அஷேரா! அக உணர்வுகளின் திறப்பு – சுரேந்தர்

தமிழ் ஈழ போராட்டத்தைப் போன்ற குழப்படி மிகுந்த விடுதலைப் போராட்ட வரலாறு உலகில் எங்குமே காணக் கிடைக்காது. கொள்கை சாய்வுகளற்ற மூன்றாம் மனிதன் அதைப் புரிந்து கொள்ள தலைப்பட்டானானால் கிறுக்குப் பிடித்துப் போகும். என் பள்ளிக்காலத்தில் நான் நினைத்து இருந்தேன் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே பிரச்சினை. தமிழ் மக்கள் சார்பாக பிரபாகரன் தலைமையில் LTTE இருந்தது. பிறகு புலிகளுக்கும் கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் சிக்கல் இருப்பதை அறிந்துகொண்டேன். அதன் பிறகு தமிழ் பேசும் இந்துக்கள் கிருஸ்தவர்களுக்கிடையே கூட LTTE யுடன் முரண்பட்ட வெவ்வேறு இயக்கங்கள் (PLOTE, TELO, EPRLF, EROS ) இருந்தன, ஒருவரை ஒருவர் துரோகிகள் என்றனர், அவர்களுக்குள் வெட்டிச் சாய்த்துக்கொண்டனர், என்பதையெல்லாம் அறிந்து கொண்ட போது “ச்சைக் ” கென்று இருந்தது. இவையல்லாமல் இந்திய ராணுவம் (IPKF) பிறகு பிரதான எதிரி இலங்கை ராணுவம். சிறிய நிலப்பரப்பில் இத்தனை ஆயுத இயக்கங்கள் ஒரே காலக் கட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தன என்றால், கேட்பவர் நமக்கே கிறுகிறுக்கிறதில்லையா! என் எதிரே நிற்பவன் நண்பனா எதிரியா, என்னைக் கொல்வானா இல்லை நான் முந்திக் கொள்ள வேண்டுமா என்று வாழ்நாளெல்லாம் அஞ்சி அஞ்சி வாழ்வதை கற்பனை செய்ய முடிகிறதா.

இறுதிப் போருக்குப் பின் அங்கிருந்து வெளிவரும் படைப்புகள் அந்தக் குழப்படியான காலக்கட்டத்தின் இருளை மெல்ல விலக்கம் செய்கின்றன. தாமதமாக என்றாலும் அந்த இருண்ட வரலாறு வெவ்வேறு பார்வைகளில் வெவ்வேறு பரிமாணங்களில் பதியப்பட வேண்டும். அவற்றில் சயந்தனின் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தன. வழமையான புலிகள் x இலங்கை ராணுவம் பரிமாணத்தில் அல்லாமல் தமிழீழ இயக்கங்களிடையே இருந்த முரண்பாடுகளையும் மோதல் போக்குகளையும் பிரதானமாகக் கொண்டு படைக்கப் பட்டிருக்கிறது அஷேரா.குருதிக்கறை படிந்த கடந்த காலத்தின் இருண்மை நிகழ்காலத்தையும் பின்தொடர்ந்து தொந்திரவு செய்கிற post war tantrum உடைய இயக்க மாந்தர்களின் கதை எனலாம் அஷேராவை.

வெறும் இயக்கங்களிடை உள்விவகாரங்களைக் குறித்த புற தகவல்களாக சுருங்கி விடாமல் அகம் சார்ந்து பல உணர்வுத் திறப்புகளைச் செய்து கொண்டே இருந்தது. குறிப்பாக அருள்குமரன் – அபர்ணா இடையே திரண்டு வரும் திருமணம் தாண்டிய உறவு கச்சிதமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதை affair உண்டு/இல்லை என்று எப்பக்கமும் உறுதியாக சொல்லி விடமுடிகிறது இல்லை. ஆண் – பெண் உறவுச் சிக்கல்கல் ஈழப்போரின் வரலாற்றை விடவும் பழமையானதுதானே. அதற்குரிய இடம் நாவலின் இரண்டாம் சாப்டரில் இருந்தே தொடங்கி விடுகிறது. பால்யம் முதல் தாம் வெறுக்கும் மனிதன் சரவணபவனைப்போல் தாமும் ஆகிவிட்டிருப்பதை சிக்கலான தருணம் ஒன்றில் அருள்குமரன் கண்டுகொள்கிற போதில் தம் அம்மையின் நியாயமும் அவனுக்கு விளங்கி இருக்கலாம். அது முன்னமே விளங்கித்தானோ என்னவோ அவன் அந்த உண்மையின் வெக்கையில் இருந்து விலகி விலகி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறான். “யார் என்ன சொன்னாலும் அம்மாவ பத்தி தப்பா நினைக்கக் கூடாது அப்பன்” எனும் தம் அம்மையின் வார்த்தைகளை அருள்குமரன் நினைவு கூறும்பொழுது புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.

