கலைஞருக்கு எழுதிய கடிதமும் காலாவதியான குறிப்புக்களும்

karunaஅவுஸ்ரேலிய நாட்டிலிருந்த ஏதோ ஒரு சம்மேளனம் தன் கடிதமொன்றில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தெய்வம் ஜெயலலிதா! உண்மையாய் பெருத்த சோகத்தை உணர்ந்தேன். அது ஜெ/கருணாநிதி என்கிற ஒற்றைமனிதர்களை முன்னிறுத்தியதல்ல. கையில் பிஸ்கட்டுடன் யார்யாரோ எல்லாம் எட்டாத உயரத்தில் நீட்டி ஞ்சூ ஞ்சூ என்கிறார்கள். நாம் நாய்களைப்போல கொஞ்சம் இர(ற)க்கம் காட்டுவீர்களா என்று இறைஞ்சுவதோடு வாலையும் ஆட்டிக் காட்டுகிறோம் என்பதைக் குறித்த வலியே அது.

அன்றைய நாளில் கானாபிரபாவிடம் இதுபற்றிக் கேட்டிருந்தேன். அவர் ஐயோ சத்தியமா அந்த அமைப்பில நானில்லை என கற்பூரமடிக்காத குறையாக சொல்லியிருந்தார். அடுத்தநாளோ அதற்கடுத்தநாளோ பதிலுக்கு நான் சத்தியம் செய்யவேண்டியிருந்தது. சுவிசில் இருந்து சென்ற அந்த கடிதத்தில் இம்முறை ஈழத்தாய் என விளிக்கப்பட்டிருந்தது. அவவுக்கு அது பிடித்துக் கொண்டதாலேயோ என்னவோ அக்கடிதம் ஒரு பரப்புரைக் கூட்டத்திலும் வாசிக்கப்பட்டது.

அக்கடிதங்களை எழுதியவர்கள் மீது கோபம் எதுவும் வரவில்லை. தொடர்ச்சியான ஏமாற்றங்களால் எந்தக் கொப்பிலாவது பற்றிக்கொள்ளலாமா என்றிருந்த மனநிலையது. அதையும் தவிர தார்மீக ரீதியாக எனக்கு அந்த உரிமையும் கிடையாது. ஏனெனில் கலைஞரை உலகத்தமிழினத்தின் காவலரே என விளித்து கடிதம் எழுதிய லூசுப் பயல் நான்.

0 0 0

ஏழுமாதங்களாகி விட்டது. அப்போது கலைஞர் கவிழ்ப்பதற்கான (கவிழ்த்தார்தான்) ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். இரண்டுவார காலக்கெடு. பதவி விலகல் கடிதங்கள் என அமர்க்களமோ அமர்க்களம். தனிப்பட எனக்கு கலைஞர் ஏதோ செய்யத்தான் போகிறார் என சபலம் கூட ஏற்பட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

புலம்பெயர்ந்த நாடொன்றிலிருந்து நண்பர் ஒருவர் அழைத்தார். அந்த நாட்டின் ஏதோ ஒரு தமிழ் சம்மேளத்தின் சார்பாய் அவர் பேசினார். கலைஞருக்கு உடனடியாக ஒரு நன்றிக் கடிதம் தேவை. வரும் திங்களுக்கு முதல் தேவை என்றார். முதலில் ஜோக் அடிக்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் விடுவதாயில்லை.

கொஞ்சம் பொறடாப்பா இரண்டு வாரம் முடியட்டும். பிறகு எழுதுவோம் என்றேன். இல்லையடா இப்பவே எழுதுவதுதான் அவருக்கு இன்னும் இன்னும் ஈடுபாட்டைக் கொடுக்குமென்ற கண்டுபிடிப்புகளை அவன் சொன்னான். உண்மையாகவே தமிழகத்தில் தோன்றிய அன்றைய நிலை வன்னியில் மக்களுக்கு ஓர் மன ஆறுதலைக் கொடுத்திருந்ததை நான் அறிவேன். முல்லைத்தீவில் கலைஞருக்கு ஆதரவான கூட்டங்கள் கூட நடந்தன.

