வதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன்

துடிப்படங்கிய உடல்களைப் புரட்டித் தேடுகிறது கரும்பச்சை சூடிய சிங்களச்சிப்பாயின்  துவக்கு. புகை படர்ந்த பெருவெளிக்குள் துழாவித்திரிகிற அவனின் கண்களுக்குள் உறைந்திருக்கிற வன்மத்திற்கு ஓராயிரம் ஆண்டின் வரலாற்று ரேகை படிந்திருக்கிறது. தன்னுள் திளைக்கும் கொடுரத்தினை விதைத்தது புத்தபிக்கு மஹானாமாவின் சிங்கள காவியமான மகாவம்சம் என்பதை அந்த வீரன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை. வரலாற்றுப் பிரக்ஞையற்ற அவனது மூளை போர்க்கருவிகளால் வடிவமைக்கப்பட்டது. பேரினவாத காற்றைக் குடித்து பெருத்த சிங்களச் சிப்பாய் தான் தேடிய உயிர் அடங்கிய உடலைக்கண்டடைந்த மணித்துளியை வரலாறு கனத்த மௌனத்துடன்தான் பதிவு செய்கிறது.

சிதிலமடையாத எண் 001 குறிப்பிடப்பட்ட அடையாள அட்டைக்கருகில் திறந்து கிடக்கும் சிங்கப்பூர் லோஷன் பாட்டிலில் இருந்து கிளம்பிய திராட்சை வாசனையால் நிறைந்திருந்தது அக்குறு நிலம். தன் உடலைப்புரட்டுகிற சிப்பாய் பிறப்பதற்கு முன்னான ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்திலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் துவங்கியிருந்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். முப்பதாண்டுகள் வீரச்சமருக்கு ஒப்புக்கொடுத்திருந்த உடலது. பேரினவாதம் காத்திருந்த நிமிடத்திற்குப் பிறகான நாட்கள் யாவும் தலைகீழாக மாறத்தொடங்கின.

முள்ளிவாய்க்கால் எனும் பெயர்ச்சொல் வலி, வேதனை, துயரம்..துரோகம் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. போருக்கான சாத்தியங்களை முற்றாக துடைத்தழிக்கத் துவங்கியிருக்கிறது பௌத்த பேரினவாதி அரசு. போர்க்கருவிகளுடன் மானுடவியல் ஆய்வாளாகளும் களம் புகுந்துள்ளனர். ஆதாரங்களை உருமாற்றி வேறு ஒன்றாக்கிடும் வித்தையைக் குடித்திருந்த ஆய்வாளர்களின் நிலமாகிவிட்டது தமிழ் நிலம். கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து வரலாற்று ஆதாரம் என நம்பச் செய்திருக்கின்றனர். பிரபாகரனின் மரணத்திற்குப் பிறகான பதினாறாம் நாளில் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பாக போதிமரக்கன்றை இலங்கைத் தீவிற்கு கொண்டுவந்த பேரரசர் அசோகரின் மகள் சுங்கமித்திரையின் சிலையை மகிந்தாவின் மனைவி யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பதும், போதிமரக்கன்றொன்றை ராஜபக்ஷே சாஞ்சி புத்த மடாலயத்திற்கு கொண்டு வருவதும் தனித்து திட்டமிட்டு நிறைவேற்றப்படுகிற அரசியல் குயுக்திகள் அன்றி வேறென்ன..

யாவற்றையும் எப்படி எதிர்கொள்வது என்ற பதட்டத்தில் தமிழர்கள் முள்வேலிக்கம்பிகளுக்குள் வீழ்ந்திருக்க எழுதிக்கடப்பதைத் தவிர என்செய்வது இப்போது என்றே எழுத்தாணியின் கூர்முனையைத் தீட்டித்தொடர்கிறார்கள் ஈழத்தின் மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள். விமல் குழந்தைவேலு, ராகவன், கர்ணன் என நீண்டு தொடர்கிறது எழுத்தாளர்களின் புனைவுகள் யாவற்றுள்ளும் போர் நிகழ்த்திய நிலத்தின் அழியாத ரேகைகள் ரத்தாம்பர நிறத்தில் விரிகிறது. முப்பது வருடத்திற்கும் மேலாக நீடிக்கிற போரின் வலியை துயரச்சொற்களால் வடித்திட்ட சயந்தனின் முதல் நாவலே ஆறாவடு.

