ஆதிரை – உள்ளும் புறமும்

ஆதிரைக்கான எனது தேடல் மிக நெடிது. இந்த புத்தகம் குறித்தான சில குறிப்புக்களை முக நூலில் படித்த காலத்திலிருந்து கிடத்தட்ட ஐந்து வருடங்களின் பின்னரே இந்த புத்தத்தினை வாசிக்க கிடைத்தது தம்பி ஜெனோஜனின் புண்ணியத்தினால். ஒரு நூல் அல்லது நாவலுக்கான பீடிகை இன்றி அதாவது முன்னுரை, முடிவுரை, பதிப்புரை போன்ற இன்னோரன்ன உரைகளின்றி அமைந்திருப்பது அதனுடைய புறச்சிறப்பு. அதற்க்கு பீடிகைகள் எதுவும் தேவையில்லைதான். ஏனெனில் அங்கே வரும் பாத்திரங்களும், சம்பவங்களும் நாம் அறியாததோ அல்லது அனுபவப்படாதவையோ அன்று.

ஆதிரை பற்றிய எனது முன் பதிவு (pre- assuming) என்பது இவ்வாறே இருந்தது; நிட்சயமாக அது ஒரு பெண் போராளியின் வாழ்வு ஒன்றாக இருக்கும் மற்றும் அவளே அந்த நாவலின் மூல விசையாக (pivotal force) இருப்பாள். ஆனாலும் நூலில் நான் எதிர்கொண்ட யதார்த்தம் எனது எதிர்பார்ப்பு அல்லது முன்பதிவினை எதிர்நிலைக்கு தள்ளியது. ஆதிரையை தேடி தேடி நான் அலைந்து வன்னி மண்ணின் தெருக்களின் புழுதிகள் படிந்ததுதான் மிச்சம். கடைசியில் நாவலின் இருநூற்று பதினேழாம் பக்கத்தில் முதன்முதலில் ஆதிரை குறித்து இவ்வாறான ஒரு குறிப்பினை காண கிடைத்தது.

“நின்ற நிலையிலேயே அண்ணாந்து வானத்தினை பார்த்தாள். மேகங்கள் நிலவினை விட்டு வெகுதூரத்தில் திரிந்தன. மிளகாய் காணியில் இரவில் மலரும் பூக்களாய் வெள்ளிகள் பூத்திருந்தன. பெரிதாய் பிரகாசமாய் ஒன்று மினுங்கியது. ஆதிரை “

ஈழ தமிழர்களின் ஆதி மதம் சைவமாகவே இருந்தது என்பதுவும்; ஈழ சைவர்களில் பெரும்பாலானோர் சிவனை முழு முதற்கடவுளாய் வழிபடுவோர் என்பதும் நாமறிந்த சங்கதிகள். சிவனின் தோற்ற நட்சத்திரம் ஆதிரை என்பதும்; சிவன் முத்தொழில்களில் அழிவினை செய்பவன் என்பதுவும்; மயானத்து வெளிகளிலும் போர்களங்களிலும் அவனின் ருத்திர வடிவம் மிளிரும் என்பதும் பாமர மக்களுக்கு சற்றே அப்பாற்பட்ட சங்கதிகள். இந்த பெயர் தேர்வுக்கான மேலோட்ட காரணங்கள் இவையாக இருக்கலாம். இந்த தேர்வுக்கான அழகியல் மற்றும் அரசியல் நியமங்களை பின்னர் பார்க்கலாம்.

இதனை விடவும் மணிமேகலை காப்பியத்தில் ஆதிரை எனும் பாத்திரம் வருவதையும் அது தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு வழிபாடு செய்யப்படுதலையும் குறிப்பிட விரும்புகிறேன்.

