அந்தக் கண்களும் சில காதல்களும்

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும்
இரு விழிகள்

0 0 0

சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல் பயணித்திருக்கும் நாயகியின் விழிகளும் அதன் மொழிகளும்தான். படம் நிகழ்வதென்னவோ எண்பதுகள் எனினும் அந்தக் கண்கள் மட்டும் என் கனவுகளில் தொன்னூறுகளை இழுத்து வந்து நிறைத்து விடுகின்றன. சட்டென விழிப்பு வருகையில் ஏமாற்றமுறுகின்றேன் நான். மீளவும் கனவுக்குள் நுழைதல் குறித்து அவாவுகிறது மனம்.

சட்டெனச் சந்தித்து விலகும் விழிகளின் மொழிகளில் ஒருபோதும் அச்சத்தையும் நாணத்தையும் மொழிபெயர்த்ததில்லை நான். ஆகக் குறைந்தது அவளது விழிகளில்.. முத்தங்களில் பரீச்சயம் அற்ற அந்தப் பதின்ம வயதுகளில் சட் சட் என உடலில் மின்சார அதிர்வுகளை நாட்தவறாது பார்வைகளால் மட்டுமே பரிசளித்துக் கொண்டிருந்தாள் அவள். எதிர்ப் பாலரிடம் தோன்றும் எந்த அதிர்வுகளும் உடல் இச்சையின் பிம்பங்கள் என்பதை அப்போதெல்லாம் நான் அறிந்து வைத்திருக்கவில்லை. “உனக்கு என்னை விடச்சிறந்த எவராவது கிடைக்கலாம். ஆனால் எனக்கு உன்னைத்தவிர இனியொருத்தி இல்லை” என ஒன்றிரண்டு வருடத்தில் நாலைந்து தடவைகளுக்கு மேல் சொல்கிற விளையாட்டின் முதல் படி அது.

பார்த்தால் சொல்லுடா என்பேன் நான். பக்கத்திலிருந்தவன் ஒருபோதும் என்னை ஏமாற்றியது கிடையாது.

பாக்கிறாளடா பாக்கிறாள் என்று அவன் காதுகளிடையே அலறும் பொழுதுகளில் சடாரெனத் திரும்பி அவள் விழிகளை களவு செய்து மொழி பெயர்க்க முயல்வதுண்டு. பென்சில் சீவும் சிறுவட்ட கட்டர் (cutter) ஒன்றின் பின்னிருக்கும் கண்ணாடியூடாக ஒருதடவை அவள் என்னை அவதானித்ததறிந்து மிதந்தேன்.

eyeநிறையப் பேசியும் எழுதியும் புரிந்து கொள்ள முடியாத இந்நாட்களைப் போல் அல்லாது அவளது விழிகளில் இருந்து விளங்கிக் கொண்டது அதிகம். ஏன் தாமதம் என்றதிலிருந்து இனி எப்போ சந்திக்கலாம் என்பது வரை அவள் ஒரு வார்த்தையும் பேசியதில்லை. ஆனால் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றிற்கான பதில்கள் என் கண்களில் இருந்ததா என்பதை அவள்தான் சொல்ல வேண்டும். பின்னாளில் பேசத் தொடங்கிய பிறகும் அவளது வார்த்தைகளை விடவும் பார்வைகளை அதிகம் விரும்பினேன்.

நீண்ட பெருங்காலத்தின் பின் அவளைச் சந்தித்து மதியம் தாண்டியவொரு பொழுதில் வாசலில் பிரிந்த போது அவள் பார்வையை மொழி பெயர்க்க முயன்றேன். எனக்கே எனக்கான எந்தச் செய்தியும் அதில் இல்லை. ஆனாலும் அதனை பத்திரப் படுத்திக் கொண்டேன்.

0 0 0

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு இப்போதும் காதலில் (ok.. காமத்தில் நட்பில் அன்பில் . சோமி கவனிக்க – ) இந்தப் பார்வைக் குறிப்புக்கள் உள்ளதா எனத் தெரியவில்லை. நகர் சார் சூழலில் அதற்கான தேவையற்றுப் போய்விட்டது போலத்தான் தெரிகிறது. மொபைல் போன் உண்டு எஸ் எம் எஸ் இருக்கிறது ஈமெயில் உண்டு என்னத்த கண்ணால பேசுறது என்பது உண்மைதான். ஆனாலும் அது போல வருமா என்பது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும் இல்லையா..?

0 0 0

இன்றைக்கு யோசித்துப் பார்த்ததில் காதல் தொடர்பில் நான் நிறையப் பேருக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது. நேற்றும் கூட ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் தெலைபேசி வெள்ளையினப் பெண்ணைத் திருமணம் செய்து வீட்டில் பெற்றோருடன் வசிக்கலாமா என்றார்.

