ஆறா வடு – ஷோபாசக்தி

சயந்தனின் ‘ஆறாவடு’ நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் நாவலின் சிறப்புகள். முற்றுமுழுவதுமாக அரசியல் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட நாவல் ‘அரசியல் நீக்கம்’ செய்யப்பட்ட பிரதியாக இருப்பது சற்றே ஏமாற்றமாயிருந்தாலும் சயந்தனின் கதைசொல்லும் ஆற்றல் ஆறாவடுவை மிக முக்கியமான இலக்கியப் பிரதியாக்குகிறது

நாவலில் இலங்கை – இந்திய இராணுவங்கள், அரசுகள் புலிகள், ஈபிஆர்எல்எவ், பிரபாகரன், வரதராஜப்பெருமாள் என்று எல்லோருமே தைரியமாக விமர்சிக்கப்படுகிறார்கள் கிண்டல் செய்யப்படுகிறார்கள். அதிலும் முக்கியமாக நாவலின் முதன்மைப் பாத்திரமான விடுதலைப்புலி அமுதன் தன்னைத்தானே செய்துகொள்ளும் சுயகிண்டல்கள் எல்லாம் மிகவும் முக்கியமானவையே. இவற்றை சயந்தனின் காட்டமான விமர்சனங்களாக கொள்ளலாம். ஓர் எதிர் அரசியலை நாவல் முன்வைக்காமலிருப்பது என்னளவில் சற்று ஏமாற்றம். கண்டிப்பாக அவ்வாறான எதிர் அரசியல் இருக்கவேண்டும் என இலக்கிய நிபந்தனைகள் ஏதுமில்லை. ஆனால் என்னளவில் நான் அதை எதிர்பார்ப்பேன். அவ்வளவே. அதைத் தாண்டியும் ஆறாவடு இலக்கியமாக முக்கியமான பிரதியே. குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்