தனிக்கல்லடி

நாவலின் மைய சம்பவங்கள்(strategic events) நிகழும் இடமாக இந்த ஊர் உள்ளது. வவுனியா – முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைபுறத்திலிருந்து சற்றே உள்ளேயும்; காட்டினை அண்டிய ஒரு குக்கிராமமாக இருப்பதுவும் கதையின் தொடர்ச்சிக்கான அத்திவாரத்தினை மிகப்பலமாக இடுகின்றது. கதையின் பிந்தைய பகுதிகள் இருட்டு வளவில் நிகழ்வதாக இருப்பினும்; தனிக்கல்லடி என்பது நிலத்துக்கும் மாந்தருக்குமான பிணைப்பின் மூலமாக இங்கே எழுத்தாளரினால் கையாளப்படும் நிலம் சார்ந்த குறியீடாகும்.

“நிலக்கிளி” நாவல் வாசிப்பின் பின்னர் முற்று முழுதாக வன்னியின் காடுசார் கிராமம் ஒன்றில் சஞ்சரித்த அனுபவத்தினை “ஆதிரை” என்னுள் அழுத்தமாக பதிவு செய்திருந்தது.

அத்தார்- சந்திரா

கதையில் பல்வேறு பாத்திரங்கள் வந்திருந்தாலும் கதையின் மைய பாத்திரங்களாக அல்லது கதையினை நகர்த்தி செல்லும் பாத்திரங்களாக அத்தாரும் சந்திராவுமே இருக்கின்றனர். சமவுடமை எனும் பழமையான கோட்பாடு இந்த இரு பாத்திரங்களை இணைக்கும் ஒரு வலுவான கயிறாக இருந்தபோதிலும்; ஈழபோராட்டம் குறித்த சமவுடமையின் இரு நோக்குகளை இந்த இரு பாத்திரங்களின் ஊடாக நூலாசிரியர் வெளிக்கொணர்கிறார். இதில் வரும் ஆணின் நோக்கென்பது சமவுடமையின் மேலோட்ட நோக்கினை(superficial apporoach) வலியுறுத்துகிறது. அதாவது தேசிய விடுதலை போராட்டமென்பது தமிழரின் சமூகத்தில் புரையோடிப்போன சாதிய அடக்குமுறையினை முற்றாக துடைத்தெறிந்து விடும் என்ற ஒற்றை நம்பிக்கையே, அத்தாரின் தேசிய விடுதலை இயக்கத்திற்கான வரன்முறையற்ற ஆதரவுக்கான அடித்தளமாகிறது.

மறுபுறத்தே சந்திராவினூடு கதாசிரியர் வெளிக்கொணர்வது விடுதலை இயக்கம் மீதான விமர்சனங்களும் மற்றும் முற்று முழுதான மானிட விடுதலையினையுமே. பொதுவாக விடுதலை போராட்டமும் அது சார் இலக்கியங்களும் பெண்ணிய விடுதலையினை வலியுறுத்தி வந்த போதிலும் அது வரைமுறைக்குட்பட்டதே. ஏனெனில் இங்கு தீர்மானிப்பாளர்கள் யாவும் ஆண்களே. ஆனால் விடுதலைபுலிகளின் காலம் இவற்றிலிருந்து சற்றே மேம்பட்ட போக்கினை காண்பித்தது என்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட உண்மையாகும். இந்த பின்னணியில் கோட்பாட்டு ரீதியான சில உடைப்புகளினை சந்திராவினூடே கொணர்வது கதாசிரியரின் நுட்பமே. இதன் விரிவாக்கம் யாதெனில் நான் வாசித்த போர்க்கால மற்றும் அதற்கு பிந்தைய இலக்கியங்களிலே வரும் பெண் கதாபாத்திரங்கள் அனேகமாக விடுதலை இயக்கம் சார்ந்தே படைக்கப்பட்டிருக்கும். ஆனால் சந்திராவின் பாத்திரம் இங்கே மற்றொன்றாக படைக்கப்பட்டிருப்பது “ஆதிரைக்கு” இன்னொரு பரிணாமத்தினை ஈகின்றது.