பல குறும்போர்களுக்கு இடையிலான அமைதிக்காலத்தின் கதையை ஆறாவடுவிற்கு முன் புலம்பெயர் தமிழர்கள் புனைவாக்கியிருக்கிவில்லை. எண்பதுகளின் துவக்கத்தில் தமிழகமே திரண்டு இந்திய அரசே இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பு என வீதியெங்கும் முழங்கியதையும் மாணவர்கள் ரத்தத்துளிகளலான கடிதங்களை டெல்லிக்கு அனுப்பியதையும் ஏற்றே இலங்கைக்கு ராணுவத்தை இந்திய அரசு அனுப்பியது என தமிழர்களும், இந்திய ராணுவம் வந்தால் தமிழ் ஈழம் மலர்வது உறுதியென்று ஈழத்தமிழர்களும் நம்பத்தான் செய்தார்கள். அந்த நம்பிக்கையில் போவோர் வருவோருக்கெல்லாம் இளநீர் சீவித்தந்த அய்யாமார்களின் மனநிலையை எழுத்தாளன்  மட்டுமே அறிந்திட இயலும். எண்பத்தி ஏழின் இதே மனநிலையை ஈழம் இரண்டாயிரத்து மூன்றிலும் அடைந்தது. அப்போது புலிகளுக்கும் ரணிலுக்கும் அமைதிக்கான பேச்சுவார்த்தை துவங்கியிருந்தது. இருமுறையும் அமைதியெனும் சொல் நிலத்தில் வரைந்திட்ட துயர்மிகு கதைகளே ஆறாவடு. எண்பத்தி ஏழுக்கும், இரண்டாயிரத்து மூன்றிற்குமான கால இடைவெளிகளின் கதைப்பரப்பில் பெயரி ஐயா, நேரு ஐயா, அமுதன், வெற்றி, நிலாமதி, பண்டாரவன்னியன், தேவி…. ஏன் பிரபாகரனும், தமிழ்ச்செல்வனும், பாலசிங்கமும் கூட தங்களைப் பதிவறுத்திக்கடக்கிறார்கள் நாவலுக்குள்..

சகலவற்றிலிருந்தும் தப்பி வெளியேறுவது மனம் விரும்பும் செயல் அல்ல. கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் டயர் எரியூட்டப்பட்டு விடுமோ, பதுங்கு குழிக்குள் செல் அடிக்கப்பட்டு விடுமோ, போர்க்கருவிகள் சூழ ஆள்காட்டிகள் நம்மையும் மேலும் கீழும் தலையாட்டிக் காட்டி விடுவார்களோ, எனும் பதைப்புடன் நிலம் அகன்று சிதறித் தெறித்துக் கிடப்பவர்களின் புனைவுக் காலமிது. வெற்றிச் சொற்களால் கட்டமைக்கச் சாத்தியமற்ற போரின் வாதையை தனித்த மொழியால் கையகப்படுத்தி கடக்கத் துவங்கியிருக்கிறார்கள். இனியான தமிழ்ப்புனைவை எழுதப்போகிறவர்கள் இவர்களே. அவாகளின் துயருற்றுப்பீறிடும் மொழியைத் தாங்கிடுமா தமிழ் என்பதே இப்போதைய கேள்வி என்பதை ஆறாவடுவிற்குள் பயணிக்கும் வாசகன் அறியப்போவது நிஜம்.

