ஜிஃப்ரி ஹாஸன்

ஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின் போராட்டமும் தமிழர் வாழ்வும் பற்றி பல நாவல்கள் வெளிவந்து விட்டன. ஷோபா சக்தியின் BOX கதைப்புத்தகம், குணா கவியழகனின் விடமேறிய கனவு, சாத்திரியின் ஆயுத எழுத்து, சயந்தனின் ஆதிரை போன்றன இந்தவகையில் குறிப்பிடத்தக்க நாவல்கள். ஆதிரை வடபுல சாமான்ய தமிழ்ச்சனங்களினது வாழ்வு ஈழப்போரால் எப்படிச் சிதைந்தது என்பதை மிக அழுத்தமாக தனிமனிதர்கள், குடும்பங்கள், கிராமங்கள் என ஆழமாக ஊடுறுவி சரளமான புனைவு மொழியில் எடுத்துக் கூறுகிறது.  மலையக மக்களினதும் ஒரு குறிப்பிட்ட காலகட்ட அவலம் சிதைந்த சித்திரமாக நாவலுக்குள் ஊடுறுவிச் செல்கிறது. வடபுல எழுத்தாளர்களின் ஈழப் போராட்ட நாவல்களில் போராட்டத் தீயின் கொடு நாக்கு எப்படி அப்பாவி மலையகச் சனங்களையும் தீண்டியது என்பதை மனச்சாட்சியோடு இந்நாவல்தான் பதிவு செய்கிறது. 1983 இனப்படுகொலையில் மலையகத் தமிழ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அது பற்றி முழுமையாகப் பதிவுசெய்யும் ஒரு மலையக நாவலே தெளிவத்தை ஜோசப்பின் நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983.

அதைத் தவிர்த்து இலங்கை இனப் பிரச்சினையின் மலையகப் பரிமாணம் பற்றி பேசும் மலையகத்துக்கு வெளியிலிருந்து வந்த நாவலென்றால் அது ஆதிரைதான். ஈழப் போராட்ட கால வரலாற்று நாவல் என்ற வகையில் சயந்தன் பாதிக்கப்பட்ட எல்லாத் தரப்பாருக்கும் நாவலில் முகமும், குரலும் வழங்கி இருக்கிறார். புலிகளின் போராட்டம் குறித்து சனங்களுக்குள்ளிருந்து எழுந்த மாற்றுக் குரல்களுக்கும் ஒரு இடம் வழங்குகிறார். சந்திரா போன்ற கதாபாத்திரங்கள் இத்தகைய மாற்றுக் கருத்துகளுக்கான குரலை உயர்த்துகின்றனர்.

பாரபட்சமற்றவனாக ஒரு வரலாற்றாசிரியன் இருக்க வேண்டும். வரலாற்றுப் புனைவை எழுதும் ஒரு படைப்பாளியும் பாரபட்சத்திலிருந்து விடுபட்டவனாகவே இருக்க வேண்டும். முஸ்லிம் ஊர்காவல் படை பற்றிய அணுக்கமான வரலாற்றுப் புரிதல் சயந்தனிடம் இல்லாமல் இருப்பதனால் அதை அவர் நாவலில் தவிர்த்திருக்கலாம். ஆயினும் அது ஒரு பெரிய விசயமாக நாவலில் இடம்பெறுவதுமில்லைதான்.

தமிழ் (இந்து) சமூக அமைப்பில் “அனைவரும் சமமே“ என்ற கோட்பாடு இல்லை. சாதிரீதியாக பிளவுண்ட சமூக அமைப்பையே தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது. அது மிகத் தீவிரமானது. சாதியை முன்னிறுத்தி தங்களை மிகத் தீவிரமாக கூறுபடுத்திக்கொண்டது. அது சமூகத்தில் தாழ்ந்த சாதி மட்டத்தில் இருப்பவர்களைத் தீண்டத் தகாதவர்களாக வைத்திருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட வடபுலத் தமிழர்கள் மத்தியில் இந்த சாதி உணர்வு மிகவும் கடுமையாகவே ஊறிப் போயிருந்தது. மலையக மக்களையும் சாதி அடுக்கமைவில் மிகவும் தாழ்ந்தவர்களாகவே வடபுல தமிழ்ச் சமூகம் கருதியது. இப்போதும் அதேநிலைப்பாட்டில்தான் இருக்கிறது.

