comments 2

மொட்டை மாடிக் கனவுகள்..

எங்கள் ஊரில் மொட்டைமாடியென்ற ஒன்று கிடையாது. பெரும்பாலும் ஓட்டுக் கூரைகள்தான். சில இடங்களில் சிமெந்து பிளேட் வைத்த கூரைகளும் உண்டு. ஆனால் அவற்றுக்கு மொட்டைமாடிக் குரிய வரைவிலக்கணங்களை யாரும் அப்ளை பண்ணுவதில்லை. எண்பதுகளின் இறுதியில் சியாமச்செட்டி ரக பொம்பர்களது குண்டுவீச்சுக்களுக்கும் உலங்கு வானுார்திகளின் துப்பாக்கிச் சூடுகளுக்கும் அந்தப் பிளேட்டுகளுக்கு கீழே பதுங்கிக் கொள்ள ஊரில் ஒரேயொரு வீடு இருந்தது. அப்படியான சமயங்களில் பொட்டுக்களுக்கால் புகுந்தும் ஊர்ந்தும் புரண்டும் அங்கே போவோம். ஊரே திரண்டு நிற்கும். அப்படியான களேபரங்களிலும் கொறிப்பதற்கு பகோடாவோ பருத்தித்துறை வடையோ யாரேனும் கொண்டு வந்திருப்பார்கள். பொம்பர் எங்கேயோ குண்டு வீசுகிற சமயங்களில் பதட்டமெதுவும் இருக்காது. ஒரு ஒன்று கூடல் மாதிரி பேசிப் பறைந்து விட்டுக் கலைவார்கள். இளந்தாரிப் பெடியள் ஒரு ரேடியோவைக் கையில் வைத்து அங்கையிங்கை திருப்பி வருகிற இரைச்சல் சவுண்டுகளையும் புரியாத மொழிகளையும் பைலட்காரர் கதைப்பதாகச் சொல்வார்கள். அது உண்மைதானா அல்லது இலங்கை வானொலியின் சிங்களச் சேவையில் போன ஏதும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிதானா என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

யாழ்ப்பாண ரவுணில் திருமணம் நடந்த அன்றே ஷெல்லடியில் கணவன் இறந்த கதையொன்றை அப்படியொரு ஊர் திரண்ட பொழுதில்த்தான் யாரோ சொல்லி நான் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது. நாங்கள் வீடு கட்டும்போதும் இப்படிப் பிளேட் வீடொன்றுதான் கட்ட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அப்படிப் பின்னர் நடக்கவில்லை. உண்மையில் பின்னாட்களில் யாரும் சிமெந்துப் பிளேட்டுக்கடிகளில் அடைக்கலம் தேடவேண்டியிருக்கவில்லை. அவ்ரோ சகடை புக்காரா சுப்பர்சொனிக் என வந்த புதுப்புது ஐட்டங்கள் பிளேட்டுக்களைப் பிய்த்து எறியத் தொடங்கியிருந்தன. நாங்கள் பிளேட்டுக்கு கீழே பதுங்குவதை விட்டு வெளியான இடங்களில் குப்புறப் படுக்கத் தொடங்கினோம். பதுங்கு குழிகளும் இருந்தன. அவை பாம்புகளுக்கு….

எங்களது வீட்டில் போர்ட்டிகோ என்ற ஒன்றிருந்தது. பெரும்பாலும் ஓட்டு வீடுகளுக்கு முன்னால் ஒரு தாழ்வாரம் போல சிமெந்து பிளேட்டினால் அது அமைக்கப்பட்டிருக்கும். அதற்கும் மொட்டை மாடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் நிலத்திலிருந்து பத்தடி துாரம் உயர இருத்தல் என்பதை சாகசம் என நினைக்கிற அந்தச் சின்ன வயதில் எனது மொட்டை மாடி அதுதான். அத்தனைக்கும் நினைத்த மாத்திரத்தில் ஏறிவரக் கூடியதாக அது இருக்கவில்லை. வீட்டின் பின்புறம் இருக்கிற அன்ரனா பைப்பைப் பிடித்து மேலேறி ஓட்டுக் கூரையை அடையை வேண்டும். கிறீஸ் பூசிய வழுக்கு மரத்தில் ஏறுவதைப் போன்றிருக்கும் அது. பிறகு ஓட்டுக் கூரையில் உச்சத்துக்கு ஏறி முன்பக்கமாக இறங்கி இந்த ஐந்தடிக்கு ஐந்து மொட்டைமாடிகை்கு வரவேண்டும். கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் அதில் உட்கார்ந்து கொண்டு படலையைத் திறந்து வருகிறவர்களுக்கு ஒரு வணக்கம் சொல்வதில் அவ்வளவு கிக்.

இப்ப நான் நாடகங்களில் நடிக்கத் தொடங்கி விட்டிருந்தேன். பாஞ்சாலியாக, ரீச்சராக, குடும்பத் தலைவியாக என ஐயாத்துரை மாஸ்ரரின் அத்தனை நாடகங்களிலும் முடிமயிருக்கும் இரண்டு பாதிச் சிரட்டைக்கும் வேலை வைக்கிற வேடங்கள்தான் காலம் முழுக்க எனக்குக் கிடைத்தன. ஐயாத்துரை மாஸ்ரர் நாட்டியப் பேரொளி பத்மினியின் ரசிகர். அவரது எல்லா நாடகங்களிலும் பத்மினியின் பாட்டொன்றும் நாட்டியமும் கட்டாயம் இருக்கும். அப்படியான கன்ராவிக் காட்சிகளுக்குரிய சிற்றுவேசன்களை என் மூலமாகவே நாடகத்தில் உருவாக்கிக் கொள்வார் அவர்.
“அத்தான்”
“ம்”
“அத்தான்”
“ம்..”
“அத்தான் நாமிருவரும் இன்று வெளியே இசை நிகழ்ச்சியொன்றுக்கு போவோமா.. நீண்ட நாட்களாகி விட்டது அத்தான்”

