ஆதிரை! ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப்போல அனுபவம்

சயந்தன் எழுதிய ஆதிரை நாவலை முன்வைத்து

“வரலாறு அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகிறதோ அவர்களுடைய விருப்பமானதையும், வேண்டியதையும் மட்டும் சொல்லும்” என்பதற்கு மாறாக ஒரு இனம் நிலமற்று,நிம்மதியற்று,
உயிர் பதைக்க இன்னொரு இனத்தால் துரத்தப்பட்ட,சிதைக்கப்பட்ட ஈழத்து தமிழர்களின் வலியின் வரலாற்றை மக்கள் பார்வையில் ஆதிரை நாவல் பதிவு செய்கிறது.

ஈழத்து மக்கள் மீது நிகழ்ந்த இனப்படுகொலைகளின் முப்பதாண்டு மூச்சு முனகலின் வரலாறு ஆதிரை.

சிங்கமலை தங்கம்மை,ஆச்சிமுத்து கிழவியின் மூத்த மகன் நடராசன் அவனது மனைவி கிளி,ஆச்சி முத்து கிழவியின் இளைய மகன் சங்கிலி அவனது மனைவி மீனாட்சி,மற்றும் அத்தார்,சந்திரா ஆகிய குடும்பங்களின் மூன்று தலைமுறைகளைப் பற்றிய முப்பதாண்டு வரலாறைப் பேசுகிறது நாவல்.

இதுவரை ஈழத் தமிழர்கள் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் வரலாறு என செய்தி துணுக்குகள் வழியாக நமக்குள் படிந்து போன அத்தனைக்கும் முற்றிலும் மாறான ஒரு கோணத்தை நமக்கு காட்டுகிறது ஆதிரை நாவல்.

போரின் படுகளத்தை அப்பாவி மக்களின் பார்வையில்,பெண்களின் அழுகுரலாக,கண்ணீராக காட்டும் ஒரு பேரிலக்கிய வடிவில் எழுதப்பட்ட போரிலக்கியம் ஆதிரை.

சயந்தன் எவ்வித மனச்சாய்வுமின்றி ஒரு இனத்தின் சரிவை,அப்பாவி மக்களின் கண்கள் வழியே அவர்களின் வலியை,உயிர் ஓலத்தை பதிவு செய்துள்ளார்.

1991ல் சிங்கமலை மகன் லட்சுமணன் சிங்கள சிறையில் கைதியாய் இருப்பதில் தொடங்கும் நாவல். பின்னோக்கி நகர்ந்து 1977ல் சிங்களர்கள் மலையகத் தமிழர்களின் குடியிருப்பை கொளுத்தி உடைமைகளை பறிப்பதால் அங்கிருந்து ஆரம்பிக்கும் மலையகத் தமிழர்களின் இடப்பெயர்வு நாவல் முழுதும் தொடர்கிறது.

சிங்கமலையின் மனைவி தங்கம்மை தேயிலைத் தோட்டத்தில் இறந்த நிலையில் சிங்களர்கள் கலவரம் செய்வதால் சிங்கமலை தன் பிள்ளைகள் லெட்சுமணன்,வல்லியாளுடன் வன்னிப் பகுதியில் உள்ள தனிக் கல்லடியில் தஞ்சம் அடைகிறான்.அங்கு தான் அத்தார்,சங்கலி ஆகியோரின் நட்பு கிடைக்கிறது.

காட்டிற்கு மரம் வெட்ட போகும் போது சிங்கமலை ஒரு நாள் இந்திய ஆர்மி ஆட்களால் நீ தான் LTTEக்கு துப்பு கொடுக்கறியா என விசாரிக்கப்பட்டு தலை வெட்டப்பட்டு கொல்லப்படுகிறான்.
கொல்லப்படுவதற்கு முன் சிங்கமலை அழுதவாறு கைகூப்பிச் சொல்லும் கடைசி சொற்கள் “அய்யா நானும் இந்தியாவிலிருந்து வந்தவன் தான் ” என்பதே.

ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்கள் கொடுத்தது துயரங்கள் என்றால் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு கொடுத்தது தொப்புள் கொடி உறவென நினைக்காத ஒரு மாபெரும் துரோகம்.

தந்தை கொல்லப்பட்டதின் வலியிலும் கோபத்திலும் சந்திரா வீட்டில் வேலை செய்யும் லட்சுமணன் அவர்களிடம் சொல்லாமல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான்.

நாவலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இளைஞர்கள் பருவப் பெண்கள் எல்லோரும் வலுக்கட்டாயமாகவும்,தங்களுடைய விருப்பத்துடனும் சேர்கிறார்கள்.

நாவலில் மிகப்பெரும் துயரங்களை துய்ப்பவர்களாகவும் துணிச்சல் கொண்டவர்களாகவும் பெண்கள் காட்டப்படுகிறார்கள்.சிங்கள ராணுவத்தால் கூட்டு வல்லாங்கு செய்யப்படும் மலர் என்ற பெண் பின்னாளில் இயக்கத்தில் இணைந்து போர்ச் சண்டையில் ஒரு காலை இழந்து ஸ்கந்தராஜா என்ற புலிகள் இயக்க டாக்டர் ஸ்கந்தராஜாவை மணந்து கொள்கிறார்.

மலர் இயக்கத்தில் இணைவதற்கு முன் ஓர் இரவில் பாம்பு கடித்து விட்ட கிழவியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மருத்துவனைக்குச் செல்லும் அந்த ஓர் இடத்தில் மலரின் கருணையை, துணிச்சலை சயந்தன் காட்டுகிறார்.

கணபதி வல்லியாள் தம்பதியின் இளைய மகள் வினோதினி இயக்கத்தில் சேர்ந்து பின் சிங்கள ராணுவத்திடம் சரணடைகிறாள்.பின் அவள் கடைசி வரை என்ன ஆனாள் என்பதே தெரிவதில்லை.

நாவலில் சங்கிலியின் மகள் ராணிக்கும், சின்னராசுவுக்கும் இடையேயான காதல் கல்யாணத்தில் முடிகிறது.சிந்து பிறந்த உடன் சின்னராசு இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான்.கடைசி வரை சின்னராசு என்ன ஆனான் என்பதே தெரிவதில்லை. வயதின் வேகத்தில் உணர்ச்சியின் சூட்டில் சின்னராசுவை கல்யாணம் செய்யும் ராணி அவன் திரும்ப வருவானா இல்லையா என்ற ஒரு நிச்சயமற்ற வாழ்க்கையை வாழ்கிறாள்.

கணவன் இல்லாத ராணி மீது எட்டேக்கரை காவல் காக்கும் மணிவண்ணன் என்பவனுக்கு மெல்லிய ஈர்ப்பு கலந்த காமம் ஏற்படுகிறது.

கடைசியில் போரின் உச்சத்தில் ஒர் இடத்தில் மணிவண்ணன் இறந்து கிடக்கும் போது ராணி “மணிவண்ணனின் காலடியில் புழுதிக்குள் விழுந்து புரண்டு அலறி கதறி அழும்போது பக்கத்தில் கசிந்த கண்களோடு அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிந்துவிற்கு சட்டென எவருடையதோ அந்தரங்கத்தில் நுழைந்து நிற்பதாய்த் தோன்றி தலையை திருப்பிக் கொண்டாள்” என சயந்தன் பதிவு செய்யும் இடத்தில் ஒட்டு மொத்த மனித உணர்வுகளையும் தொடுகிறார்.

ராணிக்கு மணிவண்ணன் மீது உள்ளூர ஒரு அந்தரங்க ஆசை இருந்தாலும் தனக்காக அதை முடக்கி வாழ்ந்தவள் தன் தாய் என ராணிக்கு சிந்து கொடுக்கும் மரியாதை அது.ராணிக்கும் மணிவண்ணனுக்கும் இடையேயான உறவை புனிதப்படுத்தும் இடம் அது.