ஆனால் சந்திராவினதும் அத்தாரினதும் முடிவுகள் அவர்கள் வரித்து கொண்டிருந்த கொண்டிருந்த கோட்பாடுகளின் முடிவு அல்லது இயங்காநிலையினை எடுத்தியம்புகின்றன. அங்கே அத்தார் யாரென அடையாளப்படுத்தபடுவது இவ்வாறே; “இந்த அம்பட்ட கிழவரை எனக்கு தெரியும். ஒரு வேளாள பெண்ணை முடித்திருந்தவர் “. இங்கே துப்பாக்கிகளின் மௌனத்தின் பின்னே , விடுதலை போர் காலத்தில் உறங்கு நிலையில்ருந்த சமூகத்தின் பிற்போக்குதனங்கள்(social supersitions) மேலெழுவதை காண்கிறோம். ஒரு வகையில் சந்திராவும் அத்தாரும் இறந்திருக்க வேண்டாம் என வாசக மனது விரும்பினாலும் அவர்களுக்கு இனி வேலையில்லை என்பதையும்; மறுபுறத்தே சந்திரா கொண்டிருந்த விடுதலை போர் மற்றும் இயக்கம் குறித்த விமர்சங்கள் யாவும் முள்ளிவாய்க்க்காலுடன் முடிவுக்கு வந்ததையும் சூசகமாக குறிப்பிட்டு ஒரே கல்லில் ரெட்டை மாங்காய் அடிக்கிறார் கதாசிரியர்.

இயற்கையின் பிள்ளைகள்

நிலம் சார்ந்து அதுவும் வன்னி சார்ந்து எழும் கதைகளிலே காட்டினை குறிப்பிடாது யாரும் கடக்க முடியாது. அந்த வகையிலே இந்த கதையில் இயற்கை அல்லது காட்டினை சார்ந்து வாழும் இரு மாந்தரினை நாம் காண்கிறோம். ஒருவர் சங்கிலி மற்றையவர் மயில்குஞ்சண்ணன்.

சங்கிலியின் கதாபாத்திரம் இயற்கையின் சமநிலையினை யாரும் குழப்ப கூடா து என்பதுடன் விடுதலை இயக்கத்தின் செயல்களை தர்க்கிக்கும் ஒன்றாக காட்டப்படுகிறது. தனது அண்ணனின் இறப்புக்கு மறைமுகமான காரணம் விடுதலை இயக்கமே என்பதாக கருதும் அவரின் எண்ணவெளிப்பாடுகள், அவருக்கும் விடுதலை இயக்க ஆதரவாளரான அத்தாருக்கும் இடையில் ஒரு சுவரினை கட்டியெழுப்புகிறதாயினும் கூட காலம் அதனை தகர்த்து விடுகிறது. இந்த இடத்தில் சந்திராவுக்கும் சங்கிலியனுக்கும் இடையில் ஒரு ஒப்பான மனங்கள் உள்ளபோதும், இந்த நாவலில் எங்காயினும் ஓரிடத்தில் கூட அவர்களிடையே இருக்கும் இந்த ஒப்பான எண்ணங்களின் கூடலை வெளிப்படுத்தாமல் இருப்பது ஆசிரியரின் மறைபொருள் அழகியல் அல்லது அரசியலாகும். அப்பால், இந்த இருவரும் விமர்சனங்களை வெளியிட்ட போதிலும் விடுதலை இயக்கங்கள் கருதும் “துரோகங்களை” புரியாதிருத்தலானது, இரு பதங்களிடையிலுமான தெளிவான வேறுபாட்டினை ஆசிரியர் அழகாக எடுதாள்வதனை காட்டுகிறது.