நீர்கொழும்பிலிருந்து இத்தாலிக்குப் பயணிக்கும் தமிழ் இளைஞர்களின் கதை சீட்டாட்ட மேசையில் விரிகிறது. இதற்கு முன் கப்பலைக்கண்டிராதவாகள் கடலுக்குள் மிதந்தபடி கதையாடிக்கடத்துகிறார்கள் போர் சிதைத்த பெருநிலத்தின் கதையை. அரசதிகாரமும், போராளிக்குழுக்களும் விரித்து வைத்திருக்கும் கண்காணிப்பு வளையங்களை கடந்து வெளியேறியவர்கள் சோமாலியா கடற்கொள்ளையர்களின் புன்னகையை எதிர்கொள்கிறார்கள் பரிசாக நடுக்கடலில். பதட்டத்திற்கும் புன்னகைக்கும் இடையேயான பயணமே ஆறாவடு.

மூன்று தசாப்த காலத்தின் கதைகளை கடல் நுரையால் நெய்யப்பட்ட காகிதப்பரப்பில் அடுக்குகிறார்கள். யுத்தம் நிகழ்த்திய கொடுரத்தையும் வலிகளையும் தாங்காது தள்ளாடுகிறது கப்பல். போர் நிகழ்த்திய காயத்தின் வடுவை கடல் நீரிலிருந்து கிளம்பிச் சுழலும் உப்பங்காற்றாலும் ஆற்றிட இயலவில்லை. தனித்தனியே சொல்லப்பட்ட கதைகளை சேர்த்து தைத்து நாவலாக்கியுள்ளார் சயந்தன். இத்துனை கச்சிதமான மொழியால் கட்டமைக்கப்பட்ட புனைவு எப்போதாவதுதான் சாத்தியமாகிறது.

book_aaravaduபோராளிகளுக்கு இடுகிற பெயர்களின் வழியிலே இயக்கத்தின் திசைப்போக்கை கண்டுரைக்கும் ஆற்றல் மிக்கவன் புனைவெழுத்தாளன். பரந்தாமனின் பெயர்களான் இவானுக்கும் அமுதனுக்கும் இடையில் கூட வரலாற்றின் கரைபடர்ந்த பக்கங்களை வாசித்தறியலாம் நாம். இவான் எனும் பெயரை அவன் அடைந்த போது இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறுகிறது. அமுதன் என அவனை யாவரும் இழைக்கத் துவங்கிய நாளில்தான் இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்திற்குள் வரத்துவங்குகிறது என நாவல் பதிவு செய்கிறது. புரட்சி, அதிகாரமாற்றம், சேகுவரா, கொரில்லாயுத்தம் எனத்துவங்கிய போராளிக் குழுக்கள் இடது அரசியல் நீக்கம் பெற்று தமிழ்த்தேசிய அடையாளத்திற்குள் தங்களை ஒப்புக் கொடுத்ததன் வரலாற்று சாட்சியம் இதுவென வாசகன் கண்டடைகின்றான். அவனுக்கான திறப்புகளை வழி நெடுக விரித்து வைத்திருக்கிறது நாவல்.