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றிலும் கூட மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமையை இல்லாமல் ஆக்குவதில் வடக்குத் தமிழ் தலைவர்கள் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தார்கள். அந்த வகையில் வடபுலத்தில் மலையக மக்களைப் புறக்கணிப்பதே ஒரு கௌரவமான செயலாகவே பார்க்கப்பட்டது. சாதியத்தை எதிர்த்து எழுதிய கே.டானியல், டொமினிக் ஜீவா போன்ற ஈழத்தின் முதல் தலைமுறை படைப்பாளிகள் கூட மலையக மக்கள் குறித்து போதியளவு கவனமெடுக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இன்று எழுதுகின்ற ஈழத்துப் படைப்பாளிகளில் ஷோபா சக்தி, கோமகன் போன்றவர்களின் சிறுகதைகளில் மலையக கதாபாத்திரங்களை மிகச் சிறு அளவில் காண முடிகிறது. எனினும் இவர்களின் படைப்புகளில் கூட அவர்கள் வேலைக்காரர்களாகவும், குற்றவாளிகளாகவுமே காட்டப்படுகின்றனர். ஷோபாவின் கண்டிவீரன்கதையில் வரும் மையக்கதாபாத்திரமான காந்திராஜன் ஒரு குற்றவாளியாகவே வடக்குக்கு ஒளித்து வந்து சேர்கிறான். அங்கும் பல குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவனாகவே காட்டப்படுகிறான். கோமகனின் அவர்கள் அப்படித்தான் கதையிலும் வடக்கின் இருபாலையிலுள்ள உயர்சாதியான வைத்தியர் வையாபுரியின் வீட்டு வேலைக்காக வேலைக்காரியை நுவரேலியாவிலேயே தேடுகின்றனர். செல்லம்மா எனும் மலையக சிறுமி வேலைக்காரியாகவே இங்கு வந்து சேர்கிறாள். வையாபுரி வைத்தியரின் மகனுடன் தகாத உறவுகொள்பவளாகவும், திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமடைபவளாகவுமே செல்லம்மா சித்தரிக்கப்படுகிறாள். எனினும் அவள் மீது நிகழ்த்தப்படும் சாதியக்கொடுமைகளை கோமகன் நேர்மையாகவே பதிவு செய்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வடபுலப் படைப்பாளிகளின் படைப்புகளில் மலையக கதாபாத்திரங்கள் இதற்கு மேல் எந்த முக்கியத்துவமும் பெறுவதாக நான் நினைக்கவில்லை. அதேநேரம் ஒரு மக்கள்திரளாக மலையக மக்களின் அவலங்கள் மலையகத்துக்கு வெளியே உள்ள படைப்பாளிகளால் கண்டு கொள்ளப்படவுமில்லை.

ஆனால் சயந்தனின் ஆதிரைதான் அந்தப் பணியைச் செய்வதாக நினைக்கிறேன். நாவலின் இரண்டாவது அத்தியாயம் முழுமையாக மலையக வாழ்வை பேசுகிறது. தேயிலைக்கொழுந்து பறிக்கும் பெண்களின் அன்றாடத்துயரை தங்கம்மை மூலம் வெளிப்படுத்துகிறார். தினக்கூலிக்கு கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு மிகப்பெரும் சவாலாக அவர்களை எப்போதும் அச்சுறுத்தக் கூடியது. சரியான மருத்துவ வசதிகளின்மையால் இளவயது மரணங்கள் சம்பவிக்கின்றன. இப்படி ஒரு நாள் தங்கம்மையும் நோயால் இறந்து போகிறாள்.

