ஆறா வடு – சேயோன்

எந்த உலத்தில் இது விளைந்தது?’ என்று சேயோன் கேட்கிறான், சயந்தன் எழுதிய ஆறாவடு புதினத்தை வாசித்தபிறகு. மிக அற்புதமாக வந்திருக் கிறது இப்புனைவு. ஈழத்தமிழத்தேசிய அரசியல் பற்றிய புதினங்கள் ஒரு கைவிரல்களுக்குள் மடிபடக்கூடியன. மு.தளையசிங்கத்தின் ஒரு தனி வீடு, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர் உலகம், ஷோபா சக்தியின் கொரில்லா, ம் என்ற ஐந்து புதினங்களின் பிறகு வந்திருக்கிறது ஆறாவடு.

ஆயினும் சேயோன் இதனையே முதன்மையான நாவல் என்பான். எள்ளல்நடை (Satire) சிற்சிலசமயங்களில் சிறுகாயம் ஏற்படுத்தினாலும் பொறுப்புணர்வுடன் கூடிய புதினமாகப்படுகிறது ஆறாவடு. இந்தச் சின்னப்பையனில் இத்தனை ஆற்றலா என்று வியந்து மாய்ந்து போகிறான் சேயோன்.

கெரில்லா, ம் என்ற புதினங்கள் தமிழ்த்தேசிய அரசி யலை மறுதலித்தே எழுதப்பட்டன. கபடம், மெல்லிய இழையாக ஊடுருவியிருந்தது இப்புதினங்களில். ஏனைய மூன்றும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துகின்ற போதும் புதியதோர் உலகம் மாத்திரமே கலாநேர்த்தியுடன் வந்தது. ஆனால் சயந்தன், ஆறாவடுவில் நிகழ்த்தும் புனைவு மேற்சொன்ன எந்தப் புதினங்களும் எட்டிப்பிடிக்க முடியாத ஒன்று. இலங்கைக் கடற்கரையில் தொடங்குகின்ற இப் புதினமானது எரித்திரியக் கடற்கரையில் முடிகிறது. போருக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்று தான். அது சனங்களைத் தின்பது. போர் தின்ற சனங்களின் கதையை உருக்கமாகச் சொல்லியிருக்கிறார் சயந்தன். கணிப்பிற்குரிய கதைஞன் வந்து சேர்ந்தான்’ என்று சொல்ல விரும்புகிறான் சேயோன்
-ஒரு பேப்பர்