அஷேரா! புனைவெனும் பொய் – நந்தா கந்தசாமி

ஒரு எழுத்து அது ஒரு நாவலாக இருந்தாலென்ன அல்லது அது ஒரு வெறும் கடதாசி எழுத்தாக இருந்தாலென்ன, புனைவெனிலும் அது உண்மைக்கு மிக அருகாக போகுமெனில் அது ஒரு மேன் இலக்கியம் ஆகின்றது . நான் “அஷேராவை” வாசிச்சு நொந்து போனேன்.

சயந்தனின் “அஷேரா” நாவலில் முதல் பக்கதில் தமிழீழ விடுதலை அமைப்புக்களை , தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TELO) இருந்து அட்டவணை படுத்திய சயந்தன், EROS, EPRLF, PLOTE மற்றும் தமிழீழ விடுதலை இராணுவத்தின்(TELA) பின் ஆறாவது அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகளை (LTTE) அட்டவணை படுத்தியதன்  அரசியல் என்ன ? இயக்க உருவாக்க காலம் உலகறியும்.

“அஷேரா” வுக்கு பதிலாக “அமலி”  என்றிருந்தால் இந்த நாவல் என்னும் கனதியாக இருந்திருக்கும். 

பண்ணையார் கொலையும் “புளொட் “B” காம்ப் படுகொலைகளும் புளொட்டின் “உள்ளிருந்தவர்களால்”  பகிரங்கபடுத்தப்பட்டு “புளொட்” இயக்கம் உடைந்து சிதறி போனது யாவரும் அறிந்த ஒன்று.  பண்ணையார் கொலையுடன் “மதன்” கைது செய்யபட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டதும் மதனுடன் தப்பி ஓடிய “விச்சு” இப்போ கனடாவில் வாழ்வதும் உண்மை. 

ஆனால் சயந்தனின் புனைவும் புளொட் அமைப்பின் மீதான வன்மமும், காழ்ப்புணர்ச்சியும், புரட்டும், அற்புதனின் பாத்திர படைப்பின் மூலம் சயந்தன் தன் விசுவாச அரசியலை செய்திருக்கிறார். நாவலை பாராட்டி சூமில் பேசிய இந்திய முற்போக்கு இலக்கியவாதிகளின் நாவல் மீதான பாராட்டு இதற்கு தானே ஆசை பட்டாய் “சயந்தன்” என கேட்க தோன்றுகிறது. புலுடா எல்லோரிடமும் விட ஏலாது சயந்தன். 

டம்பிங் கண்ணன் (சங்கிலி) முள்ளிகுளத்தில் நின்று ஓடாது அடிபட்டே செத்து போனான். சங்கிலி மீது மிகவும் மோசமான விமர்சனத்தை கொண்டிருந்தாலும் அவதூறுகளை விதைப்பதை பொறுத்திருக்க முடியவில்லை. நாவல் மீதான முழுமையான விமர்சனத்தை எழுதுவதென்பது நேர விரயம். எழுதும் எழுத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும் அது புனைவெனிலும். 

புளொட் என்னும் ஒரு இயக்கம் தளத்தில் தன் அங்கத்துவ இலக்கத்தை கொண்டிராத முழுமையாய் ஒரு தன் ஆர்வ தொண்டர் (Volunteers) அடிப்படியில் இயங்கிய அமைப்பு. அவ் அமைப்பின் தலைவரை சுளிபுரத்தில்,  இரண்டே இரண்டு வாரம் தன் ஆர்வ தொண்டனாய் இயங்க தொடங்கிய ஒரு தோழனும் சந்திக்ககூடியதான ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுத்த தோழர்களை கொண்ட அமைப்பாகவும் அது இருந்திருக்கிறது. அதன் மீது இவ்வாறு எறிந்த சேற்றை தொடர்ந்து எறிதல் கேவலம் அதுவும் புனைவெனும் பொய்யுடன்.