ஆயாச்சி அல்லது கச்சான்காரப் பூரணத்தின் பேரன்

ஆறாவடுவின் நான்காவது திருத்தமும் முடித்து, “இதுதான் எனது உச்சக் கொள்ளளவு. இதற்குமேலும் நீங்கள் எதிர்பார்க்கும் செழுமை என்னிடம் மருந்திற்கும் கிடையாது” என்று அனுப்பிவைத்தபோது தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொன்னார். “பரவாயில்லை. இது கெட்டிக்கார இளைஞன் ஒருவன் எழுதிய சுவாரசியமான பதிவுதான். ஒரு தொடக்கமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் கெட்டிக்காரத்தனம் மட்டுமே ஒரு நாவலை எழுதப் போதுமானதல்ல. அதற்கும் மேலாக ஒரு நிறைவான மனித மனம் தேவைப்படுகிறது. வாழ்வின் சகல பாடுகளையும் பட்டு ஓய்ந்த வயதொன்றின் மனநிலையோடு பதட்டமின்றி நிதானத்தோடு வாழ்க்கையின் ஒவ்வொரு தரிசனங்களையும் அவற்றின் உயிர்த்தன்மை கெடாதபடிக்கு அணுகி கதை தன்னைத்தானே நகர்த்திச் செல்வதைப்போல நீ ஒரு நாவலை எழுத வேண்டுமென்றார். “சரி” என்றேன்.

நேரிற் சந்தித்தபோது “இதைப்படி இதைப்படி” என்று அவர் தெரிவு செய்துதந்த புத்தகங்களில் அரைவாசி, இன்னமும் படிக்காமற் கிடக்கின்றன. பிரான்ஸிஸ் கிருபாவின் கன்னி நாவலை “எங்கே, இதை நீ டிகோட் செய் பார்க்கலாம்” என்று சொல்லி ஆண்டுகளாயிற்று.

ஆனாலும், நேர்கோட்டு முறையில், இரண்டு தலைமுறையைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்வையும் அவர்களின் பாடுகளையும் ஒரு பெரிய நாவலில் சொல்லவேண்டுமென்ற கனவு எனக்கிருந்தது.

0 0 0

எனது அப்பம்மாவிற்கு எண்பது வயதுகளாகிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். இப்பொழுதும் கடலில் இறங்கினால் கூந்தலை அள்ளி முடிந்துவிட்டு “பிறநீத்தம்” அடிப்பதில் “விண்ணி”. எனது சிறிய வயதில், வெள்ளைச் சேலையை என் இடுப்பில் சுருக்கிட்டு மாரிகாலக் கிணற்றில் இறக்கி மேலே நின்று வட்டமாகச் சுற்றி வருவார். அவர் பிடியை இலேசாக்குவதும் நான் நீரில் மூழ்கி “குய்யோ முய்யோ” என்று கத்துவதும் அவர் சரக்கென்று சேலையை இழுத்து என்னை நீர்மட்டத்திற்கு கொண்டுவருவதும் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை நடக்கும். மேலே நின்று “காலை அடிச்சு நீந்து” என்று அவர் சொல்வது கிணற்றுச் சுவர்களில் எதிரொலித்து ஐந்தாறு தடவை காதுகளில் நுழையும்.

நீரில் உடலைச் சமநிலைப்படுத்தி, மூழ்காதிருக்க எட்டொன்பது வயதுகளிலேயே கற்றிருந்தேன். அப்பம்மா என்னை கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தினார். “தவக்களையள்தான் கிணத்துக்கை நீந்தும். மனிசன் கடல்லதான் நீந்துவான்” என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார். கடலின் மீதான நெருக்கத்தை எனக்கு அவர்தான் ஊட்டினார். விரியும் கடலைக் கண்டால் எனக்குள் உருவாகும் பரவசம் அவர் தந்தது. மன்னார் இலுப்பைக்கடவையிலிருந்து இந்தியாவிற்குப் படகேறிய போது, ஏதேனும் நடந்தாலும், இருக்கட்டுமென – இறுக்கமான அரைக்காற் சட்டையும், பனியனும் அணிந்து செருப்புமில்லாது ஏறிய நம்பிக்கை அவர் தந்தது. (அது அளவுக்கதிகமான நம்பிக்கை என்பத நடுக்கடலில் புரிந்தது வேறுவிடயம்)