இங்கே வரும் மயில் குஞ்சண்ணை விடுதலை புலிகளில் இருந்து போராடி மறைந்த மாவீரர் ஒருவரின் உருவகப்படுத்தலாகும். மயில் குஞ்சண்ணன் பாத்திரம் என்பது வெறுமனே காட்டின் சூட்சுமம் தெரிந்த ஒருவர் மாத்திரமன்று; மாறாக வன்னியில் இருக்கும் மரபுகள் மற்றும் தொன்மங்கள் குறித்த ஒரு குறியீடுமாகும். தனது கண்ணால் கண்ட ஒரு பேரவலத்தின் காட்சியினூடே அவர் ஒரு போராளியாக தன்னை இணைத்து கொள்கிறார். இங்கே சங்கிலி மற்றும் மயில்குஞ்சர் இருவர் கண்ட தரிசனங்கள் ஏறத்தாழ ஒன்றாகவிருப்பினும் அதனை அவரவர் எடுத்துக்கொண்ட விதங்கள் வெவ்வேறு. ஏனெனில் சித்திர பாட வேளையில் மேசையின் மீதான ஒரு பூச்சாடியினை வரையும் மாணவர்களில் அதனை நேரெதிராக எதிர்கொள்ளும் மாணவனின் வெளிப்பாடு வேறாகவும், மூலையில் இருந்து அந்த காட்சியினை பார்த்து வரையும் மாணவனின் வெளிப்பாடு வேறு என்பதும் நாமறிந்ததே.

இத்திமரத்துகாரி

வன்னி மக்களின் தொன்மங்கள் மற்றும் வழிபாடுகள் குறித்தான ஒரு குறியீடாக இந்த இத்தி மரத்து தெய்வம் காட்டப்படுகிறது. போராட்டங்களின் வெவ்வேறான காலங்களில் அந்த இத்தி மரத்தின் நிலைகள் வேறுபடுவதனை ஆசிரியர் காட்டுவதானது கடவுள் என்ற கோட்பாடு குறித்தான மக்களின் எண்ணங்களின் பயணமாகும் .

போராட்டம் முகிழும் ஆரம்ப நாட்களில் அந்த இத்தி மரம் முறிவதும் அதனை வெள்ளையக்கா காண்பதாய் வெளிபடுத்துவதும் பெண்களே இந்த சமூகத்தின் தொன்மம் மற்றும் மரபுகளின் ஆதிமூலங்கள் என்பதை வெளிக்காடடுகிறது. இந்திய இராணுவ காலத்தில் அந்த மரம் காவலரணாக மாறுவதும் பின்னர் யுத்த முடிவில் புதிய இத்தி மரம் செழித்திருப்பதாய் காட்டுவதும் ஒரு யுகத்தின் முடிவினையும் இன்னொரு யுகத்தின் ஆரம்பதினையும் அழகியலால் வெளிப்படுத்தும் உத்திகளாகும்.

காதலும் களவொழுக்கமும்

ஒரு காப்பியமோ அல்லது நாவலோ காதலின்றி முற்றுபெறுவதில்லை. இங்கேயும் பிரதானமாக இரண்டு காதல் ஜோடிகள். ஒன்று அத்தாரும் சந்திராவும். கொள்கையளவில் இரண்டு துருவங்களாயினும் இல்லறத்தில் ஈருடலும் ஓருயிருமான இலட்சிய காதலர்கள். அது மரணம் வரைக்கும் நீண்டது. அப்பால் இளஞ்சோடிகளாக சாரகனும் நாமகளும்.

எனக்கு இதில் வியப்பினை ஏற்படுத்திய சோடி ராணி மற்றும் மணிகண்டன் சோடிதான். ஒழுக்கத்தினை உயிரினும் மேம்பட்டதாக கருதும் ஒரு மக்கள் கூட்டம். ஒழுக்க மீறல்கட்கு உயர்ந்த தண்டனையினை தரும் ஒரு விடுதலை இயக்கம். இதற்கிடையில் இராணி மற்றும் மணிகண்டனிடையே முகிழும் ஓர் உறவு. இந்த உறவு பாரம்பரியமாக தமிழரிடையே இருக்கும் ஒழுக்கம் குறித்த சிந்தனைகட்கு முரணாக இருப்பினும் கூட; கதையினை நகர்த்தி செல்லும் பாங்கினூடே இது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை நாவலாசிரியர் வாசகரிடையே பதித்து விடுகிறார். அதாவது பாலியலும் ஒரு அடிப்படையான தேவையே என்பதையும் அது சுற்றம் சூழல் எதையும் சட்டை செய்வதில்லை என்பதையும் இரண்டு இடங்களில் தொட்டு காட்டுகிறார்.