ஆனாலும் இன்னதெனச் சொல்லவியலாத தயக்கமொன்றிருந்தது எனக்கு. நண்பரோ மணித்தியாலங்களை காலக்கெடுக்களாக்கி அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். ஏதோ ஒரு நாட்டின் தமிழ் சம்மேளனம் கடிதம் எழுத என்னை அழைக்கிறது என்ற கெத்தும் எழுதித்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பும் சேர்ந்துவிட நான் அதற்குச் சம்மதித்தேன். எனது தனிப்பட்ட கருத்துகள் ஈடுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு – நான் எப்போதும் வருந்தக்கூடியவாறு முதல் வரியை எழுதினேன். உலகத் தமிழினத்தின் தலைவர் கலைஞர் ஐயா அவர்களே…

0 0 0

அந்தக் கடிதம் ஊடகங்களின் வெளியானது. தலைமைச் செயலகத்திற்கும் அது பக்ஸ்ஸில் அனுப்பப்பட்டது. அப்போது தேர்தல் நேரம் இல்லையாகையால் யாரும் அக்கடிதத்தினை மக்கள் மத்தியில் படித்துக் காட்டவில்லை.

ஈழத்தமிழர் சம்மேளனங்களும் இலேசுப்பட்டவையல்ல. அவர்கள் இரு திருத்தங்களைக் கோரியிருந்தார்கள். முதலாவது முதல் வரியிலேயே ஆரம்பித்தது. உலகத்தமிழின காவலர் என்பதை நீக்கவும். காரணம், இதைப்படிக்கிற உங்களுக்கே புரிகிற அதே காரணம்தான். என்னளவிலும் அதற்கு தயாராய்த்தான் இருந்தேன். உலகத்தமிழின காவலர் பின்னர் எம் உணர்வுகளில் ஒன்றித்துக் கலந்துவிட்ட தாய் தமிழகத்தின் தமிழினத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களே என்றானார்.

அடுத்த திருத்தத்தினை நான் முழுமையாக மறுத்துவிட்டேன். அது தனியே போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்வை பெற்றுத்தருக என்று மட்டுமே எழுதாமல் தமிழீழத்தினையும் பெற்றுத்தருக என்றெழுதுக என்பதாகும். முன்னைய திருத்தம் எவர் குறித்துச் சொல்லப்பட்டதோ அவரை பின்னைய திருத்தம் மிகக் கேவலப்படுத்தும் என நான் நம்பினேன். இந்தத் திமிராலே தானே இந்தநிலையென உங்களிடம் இப்போது பதில்கள் தயாராயிருக்கும். பரவாயில்லை.

இருந்தபோதும் புதிய வரிகளைச் சேர்க்கச் சொன்னார் நண்பர். இப்போது வாசித்துப்பார்த்தால் கண்ணாடிக்கு முன் நின்று நடுவிரலைத் தூக்கிக் காட்டவைக்கின்றன அந்த வரிகள்.

கைவந்து தாங்கும் நீளக் கடல் கடந்து கருணையுள்ளத்தோடு நீளும் உங்கள் குரல் இன்னும் இன்னும் வானளவு விரிந்து – இந்திய அரசியலின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் உங்களது இராஜதந்திரமும் (அடங்கொப்புரானே…) இணைந்து – இலங்கையில் அழுத்தத்தை பிரயோகிக்கும் வலுவுள்ள பிராந்திய வல்லரசான இந்தியா – தனது முன்னைய வெளியுறவுக் கொள்கைகளை மீள் பரிசீலனை செய்து – ஈழத் தமிழர் இப்போது எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல்களான உணவு உறைவிடம் மருந்து அத்தியாவசியப் பொருட்தடை ஆகியவற்றை விரைந்து நீக்கி இயல்பு வாழ்வினைத் தருவதோடு தொடர்ந்தும் கவனம் செலுத்தி சிங்கள மேலாதிக்கத்துடனான தமிழரின் வரலாற்று இனமுரணை சரியான முறையில் எடுத்துரைத்து எப்போதும் தமிழர் பக்கமிருக்கும் அரசியல் நியாயத்தன்மையை விரித்துரைத்து ஈழத் தமிழர்களின் தமிழ்த் தேசியம் மரபு வழித் தாயகம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை இந்தியாவும் உலகமும் அங்கீகரிப்பதற்கான சரியான திசையில் இந்திய மத்திய அரசை வழிநடத்தும் வண்ணம் அதற்கான வேண்டுகோளை ஈழத் தமிழ் இனத்தின் சார்பில் முன்வைக்கின்றோம்.

