ஆறாவடு! இது எங்கள் கதை…

சயந்தனின் ஆறாவடு

குளிரும் இரவொன்றில், வானம் நட்சத்திரங்களை மேகங்களுக்குள் ஒளித்து வைத்த இராத்திரியொன்றில்,
அரை வயிறு உணவும் இரப்பைக்குள் சுழன்று தொண்டைக்குள் தாவும் நிமிடங்களில், கால்கள் கொடுகிக் கொண்டிருக்க, தூக்கத்தின் பிடியிலிருக்கும் கண்களை இமைகள் மூடாமல் காவல் செய்திருக்க, ஒரு சாரத்தை இழுத்துப் போர்த்தியபடி, பெருங்கடல் வெளியொன்றில், திசைகளைத் தின்றபடி மேலும் கீழும் குதித்து விழுந்து ஓடிக்கொண்டிருக்கும், படகு நிச்சயம் இத்தாலிக்கு தான் பயணமாகிறது எனும் சொச்ச நம்பிக்கையில் தாய் நிலத்தை விட்டு பரதேசிகளாக, அகதிகளாக, நிலமற்றவனாக வெளியேறிய பலரது பட்டியியலில் அமுதன் என்பவனை தேடிப் பிடித்து அவன் கதைகளை, அவன் துயரை, அவனுக்குள் இருக்கும் ஆறாத காயத்தை பதிவு செய்தால் அதுவே ஆறாவடு.

நிலத்தை இழந்தவனின் கதை தான். ஆயினும் அது மூன்று தசாப்த காலப் போரில் நம் மண் உணர்ந்த கதை.

போரிலக்கியம் என்றால் என்னவென்று ஒரு விவாதமே முகநூலில் கிளம்புகிறது.

ஈழத்தை பொறுத்தவரை புலி ஆதரவு எல்லாமே போரிலக்கியம், மாறி ஒரு வரி எழுதப்பட்டாலும் அது புருடா, புரட்டு, இலக்கியத்தின் தகுதியை இழக்கிறது, போரிலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாதவன் எழுதியது என்று கருத்தாகும்.

போரில் சின்னாபின்னமான எதிரியின் கதை கூட போரிலக்கியம் தான், பனங்கிழங்கு விற்று சீவியம் நடத்திய கிழவியின் கண்ணெதிரே சில பனை மரங்கள் எரிந்து போன கதையும் போரிலக்கியம் தான். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த பலரும் நமது உயிருக்கு ஆபத்து இல்லை என்கிற ஆயுள் உத்தரவாதத்தின் அடிப்படையில் போரிலக்கியம் போரிலக்கியமாக எழுதிக் குவிப்பது தான். ஈழத்தின் புலம்பெயர் எழுத்தாளர்களின் பத்து வருட, இல்லை இல்லை சரியாக பதினொரு வருட சாதனை.

இந்த சாதனைப் பட்டியலில் ஆறாவடு நாவலும் ஒன்று. அப்படித்தான் இலக்கிய உலகம்…. மன்னிக்கவும், போரிலக்கிய உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

எனது வீட்டில் வழமைக்கு மாறாக சில சம்பவங்கள் நடக்கும், அதிலொன்றுதான், என் புத்தக அலுமாரியில் எனது சின்னக்காவில் கைகள் எதையோ தேடுவது….

ஆறாவடு நாவலின் மூன்று பகுதிகளை வாசித்து விட்டு பாவம்டா… அந்தாள் (அமுதன்) இத்தாலி போய் சேர்ந்திட்டானா… புத்தகத்தை முடிச்சிட்டாதானே என்ன நடந்த சொல்லன் என்று அம்மாவிடம் சீரியல் கதை கேட்கும் பாணியிலே அவள் கேட்டது எனக்கு அதிக வியப்பை தரவில்லை…

காரணம் சயந்தனின் கதை சொல்லும் திறன் அவ்வளவு நன்றாக இருந்ததும், அது என்னை ஈர்த்திருந்ததுமே.

மிகுதி இரண்டு பாகம் வாசித்தாள்… என்ன இத்தாலி தானே போனவர் அதுக்குள்ளை வேற ஆக்கள்ட கதை வருகுது என்ற படி புத்தகத்தை மூடிக் கொண்டாள். நீயெல்லாம் ஈசாப் நரிக்கதை வாசிக்கத்தான் லாயக்கு என்று தோன்றியது. ஆனாலும் சொல்லவில்லை.

குண்டுப்பாப்பா நிலாமதியின் கதையின் தொடக்கத்தோடு மூடிவிட்டாள். நாவல் அதனோடே தனக்கான சிறுகதைகளை நாவலுக்குள் கட்டமைக்கத் தொடங்கிவிட்டது. அவை எல்லாமே வடுக்கள் ஆறாவடுக்கள்.

கள்ளத் தோணியில வந்த ஆக்களே… என்று விமானத்தில் சென்றவன் கேட்கும் நிலையில் தான் பல போராளிகளின், யுத்தத்தால் அவதியுற்ற மக்களின் கதை இருந்தது.

இத்தாலியப் பயணத்தில் ஏஜன்சி, சோமாலிய கடற் கொள்ளையர்கள், சுயஸ் கால்வாய் என நீளும் கதை எரித்திரியாவோடு முடிந்து போனது.

நான் இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படித்தான் எழுதினேன்.

எரித்திரியாவின் தலையில் எழுதப்பட்ட விதி ஈழத்தின் பிட்டத்தில் கூட எழுதப்படவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு நாடுகளின் ஆயுதப்போராட்டக் காலமும் ஒன்று தான். அவர்களுக்கு எரித்திரியா நிச்சயிக்கப்பட்டது. எங்களுக்கு தமிழீழம் பல மாவீரர்கள், மறத்தமிழர்களின் பிணங்களோடே புதைக்கப்பட்டது.

இத்திரிஸ் போன்றவர்கள் அதிஸ்டசாலிகள் தாய்நிலத்தில், காலை இழந்தாலும் கனவை ஜெயித்து வாழுகின்றவர்கள். நாங்கள் காலையும் இழந்து தலையையும் இழந்து வாலையும் இழந்து நிற்கும் முண்டங்கள்.

இங்கு யுத்தத்தை கண்ட, யுத்தத்தில் மரித்த, கந்தகத்துக்குள்ளே பிறந்த அனேகரின் கதை கிடக்கிறது. அத்தனையும் போரிலக்கியமே அவைகளும் அவர்களால் எழுதப்படும். அவைகளும் போரிலக்கியமா… சே… என்று உமிழப்படும்.

ஆயினும் இது எங்கள் கதை…
இது எங்கள் வலி
இது எங்கள் வடு

அதில் ஒரு துளியை சயந்தன் நாவலாக்கியிருக்கிறார். சயந்தனின் எழுத்துக்களுக்குள் இன்னுமொரு கதை சொல்லி பிறக்க வேண்டும். பிறப்பான் என நம்புவோம்.

அன்புடன் இந்திரா.

-நீலாவணை இந்திரா