ஆதிரை ஒரு பெரும்படைப்பு

இரண்டு வாரங்களில் 4 புத்தகங்களை வாசிக்க முடிந்தது. நண்பர் பத்திநாதனின் கையிலிருந்த சயந்தன் எழுதிய ‘ஆதிரையை’ வாங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். 640 பக்கங்கள் என்பதால் எடுக்கமுடியாமலே இருந்தது. பழைய வேகம் இல்லையென்றாலும் 4நாட்களில் வாசிக்க முடிந்தது. ஈழத் தமிழரிடமிருந்து வரும் படைப்புகளைப் பெரும்பாலும் வாசித்து வருபவன் என்றவகையில் இந்த நாவல் மிக முக்கியமான படைப்பு. 1980 களின் தொடக்கத்திலிருந்து 2010இன் தொடக்ககாலம் வரையிலான அகன்ற பரப்பில் பயணமாகிறது. பொதுவாக ஈழப்படைப்புகளை எழுதுவது வாசிப்பது விமர்சிப்பது என்பதான செயல்பாடுகளில் முன்னதாக நிற்கும் கேள்வி நீ எந்த தரப்பைச் சார்ந்தவன் என்பதுதான். சயந்தன் ஏறத்தாழ ஒரு பார்வையாளராக எல்லாக் குரல்களுக்கும் இடமளித்திருக்கிறார். எளிமையாக செவனேன்னு விவசாயம் பார்த்துக்கொண்டு, மலையில் தேயிலை கொழுந்து பறித்து எளிமையாக வாழ்ந்துகொண்டிருந்த இரண்டு குடும்பங்கள் ஈழப்போரின் 30 ஆண்டு காலத்தில் சிதைந்து உருக்குலைந்து போவதன் பின் புலத்தில் ஈழ மண்ணின் சமூக பண்பாட்டு அரசியல் வரலாற்றை நுட்பமாகப் பதிவுசெய்கிறார். கதைமாந்தர்களை வளர்த்து நாவலின் இறுதிக்கு வரும்போது மனம் பெரும் சஞ்சலத்திலும் வெறுமையிலும் ஆழ்ந்துவிடுகிறது. நாவலின் பிற்பகுதி மிகப் பெரும் குற்றவுணர்க்குள் நம்மைத் தள்ளிவிடுகிறது. அந்த வரலாற்றுத் துயரத்தை ஒரு பார்வையாளர்களைப் போல் கடந்துவிட்டவர்கள்தாமே நாம். ஒரு கிளாசிக் தன்மையுள்ள நாவலாக இருப்பதால் தடையற்ற வாசிப்பனுபவம் வாய்க்கிறது. தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும் படைப்புகள் இல்லை என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. பெரும் மனிதத் துயரங்களைத் தம் வாழ்பனுபவங்களின் ஊடாகக் கடந்த தமிழ்ப்படைப்பாளிகள் இல்லை என்பதே அதற்குக் காரணமாகவும் சொல்லப்பட்டது. இனியும் அப்படிப் புலம்பவேண்டியதில்லை. ஆதிரை ஒரு பெரும்படைப்புதான்.
-Prabahar Vedamanickam