ஆறா வடு – கறுப்பி

”இனிமேல் படைப்புக்களை விமர்சனம் செய்பவர்களை, அப்படைப்பில் இருக்கும் அரசியலை தவிர்த்து படைப்பின் மற்றைய குணங்களை விமர்சனத்திற்குட்படுத்துக்கள் என்று கேட்டுக்கொள்ளல் நன்று”

”இப்போது இரண்டு இலக்கியத் தரப்புக்கள் உருவாகி விட்டன. ஒன்று யோ.கர்ணனைத் துாக்கிப் பிடிக்கின்றது, மற்றது சயந்தனைத் துாக்கிப் பிடிக்கின்றது’

’இப்போது இரண்டு சார்புநிலைகள் இலக்கியவிமர்சனங்களில் உருவாகி விட்டன. ஒன்று புலிசார்பு இலக்கியங்கள், மற்றையது புலி எதிர்ப்பு இலக்கியங்கள்”

”உலகமே சார்பு நிலையில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது, அதிலிருந்து எவரும் தப்ப முடியாது, கைலாசபதி, சிவத்தம்பிகூட சார்பு நிலை இலக்கியவிமர்சகர்களாக இயங்கியவர்கள்தாம் எனவே நாம் அவ்வாறு செயல்படுவது தவறல்ல. அது தவிர்க்க முடியாதது நாம் அப்படிதான் செயல்படமுடியும்”

”விடுதலைப் புலிகள் தவறு செய்தார்கள்தான், ஒத்துக்கொள்கின்றேன் ஆனால் எந்த ஒரு போராட்டத்தையும் எடுத்துப் பாருங்கள், அங்கெல்லாம் தவறுகள் நடந்துதான் இருக்கின்றன எனவே இதுவும் தவிர்க்க முடியாதது, அது அப்படித்தான் இருக்கும் அப்படித்தான் செயல்பட முடியும்”.

அண்மைக்கால இலக்கிய அரசியல் கூடல்களின் போது காதில் விழுந்தவை.

எனது நாவல் வாசிப்பில் எனக்கான நிறைவைத் தரும் படைப்புகளின் குணாதிசயங்கள் என்று நான் உள்வாங்கி் வைத்திருப்பவை.

சமூகப்பிரக்ஞை கொண்ட கருவோடு, பாத்திரக்கட்டமைப்புக்கள், நிலவியல் கட்டமைப்புக்கள் என்பன நிறைவாக இருத்தல் வேண்டும். சிறுகதைகள் போலல்லாது நாவல் ஒரு நீண்ட பயணத்திற்கு எங்களை ஆயத்தம் செய்வதால் இவை நிறைவாக இருக்கும் பட்சத்தில் எனது பயணம் ஒரு போதும் சலிப்புத் தட்டியதில்லை. (இரசணை என்பது மனிதனுக்கு மனிதன் வேறு படுகின்றது என்ற புரிதலோடு) நாவலின் இரண்டு அத்தியாயங்களைத் தாண்டும் போது ஒரு வாசகியாக நாவலின் கட்டமைப்புக்குள் புகுந்து கொண்டு நீரோட்டம்போல் தடைகளின்றி புனைவாளர் என்னை அழைத்துச் செல்லும் பாதையில் முன்னேற முடிகின்றது.

மொழியாக்கம் செய்யப்பட்ட நாவல்களை வாசித்த பின்னர் அதன் நிலவியல் கட்டமைப்பின் தரவுகளை கூகிள் செய்து மேலும் அது பற்றி அறிந்து கொள்வதன் மூலம் ஒரு அறியப்படதா நாட்டின், நகரத்தின் அல்லது கிராமத்தின் இயற்கை வனப்பை, கலாச்சரப் பண்புகளை உள்வாங்கிக் கொண்டு, அதனுடன் சிறிது காலமேலும் வாழ்ந்து விட முடிகின்றது. (பயணங்கள் சாத்தியப்படாத பட்சத்தில் இது ஒரு நிவர்த்தி செய்யும் யுக்தியாகிவிட்டது)