மணிகண்டன் இராணி இருவரிடையேயும் நிகழும் முதல் உறவில் அந்த மழைநாளில், சுரம் மீட்டப்பட்ட வீணையின் தந்தி உச்சத்தில் முறிந்து விடுவதனை போல குழந்தையின் அழுகை அவர்களை பிரித்து விடுகிறது. அப்போது அவள் குழந்தையினை சலிப்புடன் பார்ப்பதாக கூறப்படுகிறது. இங்கே தாய்மை உணர்வினையும் மீறி பாலியல் தேவை மேலெழுகிறது. இது ஏற்பதற்கு சற்றே கடினமாயினும் கூட இதுவே யதார்த்தம்.

இன்னொரு இடம் இயக்கத்தில் இருந்து வெளியேறி வந்த வெள்ளையன் வெளியே தூங்க முயற்சிக்கையில் இராணி சலித்து கொள்ளும் இடம். இங்கே சகோதர வாஞ்சையினையும் மீறி பாலியல் தேவை இடங்கொள்கிறது.

இந்த உறவில் காணக்கூடிய வியத்தகு பண்பு யாதெனில், பாலியலில் பெண்களின் தேர்வு சுதந்திரம்(freedom of choice in coupulation). பொதுவாகவே பாலியல் என்பது கீழைத்தேய நாடுகளில் ஆண்களின் தேர்வாக இருக்கையில் இங்கே தேர்வு செய்பவளாக பெண்ணே இருக்கிறாள். ஆரம்பத்தில் மணிகண்டனை வெறுத்து ஒதுக்கும் இராணி பின்னர் அவளாகவே ஏற்று கொள்கிறாள். ஆனால் இந்த உறவினை திருமணத்துக்கு அப்பாலான ஒரு உறவாக நீட்டித்து கொள்வதையும் கூட இராணியே தேர்வு செய்து கொள்கிறாள். ஏனெனில் ஒரு கட்டத்தில் மணிவண்ணன் இராணியிடம் “நான் உங்களை திருமணம் செய்யவா ?” என விளிக்கையில், இராணியின் பதில் “உனக்கு எத்தனை வயதடா?” என்பதாக அமைகிறது.

இந்த உறவில் உச்சம் தொடும் இடமென்பது,மணிகண்டனின் உயிரற்ற உடலினை இராணி காணும் இடம்தான். மனதில் அழவேண்டும் போலிருப்பினும் மகளாகிய சிந்து உடனிருக்கையில் என்ன செய்வது என்ற குழப்பத்திலுருக்கையில், மகளே அவளை அழுமாறு கூறுகிறாள். இது ஒரு தலைமுறையின் மாற்றமாகும். போர் என்பது தனிமனிதர்களின் சிந்தனை போக்குகளிலும் கூட மரபார்ந்த சிந்தனைகளை உடைத்து விடுகிறது.

மொத்தத்தில் இராணி – மணிகண்டன் உறவென்பது மரபுக்கு மீறிய உறவென்றபோதிலும்கூட, ஆழமான ஆண், பெண்ணின் உளவியலின் அடிப்படையில் புனையப்பட்ட ஒன்றாகும்.

சொல்லப்பட கதைகள்

கால ஒழுங்கின் பிரகாரம் நீளும் இந்த கதையில் ஈழப் போராடத்தின் அனைத்து நிகழ்வுகளுமே குறைந்தது இரு வரிகளிலேனும் பாத்திரங்களின் உரையாடல்களினூடே கூறப்படுகின்றன. இந்த நாவலிலே நான் இதுவரை வாசித்த நூல்களில் கூறப்படாத சில வரலாற்று நிகழ்வுகளும் கூறப்படுதனை அவதானிக்கலாம்.

