ஆறா வடு – டிசே தமிழன்

சயந்தனின் ஆறாவடு நாவல் ஒரு படகுப்பயணத்தை அடிப்படையாக வைத்துக் கூறப்பட்டாலும் அது விரியும் காலம் இரண்டு சமாதானக் காலங்களுக்கு இடையிலானது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலிருந்து பிரபா-இரணில் ஒப்பந்தம் முறிவதற்கு சற்று முன்னரானது. இதுவரை அநேகமாய் வந்த அரசியல் புனைவுகளை எழுதியவர்களில் அநேகர் இயக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டவராயிருக்கும்போது இது எல்லா அதிகாரங்களுக்குமிடையில் அல்லாடும் ஒரு தனிமனிதரின்(சனத்தின்) இருப்பிலிருந்து எழுவதால் முக்கியமான பிரதியாகிவிடுகிறது. முக்கியமாய் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழநேர்ந்த நம் அனைவருக்கும் புலிகள்/இராணுவம் பற்றிய இவ்வாறான dynamic பார்வைகளிருக்குமே தவிர, rigidity யாய் எதுவுமே இருக்காது. இல்லாவிட்டால் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் மிக எளிதில் இராணுவம் யாழைக் கைப்பற்றியபின்னர் அந்த வாழ்வு நிலைக்குத் தகவமைத்துக் கொண்டிருக்க முடியாது. அடித்தளத்தில் மக்கள் தமக்கு எது வேண்டுமென நிதானமாய் யோசிக்கமுன்னரே Hierarchy முறையில் எல்லாமே மேலிருந்து பிரயோகிக்கப்படும்போது தப்புதல் அல்லது தக்கண பிழைத்தலுக்கு ஏற்ப மாறவேண்டியிருக்கும் என்பதே யதார்த்தம். முக்கியமாய் இயல்பான சூழ்நிலை என்பதே எப்படி என்பதே அறியாத போர்க்காலப் பதற்றங்களிடையே பிறந்த சயந்தனைப் போன்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவே இயல்பாய் நிகழ்வும் கூடியது.

அதை ஆறாவடு தெளிவாகப் பிரதிபலிப்பதால் நான் ஒருகாலத்தில் வாழ்ந்த வாழ்வை இன்னொருமுறை பார்ப்பதுபோல நெருக்கத்தைத் தந்திருந்தது. விமர்சனமாய் சில சம்பவங்கள் அதீத romanticized செய்யப்பட்டதையும், விடுபடலாய், யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி எந்தக் குறிப்பும் வராததையும் குறிப்பிடலாம். இந்திய இராணுவத்தின் காலம் பற்றிய விரிவாக எழுதப்பட்ட பிரதியில் முஸ்லிம்களின் வெளியேற்றம் குறிப்பிடாதது ஏனென்ற கேள்வி எழுதல் இயல்பானதே. மற்றுபடி 80களில் பிறந்த தலைமுறையிலிருந்து வெளிவருகின்ற நாவல்களில் இஃதொரு முக்கியமான நாவல் மட்டுமல்ல, அதன் பார்வைகள் முன்னைய தலைமுறையிலிருந்து பலவிடயங்களில் வேறுபட்டதாகவும் இருக்கும் என்பதற்கும் இந்நாவலை அனைவரும் வாசிக்க வேண்டும்.