இதன் அடிப்படையில் அண்மைக்கால எனது வாசிப்பில் இரு முக்கியமான நாவல்களான

”ஆறா வடு”, ”கசகறணம்”  இரண்டையும் ஆராய்ந்து பார்க்கும் ஆவல் எனக்குள் எழுந்தது, இருப்பினும்  ”கசகறணம்” புலி எதிர்ப்பு நாவல் என்ற வகைக்குள் அடங்கி புலி எதிர்ப்பு வாதிகளால் துாக்கி ஏற்றப்பட்டதாகவும் (அதற்குள் நானும் அடக்கம்) ”ஆறா வடு” புலி ஆதரவு நாவல் என்ற வகைக்குள் அடங்கி புலி ஆதரவாளர்களால் துாக்கி ஏற்றப்படுவதாகவும் ஒரு விமர்சனத்திற்குள் விமர்சனம் ஒன்று ஊடாடிக்கொண்டிருக்கின்றதையும் உணரமுடிகின்றது.  (ஆறா வடு எதற்காக இப்படியொரு சார்பு நிலையைத் தட்டிக்கொண்டது என்பது புரியா புதிர்)

இவற்றையெல்லாம் விடுத்து, இந்நாவல்களின் அரசியலை எல்லாம் தவிர்த்து அதன் மொழி வடிவம் கட்டமைப்புப் போன்றவற்றை மட்டும் விமர்சிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் எனக்குள் விஞ்சி நிற்கின்றது.

இரண்டுமே ஈழப்போராட்டத்தின் சாட்சியங்களா உருவாக்கப்பட்ட படைப்புக்கள். இரண்டுமே நேர்மை அரசியலைத் தளமாகக்கொண்டு புனையப்பட்டவை என்பதை அதன் காலகட்டத்தில் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்து புலம்பெயர்ந்தவர்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. எனவே தகவல்களின் விமர்சனங்கள் வைத்தல் என்பது வெறும் சார்பு நிலையாக மட்டுமே அமைந்து விடும்.

நாவல் வடிவமைப்பில் என் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் பாத்திரக்கட்டமைப்பு, நிலவியல் கட்டமைப்பு என்பனவற்றின் மூலம், ”கசகறணம்” முழுமையான அனைத்துக்கட்டமைப்புக்களையும் தன்வசம் கொண்ட நாவலாக என்னை வாசிப்பின் போது தன்னோடு உறவாட வைத்தது. படைப்பில் ஒரு நாயகத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத விமல் குழந்தைவேலின் பாத்திரத் தெரிவு, அதாவது நாவலின் முக்கியபாத்திரங்கள் என்பன ஒரு வயது முதிர்ந்த மையிலிப்பெத்தா என்று அறியப்படும் பெண்மணியும், ஒரு சந்தையும் என்பது இங்கே பிரத்தியே முக்கியத்துவம் பெறுகின்றன.  அது மட்டுமன்றி நாவலின் அனைத்துப் பாத்திரங்களையும், நிலவியல் அமைப்புகளையும் புனைவாளர் நுணுக்கமாக அவதானித்து செதுக்கியதன் மூலம் வாசகர்களை அந்த நிலத்திற்கும், அந்த மக்களிடமும் அழைத்துச் சென்றிருக்கின்றார். இந்த நெருக்கம் ஒரு வாசகிக்கு நாவலின் பாத்திரங்களுடனும்,  மண்ணுடனும் ஏற்படும் பட்சத்தில் பாத்திரங்களின் அனைத்து உணர்வுகளையும் வாசகியும் உணரத்தொடங்குகின்றாள். அந்த மண்ணை வாசகி அறியத் தொடங்கும் பட்சத்தில் அதன் அழிவு அவளையும் பாதிப்பிற்குள்ளாக்குகின்றது.  பல பெயர்பெற்ற நாவல்களின் உருவமைப்புப் பாத்திரங்கள், உயிர்வாழும் பாத்திரங்களாக மாறிப்போவது புனைவாளரின் நுண்ணிய கட்டமைப்புத் திறனால் உருவாகுகின்றது. ”கசகறணம்” நாவலின் ஒரு துணைப்பாத்திரமாக வந்து போன குலத்தழகிப் பாத்திரம் என் வாயில் எப்போதும் வந்து போகும் ஒரு உயிர்வாழும் பெண்ணாக மாறிப்போனது விமல் குழந்தைவேலின் பாத்திர கட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றி.  கசகறணத்தில் வந்து போகும் அனைத்துப் பார்த்திரங்களும் உயிர் கொண்டிருப்பதோடு அந்தக் கிராமம், புறச்சூழல் என்பனவற்றை புனைவாளன் அவதானமாகக் கருத்தில் கொண்டு கட்டமைப்பித்திருப்பதால் வாசகர்கள் இடையூறின்றி அனைத்ததையும் அடையாளப்படுத்தக்கூடியதான விருந்தது.