மேலும் சில

தமிழகத் தலைவரே இதுவரை காலமும் நீறு பூத்த நெருப்பாக தமிழக உறவுகளின் மனங்களில் ஆழப்படிந்திருந்த தமிழீழ ஆதரவு அலை இன்று நீங்கள் திறந்து விட்ட வாசல் வழியாக ஆர்ப்பரித்து எழுந்து அலை அலையாக தமிழகமெங்கும் பொங்கிப் பிரவாகிப்பது கண்டு பூரித்துப் போய் நிற்கிறோம். நாம் தனித்தவர்கள் அல்ல என்னும் எண்ணமே எமக்குள் இறுமாப்புற்று எழுச்சியுற வைக்கிறது.

பெரியார் அண்ணா காலம் முதல் எப்போதெல்லாம் ஈழத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள கொடுங்கோல் அரசு வன்முறைகளை நிகழ்த்தி அவர்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி ஓட ஓட விரட்டி அவலம் சூழ்ந்த வாழ்வை அவர்களுக்கு திணிக்கின்றதோ அப்போதெல்லாம் உலகமே மெளனித்து கைவிட்ட கையறு நிலைகளில் கடல் கடந்து வரும் உங்கள் நேசமிகு ஆதரவுக்குரல்களே எமக்கான மனோவலிமையையும் தடைகளைத் தாண்டும் வேகத்தையும் அளித்து வருகின்றன.

அதற்குப்பின் எவ்வளவோ நடந்து முடிந்தும்விட்டன.

எனது ஈரக்குலை நடுங்குவது எதற்கென்றால் தமிழகத்தில் ஜெயலலிதா எப்போதாவது அதிகாரத்திற்கு வந்தால், இந்தக் கடிதம் எழுதியதற்காக அதிமுக தொண்டர்கள் என்னைப் பிராண்டு பிராண்டென்று பிராண்டுவார்களா என்பதுதான். ஏனெனில் ஜெயும் இலங்கை ஏதிலிகளுக்கு சோறு போட்டிருக்கிறார்.

0 0 0

கலைஞரை மட்டும் அதிகம் ஈழத்தமிழர்கள் திட்டுகிறார்கள்தான். ஏன் என ஆராய்பவர்கள் மகிந்த ராஜபச்சேயைவிட கருணாவை அதிகமாக ஏன் ஈழத்தமிழர்கள் திட்டுகிறார்கள் என யோசித்தால் விடையேதும் கிடைக்கக்கூடும்.

கலைஞர் மீதான எனது கோபம் அவர் போரை நிறுத்தவில்லையென்பதற்காக அல்ல. தமிழீழத்தை பெற்றுத்தரவில்லையென்றல்ல. அது அவரது பொய்ப்பித்தலாட்டங்கள் தொடர்பானது. ஈழத்தை முன்னிறுத்திய பொய்கள் மட்டுமேயிற்கானது. 2 மணிநேர உண்ணாவிரத முடிவில் இலங்கையில் யுத்தநிறுத்தம் வந்துவிட்டதென்றும் அங்கே அமைதி மலர்ந்தென்றும் தமது ஊடகங்களில் பீற்றிய அந்த ஒற்றைப் பொய்க்கு மட்டுமே இப்போது மட்டுமல்ல எப்போதும் திட்டலாம்.

மற்றும்படி இது குறித்து யாரிடமும் முறையிடுவதற்கில்லை. ஏனெனில் கலைஞர் இப்படிச் செய்தாரே என வினவினால் அவர்கள் எல்லோரிடமும் உள்ள பதில்.. ஏன்.. ஜெயலலிதாவும்தானே அப்படிச் செய்தார்..? என்றமாதிரியான டீச்சர் ராமு எனக்கு கிள்ளினான் என்றால் ஏன் சோமுவும்தானே கிள்ளினான் என்பதையொத்த பதில்கள் தான்.

