யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது

வலைப் பதிவுகளில் நானும் சோமியும் அவ்வப் போது ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத ஏதாவது ஒன்றைப் பற்றி, நகைச்சுவையை மட்டும் மையப்படுத்தி அளவளாவுவோம். என்னை ஒரு மொக்கைப் பதிவு மன்னன் ஆகப் பிரகடனப்படுத்தும் அளவிற்கு அவை இருந்து வந்துள்ளன. இது குறித்து அவ்வப் போது சில பெரியவர்கள் நமக்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கூறுவார்கள். உங்களிடமிருந்து வரவேண்டியவை இவ்வாறான ஒலிப்பதிவுகள் அல்ல எனவும், இப்படியான பம்பல்களை விட்டுவிட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யலாம் எனவும் அவர்களிடமிருந்து அறிவுறுத்தல்கள் வருவதுண்டு.

ஆனால் இதன் அடிப்படையில் என்ன உளவியல் காரணமுண்டு என்பதை யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இடை நடுவில் பிரித்தெறியப்பட்டு எங்கெங்கோ தேசங்களில் இன்று சிதறுண்டு போய்க் கிடக்கும் இள வயதுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் இணையும் போது அங்கே கூத்தும் கும்மாளமுமே முதன்மையாய்த் தோன்றுவதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா..?

இவை குறித்து மேலும் பேசுவதற்கு முன்னர் ஈழத்தில் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சுமுக நிலை குறித்து பார்த்து விடலாம். அப்போதே அரசியல் ரீதியான முரண்கள் இருந்த போதும் இயல்பு நிலையென்பது பேணப்பட்டது.

இன்றைய பெரியவர்களாக இருக்கின்ற அன்றைய இளைஞர்கள் தம் வயதுக்கே உரிய அத்தனை கைங்கரியங்களையும் செய்திருப்பார்கள். பாடசாலைக் காலத்திலிருந்தே பிரியாத ஒரு நட்புக் கூட்டம் அவர்களுக்கு இருந்திருக்கும். அவர்கள் பூங்காக்களுக்கு நண்பர்களுடன் சென்றிருப்பார்கள். கடற்கரைகளுக்குச் சென்றிருப்பார்கள். ஒன்றாகத் திரையரங்குகளிற்கு சென்று படம் பார்த்திருப்பார்கள். நண்பர்கள் கூடி அரட்டையடித்திருப்பார்கள். நடுச் சாமத்தில் எந்தத் துப்பாக்கிப் பயமும் அற்று உலவியிருப்பார்கள்.

நமக்கு அந்த வாய்ப்புக்கள் கிடைத்தனவா..?
நாங்கள் பிறந்த போதே நிலம் எரிந்து கொண்டிருந்தது. பாலர் பாடசாலைக்குப் போகும் போதே ஊரடங்கு ஏதாவது உள்ளதா என ஆராய்ந்து தானே போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு இடப் பெயர்வுகளிலும் புதிது புதிதாக வந்து சேரும் நண்பர்கள் அடுத்தடுத்த வருடங்களில் பிரிந்து சென்று கொண்டிருப்பார்கள்.

மின்சாரமற்ற பத்துக்கும் மேலான வருடங்கள், எட்டுமணிக்கெல்லாம் அடங்கிவிடும் ஊர்கள், சிதைந்து போன திரையரங்குகள், உயிரின் நிச்சயமற்ற நாட்களென இந்த லட்சணத்தில் எங்கள் தலைமுறை எதை அனுபவித்திருக்க முடியும் ?

ஆயினும் இளமைக் காலத்தை இவ்வாறு இழந்த வருத்தமெதுவும் எனக்கு இருக்கவில்லை, கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் சமாதானத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் வரை.

2004 இன் நடுக்காலப் பகுதி

நான், சோமிதரன், நண்பர்கள் ஒரு சிலர் யாழ்ப்பாணத்தில் நிற்கின்றோம். அது என்றும் நான் பார்த்திராத யாழ்ப்பாணம். முற்றான சமாதானமென்றில்லாவிட்டாலும் சமாதானம் மீதான நம்பிக்கைகளே அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

நாங்கள் கடற்கரைகளுக்குச் சென்று பாணும் இறைச்சியும் சாப்பிட்டோம். எவரும் பிடித்து விட மாட்டார் என்ற நம்பிக்கையில் இராணுவ முகாம்களைக் கடந்தோம். ஏதாவது ஒரு உள்நுழைவில் ஒன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த புலிகள் மற்றும் இராணுவத்தினரைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். அடையாள அட்டை கேட்காத இராணுவத்தை நட்பாகப் பார்த்தோம்.

நடு இரவுகளில் கள்ளுக் குடித்தோம். கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என பாடிக்கொண்டு இரவின் வீதிகளில் எந்தப் பயமுமற்றுத் திரிந்தோம்.

அது போலவே கொழும்பில் சோதனைச் சாவடியற்ற பிரயாணங்களை அனுபவித்தோம். காலி முகத் திடல் கடற்கரையில் சாமம் தாண்டியும் கதைகள் பேசினோம். பொலிஸ் பதிவுகளை தூக்கி வீசியெறிந்தோம்.

