சாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை

காலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகிறது. எமது 18 வருடகால ஆயுதப்போராட்டம் இதைச் சாதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர சாதியத்தின் முனையும் மழுங்கிவருகின்றது.

அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளை சிற்சில இடங்களில் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது. அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவத்துடன் கட்டுரை ஆரம்பமாகிறது.

சாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கிறது.

விடுதலைப்புலிகள் – புலிகளின் அதிகாரபூர்வ இதழ் – 1991 ஐனவரி

00

யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு இருக்கிறது. அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனிமனிதருக்குச் சொந்தமானது. அந்தத் தனிமனிதர் தன்னை ஒரு “உயர்சாதிக்காரர்” என எண்ணிக்கொள்பவர். அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் ஒரு மக்கள் பிரிவும் இருக்கிறது. இந்த மக்களுக்கு குடிதண்ணீர் வசதியில்லை. இவர்கள் இந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள். தண்ணீர் அள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடிவருகிறார். தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றை தீண்டக்கூடாது என்கிறார்.

இதே போன்று வடமராட்சியில் ஒரு சம்பவமும் காரைநகரில் ஒரு சம்பவமும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் வந்து முறையிடுகின்றார்கள். விடுதலைப்புலிகள் அந்த “உயர்சாதிக்காரர்” என்பவரை அழைத்து நியாயம் கேட்கிறார்கள். சமூக நீதி – சமத்துவம் பற்றி விளக்குகிறார்கள். மாறும் உலகத்தைப் பற்றியும் மனித நாகரிகத்தைப்பற்றியும் பேசுகின்றார்கள். கிணற்றுச் சொந்தக்காரர்கள் இலகுவாக மசிவதாக இல்லை.

தனது காணி, தனது கிணறு, தனது சாதி என அகம்பாவம் பேசுகிறார். உளுத்துப்போன சமூக மரபுகளை நியாயமாகக் காட்ட முனைகிறார்கள்.

இவைகள் உண்மையில் நடந்த சம்பவங்கள். இப்படிச் சில சம்பவங்களை யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் சந்திக்கின்றார்கள்.

சாதிவெறி என்ற பிசாசு எமது சமூகத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லை என்பதற்கு இந்தச் சம்பவங்கள் நல்ல உதாரணம்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில், சாதிப்போய் கோரத் தாண்டவம் ஆடியது. அதுதான் சமூக நீதியாகவும் பேணப்பட்டுவந்தது. பின்னர் அதற்கெதிராக நியாயம் கேட்டு, அடக்கப்பட்ட மக்கள் போர்க்குணம்கொண்டார்கள்.

“அடங்காத்தமிழர்”? ஒரு புறமும் அடக்கப்பட்ட தமிழர்கள் ஒருபுறமுமாக களத்தில் இறங்கினார்கள்.

தாழ்த்தப்பட்டோர் எனப்படும் மக்களுக்கு கோவில்கள் திறந்துவிடப்படவேண்டும், தேனீர்க் கடைகளில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதுதான் இந்தச் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் குறிக்கோள்.

இதற்காக மோதல்கள் நடந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர் இழப்புகளும் நடந்தன.

இது அன்றைய காலகட்டத்தின் ஒரு முற்போக்கான போராட்டமாகும். அடக்கப்பட்ட அந்த மக்களின் போர்க்குணம் புரட்சிகரமானது.

ஆனால் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரின் மனம் திறபடாமல் கோவில்களைத் திறப்பதிலோ தேனீர்க்கடைகளில் சமவுரிமை கிடைப்பதிலோ சாதியம் ஒழிந்துவிடப்போவதில்லை.

அதே சமயம் “தீண்டாமை ஒழிப்பு” என்ற பெயரில் சாதிய ஒழிப்பிற்காகக் கூட்டணித் தலைவர்கள் நடாத்திய போராட்டம் கேலிக்கூத்தானவை மட்டுமல்ல சாதியத்திற்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போர்க்குணத்தைத் தமக்கே உரிய “புத்திசாதுரியத்துடன்” மழுங்கடிக்கும் ஒரு சதிச்செயலுமாகும்.

