போய்வருக தாய் நிலமே

UK central college இப்படித் தான் சொல்லுவோம். ஆனால் மத்திய கல்லூரி அல்ல. வெறும் மகா வித்தியாலயம் தான். UK மகா வித்தியாலயம். உடையார் கட்டு மகா வித்தியாலயம். பரந்தன் முல்லைத்தீவு வழியில் விசுவமடுவிற்கு அடுத்ததாக சில கட்டடங்கள் சில கொட்டில்கள் சில மர நிழல்கள் இவைதான் அப்பாடசாலையில் மொத்தமான கட்டுமானங்கள். அப்போது 1996

நான்கைந்து பாடசாலை அனுபங்கள் எனக்கு உண்டு. எல்லாமுமே மூன்று வருடங்களுக்கு மேற்படாதவை. அது ஓடிக் கொண்டிருப்பவருக்கான பொதுவிதி.

ஆனாலும் என்னவோ பள்ளிக் காலம் என்றவுடன் UK என்கிற உடையார் கட்டு பாடசாலைதான் நினைவுக்கு வருகிறது. ஏன் என்பதற்கு ஒரேயொரு காரணம் தான் இருக்க முடியும். அது முதன் முறையாக பெண்களோடு அருகருகே பயிலும் வாய்ப்பு. வாராது வந்த மாமழையான வாய்ப்பு. பதற்றமும் தயக்கமும் மகிழ்ச்சியுமான அப்போது வயது 16.

ஒரு ஏப்ரல் நாள். கடந்த நான்கு மாதங்களில் வன்னி மெதுமெதுவாக இயைபடைந்து விட்டிருந்தது. கொஞ்சக் காலம் கொட்டில் கட்டுவதில் போனபோது சும்மாயிருக்கிறோமே எனத் தோன்றவில்லை. மென் இருண்மைக் காடுகளில் சூரை முட்கள் கிழித்தெடுக்க தடிகள் வெட்டினோம். சூரை முள் சும்மா இல்லை. மற்றைய முட்களினின்றும் மாறுபட்டது. தூண்டிலைப் போல எதிர் வளமாய் இருக்கும். ஆரம்பங்களில் கிழி கிழியென கிழித்திருக்கிறது.

மொத்தம் மூன்று கொட்டில்கள். சிறிதும் பெரிதுமாக. சுவர்களுக்கு மண்ணுக்காக குழிகள் தோண்ட வேண்டியிருந்தது. ஒரே இடத்தில் தோண்டியிருந்தால் யானைக்கு பொறிக் கிடங்கு ஆகியிருக்கும். ஆனால் நீளமாக ஓடி பிறகு வலது பக்கம் திரும்பி கிட்டத்தட்ட ட வடிவில் மண்ணை அகழ்ந்தெடுத்தோம். பொதுக் கிணறு பொதுக் கக்கூசு (காட்டின் எல்லையோரம் ஆளுயரப் புற்களின் மறைப்பிலான பொது நிலம்தான் அது) போலவே பொதுப் பதுங்கு குழி அது. குண்டு தள்ளி விழுந்தால் பதுங்கு குழி. உள்ளே விழுந்தால் மரணக் குழி.

வன்னி அவ்வாறான ஒரு சனத்திரளை கண்டிருக்காது. திடீரென வீங்கி முட்டியதைப் போல கொஞ்சமென்ன அதிகம் திணறித் தான் போனது. நிலம் பெரிதுதான். யாழ்ப்பாண குடாவை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம்தான். ஆனால் அத்தனை மக்கட் கூட்டத்தின் கொள்ளளவைத் தாங்கிக் கொள்வதற்கு அது தயாராய் இருக்கவில்லை. தன்னளவில் நிறைவான உற்பத்தியோடு தன்னளவில் அளவான விலை விகிதங்களோடு எல்லோராலும் ஒதுக்கி வைக்கப் பட்ட ஒற்றை ஜீவனைப் போல வன்னி தன் பாட்டுக்கு சிவனே என்று இருந்தது.

ஒதுக்கி வைக்கப்பட்ட நிலம்தான். 94 வரையும் வன்னி தொடர்பான யாழ்ப்பாணத்துப் புரிதல் எப்படி இருந்தது. வன்னியோ அது காய்ந்து போன கருவாட்டு நிலமெல்லோ.. அங்கை மனிசர் இருப்பினமோ.. நுளம்பும் மலேரியாவும்.. ச்சீச்சீ தூத்தூ..

ஒரு இரவில் காலம் எல்லாவற்றையும் அடித்து துவைத்துக் காயப் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் கொசுக்கள் பழகின. காடு பழகியது. யானைகள் பழகின. குரங்குகள் பழகின.

இனிப் பள்ளிக் கூடம் பழக வேண்டும்.