அந்த ஒன்றிரண்டு நாட்களின் அனுபவங்களில் யுத்தமற்ற வாழ்வு எத்தனை மகிழ்ச்சியானது என்பதை அறிந்து கொண்டேன். இவையெதுவுமற்று இழந்த வருடங்களை எண்ணி வருந்தினேன். தங்கள் காலங்களை மகிழ்ச்சியாகக் களித்த அன்றைய இளைஞர்கள் மீது பொறாமை வந்தது.

வயதின் குறும்புகளுக்கு இடம் கொடுக்காத காலம் எங்களது. அந்த அனுபவங்களையெல்லாம் யுத்தம் எங்களிடமிருந்து அடித்துப் பறித்தது.

இதோ அந்த வயதுகளைக் கடந்து அடுத்த கட்டங்களிற்குள் உள் நுழைந்து விட்ட போதும் எப்போதாவது சிதறிக் கிடக்கின்ற நண்பர்களைக் காணுகின்ற போது கடந்த காலத்தினை அனுபவிக்கத் துடிக்கிறது மனது. அந்த அரட்டைகள், அந்த நக்கல்கள், கேலிப் பேச்சுக்கள் என மீண்டும் சிறு பையன்களாகி விடுகிறோம். அது நண்பர்கள் இணைந்த எந்த நிகழ்விலும் வெளித் தெரிகிறது. தவிர்க்கவும் முடியாதது.

சமாதானம் மீண்டும் தன் முகத்தை மறைத்துக் கொண்டு விட்டது. மீண்டும் யுத்தம், சாவு, கடத்தல்கள், அடையாள அட்டை, குண்டு வீச்சுக்கள், செல்லடி. அடுத்த தலைமுறையும் எங்களைப் போலவே வாழ வேண்டுமென்ற விதியாகி விட்டது அங்கே. அவர்களும் நட்பை இழந்து, அரட்டைகளை இழந்து, கடற்கரைகளை இழந்து, பூங்காக்களை இழந்து …..

யுத்தமற்ற நிமிர்ந்த வாழ்வு எவ்வளவு அழகானது..

20 Comments

  1. உண்மைதான். :-(( அப்படியானால் அந்த மனச்சுமைகளை குறைக்கதான் மொக்கை பதிவு போடுகிறீர்கள் என்று சொல்லவருகிறீர்கள் இல்லையா?:-))

  2. உங்கள் மொக்கைப் பதிவுகள் இணையத்தில் உள்ள பலப்பல தமிழர்கள் தாம் தரமென நினைத்துப் போடும் பதிவுகளிலும் மேலானது.

  3. //இன்றைய பெரியவர்களாக இருக்கின்ற அன்றைய இளைஞர்கள் தம் வயதுக்கே உரிய அத்தனை கைங்கரியங்களையும் செய்திருப்பார்கள். பாடசாலைக் காலத்திலிருந்தே பிரியாத ஒரு நட்புக் கூட்டம் அவர்களுக்கு இருந்திருக்கும். அவர்கள் பூங்காக்களுக்கு நண்பர்களுடன் சென்றிருப்பார்கள். கடற்கரைகளுக்குச் சென்றிருப்பார்கள். ஒன்றாகத் திரையரங்குகளிற்கு சென்று படம் பார்த்திருப்பார்கள். நண்பர்கள் கூடி அரட்டையடித்திருப்பார்கள். நடுச் சாமத்தில் எந்தத் துப்பாக்கிப் பயமும் அற்று உலவியிருப்பார்கள்.

    நமக்கு அந்த வாய்ப்புக்கள் கிடைத்தனவா..?
    நாங்கள் பிறந்த போதே நிலம் எரிந்து கொண்டிருந்தது. பாலர் பாடசாலைக்குப் போகும் போதே ஊரடங்கு ஏதாவது உள்ளதா என ஆராய்ந்து தானே போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு இடப் பெயர்வுகளிலும் புதிது புதிதாக வந்து சேரும் நண்பர்கள் அடுத்தடுத்த வருடங்களில் பிரிந்து சென்று கொண்டிருப்பார்கள்.

    மின்சாரமற்ற பத்துக்கும் மேலான வருடங்கள், எட்டுமணிக்கெல்லாம் அடங்கிவிடும் ஊர்கள், சிதைந்து போன திரையரங்குகள், உயிரின் நிச்சயமற்ற நாட்களென இந்த லட்சணத்தில் எங்கள் தலைமுறை எதை அனுபவித்திருக்க முடியும் ?//

    உண்மைதான் சயந்தன்!

    ஒரு பொழுதில், சோமி இதை என்னிடம் கேட்டான். உண்மையில் இதற்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. பலதையும் இழந்த ஒரு தலைமுறையாக, உங்கள் தலைமுறை எங்கள் உருப்பெற்ற சோகம் கடினமானதுதான். அடுத்த தலைமுறையும் அப்படி ஆவதற்கு முன் …

  4. //யுத்தமற்ற நிமிர்ந்த வாழ்வு எவ்வளவு அழகானது..//
    மொக்கை என்று ஆரம்பித்து, மனதுள் ஒரு வலி கண்டது கடைசி வரி.