கச்சைதீவு போன கதை, அவரது அண்ணனின் மகன் கடலிற்காணாமற்போய் இரு வாரத்தின் பிறகு இந்தியாவிலிருந்து வந்த கதை, ஒருவருக்கு மீன் பாடு அதிகமென்றாலும் ஊரே கொண்டாடும் கதை, ராவணன் மீசைக் கதை, ஆமை கடற்கரையில் முட்டையிடும் கதை, உலக யுத்த காலங்களில் குண்டுவீசினால் ஒரு தடியை பற்களில் கடித்தபடி படுத்திருக்கவேண்டும் என்று சொல்லப்பட்ட கதை முதலானவற்றை அப்பம்மாவிடம் கேட்டு வளர்ந்தேன்.

“ஒரு கல் எறியவே, ஒரு கிளி பறக்கவே” என்ற ஒரேயொரு பாடலைத்தவிர்த்து அவருக்கு வேறு பாடல்கள் தெரியாது. அதுகூட “இரு கல் எறியவே, இரு கிளி பறக்கவே.. மூன்று கல் எறியவே, மூன்று கிளி பறக்கவே..” என்று ஏறுவரிசையிற் போகிற ஒரு டுபாக்கூர் பாடல்தான். நித்திரைகொள்ளும் நேரம் அருகிற்படுத்திருந்து பாடுவார். துாங்கும்போது அவர் என் தலையை “உணாவத்” தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளாயே நான் கிறங்கிச் சுருண்டுபோய்விடுவதால் எத்தனை கல் எறிந்தார் என்றும் எத்தனை கிளிகள் பறந்தன என்றும் எனக்குத் தெரியாமலே போயிற்று. கல்வி சார்ந்த கதைகளோ நீதிக்கதைகளோ அவருக்குத் தெரியாது. தன்னுடைய பெயரை மட்டுமே – அதுவும், மூன்று சுழி “ண” இல், பின்னிரண்டு சுழிகளை எப்பொழுதும் மறந்துவிடுவதால் அதனை “எ” என்பதாகவே எழுதத்தெரிந்தவர் அவர். பூரஎம்.

ஆனால் அவரின் ஒப்பாரி மட்டும் ஆயிரம் அர்த்தங்களைச் சுமந்திருக்கும். அப்பம்மா தனது முப்பது வயதிற்கு உள்ளாகவே கணவரை இழந்திருந்தார். ஏழு பிள்ளைகளில் நால்வரை, நோயிற்கும், விபத்திற்கும், பொலிடோலுக்கும் பலிகொடுத்திருந்தார். நான் பிறந்த ஐந்தாவது மாதம், அவரது ஆறாவது மகன் இருபத்தி மூன்றாவது வயதில் காதலிற் தோல்வியென்ற ஒரு காரணத்தை எழுதிவைத்துவிட்டு பொலிடோலைக் குடித்துவிட்டு அது உடலிற் “சுவறும்” வரை உடலைக் குலுக்கி ஓடி விழுந்து செத்துப்போனார்.