போர் அவலங்களுக்கு இணையாக தாய்மை _ காதல் _ காமம் என பெண்மாந்தர்கள் முக்கியத்துவம் பெற்று இடைப்படுகிறார்கள். அவர்கள்மேல்தான் நாவலே கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது. ஒரு நாள் அவந்தி அருள்குமரனிடம் சொல்கிறாள் “எல்லா ஆண்களுமே வாசல் கதவை தட்டித்தான் பார்ப்பார்களாம். வாசலில் வைத்தே கதைத்து அனுப்புவதா அல்லது உள்ளே அழைத்து கதிரையில் உட்கார வைப்பதா அல்லது அதற்கும் உள்ளேயா என்பது பெண் தீர்மானிப்பதுதானாம்”

திருச்சியில் இருந்தபோது இலங்கை அகதிகள் முகாமைத் தாண்டித்தான் எனது அறைக்கும் பணியிடத்திற்கும் சென்று வந்து கொண்டிருந்தேன். அதன் உள்ளே எப்படி இருக்கும் என்று தெரியாது. எப்படி பிழைக்கிறார்கள் என்பதும் தெரியாது. செய்தி தாள்களிலோ சேனல்களிலோ கூட முகாம் வாழக்கையைக் குறித்த எந்தப் பதிவும் நமக்கு அறிய கிடைப்பதில்லை. சிறிய பகுதி என்றாலும் கூட மண்டபம் அகதிகள் முகாமின் வாழக்கைப் பாடுகளை நுணுக்கமாக அஷேராவில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. முகாமிற்கு வரும் கியூ ப்ரான்ச் அதிகாரி அருள்குமரனை பார்த்து சொல்கிறார் “பிழைக்கப்போன இடத்தில பிழைப்பைப் பார்க்காமல் வீணாகச் சண்டை பிடித்து சாகிறீர்கள்”. இதை இந்திய அரசின் நிலைப்பாடாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆரம்பம் முதலே இந்த ஒற்றை வரியின் மேல்தான் தமது தமிழீழ கொள்கையை இந்தியா கட்டமைத்து கொண்டிருக்கிறது.

உண்மையைச் சொல்கிறேன் – அஷேரா என்கிற தலைப்பில் எனக்கு உவப்பில்லை (உம்மை யார் கேட்டது ) இச்சா என்கிற தலைப்பில் கூட எனக்கு உவப்பில்லாமல்தான் இருக்கிறது. ஆனால் நாவல் பிடித்து இருந்தது. மத்திய ஆசிய பகுதியின் பழமையான தாய் தெய்வமாம் அஷெரா. செவ்வியல் தன்மையை அடையவிருக்கிற நாவலுக்கு ஆறாவடு, ஆதிரையைப் போன்ற வடிவான தமிழ் பெயர் ஒன்றை வைத்திருக்கலாம் என்கிற மனக்குறை ஏற்பட்டுவிட்டது. நாவலின் கருவிற்கு முக்கியத்துவம் இல்லாத ஆனால் தவிர்க்க இயலாத ஒற்றுமை ஒன்றை கவனித்தேன். பிரதான பாத்திரங்கள் அனைத்தும் “அ ” வரிசையில் பெயரிடப்பட்டிருக்கின்றன – அருள்குமரன் , அற்புதம், அபர்ணா, ஆராதனா, அவந்தி, அரங்கன். சயந்தனுடைய நாவல்களும் அப்படியே – ஆறாவடு, ஆதிரை, அஷேரா. இந்த “அ” வில் என்னவோ இருக்கிறது.