எழுத்தாளன் எழுதிச்செல்லும் கதை முடிச்சுக்களை அவிழ்த்திடும் பொறுப்பினை வாசகனிடம் ஒப்படைத்து கடக்கிறது நாவல். இது படைப்பாளியும் வாசகனும் சேர்ந்து இயங்கச் சாத்தியம் கொண்ட கதைப்பரப்பு. அமுதனைப்போலத்தான் துவக்குகளோடு சயனைட் குப்பியை அணிந்தபடி போர்க்களத்தில் அலைவுற விரும்புகிறார்கள் போராளிகள். பதுங்கு குழிக்குள் ஷெல் அடித்ததால் இரண்டு கால்களையும் இழந்த பெண் அண்ணா என அமுதனைக் கையுயர்த்திக்காப்பாற்ற அழைக்கும் போது கூட அவள் குப்பியைத்தர சம்மதிக்கவில்லை. அமுதனும் தன்னுடைய கால் ஒன்றைப் போருக்கு கொடுத்த பிறகான நாட்களில்தான் அரசியற்துறைக்கு மாற்றப்படுகின்றான். அரசியல் நீக்கம் பெற்று போர்க்கருவிகளை சுமந்தலையும் இளைஞர்களால் நிறையத்துவங்கியது தமிழ்நிலம் என்பதையும் நாவல் மிக நுாதனமாக வாசகனுக்குள் கடத்துகிறது. “சண்டைப்போராளியாக இருப்பது எவ்வளவு நல்லது. சனங்களைச் சந்திக்க வேண்டியிருப்பதில்லை. அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அல்லாட வேண்டியதில்லை. என தனக்குள் சொல்லிக்கொண்டேயிருக்கும் அமுதனும் நேரு ஐயாவும் நாவலுக்குள் நிகழ்த்தும் உரையாடல் மிக நுட்பமானது.

நேரு ஐயா புலிகள் அமைப்பிற்கு உலகம் முழுவதும் நடந்தேறிய யுத்தத்தின் வரலாற்றை தமிழ்ப்படுத்தித் தரும் வேலை செய்பவர். அவர் பொதுவெளிகளில் ஒருவராயும் தனக்குள்ளும் அமுதனுடன் உரையாடும்போதும் வேறு ஒருவராகவும் வெளிப்படுகிறார். இவரையே அந்நாளைய அறிவுஜீவிகளின் அடையாளமெனக் கொள்ள இடமிருக்கிறது நமக்கு. ஓயாத தர்க்கத்தை அமுதனுடன் எப்போதும் நிகழ்த்துகிறார். அது அமுதனுக்குள் முழு முற்றாக இறங்குவதால்தான் அவரல்லாத போதிலும் கூட இந்த விடயத்தை ஐயா எப்படி எதிர்கொள்வார் கருத்துரைப்பார் என்கிற இடத்திற்கு அவனை நகர்த்துகிறது.

“சின்னச் சின்ன வெற்றிகளாலேயே கடைசி வரைக்கும் நாட்டைப்பிடிக்க முடியும் எண்டு நான் நினைக்கேல்லை. இது ஒரு பேரம் பேசுகிற சக்தி. இந்தச் சண்டை முடிஞ்ச உடன எப்படியும் சந்திரிக்கா பேச்சுக்கு வருவாள். இறுதி முடிவு சண்டையில வராது. அது மேசையில் தான் வரும்.” இப்படியான ஐயாவின் கூற்றால் எரிச்சல் அடைகிற அமுதன் “பிடிக்காத இயக்கத்திற்கு ஏன் வேலை செய்கிறீர்கள்” என்கிறபோது “சம்பளம் தாறியள்” என்ற பதிலையும் “ஆமிக்காரன் துட்டுத்தருவான். அவனிட்டையும் வேலை செய்வியளோ” என்பதை “ஒப்கோர்ஸ்” என சட்டென எதிர்கொள்வதையும் வாசித்துக் கடக்கும் வாசகனுக்குள் நேரு ஐயாவின் மங்கிய பிரதிமைகள் வரிசையாக வலம் வருகின்றன. தமிழ்நாட்டில் விதவிதமான பெயர்களுடன் உலாவரும் ஒருவரே அவர்கள் யாவரும் என்பதையும் அவரின் நாமகரணம் அரசியல் பிழைத்தோர் என்பதையும் கண்டுணர்கிறோம் நாம். இப்படி எழுதப்பட்ட பக்கங்களுக்குள் எழுதப்படாத பகுதிகளையும் நிறைத்து நகர்வதால் கனவுப்படைப்பாகிறது நாவல் விதவிதமான ரூபங்களில்.