அப்பம்மா அத்துயரங்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே அழுத்தி வைத்திருந்தார். திடீர்திடீரென அவை ஒப்பாரிகளாக வெடித்துச் சிதறின. கல் அடுப்பில் செம்பாட்டுமண் நிரப்பிய பெரிய தாச்சிச்சட்டியில் கச்சான் வறுக்கும்போது பிசிறலாக விரியும் மெல்லியதொரு அழுகை பிறகு ஒப்பாரியாக விரியும். கணவனினதும் பிள்ளைகளினதும் நினைவுகளும் அவரின் கனவுகளும் அந்த ஒப்பாரியில் வழிந்தோடும். அப்பொழுது நாங்கள் அவர்வை இடையீடு செய்வதில்லை. விலகியிருப்போம். என்னைக் கண்ணுற்றால் “சித்தப்பனைத் தின்ன வந்தவனே, உன் சிரிச்ச முகத்தில அவர்ன் பொட்டு வைச்சானே” என்றழுவார்.

சித்தப்பா பொலிடோல் குடிப்பதற்கு சற்று முன்பாக வீட்டிற்கு வந்தாரென்றும் காலையிலேயே குளிக்க வார்க்கப்பட்டு பாயிற் படுத்திருந்த என்னை கிணற்றடிக்குத் துாக்கிச் சென்று குளிக்கவார்த்தாரென்றும், சிரட்டைக்குள்ளிருந்த கறுத்தப்பொட்டை நெற்றியில் பெரிதாய் இட்டு தன் தோளோடு சாய்த்துக் கொஞ்சினார் என்றும் அப்பம்மாவின் ஒப்பாரிகளே எனக்குச் சேதி சொல்லின. ஊரின் சாவு வீடுகளுக்குச் சென்று “ஒரு பாட்டம், இரண்டு பாட்டம்” என்ற கணக்கில் அழுவது அவரது வழமை. ஒத்த வயதில் நான்கு பெண்கள் ஒன்றாய்க் குந்தியிருந்து அருகிருப்பவர் தோளைக் கையால் அணைத்தபடி ஒப்பாரி வைப்பார்கள். அது இறந்தவருக்கான அழுகையாக இருப்பதில்லை. அது சொந்தத் துயரத்தின் குரல்.

அப்பம்மா தனது முப்பது வயதில் கோயில்களில் கச்சான் விற்கத்தொடங்கினார். தொடர்ந்து 28 வருடங்கள் அவர் கச்சான் விற்றார். கச்சான்காரப் பூரணத்தின்ரை பேரன் அல்லது ஆயாச்சியின்ரை பேரன் என்றுதான் நான் ஊரில் அறியப்படத் தொடங்கினேன். மூன்றாவது வகுப்பில் பள்ளிக்கூடத்தில்………………. க்கு காதல் கடிதம் கொடுத்துப் பிடிபட்டபோது, ………………………. ரீச்சர், “கச்சான் விக்கிற பூரணத்தின்ர பேரனுக்கு, மில் கார …………………. மகளைக் கேட்குதோ” என்றுதான் பிரம்பால் விளாசினார்.

அப்பம்மா கச்சான் அடுப்பில் அல்லாடிக் கொண்டிருந்த புகையும், இரவில் எண்ணப்படும் சில்லறைக் காசுகளின் கிணுங்கல் ஒலியும்தான் நினைவு தெரியத்தொடங்கிய நாட்களின் ஞாபகங்களாக இருக்கின்றன.

நிலமை சீராக இருந்த முன்னாட்களில் தொலைதுாரக் கோயில்களுக்குச் சென்று தங்கியிருந்து யாவாரம் செய்து வருவாராம். தனியொருவராக மன்னார் கேதீஸ்வரத்திற்கு கேரதீவு சங்குப்பிட்டி “பாதையில்” சென்று திருவிழா முடித்து வந்த கதைகளையும், சாட்டியில் அந்தோனியார் கோயிலுக்குச் சென்று தங்கி வந்த கதைகளையும் அறிய நேர்கிறபோது எத்தகைய ஆளுமையும் வைராக்கியமும் நிறைந்த பெண் அவர் என்று ஆச்சரியமாயிருக்கிறது.

