ஆறா வடு – பாரதி.சு

சமீபத்தில் வெளியான எந்தவொரு தமிழ் நாவலும் சயந்தனின் “ஆறாவடு” நாவல் அளவிற்கு சராசரி வாசக மட்டத்தில் அதீத கவனிப்பு பெற்றிருக்கவில்லை என்பது என் எண்ணம். சமூக வலத்தளங்களிலாகட்டும் அல்லது இணையப் பதிவுகளிலாகட்டும் தொடர்ந்தும் “ஆறாவடு” பற்றிய சிலாகிப்புகளோ அல்லது விமர்சனங்களோ தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறன. ஆக, சயந்தன் “எலக்கிய வட்டங்கள்” தாண்டி, வெகுசன வாசகர்கள் மத்தியில் தனது முதல் நாவலிலேயே வெற்றிகரமான நாவலாசிரியராக பரிணமித்திருக்கிறார். வாழ்த்துகள் சயந்தன்.

சயந்தனின் எள்ளல் தொனியிலான சிறுகதைகள்/ கட்டுரைகள் ஏலவே எனக்கு அவரது இணையப்பக்கமூடாக அறிமுகம். அவரது “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” மற்றும் “ரமில் ரைகர்ஸ் ப்ரீடம் பைற்ரர்ஸ்” போன்ற சிறுகதைகளில் நிஜங்களை எள்ளி நகையாடி கதை சொல்லும் பாணி எனக்கு மிகப் பிடித்தமானது.

ஆறாவடு நாவல் மொத்தமாக இருபத்தொரு அத்தியாயங்களை உள்ளடக்கியது. நாவல் மூன்று தசாப்த ஈழப்போராட்டக் காலத்தை, அதாவது இந்திய அமைதிபடை (?) வருகை முதல் 2003ம் ஆண்டு வரையான காலப் பகுதியை சில நிதானிப்புகளுடனும், சில பாய்ச்சல்களுடனும் விபரிக்கிறது. நாவலின் பெரும்பகுதி 1998ற்குப் பின்னரான காலப்பகுதியிலேயே நகர்கிறது. வெறும் 187 பக்கங்களில் அதாவது 20 அத்தியாயங்களில் மூன்று தசாப்த கால ஈழ மக்களின் கதையை பேசுவது இலகுவானதல்ல. அதனால்தான் ஆசிரியர் சில இடங்களினை மெளனமாக கடந்திருக்கிறார் போலும். அதுவும் நன்மைக்கே… இல்லாவிட்டால் இந்த நாவலினை “முக்காடிட்டு” படித்துவிட்டு மெளனமாக கடந்திருப்பர்.

ஆறாவடு நாவலினைப் படிக்கும் பொழுது அக்கதை மாந்தர்களையும் சூழலையும் மிக நெருக்கமாக உணர்ந்தேன். நாவலின் மொழிநடையும்,,

நான் அறிந்தும் கேட்டும் கடந்து வந்த சம்பவக் கோர்வைகளின் விபரிப்பும் இதற்கு காரணமாகவிருக்கலாம். நாவலின் சம்பவப் பதிவுகள் மனக்கண்ணில் விரிந்து, பெருமூச்சு வழியே இயலாமையை கரைப்பது சயந்தனின் எழுத்துவன்மைக்கு கிடைத்த வெற்றி. ஆறாவடு நாவல் மூன்று தசாப்த கால ஈழ மக்களின் வாழ்வை விடுதலைப் புலிகள் மட்டத்திலிருந்தும், சமூக மட்டத்திலிருந்தும் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறது. நாவலில் பிரதானமாக வரும் அமுதன் என்கின்ற முன்னாள் புலிப்போராளி பாத்திரமூடாகவும், நேரு அய்யா என்ற பாத்திரமூடாகவும் விடுதலைப்புலிகள் அமைப்பினை நோக்கி இந்த நாவல் எத்தனையோ பேருக்கு வாய் வரை வந்து உமிழ் நீருடன் தொண்டைக்குள் அமிழ்ந்து போன விமர்சனங்களை அவர்கள் சார்பாக முன்வைக்கிறது. புலிகளுக்கு எதிரான வெறும் காழ்புணர்ச்சி பிரதிகள்/ அல்லது புலிகளுக்கு “ஜால்ரா” தட்டும் பிரதிகள் மத்தியில் இந்த நாவலின் சுயவிமர்சன கதைப்போக்கு தனித்துவ இடத்தினைப் பிடிக்கிறது.

எனக்கு நாவலில் மிகவும் பிடித்தது அத்தியாயம் ஏழு. நேரு அய்யா என்கின்ற கதாபாத்திரம் எனக்கு நான் சந்தித்த சில மனிதர்களின் முகங்களின் பிம்பங்களாகவே உணர்ந்தேன். அதே புத்திக்கூர்மையான கதாபாத்திரம் அத்தியாயம் பதினொன்றில் (பக்.114ல்) நிறம் மாறி “எனக்கு அப்பவே தெரியும்” ரீதியில் நிறம் மாறுவது பாத்திரப்படைப்புக்கு விரோதமாகவும், நடைமுறை யதார்த்தமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. நாவலின் இருபத்தோராவது அத்தியாயம், அதாவது எரித்திரிய எபிசோடு வலிந்து திணிக்கப்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. நாவலின் கதைப்போக்கில் ஒட்டாததாகவே அந்த அத்தியாயம் இருக்கிறது.

ஆறாவடு என்கின்ற தலைப்பு ஈழத்தமிழருக்கெல்லாம் ஆற்றுப்படுத்த முடியாத ரணமான மூன்று தசாப்த ஈழப்போரின் அவலங்களை மையப்படுத்திய கதையென்பதால் சயந்தன் தெரிவு செய்திருக்ககூடும். நாவலின் அட்டைப்படம் வாசகன் வாசிக்கும்போது எதிர்கொள்ளப்போகும் மனநிலையை குறியீடாக குறிப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. நினைவுகளின் சுழலுக்குள் சிக்கித் தவிக்கப்போகும் வாசகனின் எண்ணவோட்டம் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை ஆழிச்சுழலுக்குள் அகப்பட்ட படகுப் படம் சுட்டி நிற்பதாக கருதலாம்.

என்னுடைய அப்பா இந்தக் கதையை வாசித்துவிட்டு பின் அட்டையில் உள்ள சயந்தனின் அழகான படத்தைச் சுட்டி…” ஏன்ராப்பா!! இவன் என்ன இயக்கத்தில இருந்து விலத்தின ஆளோ??..” என்று கேட்டார். இதுவே சயந்தனின் படைப்பு வெற்றிக்கு சாட்சி.

மீண்டும் வாழ்த்துகள் சயந்தன்.