றேடியோக்களின் கதை

‘எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி!’

‘அணையிறதுக்கு நான் ஒண்ணும் தீக்குச்சி இல்லை! சூரியன்’

‘நான் சேர்த்த கூட்டம் அன்பால தானாச் சேர்ந்த கூட்டம்’

‘அசந்தா அடிக்கிறது உங்க பாணி அசராமல் அடிக்கிறது என் பாணி’

இவையெல்லாம் தமிழ்ச் சினிமாக்களின் பஞ்ச் வசனங்களாயினும் எனக்கு அதிகம் பரீச்சயம் ஆனது கொழும்பில இருக்கிற தனியார் வானொலிகள் மூலம் தான். உப்பிடி மாறி மாறி கோழிச்சண்டை போடுறதை ரசிச்சுக் கேட்கிறதே நல்ல ஒரு பொழுது போக்கு.

தொன்னூற்றெட்டின் துவக்கமாயிருக்க வேணும். அப்ப தான் ஈசல் கணக்கில கொழும்பில தனியார் வானொலிகள் வரத் தொடங்கினது.

யாழ்ப்பாணத்தில இருக்கும் பொழுது இலங்கை வர்த்தக வானொலி கேட்பம். லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு மீராவின் இசையும் கதையும் இப்பிடி நிறைய நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பம். ஆனாலும் ஒலித்துல்லியம் பெரிய அளவில் இருக்காது. இலங்கை வர்த்தக வானொலியை விட தூத்துக்குடி வானொலி நல்ல கிளியர். இரவில எட்டே முக்காலுக்கு மூண்டு பாட்டுப் போடுவினம். கொஞ்சம் புதுப்பாட்டுகள் கேட்க வேணும் எண்ட ஆசையை இந்த வானொலிகள் தான் தீர்த்து வைச்சதுகள்.

ஆரம்பத்தில இரவு ஒரு மணித்தியாலத்துக்கு புலிகளின் குரல் ஒலிபரப்பானது. பண்பலை வரிசையில் ஒலிபரப்பான இந்த வானொலியில் இலங்கை மண் எண்டொரு நாடகம் போனது. பொன்.கணேசமூர்த்தி எழுதியிருந்தவர். தொடர்ந்து ஒரு வருசம் போன இந்த நாடகத்தை நான் தொடர்ந்து கேட்டன்.

இராவணன் கதையை மையப்படுத்தி இந்த நாடகம் இருந்தது.

தளிர்கள் எண்டொரு சிறுவர் நிகழ்ச்சி புலிகளின்குரலில போனது. அவ்வாறான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமலும், அதே நேரம் வயதானவர்கள் கலந்து கொள்ளுற வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமலும் ரண்டும் கெட்டான் வயசில நான் இருக்கிறனே என்று அப்ப எனக்கு கவலையாயிருக்கும்.

புலிகளின் குரலும் தொடர்ந்த ஒலித்தரத்தில் வராது. அன்ரனாக்கு வயர்கள் கட்டி அதைக் கூரையில் கட்டி அப்பிடி இப்பிடித்தான் அந்த வானொலியைக் கேட்பம். (இப்ப செயற்கைக் கோளுக்காலை புலிகளின் குரலை உலகமெங்கும் கேட்ககூடியதாக இருக்கிறதென்பதை நினைக்க சந்தோசமாயிருக்கிறது.)

பிறகு கொழும்பில வந்தாப் பிறகு யாழ்ப்பாணத்தில கேட்ட வர்த்தக வானொலியும் கேட்கிறதில்லை.

ஒரு கொஞ்சக் காலத்துக்குத் தான்.

பிறகு ஒண்டின் பின் ஒண்டாக வரத்தொடங்கின வானொலிகள். முதலில வந்தது சூரியன் FM. அது வரைக்கும் வானொலிகளில இலக்கணச் சுத்தமாக கதைக்கிறதை கேட்டு வந்த எனக்கு சாதாராண பேச்சு வழக்கில வானொலி கேட்க முடிந்தவுடன ஒரு ஆச்சரியமாயிருந்தது.

அந்த நேரம் இந்த வானொலிகள் தமிழைக் கொலை செய்யப்போகின்றன என்றெல்லாம் கதை வந்திச்சு.

எண்டாலும் சூரியன் FM வந்த பிறகு தான் எனக்கு புதுப் பாட்டுகள் எல்லாம் அறிமுகமானது. CD வேண்டித்தான் பாட்டு கேட்க வேணுமெண்ட தேவையே இல்லாமல் போயிட்டுது.

இன்னுமொரு விசயம் சொல்ல வேணும்.

