ஆறா வடு – கவிஞர் தமிழ்நதி

சயந்தனின் ‘ஆறா வடு’வாசித்தேன். ஈழத்தின் துயர்படிந்த வரலாற்றின் ஒரு பகுதியை அந்த நாவல் பேசுகிறது. வாசிக்க இயலாத அவலம் நிறைந்த சில பகுதிகளை மிகுந்த சிரமத்தோடு கடந்து செல்லவேண்டியிருந்தது. எழுத்தில் கடக்கவியலாத கொடுந்துயரை, யதார்த்தத்தில் எங்கள் மக்கள் எப்படித்தான் சகித்தனரோ…? சயந்தனின் நக்கல் நடையையும் மேவியிருந்தது கண்ணீர். இலங்கை அரசாங்கம், இந்தியப் படைகள், விடுதலைப் புலிகள், மாற்று (?) இயக்கங்கள் எல்லோரையும் விமர்சித்திருந்தார்.

முன்னரெனில், ‘ஆறா வடு’வை வேறு கண்களால் வாசித்திருப்பேன் என்று நினைத்தேன். நாவலின் கட்டமைப்பும் நகர்த்திச் சென்றவிதமும் ‘நாயக’னின் பிம்பம் இல்லாத பிரதான பாத்திரமும் எல்லாப் புனிதங்களையும் கோபமெழாதபடிக்கு நோகாமல் கிண்டலடித்த மொழியும் நாவலின் சிறப்புகள். சின்னப்பெடியன்-மகா கிண்டல்காரன்-முகநூல் நடுநிலையாளன் என்றெல்லாம் நினைத்திருந்த நினைப்பை, ‘அருமையான படைப்பாளி’என்று இனி மாற்றிக்கொள்ளவே வேண்டும்