ஏன்டா இந்தியாவோட கொட்டைமாதிரி கீழே கிடந்திட்டு ஆட்டமாடா போடுறீங்க என்கிற தலைப்பாகையும் தாடியும் வைத்த ஆமிக்காரனிடம் தான் சிக்குவதற்கு முன்பு வரை பெரிதாக தமிழ்நாட்டைப்பற்றி அமுதனுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்திய இராணுவம் வருகிறது எனக் கதையடிப்பட்ட போது இவனுக்கு இந்தியாவைப்பற்றி மூன்று சங்கதிகள் மட்டுமே தெரிந்திருந்தன. 1.இந்தியா ஒரு வெளிநாடு. 2. இந்தியாவின் ஜனாதிபதி எம்ஜிஆர். அவர் ஒரு தமிழர். 3. இந்தியாவில் ரஜினிகாந்த் விஜயகாந்த் முதலான நடிகர்களும் ராதா அமலா நதியா முதலான நடிகைகளும் வாழ்ந்து வருகிறார்கள் என்றே அவன் நம்பினான். நம்முடைய தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்மைப்பற்றிய புரிதலின் எல்லை அப்போது இப்படித்தான் இருந்தது என்பதை எதிர்கொள்ள நாம் சிரமம் கொண்டாலும் அதுவே நிஜமாகவிருந்திருக்கிறது.

இந்திய இராணுவம் வந்தால் ஈழம் மலருமென நம்பினார்களோ இல்லையோ, அமைதி நிலவும் போர்க்கருவிகள் எழுப்பிய புகைமூட்டம் அற்றிருக்கும் தமிழ்நிலம்.. பயமின்றி பள்ளி செல்வார்கள் நம்குழந்தைகள் என உறுதியாக நம்பியிருக்கிறார்கள். நம்பிக்கையைக் குலைத்து பதட்டத்தையும் துயரத்தையும் பலிகளையும் நிலத்தில் விரவச்செய்த ராணுவத்தின் கொடுரத்தை நிலாமதி எனும் பள்ளிச்சிறுமி நம்முன் கடத்துகிறாள். ஒழுங்கும் கட்டுப்பாடும் மிக்கது நம்முடைய இந்திய ராணுவம் என உளறிக்கொண்டலையும் ஜெயமோகன்களை தேவியெனும் விசித்திரியின் கதையால் எதிர்கொள்கிறார் சயந்தன்.

நிலாமதியின் வழித்தடமெங்கும் பருத்த அவளின் மார்பை வெறித்தலையும் கண்களே பதிந்து கிடக்கின்றன. அவளறிவாள் தலைமூடிய சாக்குப் பைகளுக்குள் உருளும் ஆள்காட்டியின் கண்களாயினும் சரி, மணல் மூட்டைகளுக்குப்பின்ஆயுதங்களுடன் வெறிக்கும் இந்திய ஆமிக்காரனின் கண்ணென்றாலும் வெறித்து நிலை குத்திக்கிடப்பது அவளின் மார்பின் மீதுதான் என்பதை அறிவாள் அவள். புலிகளை பொடியன்கள் எனப்போற்றிப் பராமரித்த தாயின் பிள்ளையிவள் என்பதாலே ஆமியின் கண்காணிப்பின் வளையத்திற்குள் சிக்கிய குடும்பமது. இப்படியான குடும்பங்களே முப்பதாண்டு கால சமரின் பின்புலமாக இருந்திருக்கின்றன. போர்க்களத்தில் மட்டும் இருந்திருக்கவில்லை புலிகள். “இப்ப பிடிச்சுக்கசக்கடா என வெற்று மார்புடன் தன் வீட்டிற்குள் நுழைந்த ராணுவக்காரனை எறிகுண்டோடு பாய்ந்து வீழ்த்துகிறாள் நிலாமதி. அவளும் தமிழ்ப்புலிதான் போராளிக்குழுக்களில் பயிற்சி பெற்றிராத புலியவள்.