பனையோலையால் பின்னப்பட்ட கடகம் ஒன்றினுள் தனித்தனிப் பைகளில் கச்சான், சோளம், கடலை முதலானவற்றைக் கட்டுவார். கோயிலில் அவற்றைப் பரப்பி வைப்பதற்காக மேலே மூன்று வட்டமாக இழைக்கப்பட்ட சுளகுகளை அடுக்குவார். அவற்றின் மேலே பெட்டிக்குள் பெட்டி என்றவாறாக ஐந்தாறு பனையோலைப் பெட்டிகள் இருக்கும். பத்து ரூபாச் சுண்டு, ஐந்து ரூபாச் சுண்டு, ரண்டு ரூபாச் சுண்டு என அளவில் வேறுபடும், வெளிப்பார்வைக்குத் தெரியாத- உள்ளே அளவைக் குறைத்துத் தகரமடிக்கப்பட்ட சுண்டுப் பேணிகள், சுருக்குப் பைகள் என அனைத்தையும் பெட்டியில் திணித்து இழுத்துக் கட்டி தலையில் ஏற்றி நிமிர்ந்து நின்றாரென்றால் பிறகு கையால் பிடிக்க வேண்டியதில்லை. கையை விசுக்கி விசுக்கி வேகமாக நடப்பார். தலையில் கடகம் தன்பாட்டில் பதுங்கிக் கிடக்கும்.

அப்பம்மாவிடம் ஒரு பழக்கமிருந்தது. தலையில் கடகத்தை ஏற்றி “படலையை” தாண்டும் முன்பாக அவர் எனது தங்கச்சியை தனக்கு முன்னால் வரச்சொல்வார். அத் தருணம் பார்த்து வாசலைக் கூட்டுவதுபோல நான் விளக்குமாறோடு நின்று “சொறிச்சேட்டை” செய்வேன். “ச்சீச் செடியே..” என்று திட்டிவிட்டு திரும்பிச் சென்று கடகத்தை இறக்கி மறுபடியும் முதலேயிருந்து தலையில் ஏற்றி வருவார்.

இன்றைக்கு பரவலான வழக்கில் இல்லாத வார்த்தைகளை அவர் உச்சரிப்பதுண்டு. சாதாரண பேச்சு வழக்கில் இப்பொழுதும் நான் உபயோகிக்கிற “பறையாமல் இரு பாப்பம்” (பேசாதிரு) என்பது அவரினது பாதிப்பாக இருக்கலாம். தவிரவும் “செடி..” “நரகத்து முள்ளு” முதலானவற்றை அவர் உச்சரிக்கும் தொனியில் அவை கடுமையான வசைச் சொற்களாக மாறியிருக்கும்.

யாவாரம் காரணமாக அவர் ஊருக்குள் பேமஸாயிருந்தார். ஆயாச்சி என்றால் ஊர் தாண்டியும் தெரியும். அப்பம்மாதான் வெற்றி என்ற போராளியை வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்தார். போராட்டம் பற்றிய தத்துவார்த்தமான கோட்பாட்டுப் புரிதல்கள் அவரிடம் கிடையாது. போராட்டம் என்பதே அவரின் அக்கறைக்கு அப்பாற்பட்ட விடயமாக இருந்திருக்கலாம். ஆனால் வழியில் சாப்பாடு கேட்ட ஒருவனைத் தவிக்க விட்டு வர அவர் மனம் ஒப்பவில்லை. அழைத்து வந்துவிட்டார். வெற்றிக்கு வெற்றிலை மெல்லுகிற பழக்கம் இருந்தது. அவன் சாப்பிட்டு முடிய, அப்பம்மா ரோஸ் நிறச் சுண்ணாம்பை வெற்றிலையில் தடவி மெல்லிய புகையிலைக் காம்பு ஒன்றையும் உள்ளே வைத்து மடித்துக் கொடுப்பார்.

பின்னாட்களில் வெற்றி எங்கள் வீட்டில் ஒருவனான். பிறகு அப்பம்மாவின் ஒப்பாரியில் ஒரு வரி ஆனான்.