அத்தாரின் மனைவி டீச்சர் சந்திரா பதுங்குக் குழியில் இறந்த பிறகு உடல் சிதைந்து வலக் கண் மட்டும் திறந்து அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிணத்தை ஒரு பையன் பார்த்து சார் இவரை எனக்குத் தெரியும்.இவர் பெயர் அத்தார் இவர் ஒரு அம்பட்டன்.இவர் சந்திரா என்ற வெள்ளாளப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டவர்.
இவர்களுக்கு குழந்தை கிடையாது என அந்த பையன் சொல்லும் இடத்தில் ஈழத்து தமிழர்களுக்கிடையே நிலவும் சாதிய அடுக்கை சயந்தன் குறிப்பிடுகிறார்.

நாவலில் எந்த இடத்திலும் அத்தார் என்ன சாதி,சந்திரா என்ன சாதி என சொல்லப்படுவதில்லை. ஆனால் கடைசியில் அவர்கள் இறக்கும் போது தான் அந்த பையன் வழியாகத் தெரிகிறது.

நாவலில் போரின் ஒலம்,கந்தக நெடி வாசத்திற்கு மத்தியில் வீசம் ரோஜா வாசம் சாரகன் நாமகள் இடையேயான காதல்.

நாவலில் சங்கிலி மகன் வெள்ளையன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஒன்பதாண்டுகள் அங்கிருந்து விட்டு உடலில் குண்டு பாய்ந்த வலியுடன் இயக்கத்துக்கு துண்டு கொடுத்து விட்டு இயக்கத்திலிருந்து வெளியேறி வீட்டுக்கு வந்து விடுகிறான்.

கணபதிக்கும்,வல்லியாளுக்கும் பிறக்கும் மூத்த மகள் முத்துவை வெள்ளையனுக்கு கட்டி வைக்கிறார்கள். இவர்கள் திருமணத்திற்கு கூட சாதி குறுக்காக நிற்கிறது.கணபதி சக்கிலிய சாதி என்பதால் வெள்ளையன் அம்மா மீனாட்சி தயங்குகிறாள்.பின் வெள்ளையன் அக்கா ராணி இந்த காலத்தில் போய் சாதி எல்லாம் பார்த்துக் கொண்டு என பேசுவதால் மீனாச்சி சமாதானம் அடைகிறாள்.

வெள்ளையனுக்கு ஒளி நிலா,இசை நிலா என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள்.

நாவலில் படுகளம் என்ற ஒரு பகுதி வருகிறது.இழை நம்பிக்கையுடன் எப்படியும் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என ஓடி அலையும் உயிர்களின் ஓலம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.எவ்வளவு ரத்தம்,எவ்வளவு உடல்கள்,எவ்வளவு உயிர்கள் இந்த நிலம் தீராத பசியுடன் எல்லா உயிர்களையும் விழுங்கிக் கொண்டே இருக்கிறது.

ஒதியமலையில் ஆர்மிக்காரர்களால் சுட்டுக்கொள்ளப்படும் வெள்ளையனின் பெரியப்பா நடராசன்,புலி இயக்கத்தில் இணைந்து போரில் கொல்லப்படும் நடராசனின் மகன் பரந்தாமன், வெள்ளையனின் அம்மா மீனாட்சி என எல்லா உடல்களையும் போர் பிணமாக்கி விடுகிறது.போரின் இறுதியில் எஞ்சுபவர்கள் வெள்ளையன் அவனது மனைவி முத்து, அவர்களது குழந்தைகள்.முத்துவின் அப்பா கணபதி, அம்மா வல்லியாள், வெள்ளையனின் தங்கை நாமகள்,அக்கா ராணி,அவளது மகள் சிந்து மற்றும் மலர் ஆகியோர் மட்டுமே.