விடுதலைப்போரிலே இடம்பெற்ற மாபெரும் உள்ளக இடம்பெயர்வுகளாக அனைவரினாலும் கூறப்படுவது யாழ்ப்பாண மக்களின் வன்னி நோக்கிய இடம்பெயர்வும், முஸ்லிம் மக்களின் வட மாகாணத்திலிருந்து புலிகளினால் வெளியேற்றப்படமையுமாகும். உண்மையிலேயே இவைகள் மாபெரும் மனித அவலங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள் கிடையாது. ஈழத்தில் போர்க்காலம் மற்றும் போருக்கு பின்னர் எழுதப்பெற்ற அனைத்து புதினங்களிலும் இவைகள் குறித்தான செய்திகள் நிறையவே இடம்பிடித்துள்ளதனை நாம் காணலாம்.

ஆனால் இதற்கும் அப்பால் இடம்பெற்ற இடம்பெயர்வுகள் பலவும் உள்ளன. இந்திய இராணுவ காலத்தில் ஏற்பட்ட வன்னியின் உள்ளக இடம்பெயர்வுகள். உதாரணமாக தனிக்கல்லடி, கோப்பாபுலவு போன்ற கிராமத்து மக்கள் புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தமை. இவற்றினை விட திருமலை மாவட்ட மக்களின் வடபகுதி நோக்கிய புலம்பெயர்வுகள். படுகொலைகளை பொறுத்தவரையில் ஒதியமலை மற்றும் மன்னார் படுகொலைகள். இவ்வாறாக ஏனைய நூல்களில் கூறப்படாத பல்வேறு சங்கதிகளையும் நாம் இந்த நாவலில் தரிசிக்கலாம்.

யாழ் சமூகமானது சாதிய கட்டமைப்பிலே ஊறிய சமூகம் என்பது நாமறியாத விடயமன்று. அங்கே வேளார்களுக்கும் ஏனைய சமூக மக்களுக்கும் இடையிலான தீராத போரினை எத்தனையோ நாவல்களிலும் புதினங்களிலும் வாசித்து அறிந்துளோம். ஆனால் வேளாளர் தவிர்த்து ஏனைய சாதிகளிடையே இருக்கும் அகச்சாதிய ஒடுக்குமுறைகள்( inter castal discrimination ) பேசப்படுவது குறைவே. உதாரணமாக கரையாரும் ஏனைய சமூகங்களும். ஆனால் இந்த நாவலில் வரும் சின்னாச்சி என்ற பாத்திரம் இவ்வாறான அகச்சாதிய ஒடுக்குமுறைகட்கான ஒரு குறியீடாகும்.

சொல்லப்படாத கதை ஒன்று

அனேகமாக எல்லா நிகழ்வுகளையும் மேலோட்டமாகவேனும் ஆவணம் செய்துள்ள இந்த நாவலானது தமிழர் தரப்புக்கு பேரிடியாக அமைந்த விடுதலை இயக்கத்தின் பிளவு குறித்து எந்த வித மூச்சினையும் விடவில்லை. இதற்காக எந்தவித காரணத்தினை நூலாசிரியர் வைத்துள்ளாரோ தெரியவில்லை. இந்த நூல் வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகையில், இந்த பிளவும் அதை தொடர்ந்து ஏற்பட்ட விடுதலை இயக்கத்தின் கட்டமைப்பு சிதைவினையும், பிறமொழி வாசகர்கள் அறியாது விடக்கூடும். இதை நான் ஏன் கூறுகிறேனெனில் ஈழபோரியல் குறித்த நாவல்களில் ஆவணபடுத்தவும் மொழிபெயர்ப்பு செய்யவும் கூடிய அத்தனை தகுதிகளும் இந்த நூலுக்கு உண்டு. ஏனெனில் இது வெறும் புனைகதையன்று. நாவலின் நீளம் கருதியும், நாவலாசிரியர் கொண்ட தேசியத்தின் மீதான ஒன்றிப்பினாலும் இது தவிர்க்கப்படிருக்கலாம் என்றே கருதுகிறேன்.