போர் சிதைத்திட்ட மனித குலத்தின் துயரத்தை சொற்களற்ற செயல்களால் நாவலுக்குள் நிறைக்கிறாள் தேவி. தன் மரணம் இப்படியாகத்தான் வியாக்கியாணப்படும் என்பதையெல்லாம் அறிந்திடாத விசித்திரியவள். இட்ட வேலைகளை எடுத்துச்செய்யும் எளியவள். இந்தியன் ஆமிக்கோ அவள் பெண். விசித்திரியின் உடலை போர்க்கருவிகளின் அதிகாரம் சிதைக்கிறது. அப்படித்தானே நடக்கச் சாத்தியம். பதட்டம் நிறைந்த நிலத்தில் நிகழும் மரணம் எதிர்கொள்ளப்படும் விதத்தில்தான் புனைவு உச்சம் அடைகிறது. “தேவியொரு உளவாளியாம். ஆமிக்காரங்களுக்கு மெசேச் எடுத்துக்குடுக்கறவளாம்.” “இவள் ஏதோ ஆமிக்காரங்களோட போய் சண்டை பிடிச்சவளாம். அவங்கள்தான் சுட்டுட்டாங்கள்” “ஆமியோட தொடர்பு எண்டு இயக்கம்தான் போட்டுட்டுதாம்… என தேவியின் மரணம் எதிர்கொள்ளப்படுகிற போதும் கூட எனக்குப் பசிக்கேல்லை எனக்குப் பசிக்கேல்லை என்னைய விட்டுறுங்க என குழறி இந்தியன் ஆமிக்கேம்பிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் தேவிகளால் நாம் பெரும் அவஸ்தைக்குள்ளாகிக் கொண்டிருக்கிறோம்.

புனிதப்படுத்திடும் தன்மையிலான வெள்ளைப்பக்கங்களை மட்டும் கொண்டதல்ல ஆறாவடு. அதன் கருமையும் இணைத்தே பதிவு செய்துள்ளது. அமுதனையும் அவனுடைய காதலையும் இயக்கம் எதிர்கொண்ட விதம், புளுபிலிம் சிடிக்களை பெட்டியில் போடுங்கள் என பிரச்சாரம் செய்திட்ட ஒழுக்க மேனேஜேராகிடும் அதிகாரத்தின் தனித்துவம் என இன்னபிறவற்றையும் நாவல் பதிவுறுத்துகிறது. அதிலும் அமுதனைப்பேட்டி எடுக்கிற பிரெஞ்சுப் பத்திரிகையாளினியின் குரல் மிக முக்கியமானது. அது சயந்தனின் குரலாகவும் சில இடங்களில் நம்முடைய குரலாகவும் இருக்கச் சாத்தியம் உண்டு.

திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவர்களிடம் அடிவாங்கி குடும்பத்திற்குள்ளேயே உழலும் தமிழ்ப்பெண் போராளிகளும் இருக்கிறார்களே எனும் பத்திரிகைகாரியின் கேள்விக்கு அமுதன் இப்படியான கேள்விகளுக்கு நீங்கள் தமிழினி அக்காவைத்தான் தொடர்பு கொள்ள வேணும் எனும் பதிலால் சட்டெனக் கடக்கிறானே எதனால்.. பேட்டிக்குள் அமுதனின் போர்க்காட்சிகள் விரிகின்றன. மனித மனம் எல்லாவற்றையும் கடந்து வாழத்துடிக்கிறது என்பதால்தான் அவனின் கால்கள் நீக்கப்பட்ட நொடியில் தோன்றிய கனவின் காட்சியை பேட்டியில் சொல்லாது நமக்கு மட்டும் சொல்கிறான். “கைகளில் மலர்களை ஏந்திய வெள்ளைச் சிறுமியொருத்தி என் முழங்கால்களுக்கு கீழ் நின்று அண்ணாந்து என்னைப்பார்த்து நன்றியுடன் சிரித்தாள். பின் தன் கைகளை நீட்டினாள். நான் பற்றிக்கொண்டேன். அப்பொழுது எனக்குக் கால்கள் இருந்தன…. ”

