ஆறா வடு – கரு.ஆறுமுகத்தமிழன்

ஆறாவடு (புனைவு), சயந்தன், தமிழினி வெளியீடு ஒவ்வொரு நாளும் கண்ணுக்கு முன்னால் நடனமாடிக் கெக்கலி காட்டுகிற சாவை முறியடிப்பதற்கு வாழ்வையே விலையாகக் கொடுக்கும் கதை ஆறாவடு.
தொடர்ந்து போருக்கு மத்தியில் வாழும் புலி ஒருவன், சண்டையில் கால் இழந்ததால் அரசியல் பிரிவுக்கு அனுப்பப்படுகிறான். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக விடப்பட்ட போர் இடைவெளியில் அவனுக்கு நேர்கிற காதல்… அதைத் தொடர்ந்து என்ன விலை கொடுத்தாவது வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற அவனுடைய விருப்பம்…

துப்பாக்கி முனையில் ஈபிஆர்எல்எஃப் அழைத்தபோது அவர்களோடு நின்றவன், காலச்சக்கரம் சுற்றி வந்தபோது புலியாக உடன்படுகிறான்! ஒவ்வொரு கட்டத்திலும் அவன் பெறுகிற கருத்தேற்றங்கள், அவற்றுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தன் இருப்பை நியாயப்படுத்திக்கொள்கிற அவனது முயற்சி…! தான் முடங்கிய பொறிக்குள்ளிருந்து வெளியேற முயல்வதும் பிழை விடுவதும் மீண்டும் முயல்வதும்…! வாழவேண்டும் என்பதுதான் முகாமையானது! எல்லாவற்றையும்விட வாழ்வதைத்தான் அவன் அதிகம் விரும்பியிருக்கிறான்! நியாயம்தான்! தன்னுடைய விருப்பங்களுக்கெல்லாம் அடியாதாரமாக மின்னிக்கிடக்கிற வாழ்வாசை அவனை உந்துகிறது!

அவன் தப்பிச் செல்வதற்கு வரவேண்டிய காசெல்லாம் சிக்கலில்லாமல் வருகிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, சாவிலிருந்து விலகிச் செல்வதற்கு அவன் வைக்கவேண்டிய பணயம் ஒன்று இருக்கிறது-அது அவனது வாழ்வு! கடந்துபோனால் உன் வாழ்வு உனக்கு; அகப்பட்டுக்கொண்டால்…! நிச்சயமின்மையிலிருந்து வெளியேறிப் புகல்தேட நினைக்கிற ஒருவன் தேடிய புகலிடமும் நிச்சயமின்மைதான்! வாழ்விலும் சாவிலுமான நிச்சயமின்மைகளின் இடைவெளிகளை நயமாக இட்டுநிரப்புகிறது ஆறாவடு! இந்த நல்ல புனைவை ஆர்வமுள்ளவர்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்!