நாவலின் ஆரம்பத்தில் தனிக்கல்லடியில் ஓர் நாள் பெய்யும் பேய் மழையில் அங்கு ஆண்டாண்டு காலமாக காளியின் உருவமாக தங்களின் நேர்த்திக் கடன்களையும் படையல்களையும் செய்து பூஜித்து வந்த இத்தி மரம் சாய்ந்து விழுந்து விடுகிறது.இது ஒரு சகுனப் பிழையாக,அபசகுண நிகழ்வாக அவர்களால் பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு தனிக்கல்லடியை ஆர்மிகாரர்கள் சுற்றி வளைக்கிறார்கள்.அந்த ஊரில் இருப்பவர்கள் தனிக் கல்லடியை விட்டு இடம் பெயர்கிறார்கள்.பிறகு மரம் விழுந்த பத்தடி தள்ளி ஒரு புதிய இத்தி செடியை நட்டு வைக்கிறார்கள்.

நாவலின் கடைசியில் முத்து அவளது பிள்ளைகள் ராணி அவளது மகள் சிந்து, நாமகள் மற்றும் மலர் ஆகியோர் மீண்டும் தனிக்கல்லடிக்கு குடியேறி அங்கு வாலை குமரியாய் வளர்ந்து நிற்கும் காளியின் உருவமான இத்தி மரத்திற்கு நீர் வார்த்து வணங்குகிறார்கள்.அப்போது மலர் சங்கை வாயில் வைத்து ஊதுகிறாள்.இத்தி மரம் அவர்கள் மீண்டு வந்து வாழ்வதற்கான நம்பிக்கையின் குறியீடு.அது அவர்கள் வணங்கும் காளியின் உருவம்.

புலிகள் இயக்கத்திற்கு உதவாமல் சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்து இந்தியா,பிரான்ஸ்,கனடா போன்ற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களை புலிகள் இயக்கத்தில் உள்ளவர்கள் வாயிலாக சாடுவதை சயந்தன் பதிவு செய்கிறார்.

எப்படியும் போரை நிறுத்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையும் கலைஞர் கருணாநிதியும் வருவார்கள் என்று நம்பும் அப்பாவி மக்களின் இருண்ட நம்பிக்கையை மக்களின் பார்வையிலேயே பகடி செய்கிறார்.

போரை நிறுத்த,தொப்புள்கொடி உறவுகளின் உயிர்களை காப்பாற்ற வராத இந்தியா,போரில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி வல்லியாளிடம் பேட்டி எடுக்கும் போது என் மகள் வினோதினியை காப்பாற்றிக் கொடுங்கள் என அவள் திரும்ப திரும்ப கண்ணீர் வற்ற கத்தும் போது இந்திய தொலைக்காட்சி சேனல்காரர்களை இப்படி பகடி செய்கிறார் சயந்தன்
“அவர்கள் வேறு கண்ணீரை தேடிப் போனார்கள் என்று”.

“இனிமேல் இந்த மண்ணில் சாவு ஒரு குழந்தைப் பிள்ளை மாதிரி எங்கடை கையைப் பிடித்துக்கொண்டு திரிய போகுது” என அத்தாரிடம் மயில்குஞ்சன் கூறுவது போல வாழ்க்கையின் மீது ஒவ்வொரு நொடியும் ஒரு நிச்சயமின்மையை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் போரின் துயரையும், பதற்றத்தையும் நாவல் முழுக்க நமக்கு காண்பிக்கிறார் சயந்தன்.

ஒரு படைப்பாளியின் சுய விருப்பத்தையும்,நிலைப்பாட்டையும் புகுத்தாமல் போராட்டக்களத்தில் இருந்த மக்களின் பார்வையில் நின்று சொல்லப்பட்டது தான் இந்த நாவலின் பெரும்பலம் என நினைக்கிறேன்.

ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப் போல அனுபவம் பழுத்த பார்வை சயந்தனுடையது.சயந்தனின் மொழி அவ்வளவு புதியதாய் இருக்கிறது.

மிகச்சிறந்த ஒரு கிளாசிக்கல் பேரிலக்கியம் ஆதிரை

-Velu Malayan