச்ச வட்டங்கள், வண்ணங்களில் வெடித்துப்பெரிதாகித் தூர்ந்தன. இராணுவத்தினரின் பரா லைற் அப்படி ஒளிர்வதில்லை. அது வெளிர்நிறம். இத்தனை அழகில்லை.

fireworks-6Fire works என்ற வார்த்தையைக்கூட நாங்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. முதலில் ஏதாவது வெடிபொருட்களாயிருக்கலாம் என்று பயந்தோம். இந்தியக்கடலில் உதவிகேட்கும் கப்பல் ஒன்றின் சமிக்ஞையாக இருக்கலாமென்றோ, அல்லது கடற்படையினர் ஒருவித கொண்டாட்ட மனநிலையில் ஏவியிருக்கலாமோ என்பதையெல்லாம் யோசிக்கிற அறிவுமட்டம் குறைவு.

ஐயாத்துரை மாஸ்ரர், திடீரென்று கைகளை மேலே குவித்து, என்ரை சிவபெருமானே வந்துட்டீரோ என்று கதறினார். பிள்ளைகாள் இந்த வருஷப் பஞ்சாங்கத்தில் சிவராத்திரியன்று இப்படி நடக்குமென்று உள்ளது. பார்க்கக் கிடைத்தவர்களுக்கு முத்தி நிச்சயம். எல்லோரும் கும்பிட்டுக்கொள்ளுங்கள்..

நல்லவேளையாக ஐயாத்துரைமாஸ்ரர் வழமையாகப்பாடும் தோடுடைய செவியனைப்பாட முயற்சிக்கவில்லை. நாங்களெல்லோரும் கையெடுத்துக் கும்பிட்டோம். எனக்கென்ன ஆச்சரியமென்றால், சைக்கிள் கேப்பில – ஐயாத்துரைமாஸ்ரர் பஞ்சாங்கக் கதையை எப்படிப் புனைந்தார் என்றுதான். அவர் புனையக்கூடிய ஆள்த்தான். ஒருமுறை அவரது நாடகமொன்றில் இராமன், தன்னிடமுள்ள ஈட்டியை நிலத்தில் குத்த அவ்விடத்திலிருந்து தண்ணீர் சீறிப்பாய்வதுபோல ஒரு காட்சியிருந்ததாம். அதனால் மேடைக்கு கீழே ஒருவனை தண்ணீர் பைப்போடு இருத்தி, இராமன் ஈட்டியைக் குத்தியதும் தண்ணீரைப் பாய்ச்சு என்று சொல்லியிருந்தாராம். அவனோ இராமன் எப்பொழுது குத்துவான் என்று அத்துவாரத்திலேயே கண்ணை வைத்திருக்கிறான். குத்து கண்ணில் இலேசாகப்பட்டுவிட்டது. நிலைகுலைந்து மீள்வதற்குள் காட்சி முடிந்துவிட்டது. அடுத்தகாட்சியில் மழைவேண்டி யாகம் வளர்த்தார்களாம். ஓமகுண்டலத்தைச் சுற்றியிருந்த முனிவர்கள் தீவளர்த்து வானத்தையே பார்த்தபடியிருக்க, திடீரென்று ஓமகுண்டலத்திலிருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்ததாம். முனிவர்களாக நடித்த சிறுவர்கள் கலவரப்பட்டு எழும்பி ஓட, திரையை மூடியபோது ஐயாத்துரை மாஸ்ரர் அறிவித்தாராம்.

“இப்படியாக யாகத்தின் மகிமையுணர்ந்த பூமாதேவி, தன்னையே பிளந்து தண்ணீரைப் பாய்ச்சலானாள்..”

2 Comments

  1. இலங்கையில் உங்கள் ஆறாவடுவை எங்கு பெறலாம் ? அல்லது உடுமலை . COM மூலம் இலங்கையில் பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்?

  2. இலங்கையில் உங்கள் ஆறாவடுவை எங்கு பெறலாம் ? அல்லது உடுமலை . COM மூலம் இலங்கையில் பெறுவதற்கு எவ்வளவு செலவாகும்?

Comments are closed.