கதை எழுதுவது என்பது கணித சமன்பாடு அல்ல

“கதை எழுதுவது என்பது கணித சமன்பாடுகளில் எழுதுவது போன்ற விடயம் கிடையாது. தொடர்ச்சியான வாசிப்பும், பயிற்சியும் தான் சம்பவங்களை கதைகளாக்கும் ஆற்றலை எமக்கு அளிக்கவல்லன” என்ற தன் கருத்தோடு திரைப்படக்கதைகளை தேர்ந்தெடுப்பது எவ்வாறு? என்ற விடயத்தை தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக நேற்றைய தினம் (2020.06.07) எம் பட்டறைக்குழு மாணவர்களுடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்ட ஈழத்து எழுத்தாளர் சயந்தன் கதிர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

போர் கால அனுபவங்களையும், அவலங்களையும் தன்னுடைய எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வரும் இவர் நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் வழங்கியுள்ளார். ஆதிரை, ஆறாவடு போன்ற இவரின் நாவல்கள் பலரால் அறியப்பட்டவையே.

மாஸ் சினிமாக்களைத் தவிர்த்து ஈழத்து சினிமாவினை அடையாளப்படுத்தக் கூடிய படைப்புக்களை உருவாக்கி நாம் வழங்க வேண்டும். ஈழத்தில் சினிமாவாக மாற்றக்கூடிய பல நல்ல கதைகள் உள்ளன. அவற்றை சிறந்த படைப்புகளாக உருவாக்க வேண்டும். எம்மிடையே காணப்படும் கதைகளை திரைக்கதைகளாக்குவதற்கு எமக்கு பயிற்சி என்பது இன்றியமையாததாகும்.

ஓர் கதை எழுதுவது என்பது பிறவிக்குணம் கிடையாது. தொடர்ச்சியான வாசிப்பின் மூலமும் பயிற்சியின் மூலமுமே நாம் எம் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள இயலும். கதைகளாகட்டும் திரைக்கதைகளாகட்டும் அனைத்தும் எம்மை சூழ நிகழும் சம்பவங்களே. நாம் பார்த்த விடயங்கள், நாம் கேட்டறிந்த விடயங்கள், யாரோ ஒருவரின் அனுபவம் தான் கதைகளாகவும், திரைக்கதைகளாகவும் உருவாக்கம் பெருகின்றன.

ஆகவே, நாம் கேட்டறிந்த விடயத்தோடு அல்லது எம் அனுபவத்தோடு சம்பவங்களை சரியாக புனைய தெரிந்திருக்க வேண்டும். நாங்கள் கேட்டறிந்த சம்பவங்கள் அனைத்தும் கதைகள் ஆவதில்லை. கேட்டறிந்த விடயங்களை அவ்வாறே நாம் வழங்கிச் செல்வோமாக இருந்தால் அது வெறும் அறிக்கையிடலாகவே அமையும். ஆகவே, நாம் அங்கு ஓர் கதையை புனைய வேண்டும். அப்போதே சிறந்த திரைக்கதைகள் உருவாகின்றன.

இத்தகைய கதைகளை புனையும் ஆற்றல் என்பது வெறுமனே எமக்கு கிட்டிவிடுவதில்லை. கூர்மையாக அவதானிக்கும் ஆற்றல் மூலமும், அனுபவங்கள் மூலமுமே இது சாத்தியமாகும். நம்மை சுற்றி நிகழும் விடயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும், ஏனைய படைப்புக்களை தொடர்ந்து உன்னிப்பாக பார்த்து பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதே எமக்கான ஆற்றல் விருத்தியடையும்.

எப்பொழுதுமே எம்முடைய ஆரம்ப படைப்பு என்பது எமக்கு நெருக்கமானதாக, தெரிந்த விடயமாக அமைய வேண்டும். அப்போது தான் அப்படைப்பு சார்ந்த புரிதல் தெளிவாக எம்மத்தியில் புலப்படும். நாம் எமது கதையை அல்லது திரைக்கதையை எழுத ஆரம்பிக்கும் போது நாம் ஓர் கருத்துக்கு ஆதரவாகவோ அல்லது ஒரு நபருக்கு ஆதரவாகவோ எழுத ஆரம்பிக்கவோ அல்லது திட்டமிடவோ கூடாது. அவ்வாறு திட்டமிடும் போது சிறந்த படைப்புகளை உருவாக்குவதில் இருந்து நாம் தவறி விடுகின்றோம். திரைக்கதை ஒன்றை நாம் எழுதும் போது எல்லா பாத்திரங்களுக்கும் நியாயமாக எழுத வேண்டும். நாம் படைக்கும் படைப்புக்களில் நேர்மையாகவும் அறத்தோடும் செயற்படும் போதே எம் படைப்புக்கள் நேர்மையானதாக வெளிவரும்.

எப்போதும் திரைக்கதைகளை எழுதும் போது குறைந்தளவு வசனங்களையே பயன்படுத்த வேண்டும். காரணம் திரைப்படம் என்பது காட்சி ஊடகம் (Visual Media). அவற்றில் நாம் அதிகமான வசனங்களைப் பாவிக்கும் போது அவை வானொலி நாடகங்கள் போன்று அமைந்துவிடும். ஆகவே, தேவைக்கு மீறிய காட்சிகளையோ அல்லது தேவையில்லாத விடயங்கள் மற்றும் வசனங்களையோ நாம் திரைக்கதையில் தவிர்க்க வேண்டும்.

நல்ல திரைக்கதை உருவாக்கம் என்பது இலகுவில் கிட்டிவிடுவதில்லை. அதற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் அவசியம். நாம் வாசித்த நாவல்களை சிறுகதைகளை தொடர்ச்சியாக திரைக்கதைகளாக எழுதப் பழக வேண்டும். அடிப்படையான அறிவும், தொடர்ச்சியான வாசிப்பும், நல்ல சினிமாக்களை பார்த்தல் மூலம் தொகுக்கப்பட்ட அறிவு எமக்கு கிட்டுகின்றது.

ஆகவே, “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்பதற்கமைய தொடர்ச்சியான பயிற்சியும் தேடலுமே எமக்கான தளத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

மு. துலாபரணி