எனக்கும் ஒரு சாதி சான்றிதழ்

மண்டபம் ஏதிலிகள் தங்ககத்திலிருந்து திருச்சிக்கு சென்று தங்கியிருந்த காலப் பகுதி அது!
என்னை அங்குள்ள ஏதாவது பள்ளியில் சேர்த்து விடுவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் மூலமாக அறிமுகமான சட்டத்தரணி ஒருவர் தான் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் அனுமதி மறுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு பள்ளிக்கு இருக்கின்ற வரைமுறைகள் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு அமையவே அனுமதிகள் தரப்படவில்லை என்றே நான் நம்புகின்றேன்.
இருப்பினும் நான் படகில் வந்தவன் என்ற காரணமும் அவர்களுக்கு ஏதாவது சிக்கல்களை ஏற்படுத்தியிருக்க கூடும்.
இவ்வாறாக ஓர் பள்ளியில் எனது அனுமதிக்காக கொஞ்சம் இறங்கி வந்து T.C மற்றும் சாதிச் சான்றிதழ் என்பவற்றை கொண்டு வர சொன்னார்கள்.
இவை மீண்டும் எனக்கு பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தன.
முதலாவது அகதியாக படகில் ஏறி வந்த நான் T.C கொண்டு வரவில்லை
இரண்டாவது சாதிச் சான்றிதழ் என்ற ஒன்று என்னிடம் எங்களிடம் இலங்கையில் இல்லவே இல்லை.
இது சாதி என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு அவர்கள் அப்படி கேட்டது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது என்கிற எண்ணத்தை ஏற்படுத்த எழுதப்பட்டதல்ல.
சாதி என்பது என் காலத்தில் முன்னிலையில் பேசப்படாத விடயமாகவே இருந்து வந்தது. (மற்றும்படி அது பேசப்பட்டது.)
ஒருவரைப் பார்த்து நீங்கள் என்ன சாதி என்று கேட்பது பண்பற்றது என்ற கருத்தியலில் வளர்ந்த எனக்கு அவ்வாறு கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் ஒருவித சங்கடத்தை உணர்த்தின.
சாதிக்கென தனியான சான்றிதழ் எதுவும் இலங்கையில் கொடுக்கப்படுவதில்லை. நமது பிறப்பு பதிவு சான்றிதழில் சாதி என்கிற ஒரு பிரிவு இருக்கிறது. அதில் இலங்கைத் தமிழர் என்று குறிக்கப்படும். அவ்வளவே
இதற்கிடையில் எனக்கான ரி சி யினை இலங்கையிலிருந்து எடுப்பித்தால் சாதிச் சான்றிதழை போலியாக தயாரிக்கலாம் என்று சட்டத்தரணி கூறினார்.
அவ்வாறு தயாரிக்கும் போது பிற்படுத்தப்பட்ட (பிற்பட்ட அல்ல) சமூக அமைப்புகளை தெரிவு செய்தால் எதிர்காலத்தில் இட ஒதுக்கீடுகளின் நல்ல பலன் பெற முடியும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
நான் இறுதியாக கல்வி கற்ற பள்ளி வன்னியில் இருந்தது. அந்தச் சமயத்தில் தான் இலங்கை ராணுவத்தினர் வன்னியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு பாதை சமைக்க ஜெயசிக்குறு சமரை நடத்திக்கொண்டிருந்தனர்.
வன்னிக்கான எந்த தொடர்புகளும் அற்ற நிலை. எனது ரி சி யினை பெறவே முடியவில்லை.
இப்படியாக மாதங்கள் அள்ளுண்டு போனது.
இறுதியாக கொழும்புக்கும் புறப்பட்டாயிற்று.
இதனை எனது ஊரின் உறவினர்களுக்கு சொன்னபோது ‘கன்றாவி.. அதுக்கெல்லாம் சேட்டிபிகேற் இருக்கோ’ என்று ஆச்சரியப்பட்டனர்..
அவர்களில் சாதியை ஏற்றுக் கொண்டவர்களும் அடக்கம்.