கையில் பள்ளிச் சான்றிதழ்களோ ஏதும் அடையாளங்களோ இல்லை. கட்டடத்தின் வெளியே ஒரு மேசையைப் போட்டு பெயர் முன்னைய பாடசாலை கடைசியாய் படித்த வகுப்பு எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருந்தார் ஏகாம்பரம் சேர். பின்னாட்களில் எனது கணக்கு வாத்தியார். ஆசிரிய பயிற்சி நெறிக்காக யாழ்ப்பாணம் பல தடவைகள் முன்பு வந்திருக்கிறார். பாடநேரங்களில் சில முன் வலிகள் அவரையுமறியாமல் வந்து விழும். ம்.. அப்ப எல்லாம் ட்ரெயினிங் வந்த போது வன்னியென்டால் ஒரு நக்கல் உங்களுக்கு. இப்ப….? என்பதோடு நிறுத்துவார். அந்த மனதை அப்போதை விட இப்போது ஆழமாக உணர முடிகிறது.

வெள்ளைச் சேட்டு நீலக் காற்சட்டை கறுத்தச் சப்பாத்து கட்டாயம் என்ற முன்னைய பாடசாலையின் கொழுப்பெடுத்த விதிகளை யுத்தம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. வெள்ளையைக் கிட்டவும் நெருங்க முடியாத ஒரு மண்ணிற அரைக் கை சேர்ட்டும் சாம்பல் நிற காற்சட்டையும் கான்சர் வருமென பயமுறுத்தினாலும் கனகாலமாக என் காலோடு தேய்ந்த நீல நிற முள்ளுச் செருப்புமென ஏகாம்பரம் சேருக்கு எனது முன்னைய பள்ளியின் பெயரையும் படித்த வகுப்பையும் சொன்னேன். ”ஓ.. அப்ப இந்த வருசம் ஓ எல் சோதினை.. என்று நான் மறந்தே போயிருந்த விசயத்தை அவர் நினைவு படுத்தினார். இன்னும் எட்டே மாதங்கள் இருக்கிறது. கடந்த ஆறு மாதமாய் பள்ளிப் புத்தகங்களை பார்த்தது கூட இல்லை.

பாடசாலைக் கட்டடங்களில் மக்கள் இருந்தார்கள். வெளியே மரநிழல்களில் வாங்கு மேசைகளை போட்டோம். ஆரம்பத்தில் நிரந்தர மாணவர்களுக்கு காலையும் இடம் பெயர்ந்தவர்களுக்கு மாலை வகுப்பும் என நடாத்தினார்கள். மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பமாகும். வீட்டில் சாப்பிட்டுவிட்டு சைக்கிள் ஓடி வந்தால் அருமையான நித்திரை வரும். மரநிழல் சுகமான காற்று தாலாட்டும். ஆசிரியர்கள் திட்டுவதற்கு எழுப்பினால் கூட வீடு வாசல் கிராமம் நகரம் என அனைத்தையும் இழந்து வந்த சோகத்தை முகத்தில் அப்பி விட்டு நிற்போம். இரங்கி இறங்கி விடுவார்கள். (முன்னைய யாழ்பாணத்து பள்ளியில் புண்ணியலிங்கம் சேர் தண்டிப்பதற்கு அழைத்தால் முதல்வேலையாக நெற்றியில் திருநீறை அப்பி முன் சென்று நிற்போம். சிவனடியார்களை துன்புறுத்தலாகாது என்பது அவரது கொள்கை.)

மதிய நேரத்துப் பள்ளி வேலைக்காகாது என்பதை சீக்கிரமே உணர்ந்து கொண்டார்கள். ஒரு புதிய புத்துணர்ச்சியுடன் கூடிய வாழ்வில் மறக்கவே முடியாத பள்ளி வாழ்க்கை அதன் பின்னர் எனக்கு ஆரம்பித்தது.

காரணமவள்.

0 0 0

20090224_pg17வள்ளிபுனம் சந்தியிலிருந்து தேவிபுரத்திற்கு பிரியும் வீதியில் கொஞ்சத் தூரத்தில் இருக்கிறது ஆச்சி தோட்டம். பென்னம் பெரிய தென்னந் தோட்டம். ஏக்கர் கணக்கில் சரியான அளவு தெரியாது. மண்ணால் சுவரெழுப்பப்பட்ட ஒரு சுமாரான வீடு அதன் நடுவில் இருந்தது. சீமெந்துக் கட்டுடன் கூடிய கிணறு, சற்றுத் தொலைவில் தேங்காய்களை கொப்பறா ஆக்கி எண்ணெய் எடுக்கும் ஒரு ஆலை.