தொலைபேசியில வானொலியோடை பேசி அதை நேரடியாக கேட்கிறதை அந்த வானொலிதான் இலங்கையில அறிமுகப்படுத்தினது. தபால் அட்டையளை அனுப்பிப் போட்டு வருமோ வராதோ எண்டு பாத்தக்கொண்டிருந்த சனத்துக்கு இந்த சிஸ்ரம் பிடிச்சிருக்க வேணும்.

எனக்கும் ஆரம்பத்தில அப்படியான நிகழ்ச்சிகளை கேட்கிறது ஆர்வமாத்தான் இருந்தது. ஆனா கடைசிக்காலத்தில எப்ப பார்த்தாலும் ‘ஹலோ யார் பேசுறது. என்ன பாட்டு வேணும். யார் யாருக்காக வேணும்’ எண்டு ஒரே இதையே கேட்க வேண்டியிருந்ததாலை புளிச்சு போட்டுது எனக்கு.

இப்பிடி இருக்கேக்கை சக்தி FM எண்டொரு வானொலி வந்திச்சு. எண்டாலும் அது ஆரம்பத்தில தூய தமிழ் பேசித்தான் நிகழ்ச்சிகள் செய்தது. பிறகு போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமலாக்கும் அதுகும் சாதாரண பேச்சு வழக்கில் தொடங்கிச்சு!

அந்த வானொலி வந்த பிறகு தான் ஒரு சூடு பிடிச்சிது. அந்த நேரத்தில வானொலி அறிவிப்பாளர்களுக்கு இலங்கையில ஒரு நட்சத்திர அந்தஸ்து இருந்தது.

‘எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி’ எண்டு ரஜினி எதுக்கு சொன்னாரோ தெரியேல்ல.. ஆனா சூரியன் அதை அடிக்கடி போடும். எனக்கெண்டா அது ஒரு நாகரீகமில்லாத செயலாத்தான் கிடக்கு.

இதுக்கிடையில ஏற்கனவே அனுங்கிக்கொண்டிருந்த பெரிய கவனிப்பு இல்லாத கலையொலி எண்ட ஒரு வானொலி சுவர்ண ஒலி எண்ட பெயரில பெயர் மாறி கை மாறி தாம் தூம் எண்டு வந்திச்சு.

சிங்கப்பூரிலிருந்து மாலினி எண்டொருவவை அறிவிப்பாளரா கூட்டி வந்தவை. சும்மா கட கட எண்டு கதைக்கிற அவவின்ரை அழகே தனிதான்.

நிறையப் பரிசுகளும் அள்ளி அள்ளி கொடுத்தவை. இளசுகளை மட்டுமே குறிவைச்சு இயங்கினாலும் ஏனோ அவையாள நிண்டு பிடிக்க முடியேல்லை. கொஞ்ச நாளில மீண்டும் புதுப்பொலிவுடன் வருவம் எண்டு நிப்பாட்டினவை தான்.. அவ்வளவும் தான்.

சக்தி வானொலி தாங்கள் தான் தமிழ் வளக்கிறம் எண்டு அடிக்கடி சொல்லும். எனக்கு உண்மையாக் கோபம் வரும். தமிழ் வளக்கிறது எண்டுறது சும்மா தமிழில வணக்கம் சொல்ல வற்புறுத்தவது இல்லை. அல்லது தமிழில கதைக்கிறது மட்டுமில்லை. தமிழோடு இணைஞ்ச இனத்தின் அரசியல் பண்பாடு பொருளாதாரம் அறிவியல் இதெல்லாத்திலையும் முன்னேறுவதற்கான வழி வகைகளைச் செய்யுறது தான்.

இதொண்டையும் செய்யாமல் நாங்கள் தான் தமிழ்க்காவலர்கள் எண்டு யார் சொன்னாலும் எனக்கு கோவம் வருகுது.

செய்திகளைப் பொறுத்த வரை சூரியன் தேடல் மிக்க செய்தியாளர்களை கொண்டிருந்தது. தணிக்கை நடைமுறையிலிருந்த போது அதன் செய்திகளை எல்லோரும் கேட்க விரும்பிச்சினம். (யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியாளர் நிமலராஜன் சூரியனின் செய்தியாளராகவும் இருந்தார்.)

மற்றும் படி அந்த ரண்டு ரேடியோவுக்கும் யார் NO.1 என்ற போட்டி இருந்தது. ஒரு பாட்டை போட்டு விட்டு அதை நாங்கள் தான் முதலில போட்டம் எண்டு அவர்கள் அடிபடுறது சின்னப்பிள்ளைகள் அடிபடுறது போல இருக்கும்.

