அஷேரா! சொல்லப்படாத கதை – வெ.நீலகண்டன்

நாற்பதாண்டுக்கால ஈழத்து வாழ்க்கைத் துயரங்களைத் தன் இரு நாவல்களில் உளவியல் நுண்ணுணர்வோடு பதிவு செய்து கவனம் ஈர்த்த சயந்தனின் மூன்றாவது நாவல் ‘அஷேரா.’ போர், தனிமனிதர்களின் வாழ்க்கையை எப்படிக் கூறுபோட்டு விளிம்புக்குத் துரத்துகிறது என்ற எதார்த்தத்தை அருள்குமரன், அற்புதம், அபர்ணா, நஜிபுல்லா போன்றவர்களின் வாழ்க்கையைக் கொண்டு காட்சிப்படுத்துகிறார் சயந்தன். புலிகள் இயக்கத்திலிருந்து மீண்டு சுவிட்சர்லாந்துக்குத் தஞ்சம் கோரி வருகிற அருள்குமரன், புளோட் அமைப்பிலிருந்து மீண்டு ஏற்கெனவே சுவிஸில் அகதியாக வசிக்கிற மூத்த தலைமுறையைச் சேர்ந்த அற்புதத்தைச் சந்திக்கிறான். இருவருக்குமான ஆத்மார்த்தமான நட்புக்கிடையில் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான அச்சமும் ஊடாடுகிறது. ஓர் உச்ச போதையில், ‘ஏதேனும் ஒரு பொழுதில் என்னைக் கொன்றுவிட மாட்டாயல்லவா மகனே’ என்று இறைஞ்சுகிறார் அற்புதம். தந்தை வெளிநாடு சென்று உழைக்க, உள்ளூர் இளைஞன் ஒருவனிடம் வயப்பட்டு, இறுதியில் அந்த இளைஞனுக்கு மணமாகும் நாளில் தற்கொலை செய்துகொள்கிற தாயையும், தையல் வகுப்புக்குச் செல்வதற்காக வந்து தங்கி, தன்னுடலின் ‘பேர் அண்ட் லவ்லி’ வாசனையை முகரத்தந்த அமலி அக்காவையும் கண்டு காமத்தை வெறுக்கும் அருள்குமரனுக்கு, ஆராதனாவும் அபர்ணாவும் வேறு வேறு அனுபவங்களைத் தருகிறார்கள். அற்புதம் தொலைக்காட்சியில் அரை நிர்வாணக் காட்சிகளை மட்டுமே கண்டு காமம் நுகர்கிற மனிதர். போரும் புலம்பெயர்தலும் இருவரையும் ஒரு வீட்டில் இணைக்கின்றன.

காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி அருள்குமரன், அற்புதத்தின் ஈழத்துப் போர்ச்சூழல் வாழ்க்கையை நினைவோட்டமாகப் பின்னிச் செல்வது நாவல் தரும் நல்லதொரு அனுபவம். இத்தனை தூரம் பெயர்ந்துவந்தும் அவநம்பிக்கையும் அச்சமும் பதற்றமும் அவர்களைத் துரத்துகின்றன.

தமிழீழத் தாயகத்தையே கனவாகக் கொண்டு, குழுக் குழுவாகச் சிதைந்து ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு மண்ணை ரத்தக்களறியாக்கிய ஈழத்து அரசியலை நாவலின் உள்ளீடாக வைத்துப்பேசுகிறார் சயந்தன். சிங்கள ராணுவம் ஒருபுறம் துரத்த, குழுக்களை இயக்கிய தனிநபர்களின் அத்துமீறலும் கோபமும் வன்மமும் ஈழத்து மக்களின் இருப்பை எப்படியெல்லாம் துவம்சம் செய்தன என்பதையும் நாவல் காட்சியாக்குகிறது.

ஈழம் பற்றிச் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கின்றன. இறுக்கம் தளர்ந்து இளம் படைப்பாளிகள் அவற்றையெல்லாம் தேடியெடுத்து எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் சயந்தன் நம்பிக்கையளிக்கிற படைப்பாளி. ‘ஆறாவடு’, ‘ஆதிரை’ வரிசையில் ‘அஷேரா’வும் கவனத்தில் இருக்கும் முக்கிய நாவல்!

-ஆனந்த விகடன்