ஸ்பெயின் ஒரு பயணம்

சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா தே இவற்றோடு கொண்டுபோன புளிச்சாதம் என 17 மணித்தியாலங்கள் எடுத்தது. அன்றிரவு ரைட் சகோதரர்கள் கனவில் வந்து எங்கட மூஞ்சையப்பாத்தா என்ன வேலை வெட்டியில்லாத கேனைப்பயல்கள் என எழுதியிருக்கா என்றுவிட்டுப் போனார்கள்.

சுவிற்சர்லாந்தில் வதிகிற மற்றைய தேசியக்காரர் அண்டைநாடுகளுக்குச் செல்வதற்கான விசா அனுமதி முறை கடந்த டிசம்பரில் நீக்கப்பட்டது. எல்லைகளில் ஏனென்றும் கேட்கிறார்கள் இல்லை. பிரான்ஸ் – சுவிஸ் எல்லையில் ஒரு பேருக்காவது வரியல்கள் பொலிசார் நிற்கிறார்கள். பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைந்தோம் என்பதை நவி சொல்லித்தான் தெரிந்தோம். ஐரோப்பா ஒன்றாகிவிடும்போலத்தான் தெரிகிறது.

பிரான்ஸ் ஆகட்டும் ஜெர்மன் ஆகட்டும் தமிழை வைத்தே வழிகேட்ட தமிழை வைத்தே சாப்பாட்டுக்கடை எங்கென்று விசாரிக்கிற எனக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. ஐரோப்பாவில் ஆங்கிலத்தை வைத்து நாக்கு கூட வழிக்கமுடியாதென்பதை இன்னுமொருக்கா ஸ்பெயின் தலையில் குட்டிச் சொன்னது. இவ்வாறான நாடுகளுக்கு போகமுதல் அடிப்படை வார்த்தைகளையாவது பயிற்சி எடுத்துச் செல்லுகிற சில புரொபசனல் டூரிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். எனக்கெல்லாம் அந்த நல்ல பழக்கமில்லை. மொழிகள் பிறக்க முந்தைய மனிதன் என்ன செய்தான்..? இருக்கவே இருக்கிறது Body Language. (நாங்கள் ஜெர்மனில் பேசினாலும் சரி ஆங்கிலத்தில் பேசினாலும் சரி அதையெல்லாம் மற்றக்காதால் விட்டுவிட்டு நம் சைகையை மட்டும் புரிந்துகொண்டு அவர்கள் ஸ்பானிஸ் மொழியிலேயே உடல் மொழியோடு பேசினார்கள். ஒரு கட்டத்தில் ஐயா வணக்கம்.. உப்பிடியே மேற்கால போய் கிழக்கால திரும்பினால் இந்த இடம் வருமோ என்று கேட்கத்தொடங்கி விட்டோம். அவர்களும் வழமைபோல உடல் அசைவை புரிந்து கொண்டு…. )

சின்ன வயசில் ஊரில் இருந்து யாழ்ப்பாணம் போவதென்றால் – நன்றாக வெளிக்கிடுத்தி விடுவார்கள். எங்கேயோ பரனுக்குள் கிடக்கும் சப்பாத்தெல்லாம் எடுத்து எண்ணை போட்டு பொலிஸ் செய்து அணிந்து போவோம். முதல் விமானப்பயணத்தின் போது கோட் சூட் போட்ட கொமடி இன்னும் மறக்கவில்லை. பிறகுதான் வெளியிடங்களில் அடிபட பயணங்களுக்கென பிரத்தியேக உடையெதுவும் இல்லையென்றும் casual ஆகப்போகலாம் என்றும் பிடிபட்டது. என்றாலும் ஒரு கட்டைக்காற்சட்டையோடும் செருப்போடும் (வெக்கை கூடினால் சேர்ட்டை கழட்டிவிட்டு இருந்தும் ) இன்னொரு நாட்டுக்குள் நுழைந்தது புதிது..

spainஸ்பானிய மக்களுக்கு நாங்கள் புதியவர்களாக இருந்தோம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து தங்கள் நாட்டையும் மதித்து வருகிறார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ மகிழ்ச்சியை கட்டிப்பிடித்துக் கொஞ்சிப் பகிர்ந்து கொள்கிறார்கள். (இப்பதானே வாறம்.. கொஞ்சம் பொறுங்கோ… ) இந்தியாவைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (சிலகாலங்களுக்கு முதல் ஒரு பயணத்தில் சுவிஸ் காரரொருவர் நீங்கள் இந்தியாவோ என்று கேட்டார். சிறிலங்கா என்றோம். பதிலுக்கு எல்லாம் ஒன்றுதானே என்றார் அவர். இப்ப வெர்ஜினியா அப்ப நீங்கள் ஜெர்மனியோ என்று கேட்க அவர் எழும்பிப் போய் வேறொரு சீற்றில் இருந்து விட்டார்)

எனக்குக் கடல் பிடிக்கும். உருட்டிப்பிரட்டுகிற அலைகள் அற்ற சன் செபஸ்ரியன் கடல் (BAY) திரும்பச் சின்ன வயசுக்குக் கொண்டுபோய் விட்டது. அந்தச் சின்ன வயசுகளில் நாங்கள் ஆ என்று வாய் பிளந்திருக்க யாரேனும் சொல்வார்கள். வெளிநாடுகளிலயாம் உடுப்புப்போடாமல் கடல்கரைகளில குளிப்பினமாம். ம்.. அவர்கள் சொன்னது உண்மைதான்.

குறைந்த யூரோக்களில் சமையல் குளியல் வசதிகளுடன் கூடிய அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அரிசி கொண்டுவந்தார்கள். அங்கே பக்கத்திலேயே கணவாய் மீன் நண்டு இறால் என கிடைக்க.. பிறகென்ன.. சோறும் கறியும்தான். (இதை விடமாட்டமெல்லோ)

ஸ்பெயினின் அத்திலாந்திக்கடலோரம் பயணம் செய்தால் போர்த்துக்கல் வருகிறது. மத்தியதரைக்கடலைத்தாண்டினால் ஆபிரிக்கா வருகிறது. உலகம் டுக்குட்டியானது. இதெல்லாம் போய்வந்த பிறகு மப்பை எடுத்துப்பார்த்தால் தான் எனக்குத் தெரிகிறது. எப்படித்தான் அறுநூறு எழுநூறு வருசங்களுக்கு முதல் தேடிப்பிடிச்சு இவங்கள் இலங்கைக்கு வந்தாங்களோ..

வருகிற வழியில் பிரான்சில் லூர்த் கோவிலுக்கும் போய்த்திரும்பினோம். மொத்தமாக 3400 கிலோமீற்றர் பயணம். இரண்டுநாள் நாரிப்பிடிப்பு..