திருத்தியெழுதப்பட்ட கதைகள்

பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் கேட்டபோதுதான் சோமிதரன் தன் வாழ்நாள் எழுத்துக்களை ஒரு பைலில் இட்டு “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்ற ரேஞ்சில் தந்திருந்தார். பிறகது தொலைந்து போய்விட்டது என்று மூன்று வார்த்தைகளில் நான் கடந்து போவது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தலாம். விதி வலியது

கொழும்பு பாடசாலையில் வெளியான ஆண்டு மலரிலேயே கண்கெட்ட பிறகும் சூரியநமஸ்காரம் செய்யலாம் என்று அரசியல் கட்டுரைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். அதற்குச் சற்று நாட்களின் முன்னர்தான் சந்திரிகா மீது குண்டுத்தாக்குதல் நடந்து அவர் கண் இழந்திருந்தார்.

இப்பொழுது சமாதானம் மெலிதாக அரும்பியிருந்தது. ரணில் பதவியேற்றிருந்தார். ஆகவே ஓர் அரசியல் “ஆய்” வாளனான எனக்கும் நிறைய வேலை இருந்தது. சமாதானம் நிலைக்குமா, சர்வதேசம் ஏமாற்றுமா, தலைவர் பிரபாகரன் ஏமாறுவாரா என்றெல்லாம் மூளையைப் போட்டுக் கசக்கி ஒரு வாய்வுக் கட்டுரை எழுதியிருந்தேன்.

இதழின் டம்மியை புரூப் பார்ப்பதற்காக பிரதீபாவிடம் கொடுத்திருந்தேன். அவர் ஓகே செய்தபிறகு இதழ் அச்சுக்குப் போனது.

எனது கட்டுரையில் ரணில் அரசமைத்ததன் பின்னணியில் என்றவாறாக ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. அது டம்மி இதழில் – ரணில் அர
சமைத்ததன் பின்னணியில் என்றவாறாக அர முதலாவது வரியில் முடிந்தும் அடுத்தவரியில் சமைத்ததன் என்றும் ஆரம்பித்தது. பிரதீபாவிற்கு இங்கே தான் டவுட் ஆரம்பமாகியது.

“சமைத்ததன்” பின்னணியில் என்பது சரியாக டைப் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கருதினார். ஆனால் “அர” என்று டைப் செய்யப்பட்டிருப்பதில் என்னவோ தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் நம்பினார்.

சமைத்ததன் பின்னணியையும் அர வையும் போட்டுக்குழப்பி கடைசியில் கண்கள் பிரகாசிக்க அவர் ஒரு முடிவினை எடுத்தபோது “அர” என்பது என்னவாயிருந்திருக்க வேண்டும் என்பதை அவர் கண்டுபிடித்தார்.

அச்சாகிய இதழில் எனது கட்டுரையில் இடையில் இப்படியொரு வசனம் சம்பந்தமே இல்லாமல் வந்தது.

ரணில் அரிசி சமைத்ததன் பின்னணியில், புலிகள் சமாதானத்தின் மீதான தமது ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள்.

நல்லவேளையாக, டம்மி இதழில் சமாதானத்தின், சமா எங்காவது விடுபட்டிருந்தால் பிரதீபா திருத்தியபிறகு கட்டுரை வரிகள் இப்படியிருந்திருக்கலாம்.

ரணில் அரிசி சமைத்ததன் பின்னணியில் புலிகள் அன்னதானத்தின் மீதான தமது ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள்.

0 0 0

இதுபற்றி முன்னர் எங்காவது குறிப்பிட்டேனோ தெரியவில்லை. பாடசாலையின் மதிலுக்கு அந்தப்பக்கம் அமைந்திருந்த பெண்கள் கல்லுாரி அது. Partner School என்றார்கள். மனது அப்பிடி ஒருபோதும் கருதியதில்லை. தமிழில் சகோதர பாடசாலை என்றார்கள். அப்படி வேண்டுமானால் இருக்கக் கூடும்.

அவர்களது உயர்தர வகுப்புக்காரர்கள் விஞ்ஞான இதழொன்றை வெளியிட்டார்கள். இதழின் புரூப் யார் பார்த்தார்களோ தெரியவில்லை. இதழில் எய்ட்ஸ் பற்றி ஒரு கட்டுரையொன்று வந்திருந்தது. எயிட்ஸ் தொற்று ஏற்படாத காரணிகள் என்றொரு லிஸ்ட் அதிலிருந்தது. அதில் ஒன்றாக

தாய் குழந்தைக்கு கொடுக்கும் பாலினால் – என்று இருந்திருக்க வேண்டும்.

புரூப் பார்ப்பதற்கு முந்தைய டம்மியில் – தாய் ..ந்தைக்கு கொடுக்கும் பாலினால் என்று இருந்திருக்குமென நினைக்கிறேன்.  திருத்தியவர் .. ந்தைக்கு என முடியும் சொல் என்னவாக இருக்குமென மூளையைப் போட்டுக் குழப்பியிருக்கலாம். இறுதியில் அவருக்கு பொறி தட்டியபோது பொருத்தமான சொல்லாக தந்தைக்கு என்பதே தோன்றியிருந்தது.