அப்பம்மாவிற்கு அவன் புலி, இவன் புளொட் என்றெல்லாம் பார்க்கத்தெரியாது. இம்முறை ஊரில் நின்ற போது படலையடியில் “ஆயாச்சி” என்று அழைத்து நுழைந்த இளைஞன் ஒருவன் தேர்தல் பிரச்சார நோட்டீஸ்களை அவரின் கையிலும் என் கையிலும் தந்தான். ஈபிடிபி தேர்தல் பிரச்சார நோட்டீஸ்கள் அவை. “ஆயாச்சி, மறக்காமல் வெத்திலைக்குப் போடணை” என்று அவன் புறப்பட்டபோது “இருந்து தண்ணியை வென்னியைக் குடிச்சிட்டுப் போடாப்பு” என்று அவனை இருத்தினார். அவர் அப்படித்தான். ஒரு கொள்கை இல்லாதவர் 😉

அவரிற்கு ஒருநாள் ஒரு இந்திய ராணுவச் சிப்பாய் மரண பயத்தைக் காட்டினான். அன்று காலையில் ரோந்து சென்று சிப்பாய்கள் மீது போராளிகள் குண்டெறிந்த சம்பவ வலயத்தில், கோயிலுக்கு கச்சான் விற்கப்போனவர் அகப்பட்டுக் கொண்டார். வழியாற் போனவர் வந்தவர் மீதெல்லாம் இந்திய இராணுவத்தினர் தாக்கத்தொடங்கினார்கள். கோப மிகுதியில் ஒரு சிப்பாய் அப்பம்மாவின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவதுபோல மிரட்டினானாம். பயத்தில் சேலையோடு சிறுநீர் கழித்துவிட்டார். கோயிலுக்குப் போகவில்லை, வீட்டிற்கு வந்து யாரோடும் பேசாது பேயறைந்தவர் போலிருந்தார். பிற்காலங்களில் அச்சம்பவத்தை விபரிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அமைதியாகிவிடுவார்.

0 0 0

கனவைச் சுமந்துகொண்டுதான் போனேன். அந்தக் கிராமத்தையும் வெள்ளந்தியான மனிதர்களையும், அப்பம்மாவையும் அவரது பாடுகளையும் வாழ்வையும் ஒரு பெரிய தரிசனமாக நாவலொன்றில் இறக்கி வைக்க வேண்டும் என்ற கனவு.

வீட்டுச் சுவரில் சுண்ணாம்பினால் நானெழுதிய பூரணவாசா என்ற பெயரும், கச்சான் காரியாலயம், உரிமையாளர் பூரணம் என்ற எழுத்துக்களும் இன்னமுமிருக்கின்றன. அப்பம்மா சொன்னார். “விதானையார் இப்பயும் கேப்பார், ஆரணை இதை எழுதினது என்று. நான் சொல்லுவன். இது என்ரை பேரன் எழுதினது என்று.”

அப்பம்மாவின் அருகிலிருந்து அவரது வாழ்க்கையைக் கேட்டேன். பிள்ளைப் பிராயத்து கனவுகளை, திருமண நாளின் வெட்கத்தை, கணவன் இறந்த நாளின் துயரத்தை, பிள்ளைகள் இறந்த நாட்களின் வெறுமையை, தந்தையைத் தாயை, உறவுகளை, கிராமத்தை, கடலை, மனிதர்களை கேட்டு முடித்தேன். இன்னமும் கேட்பதற்கு மிச்சமிருக்கின்றன.

ஆனால், இந்த இடைப்பட்ட 18 வருட இடைவெளியில் அந்த வாழ்விலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும் அந்நியப்பட்டுப்போன என்னால் அதன் உயிர்த்தன்மை கெடாத எதையும் எழுதமுடியுமெனத் தோன்றவில்லை. முடியாதுதான். அந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அதன் களத்தில் பயணித்தாவது இருக்க வேண்டும். நெஞ்சில் திரண்டு ஊறியிருக்க வேண்டும்.