நாவலின் தேசிய நோக்கு

அனேகமாக ஈழபோராட்டத்தில் யாழ்ப்பாணத்தவரின் மேலாதிக்க சிந்தனையினை பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கண்டிக்கும் ஆசிரியர் ஈழவிடுதலை போரினை பிரதேசம் சாராத இலங்கையின் அனைத்து தமிழ் மக்களுக்கும் உரிய ஒன்றாக சித்தரிக்க முயல்கின்றார். இதனையே நாவலின் முதலாம் அத்தியாயத்தில் வரும் இலட்சுமணனின் பாத்திரம் மலையக மக்களின் பிரதிபலிப்பாகவும், இறுதி அத்தியாயத்தில் வரும் ஆதிரை பாத்திரம் கிழக்கு மக்களின் பிரதிபிம்பமாகவும் காட்டுவதனூடே நிரூபணம் செய்கிறார். அவர் தவறவிட்ட இரு பிரதேசங்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களாகும். இங்கே பரம்பரையாக வசிக்கும் தமிழர்கள் ஈழப்போர் சம்பந்தமாக கொண்டிருந்த அபிப்பிராயங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் பதிவு செய்தல் காலத்தின் தேவையாகும்.

பிரதேசவாதம்

இந்த நாவலில் பெரும்பாலான இடங்களில் யாழ்பானத்தவர் குறித்து கூறப்படும் “எள்ளல்கள் “ , ஒரு வகையான பிரதேசவாதம் மற்றும் ஒதுக்கல் போக்கினை இந்த நாவல் கொண்டுள்ளதா என்ற சந்தேகத்தினை தோற்றுவிக்கிறது. யாழ்ப்பான மக்களின் மேலாண்மை (superiority) விமர்சிக்கப்பட வேண்டியதாயினும் கூட, அவர்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டியவை என்பதில் மாற்று கருத்துக்களில்லை.

போராட்டம் முடிந்த பின்பும் கூட இனிதன் என்ற யாழ்மாவட்ட போராளி வெளியே செல்ல முயற்சி செய்வதாய் கூறப்படுதல் வெளிப்படுத்தும் செய்தி யாதெனில், நூலாசிரியர் யாழ்ப்பாணத்தினை ஒரு பிடி பிடிக்கின்றார் என்பதே. மறுபுறத்தே யாழ்பாணத்தின் எல்லா பகுதிகளும் விருத்தியடைந்த பகுதிகளன்று. சாதிய வேறுபாடுகளுக்கும் அப்பால் பிரதேச ரீதியில் இன்றைக்கும் ஒதுக்கப்படும் பகுதிகளாக தீவுப்பகுதிகள் மற்றும் வடமராட்சி கிழக்கின் பகுதிகள் என்பவை இருகின்றன என்பது யதார்த்தமாகும்.

ஆதிரையும் பெண்ணியமும்

நூலின் பின்னடையில் உள்ள குறிப்பினை போல ஆதிரை நாவலென்பது தமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலை போராட்ட களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின்வாழ்க்கைச்சித்திரமேயாகும். இங்கே நாவலில் ஆண்பாதிரங்களும் பெண்பாதிரங்களும் சரளமாக புழங்கினாலும் கூட, நாவலினை தாங்கி நிற்கும் தூண்களாக (pillars) பெண்களே உள்ளனர். இங்கே “பிள்ளைகள்” என்ற பதத்தினை நாம் இரண்டு விதமாக பொருட்கோடல்(interpretation) செய்ய முடியும். ஒன்று போராட்ட காலத்தில் பிள்ளைகள் என்பது பெண் போராளிகளை குறிக்கும் ஒரு பதமாக இருந்தது. மற்றையது, தாய்மார்களின் பிள்ளைகள். இது இருபாலரினையும் குறிக்குமாயினும் , பிள்ளைகளின் ஆதிமூலம் தாய்மாரே. எவ்வாறு பார்ப்பினும் இந்த நாவல் முற்று முழுதாக பெண்களினை பேசு பொருளாக கொண்டதாகவே கட்டமைக்கப்படுள்ளது.