எதற்காக இவ்வளவு இழப்புக்களும் சேதாரங்களும் எனும் கேள்வியை எதிர்கொள்ளாமலா போராளிகள் இயங்கியிருப்பார்கள். அதிகாரம் யாவற்றையும் நிர்மூலமாக்குகிறது. போர்க்கருவிகள் இருக்கும் இடம் வேறாக இருக்கலாம். ஆனால் செயலுக்கும் இயக்கத்திற்கும் பேதமிருப்பதில்லை. இந்திய ஆமிக்காரனின் தலைப்பாகையும் தாடியும் தோற்றுவித்த பயத்திற்கும் இலங்கை இராணுவத்தின் போர்க்கருவிகள் விளைவித்த அச்சத்திற்கும் வித்தியாசம் இருக்க முடியாதுதான். மோட்டார் பைக்குகளில் சைனட் குப்பிகள் காற்றில் பறந்திட துவக்குகளோடு வலம் வருகிற போராளிகளைப் பார்த்தும் அதிர்ச்சியடைகிறானே தமிழன் எனும் கேள்வியைக் கேட்காமலிருக்க முடியாது. தலையாட்கள் ராணுவத்திற்கு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் போராளிக்குழுக்களுக்கும் தலையாட்டிகள் அவசியமாயிருந்ததே எதனால் எனும் கேள்விகளும்தான் ஆறாவடுவினால் வாசகனுக்குள் எழுகிறது.

பயத்தையும் பதட்டத்தையும் அச்சத்தையும் முப்பதாண்டுகளாக பழக்கப்படுத்தியிருக்கின்றன போர்க்கருவிகள். ஈழத்தில் வாழ்வது குறித்த அச்சமும் எச்சூழலையும் கடந்து வாழத்துடிக்கும் மனமுமே சாகச பயணங்களுக்குள் தன்னை ஒப்புக்கொடுக்கத் துாண்டுகின்றன. நீர்கொழும்பில் இருந்து கிளம்பிய கப்பலில் அமுதனுடன் பயணித்தவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல. சிங்களர்களும் கூட நிலம் விட்டகன்று இத்தாலிக்கு விரைகிறார்களே ஏன்.. “ பண்டாரண்ணை.. ஒண்டு கேட்டால் குறை நினைக்கக் கூடாது. எங்களுக்கு நாட்டில எவ்வளவோ பிரச்சனை இருக்கு. குண்டு ஷெல் பிளேனடி, ஆமி பொலிஸ் பதிவு, ஜெயில் எண்டு எக்கச்சக்கம். நீங்கள் என்னத்துக்கு நாட்டை விட்டு வெளியேற வேணும்…..”  “அதிகாரிகள் ஒருபக்கத்தாலும், புலிகள் மறுபக்கத்தாலும் வதைத்தெடுத்தார்கள். எல்லாவற்றைப்பார்க்கிலும் கொடும் வதையாக கனவுகள் இருந்தன. ஒரே இரவின் தொடர் கனவுகளே அவனை இத்தாலிக்குத் துரத்துகிறது எனும் கதையாடல் மனித குலத்தினை நிர்மூலமாக்கிடும் போரின் கொடுந்துயரத்தின் சாட்சிதானே..

மொழிச்செயற்பாட்டில் கூட முற்றுப்புள்ளி அதிகாரத்தின் குறியீடுதான். எல்லாம் முடிந்துவிட்டது என்பதை ஒருபோதும் கலைஞன் ஏற்பதில்லை. எண்பத்திஏழில் சிங்கள ராணுவம் கொன்றழித்த தமிழ் உடல்களின்   தீராத வெப்பத்தின் மூச்சிலிருந்தே விடுதலைப்புலிகள் இயக்கம் வலுப்பெற்றது. போன் இன்னும் முடியவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப்பின் எல்லாம் முடிந்துவிட்டதா எனும் நம்மை அச்சறுத்தும் கேள்விகளை கடலில் மிதக்கும் அமுதனின் செயற்கை மரக்கால்களால் எதிர்கொள்கிறார் எழுத்தாளன்.