பாடசாலை நாட்களில் சேயோனுக்கு அவனை விட அதிகம் காலம் எடுத்து யோசித்துச் சொல்லியிருக்கிறேன். அவன் ரூட் விட்ட அதே பெண்ணை விரும்பிய இன்னுமொருவன் என்னிடம் ஆலோசனை கேட்ட போது அவனுக்கும் சொல்லியிருக்கிறேன். என்னமோ தெரியலைடா மற்ற பெண்களைப் பார்க்கும் போது உருவாவதை விட இவளை பார்க்கும் போது மட்டும் என்ன என புரிய முடியாத அவஸ்தை மிகு உணர்வு தோன்றுவதாக சேயோன் என்னிம் சொன்னதை அவன் மறந்திருக்கலாம். என்னால் முடியவில்லை.

காலம் இதைவிடக் கொடுமையான வேளைகளையெல்லாம் என்மேல் கவிழ்த்திருக்கிறது. காலையில் வாசலில் காத்திருந்து யாருக்காக நான் பின்தொடர்ந்தேனோ அவளையே காதலிப்பதாய் ஒருவன் இடியிறக்கி என்னையே கேட்டுச் சொல்லச் சொன்னான். ங்கொய்யால.. அவ்வளவு பெரிய தியாகியாக எல்லாம் என்னால் இருக்க முடியவில்லை.

மிகக் கடுமையாக ஸ்கெட்ச் போட்டு ஆலோசித்து திட்டங்களை வரைந்தது என்றால் அது சோமிதரன் விடயத்தில் தான். எத்தனை தூக்கம் தொலைத்த இரவுகள் ! நண்ப, நன்றி மறவாதிரும்

கோபிராஜ் விசயம் ரொம்பவும் வித்தியாசமானது. கேளடா கேளடா கேட்டுச் சொல்லடா என்றவருக்கு நான் தயக்கத்தையே பதிலாக்கினேன். அவளோடு பேச பயமாய் இருக்கென்றேன். அவர் சொல்கிறார். பயப்பிடாதே.. எனக்காக பேசு. பயம் வரும் பொழுதுகளில் நான் சொல்வதை மனதில் நினைத்துக் கொள். பயம் தெளிந்து துணிவு பிறக்கும். அவருக்காக அவளோடு பேசும் பொழுது எனக்குப் பயம் வந்தால் அவர் மனதில் நினைக்கச் சொன்ன மந்திரத்தைச் சொல்லவா.. ? அது புலிகளின் தாகம் தமிழீழ தாயகம். அடிங்கொய்யால.. $%&%$§/&%$

வரும் யூன் மாதத்திற்கிடையில் எனக்காக கேட்டுச் சொல்லடா என்ற நண்பர்கள் மார்ச் ஏப்ரல்களில் ” வேண்டாம்.. வேறை ஒண்டு ஓகேயாச்சு” என்ற கதைகள்..

எண்ணிப் பார்த்தால் (இது இரண்டு அர்த்தத்திலும் வரும்) நான் ஆலோசனை கொடுத்த எல்லோருக்கும் காதல் காதில் சங்கூதித்தான் சென்றது. அது என் தவறு அன்று. விடா முயற்சியும் தொழில் பக்தியும் அவர்களுக்கு இல்லாவிட்டால் நான் என்ன செய்வது? சேயோனுக்கு அந்தப் பெண்ணின் பெயரே மறந்து விட்டது. சோமிதரனின் பெயரும் மறக்கப் பட்டிருக்கும். ஆனாலும் எல்லோரும் இப்போது இயல்பாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் மகிழ்ச்சியுடன் என்றும் சொல்ல முடியும். எல்லோரும் புறக்கணிக்கப் பட்ட பொழுதுகளில் அழுதவர்கள் புலம்பியவர்கள் வாழ்வு முடிந்ததென வரிகள் எழுதியவர்கள்.

இதுவே இயல்பும் யதார்த்தமும். எதிர்ப்பால் ஈர்ப்பின் படபடப்பை அதிர்வை இன்னும் என்னென்னவோ ஆன எல்லாத்தையும் அனுபவிப்போம் அனுபவியுங்கள். அதன் புறக்கணிப்பையும் சஞ்சலத்தையும் கண்ணீரையும் அனுபவிப்போம் அனுபவியுங்கள். மீளவும் இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்வோம் இடம்பெயருங்கள். எப்போதாவது அதை நினைத்து கதையும் கவிதையும் எழுதுவோம் எழுதுங்கள். ஆனால் ஒரு விடயம். இலக்குகள் மாறுபடலாம். ஆனால் இலட்சியம் ஒன்றுதான். அதை நினைவில் நிறுத்துவோம். நிறுத்துங்கள்

இதற்கு மேலும் காதலைப் பற்றி எழுதினால் நடக்கிற கதையே வேறு என காதிற்குள் எச்சரிக்கை விடப்படுவதால் சில திருத்தங்களுடன் நிறுத்திக் கொள்கிறேன். காதல் கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும்.
-மீள்பதிவு 18.09.2008