போராட்ட காலத்திலும் அதன்பின்பும் பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளும், பெண்களின் பல்வேறு உணர்வு நிலைகளும் நாவலெங்கும் விரவிக்கிடகின்றன. அதிலும் இங்கே வருகின்ற “வெள்ளையக்கா” என்ற பாத்திரம் குமரி முதல் நடுத்தர வயது வரைக்குமான எல்லா நிலைகளிலும் வாழ்க்கையின் படிநிலை மாற்றங்களை காட்டி நின்ற ஒரு அற்புதமான சித்தரிப்பு ஒன்றாகும். அது ஈழபோராட்டத்தில் களத்திலும் அப்பாலும் நின்ற பெண்களின் மாதிரி படிமம் (role model) என்றால் அது மிகையன்று.

நாவலின் இறுதியில் வரும் ஆதிரையின் கதை என்பது நாவலில் நிகழ்ந்த எல்லா சம்பவங்கள், சச்சரவுகள், உரையாடல்கள் அனைத்தையும் ஒரு குவியத்தினை நோக்கி நகர்த்தி ஒரு தியான நிலைக்கு வாசகர்களை இட்டு செல்கிறது. ஆம் தியான நிலையேதான். இப்பாலும் வெளி; அப்பாலும் வெளி. வெறுமை சூழ்ந்த வெளி. இதற்கும் அப்பால் ஒன்றுமேயில்லை என்றதோர் உணர்வு நிலை.

என்னுரை

“ஈழபோராட்டத்தின் பின்னணியில் எழுதப்படும் நாவல்கள் மற்றும் புதினங்கள் யாவுமே மிகையான உணர்ச்சிமிகு சொற்களினால் கட்டமைக்கப்பட்ட ஒன்று” என்ற ஒற்றை வரியின் பின்னணியிலேயே இந்த நாவலினை நான் வாசித்தேன். நாவலின் முடிவில் நான் எடுத்துக்கொண்ட எடுகோளினை மீள்பரீசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே நூலினை நிறைவு செய்ய வேண்டிய தேவையினை ஆதிரை மீதான வாசிப்பு தந்தது.

உண்மையில் கூறின் சில புனைவுகளில் வார்த்தைகளின் அலங்காரம் மிகுந்து காணப்படலாம். ஆனால் ஈழபோரியல் வரலாற்றின் சம்பவங்கள் என்பவை புனைவுக்குரியவையன்று; மாறாக அவைகள் நிதர்சனத்தின் தரிசனங்களே. ஆதிரை நாவலானது அவ்வாறு உணர்வுபெருக்கு மிகுந்த சொற்களினால் புனையப்பட்ட புதினமும் அல்ல.

பிரதிக்கும் வாசகனுக்குமிடையிலான இடைவெளியினை சம்பவங்களினால் நிரப்பி வாசகனையும் பிரதினையும் ஒரு புள்ளியில் நிலை நிறுத்துவதில் ஆதிரை வெற்றி பெற்றுள்ளது என்றே கூறவியலும்.

ஆதிரை வாசிப்பின் பின்னர் ஜானகிராமன் அவர்களின் “மோகமுள்” இனை வாசிப்புக்கு தேர்வு செய்திருப்பினும் ஆதிரையின் தாக்கம் இன்னும் என்னுள் இருப்பதனால் பக்கங்கள் நகர்வதாயில்லை. ”மோகமுள்” வாசிப்புக்கு இன்னும் சில தினங்களாகலாம்.

-காய சண்டிகா-