ஆச்சி தோட்டம் எப்போதுமே மனிதர்கள் நிறைந்து காணப்படும். தேங்காய்களை பொறுக்குபவர்கள், தேங்காய்களை, உரிப்பவர்கள், காய வைப்பவர்கள், குரங்கு திரத்துபவர்கள் என எனக்கு முற்றிலுமான புதிய அலாதியான உலகம் அது. நல்ல மனிதர்கள். பெரும்பாலானவர்களின் பூர்வீகம் தமிழகத்தின் தென்மாவட்டங்கள்தான். கலவரங்களின் போது மலையகங்களில் இருந்து வன்னியில் குடியேறியவர்கள். வன்னியைத் திருத்தியவர்கள். காடுகளை விவசாய நிலங்களாக்கியவர்கள்.

ஆச்சி தோட்டத்தின் வீட்டுச் சுவரில் இடியன்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கட்டுத் துப்பாக்கிகள். பகல்களில் குரங்குகளை விரட்ட அவ்வப்போது வெடிக்கும். இரவுகளில் வெடித்தால் மான் அல்லது மரை அல்லது காட்டுப் பன்றி. சூடு வாங்கி அவை தப்பித்து ஓடிவிடும். விடிகாலையில் இரத்தத்தைத் தொடர்ந்து சென்று எடுத்துவர வேண்டும் உடலமாய்.

ஆச்சிதோட்டத்தை சுற்றியும் வேறும் பல பெயர்களையுடைய தென்னங்காணிகள் இருந்தன. பத்து ஏக்கர் காணி , மஞ்சள் கேட் காணி, சிவத்தக் கேற் காணி என அடையாளப் பெயர்கள். பத்து ஏக்கர் காணியில் நாங்கள் குடியிருந்தோம். காணியின் ஒரு முடிவில் காடு தொடங்கியது. இரண்டு அல்லது மூன்று வருடங்களேயான இளைய தென்னைகள் அப்போது நின்றன. ஒரு குடி நீர்க் கிணறு இருந்தது. அந்த சுற்று வட்டாரத்திற்கான குடி தண்ணீர்க் கிணறு அது ஒன்றுதான். கிணற்றடி எப்போதும் களை கட்டியிருக்கும்.

நாங்கள் மூன்று கொட்டில்களை அங்கு அமைத்தோம். காட்டின் ஓரமேயிருப்பதாலும் இளைய தென்னைகள் என்றதாலும் இரண்டு தடவைகள் யானை வந்திருக்கிறது. அப்போது நடைபெறும் களேபரங்களில் யானையே மிரண்டு போயிருக்கும். என்ன அடுத்த நாள் பார்க்கையில் சமையல் சட்டிகளும் பாத்திரங்களும் வளைந்தும் நெளிந்தும் போயிருக்கும்.

சைக்கிளில்த்தான் பள்ளி செல்வேன். முக்கால்மணி நேரம் எடுக்கும். கிட்டத்தட்ட புதுக் குடியிருப்புக்கும் அதேயளவு தூரம்தான். இரண்டும் எதிரெதிர்த் திசைகளில் இருந்தன. வள்ளிபுனம் சந்தியில் ஏறினால் பரந்தன் வீதியில் உடையார்கட்டு நேர் வீதி. ஆனால் அப்படியெல்லாம் செல்வதில்லை. இடையில் சுதந்திரபுரச் சந்தியில் திருப்பி உட்சென்று ஒழுங்கைகளில் ஏறி மிதந்து சுற்றியடித்து மீளவும் பரந்தன் வீதியில் ஏறுவேன். பள்ளி முடியும் போதும் அப்படித்தான்.

காரணமவள்!

0 0 0

udaiகண்ணன் அண்ணை பத்து ஏக்கர் காணியிலேயே தங்கி விட்டார். வன்னிக்கு இடம் பெயர்ந்த போது மகன் சுஜீவனுக்கு 3 வயது இருந்திருக்கும். கிளாலிப் படகில் அவன் என் கை அரவணைப்பில் இருந்தான். மகள் சுபா கலையக்காவின் வயிற்றிலிருந்தாள். பின்னர் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் அவள் பிறந்த போது வெளியே இரணைப்பாலையில் கிபிர் குண்டுத்தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தது. அவளுக்கு பெயர் வைக்க ஆலோசனைகளை கேட்ட போது கிபிரி என்ற பெயரைப் பரிந்துரைத்தேன். கண்ணன் அண்ணை ணங் என தலையில் குட்டினார்.

நாமெல்லாம் வெளியேறிய பிறகு அவருக்கு இன்னொரு மகள் பிறந்தாள். அவருக்கு ஆச்சி தோட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்புக் கிடைத்திருந்தது.

கடந்தவாரம் ஆச்சிதோட்டத்தில் செல் விழுந்து எட்டுபேர் பலியாகியதாக தமிழ்நெட் சொல்லியது. வேறெந்த தகவலும் இல்லை. பிறிதொரு நாள் என் UK central college முகப்பில் சிங்கள ராணுவச் சிப்பாய் நிற்கக் கண்டேன். பள்ளி முகப்பில் வெள்ளைக் கொடி பறந்து கொண்டிருந்தது.

காரணமவளானவளெங்கே…