comments 20

திருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா

யுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை.

ஆனாலும் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்துக்குள் கிடந்த என்னை, பாடசாலைக்குக் காலை வருவதும் மதியம் திரும்புவதுமென வாழ்ந்த என்னை, எப்போதாவது யாரோடாவது ஐஸ்கிரீம் குடிக்கவும் உடுப்புக்கள் வாங்கவும் மட்டுமே நகரத்துக்கு வந்து போன என்னை, கிளாலி கடநீரேரிக்கு அப்பால் உலகொன்றிருப்பது குறித்து எந்த அக்கறையும் இன்றிக் கிடந்த என்னை என்னைப் போன்றோரை, யுத்தம் தூக்கி ஒவ்வொரு ஊராகத் துரத்தியதென்பது, துயரும் வலியும் நிறைந்ததெனினும் அதுவே மற்றுமொரு வகையில் புதிய அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய நினைவுகளை எனக்குள் தந்தது என்பதையும் குறித்தாக வேண்டும்.

இல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா? முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா..? இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா..? ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..?

1997 இல் மண்டபம் முகாமில் குறிப்பிடத் தக்க காலம் இருந்த பிறகு, திருச்சி சென்று குடியேற விண்ணப்பித்திருந்தோம். ஆனாலும் அதற்கான விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள். அந்தக் காலத்தில்த் தான் இந்தியன் தாத்தாவின் வருகையினால் எல்லோரும் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்தியிருந்தார்கள் இந்தியன் படத்தில். ஆமாங்க படத்தில்த் தான்.

திருச்சிக்கு செல்வதற்கு முன் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களில் ஓரளவு வெளிநாட்டு உறவகளின் பணபலம் உள்ளவர்களாலேயே அவர்கள் விரும்புகின்ற சிலவற்றைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தவாறான எந்த உதவியுமற்று சின்னச் சின்னக் கூலி வேலைகள் செய்தும், முகாமில் கொடுக்கின்ற மலிவு விலை உணவுப்பொருட்களையும் பணத்தையும் மட்டுமே நம்பியும் வாழ்க்கையை இன்னமும் கொண்டு நடாத்துகிறார்கள். தினமும் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்க வலிக்கும். உயிரை மட்டுமே வைத்திருப்பது தான் வாழ்க்கையா.. ?

(இவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் போன்ற ஏதாவது அமைப்புகளினூடாக உதவிகள் செய்ய முடியாதா என்பதற்கு அதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். )

நீண்ட காலத்திற்குப் பிறகு நிலையான மின்சாரம், தொலை பேசிப் பாவனை, கணணியை நேரே பார்த்தது, திரையரங்குகளில் புதிய படங்கள் என பல முதன்முதல் அனுபவங்களை (வேறை ஒண்ணும் இல்லைப்பா) திருச்சி எனக்குத் தந்தது. நாங்கள் காஜாமலைக் colony என்ற இடத்தில் குடியிருந்தோம். காஜாமலை என்பது ஒரு கற்குன்று. அவ்வாறான ஒரு உயர்ந்த கற்குன்றை மலையைக் கூடப் பார்ப்பது அப்போது தான் முதற்தடவை.

திருச்சியின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 88 ம் இலக்க பஸ் எடுக்க வேண்டும். வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..?

திருச்சியில் எனது பாடசாலைக்கு இணையும் முயற்சிகள், பாடசாலைகளின் விதிப்படியும், எனது தலைவிதிப்படியும் தள்ளித் தள்ளியே போனது. பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும்? அந்த இடம் பெயர்வின் சன சமுத்திரத்தில் நமது பாடசாலை அதிபரைக் கூட கண்டிருக்கிறேன். அவரும் தனது குடும்பம் குழந்தைகளுடன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தார். அன்றைக்கு அவரிடம் கேட்டிருக்கலாமோ..?

முல்லைத் தீவின் உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் நான் உட்பட இடம்பெயர்ந்த எவரும் உத்தியோக பூர்வமாக இணையவில்லை. 95 இல் எந்த வகுப்பு படித்துக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டு விட்டு 96 இல் அதற்கடுத்த வகுப்பில் இருந்து படியுங்கள் (உண்மையிலேயே இருந்து தான் – நிலத்தில் ) என விட்டார்கள்.

சரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது..? எப்படி எடுப்பது..? அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை. ஒரு பாடசாலையில் அதனை எமது சொந்த ஊரிலிருந்து வாங்கித் தரும் படி சொன்னார்கள். ஊரிலையெண்டால் விதானையிடம் தான் கேட்க வேண்டும். கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))

இப்படி இது ஒரு பக்கத்தால் நடந்தாலும், நாங்கள் வந்த காலப்பகுதியிலேயே வந்து, திருச்சியில் தங்கியிருந்த இரண்டு அண்ணன்களைப் பழக்கம் பிடித்து காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா ஒவ்வொரு திரையரங்குகளிலும் புதுப்படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக்கியிருந்தேன். பெரிய இடத்து மாப்பிளை, சூரிய வம்சம், நேருக்கு நேர் இவையெல்லாம் உடன் நினைவுக்கு வருகின்ற படங்கள். மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது.

உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம்.

ஆடிப் பெருக்கொன்றின் போது காவேரிக் (காவேரிதானே..) கரைக்கு சென்றிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் கிடையாது. வழுக்கையாறு என்ற ஒரு நீரோட்டம் மழைக் காலங்களில் இருக்கும். அது கூட யாழ்த் தாய் சத்திரசிகிச்சையில் பெற்றெடுத்த குழந்தையென்று சொல்வார்கள்.

திருச்சியில் அப்போது ஒரு ரூபாய்க்கு சாம்பார் கறிக்கு தேவையான அனைத்து மரக்கறிகளையும் வாங்கலாமென்றிருந்தது எனக்குப் பெரிய அதிசயம் தான். அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே பொருட்களின் விலைகள் நமக்கு அதுவரை பழக்கத்திலிருந்த விலைப் பெறுமதிகளிலிருந்து பெருமளவு வேறு பட்டிருந்தன. நான் வழமையாக செல்லும் கடைக்காரர் எனனைச் சிலோன் தம்பி என்பார். அவரைப் போன்றோருடன் பேசும் போது நானும் தமிழக பேச்சு வழக்கில் பேச முயற்சித்தேன்.

திருச்சியில் பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்.

ஆயினும் இந்தவாறான எதிர்காலம் என்னவென்று தெரியாத வாழ்க்கை மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வரத் தொடங்கி விட்டது. பாடசாலைக்கான அனுமதிகள் மறுக்கப் பட்டு விட்டன. எரிச்சல் மெதுவாக கிளம்பத் தொடங்கியது. கனவுகள் கலைந்து விட்ட ஏமாற்றம் தான் எஞ்சியது. ஆரம்பத்திலிருந்த சுற்றித் திரியும் ஆர்வம் அற்றுப் போய் வீட்டில் முடங்கத் தொடங்கினேன்.

யாருக்குப் பயந்து வந்தோமோ அவர்களின் கோட்டையான கொழும்புக்கே போய் விடலாம் என்ற அடுத்த முடிவுக்கு காலம் துரத்தியது. சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.

நன்றி திருச்சி
நன்றி இந்தியா

(ஒரு கற்பனைக்கு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க செட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ.. :))

Filed under: Uncategorized

20 Comments

 1. Sathia

  சயந்தன்,
  திருச்சிகாரன் இல்லாவிட்டாலும் அங்கே வாழ்ந்த அனுபவம் உண்டு.

  என்னதான் நீங்கள் பகடியாய் எழுதினாலும் வேதனையாய் தான் இருக்கிறது.

  \\உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம். \\
  ஆகா..இது அருமை.

  (காவேரிதானே..)
  – காவேரியேதான்…

  //மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள் //
  //செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.
  //
  இதற்காக ஒரு தமிழகவாசியாய் உங்களிடம் மன்னிப்புக்கேட்பதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத தமிழன்.

  சத்தியா.

 2. PPattian

  //ஒரு கற்பனைக்கு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க செட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ..//

  12B

  சோகத்தையும் சுகமா சொல்றீங்க நீங்க…

 3. அமிழ்து

  திருச்சியைப் பற்றிய உங்கள் பார்வைப் படிப்பதற்கு சுவாரசியமாகயிருந்தது.

  //வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..?//
  அது இந்தியன் வங்கி காலனி என்னும் ஸ்டாப்பிங்.

  //மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது. //

  அது சோனா, மீனா… 🙂

 4. Anonymous

  முகப்புப் படம் தூள்.. ஆமா இப்போ அறுத்தெறியிறாங்களே

 5. Anonymous

  நீங்க இருந்தது சுந்தர் நகர் காலனி என்று எலோ கேள்வி

 6. மோகன்தாஸ்

  நான் இருக்கேன் நான் இருக்கேன்.