லெட்சுமணன் குறித்து அவனது தாய் தங்கம்மையின் கனவுகள் லயங்களுடன் சேர்ந்தே எரிந்து போய்விட்டது. சமூகத்தின் மேல்தட்டுக்கு மலையகத்தின் ஒரு தலைமுறை வர வேண்டும் என்ற ஏக்கம் மலையக மக்களின் மனதில் எப்போதும் தேங்கியே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மலையக மக்கள் மலை சுமந்து நின்ற மக்கள் மட்டுமல்ல மலையைச் சுமந்து நின்ற மக்களுங்கூட. ஏனெனில் அவர்களின் துயர வாழ்வு மலையளவு பெரியது.

00000000000000000000

இலங்கையின் இன முரண்பாட்டுப் போர் மற்றுமொரு புதிய அரக்கனாக அவர்களை அழிக்கத் தொடங்குகிறது.  ஆதிரையின் மையக்கதாபாத்திரமான லெட்சுமணன் மலையகத்தைச் சேர்ந்தவன் தான். புலிகள் இயக்கத்தில் அவன் இணைந்து போராடுகிறான். அவனது சகோதரியான மலையகப் பெண்ணான வல்லியாளின் மகள் விநோதினி புலிகள் இயக்கத்தில் இணைந்து ஈழத்துக்காகப் போராடுகிறாள். இப்படி மலையகத் தமிழ் மக்களின் ஈழப்போராட்டத்துக்கான நேரடிப் பங்களிப்பு ஒரு புறமிருக்க அவர்கள் தமிழீழப் போராட்டத்தின் விளைவாக சிங்கள இனவாதிகளால் மலையகத்தில் கொல்லப்பட்டமை, லயங்கள் எரிக்கப்பட்டமை, பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டமை, அகதிகளாக்கப்பட்டமை என அவர்கள் கூட்டாக எதிர்கொள்ள நேரிட்ட இன்னொரு பக்க அவலம் நாவலில் பேசப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் புலிகளால் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்ட போது சிங்கள இனவாதிகள் அப்பாவி மலையகத் தமிழ் மக்களை படுகொலை செய்வது அவர்களின் லயங்களை எரிப்பது, கற்பழிப்பு என ஒடுக்கு முறையை விரிவுபடுத்துகின்றனர். இந்த நிலைமைகளால் மலையகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம்தான் சிங்கமலையினுடையது. தன் பிள்ளைகளான லெட்சுமணனைத் தூக்கிக்கொண்டும், வல்லியாளை அழைத்துக்கொண்டும் சிங்கமலை ஏனைய சனங்களோடு பாதுகாப்புத் தேடி மலைக் காடுகளின் வழியே கனத்த இருளில் அலைந்து திரிகிறான். அவன் அகதியாகி அலைந்து திரியும் போது தன் கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தபடி செல்கிறான். “என் தாத்தனை தோள்ல தூக்கிக்கிட்டு அவரு அப்பா எங்க போறோம்னே தெரியாம நடந்தாரு. இப்பவும் எம் பையன தூக்கிக்கிட்டு எங்க போறேம்னே தெரியாம நான் போறன்…” என சிங்கமலை அங்கலாய்க்கும் போது அந்த மக்களின் கனன்றுழலும் வாழ்வு எப்படி தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது என்பதை வாசகன் உணர்ந்துகொள்கிறான். பொலிஸ் நிலையம் கூட பாதுகாப்பற்றிருப்பதை உணரும் அவன் சிறிது நாட்களின் பின் பிள்ளைகளோடு வடக்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கியும் விடுகிறான்.

மலையகத் தமிழர்களைத் தீண்டத் தகாதவர்களாகப் பார்க்கும் யாழ்ப்பாண சாதி மனநிலையும் நாவலுக்குள் நுட்பமாகப் பேசப்படுகிறது. லெட்சுமணன் ஒரு வேலைக்காரனாகவே அத்தார்-சந்திரா குடும்பத்தாரிடம் அவன் தந்தையால் ஒப்படைக்கப்படுகிறான். சந்திராவின் அம்மா அவனை வீட்டுக்குள் எடுப்பதையே தீட்டாக கருதுகிறாள். ஆயினும் அத்தார்-சந்திரா தம்பதிகள் அவனை தன் சொந்தப் பிள்ளையாகவே கருதி வளர்க்கின்றனர். வடபுல படைப்பாளிகளின் வழமையான மனநிலைதான் சயந்தனிடமமும் வெளிப்படுகிறது. ஆயினும் அது நிலையானதாக இல்லாமல் பின்னர் மாறிக்கொண்டு செல்கிறது. நாவலின் சீரான கதையொழுங்கில் அவர்களும்(மலையகத்தாரும்) வடக்கின், ஈழத்தின் குழந்தைகளாக மாறுகின்றனர். அது ஒருவகையில் சயந்தனின் தனிப்பட்ட எதிர்பார்ப்பாக கூட இருக்கலாம்.