நடுக்கடலில் யாரும் அறியாமல் சாகத்தானா இங்கு வந்தோம் எனும் பதட்டத்தை மொத்தக்கப்பலும் அடையும்போது அது இருந்ததற்கான எல்லாத் தடயங்களையும் அழித்து விட்டது கடல். கடலினுள் உயிர் துளி துளியாக பிரிகிற நொடியில் தன்னுடைய செயற்கைக் காலை பிய்த்து வெளித்தள்ளுகிறான் அமுதன். அவனின் கடைசி எண்ண அலைகளை ஆற்றலுடன் கண்டுணர்ந்து நமக்குச் சொல்கிறார் சயந்தன். “பொங்குகிற அலைகளையும் கடலையும் தோற்கடித்து விடுகிற வெறியில் பச்சை நிறத்திலான பனியனை அணிந்த ஆமிக்காரனொருவன் நீந்திக்கொண்டிருந்தான். அம்மா தலைவிரி கொலமாய் இந்தியச் சிப்பாயொருவனின் முன் நின்று தலையிலும் வயிற்றிலும் அடித்துக் குளறினாள். அகிலாவின் வெற்று மார்புகள் சுட்டன. அவள் “இண்டைக்கு மட்டும்தான் நெடுகலும் கேட்கக்கூடாது” என்று காதுக்குள் கிசுகிசுத்தாள்..

பளபளப்பான பைபர் கிளாஸினால் வார்க்கப்பட்டிருந்த இவனது வெண்புறா செயற்கைக் கால் முன்னைப் போல் கொப்பளிக்கும் இரத்தமும் பச்சை வரிகளால் ஆன பிய்ந்துபோன சீருடைத்துணியும் இன்றி வேகத்தோடு தண்ணீரில் மிதந்து செல்கிறது. இந்தச் செயற்கைக் காலை சயந்தன் கொண்டு வந்து சேர்க்கும் இடமே இந்த நாவலின் உச்சம். அது போரால் தன்னுடைய கால்களை மட்டுமல்ல தன் செயற்கைத் தகரக்காலையும் இழந்த இத்ரீஸ் கிழவனை வந்தடைகிறது. முப்பது வருடங்களுக்கு முன் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் கொண்ட எரித்திரிய கிழவன் அவன். சீனாவிற்குப் பயிற்சிக்குப் போய்த் திரும்பியிருந்த ஐசேயாஸ் அபேவர்கியுடன் எரித்திரிய விடுதலை முன்னணியில் படைத்தளபதியாக இருந்தவன் இத்ரிஸ். எரித்திரயாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் மூண்ட பெரும் யுத்தத்தில் கால் இழந்த இத்ரீஸின் கைகளில் வந்தடைகிறது ஈழப்போராளி விடுதலைப்புலியின் செயற்கைக் கால். புலியின் கால்களைப்பெற்ற எரித்திரிய விடுதலை முன்னணியின் தளகர்த்தன் அதற்கு முத்தமிடுகிற அந்த நொடியில் எல்லாம்தான் நமக்குள் உருவாகிறது. வரலாற்றுப் புள்ளி விபரங்களுக்குள் சிக்கிடாத அதீத மணித்துளிகள் அவை. கணக்கீடுகளை கலைத்துப் போடும் ஆற்றல் மிக்கவன் கலைஞன். எச்சூழலுக்கும் ஏற்ப எவ்விதத்திலாவது வாழ்ந்துவிடத்துடிக்கும் உயிர்வேட்கையைப் படைப்பாற்றலுடன் கலை நயத்தோடு சொல்லிச் சென்ற வரலாற்றுப் பெரும்புனைவே ஆறாவடு.

-கல்குதிரை
பனிக்கால இதழ்
2013