  5. நல்ல கருத்து, நன்றாக சொன்னீர்கள்

    யுத்தமில்லா நிமிர்ந்த வாழ்வை கொஞ்ச காலமாவது காட்டிய ரனில் விக்கிரமசின் ஹாவுக்கு யாழ்ப்பாண மக்கள் ஓட்டு போட முன் வராதது ஏன்?

  6. இப்ப என்னதான் சொல்லவாறீங்கிள்?

  7. The longest time i studied in one school in srilanka was 3 years. Which was from grad 1 to 3.

  8. //யுத்தமில்லா நிமிர்ந்த வாழ்வை கொஞ்ச காலமாவது காட்டிய ரனில் விக்கிரமசின் ஹாவுக்கு யாழ்ப்பாண மக்கள் ஓட்டு போட முன் வராதது ஏன்?//
    யுத்தமில்லா நிமிர்ந்த வாழ்வை கொஞ்ச காலமாவது காட்டிய ரனில் விக்கிரமசின் ஹாவுக்கு சிறிலங்காவின் சிங்களப் பெரும்பாண்மை மக்கள் ஓட்டு போட முன் வராதது ஏன்? என்றும் கேட்டுப் பார்க்கலமோ?

  9. சயந்தன்!
    ஏதோ ஒரு யுத்தமற்ற வாழ்வும்; 40 வருடத்துக்கு முற்பட்ட இலங்கையும் இனியும் சாத்தியமா???
    அமைதி ஏற்பட்டாலும் ;மாறிய வாழ்க்கை முறை;;மீளவருமா???

  10. சயந்தன்,
    எம் வாழ்வில் மிக இலகுவாய் கிடைத்துவிட்ட இதல்லாம் எவ்வளவு ஆனந்தமானது என்று புரியவைத்துவிட்டீர்கள். அதே சமயம் உங்கள் உள்ளவருத்தத்தையும் யுத்தம் ஏற்படுத்தும் காயங்களையும் படிக்கையிலே மனம் கனக்கிறது.!!!

  11. //யுத்தமில்லா நிமிர்ந்த வாழ்வை கொஞ்ச காலமாவது காட்டிய ரனில் விக்கிரமசின் ஹாவுக்கு சிறிலங்காவின் சிங்களப் பெரும்பாண்மை மக்கள் ஓட்டு போட முன் வராதது ஏன்? என்றும் கேட்டுப் பார்க்கலமோ? //

    ஆஹா.. இது சூப்பர்.

    நாடு இன்றிருக்கும் நிலைக்கு அடுத்த எலக்சன் வந்தா கண்டிப்பா சிங்களீஸ் ஓட்டும் ரனிலுக்குத்தான் என்று நினைக்கிறேன். ஆனா, அடித்த எலக்சனுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கோ?

  12. வாசித்து முடிக்கையில் ஒரு பெருமூச்சு மட்டும் வந்தது. 🙁

  13. ரணில் காட்டிய சுதந்திரத்திலைதான் யாழ்ப்பாணத்தில் சிங்களவனின் அப்பக்கடைகளும் இதுவரை யாழ்பாணம் அறிந்திராத கலாச்சார சீரழிவுகளும் ரெட் குறூப் அது இது என
    சண்டித்தன குழுக்களும் தோற்றம் பெற்றன.

    விஜய்க்கு கற்பூரம் ராஜ தியேட்டரிலை
    இரசிகர்கள் காட்டி கொண்டாடியதும் அப்போதுதான்.(கேட்க பிபிஸி பெட்டக நிகழ்வு)

    ராஜபக்ஸ துவேஸி ரணில் நரி

  14. இதற்கு மௌனத்தைத்தான் பதிலாகத் தரமுடிகின்றது.

  15. theevu……சமாதான காலத்திற்கு முதலெ ரெட் குரூப் வந்துவிட்டது…………………..லூசதனமா பேசாதிங்கப்பா….

    துரோலிகளாகவும் மாவீரர்களாகவும் எங்களில் பலர் மாறிவிட…..செத்துக்கொண்டிருகிறோம் நாங்கள்….எனக்கு எதுவும் பேச முடியவில்லை
    ககற்கரை பூங்காஅ….இந்தியா வந்த பிறகுதன் பலபேருக்கு இரவில் மின்சர வெளிச்சமெ தெரிந்தது…

  16. சோமி
    //லூசதனமா பேசாதிங்கப்பா….//

    இதுக்கு மிஞ்சி என்னத்தை கதைக்கிறது.

  17. You need peace first then only you can think abt the rest

    இது நான் மனித உரிமை அலுவலர்களிடன் விவாதம் புரியும் போது அவர்கள் கூறும் வார்த்தை. அதை வார்த்தைக்கான முழு அர்த்தம் உங்க பதிவை படித்த பிறகு தான் புரிகிறது.

  18. வணக்கம்
    உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
    பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

Comments are closed.