சயந்தனின் கதைமொழியில் பிராந்திய மொழித் தொன்மமும், மண்வாசனையும் செழுமையாக இருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழும், மலையகத் தமிழும் என இரண்டு வகையான தமிழ்கள் இந்நாவலில் பேசப்படுகிறது. மலையகத் தமிழ் அதன் முழுமையான இயல்போடு எந்த செயற்கைத் தனமுமற்றிருக்கிறது. அது அந்த மக்களினது வாழ்வின், அவலத்தின் நேர்ப் பிரதிபலிப்பாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கையில் ஒட்டி ஊடுறுவியுள்ள அவலத்தை அந்த மொழி வாசகனுக்கு மேலும் நெருக்கமாக்குகிறது. மலையகத் தமிழின் பேச்சோசை எந்தப் பிசகுமின்றி சரளமாக வெளிப்படுகிறது. சயந்தனின் மொழி அந்த நாவலில் வரும் ஒவ்வொரு மனிதனையும் இலகுவில் மறந்துவிட முடியாதபடி வாசகனை நெகிழச் செய்கிறது. அதனால் நாவலில் வரும் ஒவ்வொரு மனிதனையும், அவனது முடிவையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வாசகன் மீண்டும் மீண்டும் பிரதிக்குள் ஊடுறுவுகிறான். அதனை ஒரு புனைவாக அன்றி உண்மைச் சரித்திரமாக ஆழமாக நம்பத் தலைப்படுகிறான். எனினும் நாவல் சில இடங்களில் செயற்கைத் தனமாக விரிந்துகொண்டு செல்வதும் நிகழ்ந்துதான் இருக்கிறது. சில கதாபாத்திரங்கள் நாவலின் கதைக்கு தேவையற்ற விதத்தில் குறுக்கீடு செய்தபடி இருக்கின்றனர். இது நாவலுக்கு ஒரு மேலதிக சுமைதான். ஆனால் கடைசி வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் ஆர்வம் மேலிட வாசகன் அவர்களைப் பின்தொடர்ந்தபடி இருக்கிறான்.

00000000000000000000000

சயந்தனின் ஆதிரையில் மலையக வாழ்வும், அதன் நிலக்காட்சிகளும் ஓரிரு அத்தியாயங்கள் மட்டுமே. ஆனால் முழுமையாக இந்நாவல் ஈழப் போராட்டமும் அப்பாவித் தமிழ்ச் சனங்களையும் பற்றியது. கனன்றுழந்த அவர்களின் வாழ்வு பற்றியது. சுருங்கச் சொல்லப் போனால் சயந்தன் ஆதிரை மூலம் ஆயுத இயக்கங்கள்,அரசாங்கம், சாதி, தேசம் போன்றவற்றின் போலித் தனங்களையும் கற்பிதங்களையும் கிழித்து வீசி மானுடத்தின் அவலத்தை பகிரங்கப்படுத்துகிறார். மிக மிக சுவாரஸ்யமும் விறுவிறுப்புத் தன்மையுடனும் நகரும் கதையும் கதைமொழியும் இந்நாவலுக்குள் உள்ளது. ஈழப் போராட்ட கால மக்களின் வாழ்வைப் பேசும் நாவல்களில் மிக சிறந்த ஒன்றாக எனக்கு இந்நாவலே தோன்றுகிறது. இதன் ஏனைய பரிமாணங்களும் பேசப்பட வேண்டும்.

நன்றி நடு