பேந்தென்ன.. நானும் “அவரும்” இசை நிகழ்ச்சிக்கு ஜோடியாகப் போவோமாம். மேடையிலேயே வரிசையில் உட்காருவோமாம். ஐயாத்துரை மாஸ்ரரின் மகள் மேனகா கிடதொம் கிடதொம் என்ற இசை முழங்கிட மேடையில் குதித்து மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என ஆடிப் பாடுவாவாம். நடனம் முடிய அற்புதம் அத்தான் அற்புதம் என சொல்லிவிட்டு சேலை நுனியைப் பிடித்தவாறே நான் அவரோடு அடுத்த காட்சிக்குப் போவேனாம்.

மேற்கண்ட நாடக ஒத்திகைகளை நான் போர்டிக்கோ மேல்த் தளத்தில் செய்யத் தொடங்கியிருந்தேன். “அத்தான் கணநேரம் கூட உங்களைப் பிரிந்து இருக்க முடியவில்லையே அத்தான்.. பிரிந்திருக்க முடியவில்லையே” வகையறா வசனங்களை எல்லோரும் நக்கலடிக்கத் தொடங்கிருந்தார்கள். வெட்கத்தில் மேலேறிவந்து பிராக்டிஸ் செய்தேன். எனக்கது பிடித்திருந்தது. யாரும் என்னைக் கவனிக்காதபடிக்கு மறைந்து “உங்களைப் பிரிந்து வாழும் ஒவ்வொரு கணமும் ஒரு யுகம் போல கழிகிறதே அத்தான் ஒரு யுகம் போல கழிகிறதே..” என வசனங்களை சத்தமாகச் சொல்லிப் பழக அந்த சின்ன மொட்டைமாடி எனக்கிருந்தது.

ஐயாத்துரை மாஸ்டர் கடைசி வரை என்னை ஆம்பிளையாக்கவே இல்லை. மீசை வளர நாளாகிறது என்பதற்காக அவர் என்னை அப்படிச் செய்யமுடியாது என நான் முடிவெடுத்தேன். அவருடைய நாடகக் குழுவில் அதிருப்தியாளர்கள கொஞ்சப் பேரைச் சேர்த்துக்கொண்டு நான் எழுதத் தொடங்கினேன் நாடகம். கதையெல்லாம் எழுதி ஈழநாதம் வெள்ளி மஞ்சரிக்கும் சாளரத்துக்கும் வெளிச்சத்துக்கும் அனுப்பத்தொடங்கிய பிறகு (Please note : அனுப்பத்தொடங்கிய… மட்டும்) நாடகம் எழுதுவது கஸ்டமாகத் தெரியவில்லை. அப்படி உருவாகியது எல்லாளன் நாடகம். முன்னாள் அனுபவக் கடுப்போ என்னவோ அந்த நாடகத்தில் பெண் கதாபாத்திரமே இல்லை. துட்டைகைமுனுவாக நான், எல்லாளன், அவனது படைத்தளபதி, துட்டைகைமுனுவின் தம்பி என ஒரே அமர்க்களம்தான்.

நாடகம் பழகத்தொடங்கிய இரண்டாவதோ மூன்றாவதோ நாள் வசனங்களை சொல்லிப்பழக என் சின்ன மொட்டைமாடி மேலே ஏறிய எனக்கு – உடனடியாக இறங்கச் சொல்லி ஓடர் வந்தது. இனிமேல் அங்கே எக் காரணத்தைக் கொண்டும் ஏறக் கூடாதென்றும் சொல்லப்பட்டது.

அந்த மேல்த் தளத்தில் நின்று பார்க்கின்ற போது முன்வீட்டுப் பின்வளவின் ஒரு மூலையோரமாக இருந்த கிணற்றடியில் குளிப்பது தெரிகிறது என மூன்று பொம்பிளைப் பிள்ளைகளின் அந்த வீட்டு அம்மா கொம்பிளைன்ட் பண்ணியதைத் தொடர்ந்து இந்தத் தடையுத்தரவு வந்தது. அப்படி எனக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை. அவர்களில் யாரோவுக்கு என்னைத் தெரிந்திருக்கலாம்…

எனக்கென்னவோ முதன்முதலா நான் ஆம்பிளை வேடம் போட்டதற்கும் அந்தச் சம்பவத்திற்கும் ஏதாவது பட்டர்பிளைத் தொடர்புகள் இருக்குமோ என இப்ப தோன்றுகிறது.

2 Comments

  1. ஆஹா கதை இப்படி எல்லாம் போகுதோ, எங்கடை நண்பர்கள் வட்டாரம் நாடகம் போட்டபோது சிரட்டை எல்லாம் பாவிக்கவில்லை டிரெக்டா கடையில் அது ஒண்டு வாங்கி கடுதாசி அடைஞ்சு பாவிச்சது.

    உந்த கிணத்தடி விடயம் கட்டாயம் பட்டர்பிளை எபெக்ட் தான்.

  2. நல்ல பதிவு. உந்தக் கிணத்தடி விவகாரம்தான் கொஞ்சம் இடிக்குது. 🙂

Leave a Reply