Barbara Kingsolver இன் The Poisonwood Bible வாசித்த போது கொங்கோ நாட்டின் கிராமங்களையும், அதன் கலாச்சாரப் பண்புகளையும் அதன் அதிஉச்ச வளங்களையும் புனைவாளர் வாசகியாகிய என்னையும் தன்னோடு அழைத்துச் சென்று காட்டி வந்தார். ஒரு புனைவாளனின் நுண்ணிய அவதானங்கள் புனைவுகளின் வெளிப்படும் போது வாசகியும் அதனை உணர்ந்கொள்கின்றாள். அப்போது அப்புனைவு வெற்றிபெறுகின்றது.

இந்த வகையில் ”ஆறா வடு” நாவலைப் பார்க்கையில் புனைவாளர் தகவல் திரட்டலுக்குக் கொடுத்த முக்கியத்தைப் பாத்திரக்கட்டமைப்பிற்கோ, நிலவியல் கட்டமைப்பிற்கோ கொடுக்கவில்லை என்பது என் அவதானிப்பாகவுள்ளது. நாவலின் முக்கிய பாத்திரத்தை என்னால் புனைவாளரான சயந்தன் (அவரன் புகைப்படத்தைக் கொண்டு) எனும் உருவத்தைக் கொண்டுதான் கட்டமைக்க முடிந்தது. அந்த வெளியை புனைவாளன் நிறப்பவில்லை. பல பாத்திரங்கள், ஊர்கள்,  பெயரளவில் வந்து வந்து போகின்றன. எதுவும் மனதில் பதியவில்லை. இது ஒரு அரசியல் பதிவு நாவல் எனும் பட்சத்தில் சம்பவங்கள்தான் முக்கியத்துவம் பெறுகின்ற என்று வாதிட்டாலும், துப்பாக்கியால் ஒருவன் சுடப்பட்டுக்கொல்லப்படுகின்றான் என்பதை செய்தியாகச்சொல்லிப் போகும் சயந்தனின் எழுத்து வாசகியாகி என்னுள் உணர்வு ரீதியான பாதிப்பு எதையும் ஏற்படுத்தாவிடின், எதற்கு நாவல் என்ற ஒரு வடிவம் இங்கே தேவை என்ற கேள்வியும் எழுகின்றது. ”முறிந்தபனை”, ஈழப்போராட்டத்தின் எனது சாட்சியம், ’போரும் சமாதானமும்”  போன்ற தகவல்திரட்டல்களால் ஆன கட்டுரைப் பதிவுகள் ஏற்கெனவே கைவசம் இருக்கும் பட்சத்தில் நாவல் என்ற வடிவத்தின் கீழ் வெளியாகும் ஒரு படைப்பின் மேல் உண்டாகும் எதிர்பார்ப்பை அது தன்னளவில் தனது வடிவத்தை நிவர்த்திசெய்வதாக அமைந்திருத்தல் முக்கியம். ”ஆறா வடு” பல அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு புனைவாளரின் பிரத்தியேக எள்ளலுடன் கலந்த எழுத்து வடிவில் கொடுத்திருக்கின்றது என்பது உண்மையே. இருப்பினும் அரசியல் தவிர்த்து ”ஆறா வடு” அதன் வடிவத்திற்காக ஆராய்ந்து பார்க்க முனைந்தால் குறிப்பிடும் படியாக எதுவும் இல்லை என்பதையும் மறுக்க முடியாது. பாத்திரங்கள் எதுவும் மனதில் பதியும் படியாகப் புனைவாளன் செதுக்கவில்லை. அதை விட நிலவியல் கட்டமைப்பிற்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. புனைவாளன் புனைவாளனாகவிருந்து கதை சொல்ல, நான் வாசகியாகவிருந்து கேட்டு விட்டுச் செல்லும் அனுபவத்தைத்தான் ”ஆறா வடு”வின் வாசிப்பின் இறுதியில் பெற்றேன். புனைவாளன் வாசகர்களை சம்பவதளங்களுக்குத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை என்ற ஏமாற்றம்தான் நாவல் மூடியபோது எனக்குக் கிடைத்தது.

”ஆறா வடு” நாவல் பார்க்கப்பட வேண்டிய ஒரு ஒளிவீச்சு வீடியோ போல் அமைந்திருந்தால் ”கசகறணம்” பார்க்கப்பட வேண்டிய ஒரு ”ஆர்ட் ப்லிம்” போல் அமைந்திருந்தது. நான் தேடித் தேடி ”ஆர்ட் பிலிம்” களையே விரும்பிப் பார்ப்பேன்.