ஆறா வடு – த.அரவிந்தன்

ஆறா வடு – படித்தேன். நாவல் அழுத்தமாக வந்திருக்கிறது. இந்த நாவலில் வரும் அமுதன் பாத்திரத்தை நீங்கள் என்றே கருதி படித்து முடித்தேன். தீபம் உரையாடலைப் பார்த்தபோதுதான் நீங்கள் இல்லை என்று தெரிந்தது. முன் முடிவுகளோடு புனையப்பட்ட ஒன்றாக இந்த நாவல் அமையாதது சிறப்பு. புலிகள் மீதான, இந்திய ராணுவம் மீதான அரசியல் பார்வையையும் அவ்வாறே பதிவு செய்திருக்கிறீர்கள்.

நிவாரணமிட முடியாத வலிகளாகளோடே 21 அத்தியாயங்களும் இருக்கின்றன.இந்த நாவலில் இரண்டு பதிவுகளை முக்கியமாகப் பார்க்கிறேன். ஒன்று: சாமியின் துணியை எடுத்து சமைந்த பெண்ணும் பயன்படுத்து நிகழ்வு. இரண்டும்: வள்ளத்தில் சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து பயணிக்கும் இத்தாலி பயணம். (சிங்களவர்கள் அதிகம் இருந்தால் நம் கதி என்ன? என்று ஒரு தமிழர் கேட்பதையும் கருத்தில் கொண்டுதான்)

முதலில் கடவுளும் மனிதனும் சமமாகும் கட்டம். இரண்டாவது மனிதனும் மனிதனுமே தானே கட்டயெழுப்பிக் கொண்ட எல்லா நிலைகளையும் கடந்து ஒருங்கிணையும் கட்டம். இதன் மூலம் எல்லா வேறுபாடுகளைச் சூழல்கள் மாற்றியமைத்துவிடும் என்றும் அந்த இயக்கம் இயற்கையிடம் மட்டுமே உள்ளது என்கிற புரிதல் வருகிறது.

நாவலில் 21 அத்தியாயத்தில் இத்ரிஸ் கிழவுனுக்கு செயற்கைக்கால் கிடைப்பது மட்டும் முன் முடிவுகளோடு புனையப்பட்ட ஒன்றாகத் துருத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அந்த யுக்தியைப் பலர் பாராட்டுவும் கூடும்.