19 Comments

  1. இணையத்துலே இதுமாதிரி பொலம்புங்கோ. புலம்பெயர் நாடுகளில் ரோசாபூவை சுமந்த நாகரிக மங்கை எவளோடயாவது சுத்தி திரிங்கோ. ஈழதமிழன் துய்ரபடுவது ஈழத்தில் மட்டும். நீங்கள்லாம் உல்லாசமா வாழ்ந்துட்டு, இணையத்தில் மட்டும் வந்து வாந்தியெடுங்கோ. இதெல்லாம் ஒரு பொழைப்பூ. த்தூ. தூக்கி மாட்டிட்டு சாவுங்கடா!!!!!

  2. இணையத்துலே இதுமாதிரி பொலம்புங்கோ. புலம்பெயர் நாடுகளில் ரோசாபூவை சுமந்த நாகரிக மங்கை எவளோடயாவது சுத்தி திரிங்கோ. ஈழதமிழன் துய்ரபடுவது ஈழத்தில் மட்டும். நீங்கள்லாம் உல்லாசமா வாழ்ந்துட்டு, இணையத்தில் மட்டும் வந்து வாந்தியெடுங்கோ. இதெல்லாம் ஒரு பொழைப்பூ. த்தூ. தூக்கி மாட்டிட்டு சாவுங்கடா!!!!!

  3. முதல் பின்னூட்டமே மங்கலமா இருக்கே..

    சயந்தன், இன்னுமா இதை எழுதுறீங்கள்?
    பிரயோசனமா ஏதாவது நல்லா ட்களுக்கு எழுதுங்கோ..
    ஒரு சிறுகதை எழுதினாலும் புண்ணியமாப் போகும்.
    நீங்கள் முன்பு கடிதம் எழுதியவர் ஏதாவது கவியரங்கமோ,பட்டிமன்றமோ, சினிமா நிகழ்ச்சியோ போய் பிசியா இருப்பார்..

    dont disturb him

  4. உலகம், தமிழனை திரும்பிப்பார்க்க வைத்த ஒரு உன்னத தலைவன் உயிரோடிருக்கிறானா? இல்லையா? என்று இன்று அனைத்து தமிழனமே அல்லறும் பொழுது, அற்பச் சிறு புழுவான இவனையெல்லாம் “தமிழினத் தலைவனாக” எழுதாதீர்கள் நண்பா,

    என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் நண்பா, தமிழகத் தமிழர்கள் உண்மையிலேயே அப்பாவிகள். அவர்களை ஆங்காங்கே சிலர் உசுப்பேத்திவிடுவதால், எம்மைவிட்டால் ஆள் இல்லை என்பதுப்போல் வீரம் பேசுவதும், அறிவாளியென்று தம்மை தாமே பெருமையுடன் பேசிப் பழகிப் போன இனம்.

    ஆட்டக்காரியை ஆடவிட்டுப் பார்க்க வேண்டும். ஆட்டக்காரிக்கு பாட்டெழுதுபவனை பாட்டெழுதச்சொல்லி பார்க்க வேண்டும். இவர்களை எல்லாம் எமது இனத்தின் காவலர்களாக ஏற்கும் அளவிற்கு எந்த புரிதலுமே இல்லாத அப்பாவிகளையா நாங்கள். அப்பாவிகள்.

  5. இலங்கை சென்றிருந்த திருமாவளவனைப் பார்த்து “நல்ல நேரம் நீயும் வன்னியில் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருப்பாய்” என்று ஏளனமாகப் பேசிய ராஜப்பக்ஷே நல்ல நேரம் கணிம்மொழியை பார்த்து “நல்ல நேரம் நீயும் வன்னியில் இருந்திருந்தால் . . .” என்று ஒன்றுமே கூறவில்லை.

    இத்தனையும் கண்டும் கேட்டும் மௌனமாக கதிரை ஒன்றே கணவு எனும் வாழும் தமிழக அரச வாரிசுகளின் நிலமை உங்களுக்கு எதனையுமே உரைக்கவில்லையா?

Comments are closed.