இவர்கள் நடாத்திய “சம பந்திப்போசனம்” என்ற நாடகம் தங்களை “உயர்சாதிக்காரர்கள்” என தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தத்தான் பயன்படுத்தினார்கள். கூட்டணியினரின் இந்தப் போராட்டங்கள் அரசியல் இலாபங்களுக்காக நடாத்தப்பட்ட விளம்பரங்களேயல்லாமல் சாதிய முரண்பாட்டை அழித்துவிடும் புரட்சிகர நோக்கத்தைக் கொண்டதல்ல.

“சாதியம்” என்பது காலம் காலமாக எமது சமுதாய அமைப்பில் வேரூன்றிக்கிடக்கும் ஒரு சமூகப் பிரச்சனை. வேதகால ஆரிய நாகரீகத்தின் வர்ண குல அமைப்பிலிருந்து சாதிப்பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். பிராமணர்கள் வேத நூல்களை எழுதினார்கள். மனுநீதி சாஸ்திரங்களைப் படைத்தார்கள். இவற்றில் எல்லாம் பிராமணரை அதி உயர்ந்த சாதியாகக் கற்பித்து சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப்படுத்தினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. சாதியத்தின் மூலத்தை ஆராய்ந்தபடி செல்வது இங்கு அவசியமில்லை. எங்கிருந்தோ, எப்படியோ இந்த சமூக அநீதிமுறை தமிழீழ சமுதாயத்திலும் வேரூன்றி விருட்சமாகிவிட்டது. தமிழீழ மக்களின் சமூக உறவுகளுடனும், சம்பிரதாயங்களுடனும், பொருளாதார வாழ்வுடனும், கருத்துலகப் பார்வையுடனும் பின்னிப் பிணைந்ததாக சாதியம் உள்ளது என்பது யதார்த்த உண்மை. சாதிய முறை, தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார உறவுகளிலிருந்து எழுகிறது. மத நெறிகளும் சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.

மத நெறிகளும் சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.

கிராமியப் பொருளாதார வாழ்வை எடுத்துக்கொண்டால் தொழிற் பிரிவுகளின் அடிப்படையில் சாதிய முறை அமையப்பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஒரு தொழில் உன்னதமானது, மற்றைய தொழில்கள் உன்னதம் குறைந்தது அல்லது இழுக்கானது என்ற மூட நம்பிக்கையின் அடிப்படையில், தொழில் செய்து வாழும் மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொழில் பிரிவுகளிலிருந்தும் அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட பொய்யான அந்தஸ்த்துக்களில் இருந்தும் “உயர் சாதி” “தாழ்ந்த சாதி” என்ற மூடத்தனமான சமூக உறவுகளும் அவற்றைச் சூழவுள்ள சடங்குகள், சம்பிரதாயங்களும் தோற்றம் கொண்டுள்ளன.

செய்யும் தொழில் எல்லாம், உயர்ந்தது, உழைப்பில் உன்னதமானது, இழுக்கானது எனப் பாகுபாடு காட்டுவது மூடத்தனம். தொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தை தாழ்த்தப்பட்டோர் என்றும் தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது. மனித அடிமைத் தனத்திற்கும், படுமோசமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டல் முறைக்கும் சாதியம் காரணியாக இருந்து வருகிறது.

தொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தை, தாழ்த்தப்பட்டோர் என்றும் தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது.

நீண்டகாலமாக எமத சமூதாயத்தில் நிலவி வந்த சாதிய வழக்குகளையும் சம்பிரதாயங்களையும் தொகுத்து அந்நிய காலனித்துவ ஆட்சியாளர்கள் சட்டமாக்கினார்கள். இதுதான் தேச வழமைச்சட்டம் எனப்படும். இச்சட்டங்கள் சாதியப் பிரிவுகள் பற்றியும் சாதிய வழக்குகள் பற்றியும் விளக்குகின்றன. சாதியத்தை நியாயப்படுத்தி வலுப்படுத்த முனைவதோடு உயர்சாதிக்காரர் எனக் கருதப்படும் ஆளும்வர்க்கத்தின் அபிலாசைகளைப் பேணும் வகையிலும் இந்தச் சட்டத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

பிரித்து ஆளும் கலையில் கைதேர்ந்த அந்நிய காலனித்துவவாதிகள் மூட நம்பிக்கைகளிலிருந்து பிறந்த சமூக வழக்குகளை சட்டவடிவமாக்கி சாதிய முரண்பாட்டை வலுப்படுத்தினார்கள். சாதியத்தால் பயனடைந்த உயர்சாதியினர் எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப்போராடத் துணியவில்லை.

