ஆறா வடு – ராஜசுந்தரராஜன்

“ஆறா வடு” வாசிப்பதற்கு முந்தி நான் சயந்தனை வாசித்ததில்லை. “ஆறா வடு” வாசித்த பிறகு இரண்டு நாட்களுக்கு வேறு எதையும் வாசிக்க முடியாமல் இருந்தேன்.

ஹிந்துகள் அடிமைகளாக இருப்பதற்கே தகுதியுள்ளவர்கள் என்று எனக்கேனோ சிறு வயது முதலே ஓர் எண்ணம் வடுக்கொண்டுவிட்டது. அவர்களுக்குள் ஒற்றுமைக்கான ஒரு பொதுக் காரணி (common factor) இல்லையென்று படுகிறது. இந்தியாவில் இஸ்லாமிய, கிருஸ்துவ மேலாதிக்கமும் இலங்கையில் பௌத்தக் கையோங்கலும் அது காரணமாகத்தான் நேர்ந்தது/நேர்கிறது என்னும் நினைப்பிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.

“ஆறா வடு” நாவலை வாசித்து வருகையில் இது எனக்கு மேலும் உறுதிப்பட்டது. சாதி, பெண்ணடிமைத்தனம், குழுப் பிரிவினை யுத்தம் என இப்படி ஹிந்துகள் எங்கிருந்தாலும் பிளவுண்டுதான் கிடக்கிறார்கள்.

//எளிய பறைச்சாதி நீ.. அகதி நாய்.. ஈனப் பிறப்பு// என்றெல்லாம் பேசிய கோவிற் கிழார், இயக்கத்தாரால் செருப்புத்தண்ணி குடிப்பிக்கப்பட்ட பிறகும், என்ன சொல்லுகிறார்? //”நான் இனி இந்தக் கோயிலுக்கு, சாகும் வரை வரமாட்டன். இந்தக் காளி கோயில் இனி இந்தக் கதிரவேலனுக்குச் சொந்தமில்லை..”// அதாவது, இனத்தாரை அரவணைக்க வேண்டும் என்கிற புத்தி வரவில்லை. உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்கிற கைகழுவல்தான் நடக்கிறது.

பிறகும் எளியவர்கள் ஓரொருவரும் போராடுகிறார்கள். நம்பி ஒப்புக்கொடுத்து ஏமாறுகிறார்கள்.

சிங்களர்களைப் பற்றி அவதூறு பேசாமலே சிங்களர்களுக்கும் சேர்த்து இனப்போர் அழிவுகளைப் பேசுகிறது இந் நாவல். //பண்டார இராணுவத்தில் இணைந்தான். மகாவம்சம் நீள்வதைப் பற்றி அவன் யோசித்திருக்கவில்லை. சம்பளத் தொகை மேலும் அதிகரிக்குமா என்பதாகவே அவன் நினைப்பு இருந்தது. அதிகாரிகள் ஒருபக்கத்தாலும் புலிகள் மறுபக்கத்தாலும் அவனை வதைத்தெடுத்தார்கள். எல்லாவற்றைப் பார்க்கிலும் கொடும் வதையாகக் கனவுகள் இருந்தன…. முதலாவது வாரம் ஓர் இரவில் அலறி எழுந்ததும் மூளையைப் போட்டுக் கசக்கினான். இரண்டாவது வாரம் இடைத்தரகர் மூலம் ஏஜன்ஸியை சந்திக்கக் கூடியதாகவிருந்தது. மூன்றாவது வாரம் முடிவதற்கு முன்பாக இத்தாலிக்கு வள்ளமேறினான்.//

தமிழினத்துக்கு மட்டுமல்ல உலகளவும் போராளிகளுக்கு நேரும் நிலையாமை இது என்று இந் நாவலில் கட்டைக்கால் வழியாக செயந்தன் உணர்த்தி இருப்பது இலக்கிய உச்சம்.

வாசித்தோம், சரி, …?

எரி நடுவில் விறைத்தெழும் பிணமாக உணர்கிறோம்.