பாட்டுக்களுக்கு இடையில இருந்தாப் போல ‘என்னைப் பத்தி உனக்கு தெரியாது.’ எண்டு ஒரு வசனம் போகும். அல்லது ‘என்னைச் சீண்டாதை. உனக்குத் தான் ஆபத்து’ எண்டு ஏதாவது வசனம் போகும். உண்மையில இது மற்ற வானொலிக்குத் தான் சொல்லுப்படும். ஆனால் கேட்டுக்கொண்டிருக்கிற எங்களுக்கு சொல்லுறாங்களோ எண்ட மாதிரி இருக்கும்.

உப்பிடித்தான் ஒருக்கா ஒரு வானொலியிலை தற்போதைய நிலையில் இலங்கையில் கேளிக்கை நிகழ்வுகள் தேவைதானா எண்டு ஒரு கருத்தறியிற நிகழ்ச்சி நடத்தினவை. நேயர்கள் தொலை பேசியில் சொல்ல வேணும். என்ர நண்பன் ஒருத்தன் அழைப்பெடுத்து முதலில உங்கடை இருபத்து நான்கு மணி நேர கேளிக்கைகளை நிப்பாட்டுங்கோ. பிறகு மிச்சத்தை பாக்கலாம் எண்டிருக்கிறான். அதுக்கு அவை நாங்கள் அப்பிடி இல்ல. மற்ற வானொலி தான் அப்பிடி எண்டு சொல்லிச்சினமாம்.

அதே மாதிரி.. ஒருக்கா தொலைபேசியில ஒருவ பாட்டுக் கேட்டவ. அப்ப அங்கை இருந்து ஒருத்தர் உங்களுக்கு திருமணம் ஆகிட்டுதா எண்டு கேட்டவர். அதுக்கு அவ இல்லை எண்டு சொன்னா. பிறகு அவர் அடுத்த கேள்வியா அப்ப எத்தினை பிள்ளையள் எண்டு கேட்டார். அதுக்கு அவ பெரிசா சிரிச்சா. ஏதோ அவர் பகிடி விட்டிட்டார் எண்ட நினைப்பிலை.

உண்மையில அவரிலையும் பிழையில்லை. அவைக்கு அப்பிடி ஒரு ஒழுங்கில கேட்டு கேட்டு பழகிப்போட்டுது.

என்ன செய்ய முடியும்..

5 Comments

  1. இணைய ஒலிபரப்புகளைக் கேட்டிருக்கிறீர்களா? உங்கள் பகுதியில் இணைய வசதி எப்படியென்று தெரியவில்லை. அதிவேக, அளவற்ற broadband இணைப்பிருந்தால் இந்த Jeevan Tamil Radioவை Winamp செயலி கொண்டு கேட்கலாம். இவ்வொலிபரப்பில் புது பாடல்கள், பாடல்களுக்கிடையில் பேச்சு / விளம்பரங்கள் போன்ற குறுக்கீடுகள் இல்லாத நிம்மதியான அனுபவம், எனப் பல அம்சங்கள் என்னைக் கவர்ந்தன.

  2. ஒரு வானொலியில இருந்து மற்றதுக்கு எதிரா பஞ்ச்சுகள் விட்டுப்போட்டு அடுத்த மாதமே எதிர்த்த வானொலியில சேந்து கொண்டு பழய வானொலிய பஞ்ச் பண்ணுறதெண்டு எத்தின விளயாட்டுக்கள் நடந்திச்சு. மனுசருக்கு விசர் பிடிக்காத குற தான். எவன் எந்த வானொலியப் பற்றிச் சொல்லிறான் எண்டே தெரியேல.
    தங்களிட்ட தவக்கையள் இல்ல எண்ட வீரகேசரியில அரைப்பக்க விளம்பரம் குடுக்கிற அளிவில எல்லாம் சண்ட நடந்தீச்சு.

  3. எழுதிக்கொள்வது: சீலன்

    நீ தவளைகளை கூட்டி வந்து தப்புத் தப்பாய் கத்த வைச்சு சூரியனை எச்சரிக்கிறாய் என்று சூரியன் FM இல் பாட்டுப் போட உடனே சக்தி தம்மிடம் தவளைகள் இல்லை என்று வீரகேசரியில் அரைப் பக்க விளம்பரம் போட்டது.

    14.10 23.3.2005

  4. எழுதிக்கொள்வது: Naamathasan.Jaffna.Ariyalai

    பேய என்கடை சக்தியை விமர்சிக்க நீயார்.மடயா உனக்கு வெர வெலை இல்லையொ விசரா.புலிகலின்குரலொ அதுக்கு ஏன் வால் பிடிச்சு எலுதிரா மடையா.அவ்ன்கல் காசு தந்து எழுதச்சொல்லுரன்கலொ.விசரா

    16.11 23.3.2005

  5. Naamathasan அண்ணர் தமிழரில்லப் போல கிடக்கு. சிங்களக் கலப்பேதுமிருக்கோ தெரியேல. எழுதிற தமிழப்பாத்தாலே தெரியுது.

Comments are closed.