எனக்கு கெளுத்துமீன் முட்டையில் கறி எப்படி வைப்பதென்று தெரியவில்லை. இறால் வறை எப்படிப் பொன்னிறத் தேங்காய்த் துருவல்களைப் போல இருக்கின்றன என்று அறியவில்லை. ஏலம் கூறும் நடைமுறை தெரியவில்லை. மீன் பாடுகளைப் பொறுத்து ஊருக்கு வரிசெலுத்துகிற சிஸ்ரம் விளங்கவில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்பு என்ற சித்திரத்தை மனதால் வரையவே முடியவில்லை.

என்றேனும் ஒரு காலம் வாய்க்கலாம். வயதால் உணர்கிற பருவம் கிட்டலாம். வாசிப்பினால் அதனை அடைய முயலலாம். வாழ்வை எழுத முன்னர் அதன் குறுக்குவெட்டுத் துண்டங்களையாவது எழுதிப் பயிலலாம். அதுவரை

“ஏன்ரா மேனை, எல்லாத்தையும் கேட்கிறாய். செத்தவீட்டுப்புத்தகம் அடிக்கிறதுக்கே..?” என்ற அப்பம்மாவின் வார்த்தைகள் பொய்த்திருக்க வேண்டும்.

4 Comments

  1. >பறையாமல் இரு பாப்பம்..
    இந்தச் சொல் (பறைவது), எங்களூரில் (இடைக்காடு) சர்வ சாதரணம். எல்லா ஊர்களிலும் இப்படித்தான் என்று எண்ணியிருந்தேன், 1987 இல் இடம்பெயரும்வரை… இடம் பெயர்ந்த ஊரில் “என்ன ஒன்றும் “பறையாமல்” இருக்கிறாய்.. ” என்று நக்கல் பண்ணப் பட்டேன்.

    நிற்க பதிவைப் பற்றிப் பறையாமல் அலம்புகிறேன். அருமையான பதிவு. சிறுவயதில் சந்நிதி கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் தவறாது போயிருந்ததால், கடலைக்கார ஆச்சிமார் பிரியத்துக்கும் அன்புக்குமுரியவார்களாகி விட்டார்கள். என்பதால் இப்பதிவு இனும் அதிகமாகப் பிடித்துள்ளது..

  2. >பறையாமல் இரு பாப்பம்..
    இந்தச் சொல் (பறைவது), எங்களூரில் (இடைக்காடு) சர்வ சாதரணம். எல்லா ஊர்களிலும் இப்படித்தான் என்று எண்ணியிருந்தேன், 1987 இல் இடம்பெயரும்வரை… இடம் பெயர்ந்த ஊரில் “என்ன ஒன்றும் “பறையாமல்” இருக்கிறாய்.. ” என்று நக்கல் பண்ணப் பட்டேன்.

    நிற்க பதிவைப் பற்றிப் பறையாமல் அலம்புகிறேன். அருமையான பதிவு. சிறுவயதில் சந்நிதி கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் தவறாது போயிருந்ததால், கடலைக்கார ஆச்சிமார் பிரியத்துக்கும் அன்புக்குமுரியவார்களாகி விட்டார்கள். என்பதால் இப்பதிவு இனும் அதிகமாகப் பிடித்துள்ளது..

  3. எனது ஊரின் கடலை விற்கும் புதினம் ஆச்சி என்று நான் கூப்பிடும் புனிதம் ஆச்சியும் அந்தக் கச்சானும் நினவுக்கு வந்தது. நல்லா இருக்கும் சயந்தன்

  4. எனது ஊரின் கடலை விற்கும் புதினம் ஆச்சி என்று நான் கூப்பிடும் புனிதம் ஆச்சியும் அந்தக் கச்சானும் நினவுக்கு வந்தது. நல்லா இருக்கும் சயந்தன்

Comments are closed.