ஆறா வடு – நடராஜா முரளிதரன்

தமிழினி வசந்தகுமாரின் வார்த்தைகள் பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டதாகவே சயந்தனின் “ஆறா வடு” நாவலை வாசித்து முடித்தபோது என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சில தினங்களுக்கு முன்பாக இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது பல்வேறு சிக்கல்கள், வேலைகள் என்பன குறுக்கீடு செய்து கொண்டிருந்தது. அதனையும் மீறி அரைவாசிக்கட்டத்தை நான் தாண்டியபோது மீதி அரைவாசியையும் உடனே படித்து முடித்துவிட வேண்டுமென்ற உந்துதலை அந்த நாவல் உண்மையாகவே அளித்தது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை அரசின் சமாதானப் பேச்சுவார்த்தை போன்றவை நடைபெற்ற காலகட்டங்களில் நிகழ்ந்தவை இந்நாவலில் பேசப்படுகின்றன. அளம்பில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த போராளி இளைஞன் பின்னர் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு புலிகள்-ரணில் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் யாழ்பாணத்திற்கு அரசியல் வேலை செய்யப் போகின்றான். அங்கு அவன் காதலிக்கின்றான் அகிலா என்ற பெண்ணை. பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறி நீர்கொழும்பிலிருந்து கடல் பணயம் மூலமாக இத்தாலி புறப்பட்டுச் செல்கிறான். இவற்றுக்கு இடையில் அவன் சந்தித்தவை, கண்டவை, நினைத்தவை என நகர்ந்து செல்கிறது இந் நாவல். இதில் வரும் மொழிபெயர்பாளர் “நேரு ஐயா” என்ற பாத்திரம் யாழ்பாணச் சமூகத்தின் மனோநிலைக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உதாரணம். நாவலின் இறுதிப்பாகங்கள் தொடக்கத்தைவிடக் கூடுதல் கவனத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது என்று நான் எண்ணுகின்றேன். அண்மைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை உள்’ளடக்கும்விதமாக ஈழத்து எழுத்தாளர்கள் எவருமே நாவல் எதனையும் படைக்கவில்லை. அந்த வகையில் “ஆறா வடு” முக்கியமான ஒரு நாவல்.