 7. பிரதீப்

  சயந்தன்,
  நானும் திருச்சிக்காரன் இல்லைதான். ஆனால் அங்கே 15 வருடங்கள் வாழ்ந்தவன். அங்கே சிம்கோவுக்கு அடுத்த பேருந்து நிறுத்தமான சுந்தர் நகரில்தான் எங்க சித்தி வீடு இருந்தது.

  அந்த தியேட்டர்கள் “சோனா – மீனா” – மோனா இல்லை 🙂 நமக்கும் திரையரங்குப் பெயர்களைத் தப்பாச் சொன்னா மட்டும் உறுத்திரும்.

  நம்ம உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போறதே ஒவ்வொரு பரீட்சை முடிவுகள் வரும் முன்னர்தான். ஒவ்வொரு முறையும் வேண்டுதல் ஒன்றே “இந்த தடவை மட்டும் காப்பாத்திரு பிள்ளையாரே… அடுத்த தடவையில் இருந்து முதல் நாளில் இருந்தே படிச்சுடுறேன்”

  நிற்க, உங்கள் பதிவில் உள்ளூட இழையோடும் அந்த வேதனையைத் தந்தமைக்காக தமிழன்/இந்தியன் என்ற முறையில் மிகவும் வருந்துகிறேன். வெட்கித் தலைகுனிகிறேன்!

 8. ENNAR

  நான் திருச்சிராப்பள்ளிக் காரன் தான் யாரைக்கேட்டாலும் தமிழகத்தில் திருச்சியைவிட நலல ஊர்கிடையாது என்று தான் சொல்வார்கள்.

 9. matharasi

  உந்த ஊருக்குள்ளை ஒறு குட்டி யாழ்ப்பாணம்,இருக்கேங்க

 10. ரவிசங்கர்

  சயந்தன் மொக்கை போடுறார், மொக்கை போடுறாருன்னு சொல்லிச் சொல்லியே நல்லா இருந்த சயந்தனை இப்படி ஆக்கிட்டாங்களே 🙂

  1991, 1992ல் நானும் திருச்சியில் இருந்திருக்கிறேன். அப்ப பத்து வயது.
  அப்பவே நிறைய சிலோன் காரர்கள் பக்கத்து வீட்டில் தங்கி இருக்கப் பார்த்து இருக்கிறேன். அதுக்கப்புறம் புதுக்கோட்டைக்கு நகர்ந்தாலும் ஆண்டுக்குப் பல முறை திருச்சிக்கு வந்து செல்வதுண்டு. புதுகையை விட திருச்சி மேல் கூடுதல் பாசம் உண்டு. திருச்சி திரையரங்குகள், மலைக்கோட்டை, காவிரி ஆறு, திருவரங்கம் இது எல்லாம் யாராலும் மறக்க முடியாதது. அங்க பிடிக்காதது குறுகிய சாலைகளும் வீட்டு முன்னே ஓடும் திறந்த சாக்கடைகளும் தான்..

  //உயிருடன் இருப்பது மட்டும் தான் வாழ்க்கையா?//

  மனதைத் தைக்கும் கேள்வி. போரின் வெளி பாதிப்புகள் மட்டுமே பெரிதாகப் பலரும் அறிந்திருக்கும் நிலையில், அதன் உளவியல் பாதிப்புகளைப் பற்றி அறிய உங்கள் இடுகைகள் உதவியா இருக்கு. நட்சத்திர வாரத்துக்கு நல்ல தெரிவு.

 11. Anonymous

  \\..கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))\\

  இது ஒன்றுதான் உங்கள் பதிவில் மனதை உறுத்தாதது மட்டுமல்ல மகிழ்ச்சி தரக்கூடியதும்!

 12. delphine

  உள்ளேன் அய்யா..
  beautiful narration.

 13. "வற்றாயிருப்பு" சுந்தர்

  சயந்தன்,

  //யுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை. //

  //இல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா? முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா..? இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா..? ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..? //

  இந்த மாதிரி அற்புதமான அனுபவப் பகிர்வுப் பதிவுக்காகவே உங்களது அனுபவங்களை நியாயப்படுத்திவிடமுடியாது. உங்களது துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் வருந்துகிறேன்.

  //விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் //

  //பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும்?//

  //சரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது..? எப்படி எடுப்பது..? அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை.//

  வெட்கப்படவேண்டிய வேதனை தந்த நிகழ்வுகள். உங்களுக்குப் புதிதான விஷயங்கள். எங்களுக்குப் பழகிய விஷயங்கள் – பொதுவானது அவமானமும், வேதனையும்.

