ஆறா வடு – அரங்கசாமி கே.வி

ஒரு நாவலிலேயே இதை சொல்லலாமா என தெரியவில்லை , இருந்தாலும் “இலக்கியம்” என்றால் அரசியல் அல்ல என்ற புரிதலுடன் எழுதும் ஈழ எழுத்தாளர்கள் என நான் வாசித்தவரையில் பிரியத்துடன் சொல்லக்கூடியவர்கள் இருவர் . அ.முத்துலிங்கமும் , சோபா ஷக்தியும் . ஈழ இலக்கியத்தின் இந்த தலைமுறை வரவு என நான் நம்புகிறேன் சயந்தனை – ஆறாவடு படித்தனன் மூலம் – . பெருநாவல் ஒன்று எழுதி அவர் அதை நிரூபிக்கக்கூடும்.

தமிழினி வெளியீடு என்ற கூடுதல் நம்பிக்கையுடன் சயந்தனின் ஆறாவடு நாவலை வாங்கினேன் , அங்கதமும் , மெலிதான விமர்சனமும் கொண்டு ஈழப்போர் , ஈழவாழ்க்கை , அகதியாவதற்கான போராட்டம் இவற்றுடன் விரிகிறது ஆறாவடு , செயற்கையான அரசியல் பிரச்சாரமோ , வலிந்து திணிக்கப்பட்ட எதுவுமோ இல்லாமல் இலக்கியப் படைப்பாக வந்திருக்கிறது ஷோபாவின் கொரில்லா படிக்கும்போது என்ன உணர்ந்தேனோ அதுவே ஆறாவடுவிலும் , என்ன – புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவரின் பார்வையில் இருக்கிறது .ஆனால் உண்மைக்கு பல முகங்கள்தானே ?

முழுநாவலிலும் ஓடும் மெல்லிய அங்கதம் துயரத்திலும் கூடவே வருகிறது , கடைசிப்பகுதி திசை திரும்பி இதுவரை இருந்த யாதார்த்த நாவலாக இல்லாமல் குறியீட்டுத்தளத்தில் நுழைகிறதே என எண்ணினேன் , இல்லை , அது இன்னும் உச்சத்துக்கு கொண்டுபோகிறது நாவலை .