பதவிகளைக் கைப்பற்றிக்கொள்வதற்காக காலத்திற்குக் காலம் சாதிய எதிர்ப்புப் போராட்டம் என்ற போர்வையில் சில கேலிக்கூத்துக்களை நடாத்தி அப்பாவிகளான அடக்கப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெற்று பதவிக்கட்டில் ஏறினார்கள்.

விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்கள் முன்னெடுத்த தேசிய விடுதலைப் போராட்டமும் தமிழீழ சமுதாயத்தில் ஒரு யுகப்புரட்சியை உண்டு பண்ணியது எனலாம். அரச பயங்கரவாத அட்டூழியங்களும் அதனை எதிர்த்து நின்ற ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமும் எமது சமூக அமைப்பில் என்றுமில்லாத தாக்கங்களை விழுத்தின. பழமையில் தூங்கிக்கொண்டிருந்த எமது சமுதாயம் விடுதலை வேண்டி விழித்தெழுந்தது. வர்க்க, சாதிய காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் தேசாபிமானப் பற்றுணர்வு தோன்றியது. தமிழீழ மக்கள் ஒரே இன மக்கள் என்ற இனவுணர்வும் பிறந்தது. சாதிய வேர்களை அறுத்தெறிந்து எல்லா சமூகப்பிரிவுகளிலிருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைப் புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாக புலிகள் கண்ட வளர்ச்சியும் அவர்களது புரட்சிகர அரசியல் இலட்சியங்களும் சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது. தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி சாதியம் ஒழிக்கப்பட்ட ஒரு சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது.

புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்களது இலட்சியப் போராட்டமும் சாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சாதி குறித்துப் பேசுவதோ, செயற்படுவதோ குற்றமானது என்பதைவிட – அது வெட்கக்கேடானது, அநாகரிகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்துவந்த சமூக உணர்வில் ஏற்பட்ட பிரமாண்டமான மாற்றமாகும்.

இருந்தாலும் சாதியப் பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிடமுடியவில்லை. சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. சாதிய வெறியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சாதியப் பிரச்சனைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பிலேயே குணமாக்கி விடுவதென்பது இலகுவான காரியம் அல்ல. அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ நிர்ப்பந்தங்கள் மூலமாகவோ சாதியப் பேயை விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இந்தப் பிரச்சனைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடூரமானது. அனுமதிக்க முடியாதது.

மற்றையது, சாதி ரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கேற்றவிதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயல் இழக்கச் செய்யலாம்.

சாதியத்தால் பயனடைந்த உயர்சாதியினர் எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப்போராடத் துணியவில்லை.

புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகர புறநிலைகளும் சாதிய அமைப்பை தகர்க்கத் தொடங்கியிருக்கிறது. எனினும் பொருளாதார உறவுகளிலும் சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்துவிடப்போவதில்லை. எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாயப் புரட்சியுடன் மனப் புரட்சியும் அவசியமாகிறது.

பொருளாதார சமத்துவத்தை நோக்கமாகக்கொண்ட சமுதாயப் புரட்சியை முன்னெடுப்பது புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையைப்பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாகச் செயற்படுத்தமுடியும். ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதார திட்டங்களைச் செயற்படுத்தி கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி சாதிய உறவுகளை படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.

சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கின்றன. இந்த அறியாமையைப்போக்க மனப்புரட்சி அவசியம். மன அரங்கில் புரட்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். இங்குதான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.

எமது இளம் பரம்பரையினருக்கு புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழைமையான பிற்போக்கான கருத்துக்கள், கோட்பாடுகள், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும். அறியாமை இருள் நீங்கி புதிய விழிப்புணர்வும், புரட்சிகரச் சிந்தனைகளும் இளம் மனங்களைப் பற்றிக்கொண்டால்தான் சாதியம் என்ற மன நோய் புதிதாகத் தோன்றப்போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.