  //காவேரிதானே//

  காவிரி – இப்போது இக்கரையிலிருந்து அக்கரை வரை தளும்பி மணல் ஓடுகிறது!!!

  //சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.//

  இன்னொரு நண்பர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல, இம்மாதிரி புல்லுருவிகளைக் களையாதிருக்கும் நிலைக்காக இந்தியனாக வெட்குகிறேன். மன்னியுங்கள்.

  எதிர்காலம் நன்றாக அமைய பிரார்த்தனை.

 14. சயந்தன்

  சத்தியா பிரதீப் வற்றாயிருப்பு சுந்தர்
  இதிலே மன்னிப்பெல்லாம் எதற்கு..? அதிகாரங்கள் தவிர மற்றைய சாதார மக்களிடமிருந்து இயல்பான நட்பும் அக்கறையும் எனக்கு கிடைத்தது அங்கு. ஒரு வித நெருக்கடி நிலையில் வந்திருந்தவர்க்கு அவையே மெத்தப் பெரிய ஆறுதல்களாகவும் இருந்தன.

 15. மலைநாடான்

  //சத்தியா பிரதீப் வற்றாயிருப்பு சுந்தர்
  இதிலே மன்னிப்பெல்லாம் எதற்கு..? அதிகாரங்கள் தவிர மற்றைய சாதார மக்களிடமிருந்து இயல்பான நட்பும் அக்கறையும் எனக்கு கிடைத்தது அங்கு. ஒரு வித நெருக்கடி நிலையில் வந்திருந்தவர்க்கு அவையே மெத்தப் பெரிய ஆறுதல்களாகவும் இருந்தன//

  திருச்சியில் செட்டிலாகிவிட்ட என் நண்பர் ஒருவர் நெகிழ்வோடு அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் இவை.

 16. டிசே தமிழன்

  சயந்தன், பகிர்தலுக்கு நன்றி. இவ்வாறான பெயர்வுகள் அதிகம் பதிவுசெய்யப்படுவதும் இல்லை. இன்னமும் மண்டபம் உட்பட்ட அகதிமுகாம்களில் இருந்து கடலைப் பார்த்தபடி ஊரை நினைத்தபடி மனம்பிறழ்ந்தும், சீரழிந்தும் போகின்றவர்களைப் பற்றி…. :-(((

 17. லக்கிலுக்

  நான் திருச்சிக்காரன் இல்லையென்றாலும் உங்கள் பதிவை முழுமையாக படித்து விட்டேன்.

  //தமிழகத்தில் திருச்சியைவிட நலல ஊர்கிடையாது என்று தான் சொல்வார்கள். //

  என்னைக் கேட்டால் காஞ்சிபுரம் தான் நல்ல ஊர் என்பேன். ஏனென்றால் நான் காஞ்சிவரத்துக்காரன்!

 18. லிவிங் ஸ்மைல்

  வணக்கம்

  எனது சொந்த ஊர் திருச்சி தான். அதிலும் எனது தந்தை திரு.ராமசாமி அலுவலக உதவியாளராக பணிபுரிவதும் செம்பட்டு, திருச்சி செண்ட்ரல் ஜெயில் எதிர்புறம் உள்ள அகதிகள் முகாமில் தான்.

  அங்கிருந்து வெளியேறி தனிக்குடியிருப்பு பெற்ற பலர் எங்களுக்கு குடும்ப நண்பர்கள். அதிலும் ஒரு குடும்பம் ம.க.இ.க., இயங்கங்களில் தீவிரமாக இயங்கி வருபவை. அவர் மூலமாகத்தான் சிறுவயதில் எனக்கு ம.க.இ.க அறிமுகமானது.

  மற்றொரு குடும்பத்திற்கு ஆண்டு விடுமுறைக்கு நான் சென்று ஒரு மாத காலம் தங்கியிருந்தேன். என்றெல்லாம் அவர்களை அகதிகளாக நான் பார்க்கவில்லை. என் சிறு வயது அதை எனக்கு சொல்லித்தரவில்லை.

  இன்று அதன் வலியை வீரியமாக உணரும் போது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை…….

 19. Anonymous

  //ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்///

  இவர்கள் இப்போது வன்னிக்குச் சென்றுவிட்டார்கள் போலும்.

 20. ALLIRAJ

  போரின் பாதிப்புகள் பெரிதாக அறிந்திருக்கும் நிலையில், உளவியல் பாதிப்புகள் உதவியா இருக்கு.

Leave a Reply